கேரளக் கழிவுக்காடாகும் தமிழகம்

1 0
Spread the love
Read Time:15 Minute, 8 Second

கேரளாவைக் கடவுளின் தேசம் என வர்ணிப்பார்கள். சுற்றுச்சூழல், இயற்கை வளங்களுக்கு கேரள மாநிலம் கொடுக்கும் முக்கியத்துவமே இந்தப் பெயருக்குக் காரணம். அதே கேரளம்,  தமிழகத்தைக் கழிவுகளின் தேசமாக மாற்றிக் கொண்டிருக்கிறது சத்தமில்லாமல் என்பது இன்று நேற்றல்ல பல ஆண்டுகளாக நடக்கிறது.

கேரளாவில் குளங்களில் தாமரைப்பூ வளர்க்கத் தடை, விவசாய நிலங்களை வீட்டுமனைகளாக்கத் தடை, ஆயிரம் கிராமங்களில் தீவிர இயற்கை விவசாயத் திட்டம் என எப்போதுமே இயற்கை சார்ந்த திட்டங்களே நடைமுறைப்படுத்தப்படுகிறது.

இதனால், கேரளத்தில் இயங்கும் தொழிற்கூடங்கள், இறைச்சிக்கூடம், மருத்துவமனைகள் ஆகியவற்றில் சேகராமாகும் கழிவுகளை சொந்த மாநிலத்திலேயே கொட்டினால் சுகாதாரக்கேடு ஏற்படும் என்பதால் தமிழக எல்லைப் பகுதிகளைக் கழிவுகள் கொட்டும் இடமாக மாற்றி வருகிறது.

கேரளாவின் குப்பைத் தொட்டியாகத் தமிழகத்தை மாற்றி வருவது சுற்றுப்புறச் சூழலுக்குக் கேடு விளைவிப்பதோடு, தமிழர்களின் உயிரோடு, கேரள அரசு விளையாடுகிறது. இந்த ஆபத்தான விளையாட்டை தமிழக அரசும் அமைதியாக வேடிக்கை பார்க்கிறது என்பது உண்மை.

கன்னியாகுமரி மற்றும் தென்காசி மாவட்டங்கள் வழியேதான் இந்தக் கழிவுகள் தமிழகத்திற்கு வருகிறது. இந்த மாவட்ட எல்லைகளில் சோதனைச் சாவடிகளில் உள்ள அதிகாரிகள், கண்டும் காணாமல் இருப்பதுதான் வேதனை.

நெல்லை மாவட்டத்தின் செங்கோட்டை அருகேயுள்ள புளியரை நகரம், கேரள மாநிலத்தின் நுழைவு வாயில், அன்றாடம் கேரளாவுக்குத் தேவையான அரிசி, காய்கறிகள் முதல் அணியும் ஆடை வரையிலான அனைத்துப் பொருட்களையும் ஏற்றிக்கொண்டு வாகனங்கள் சென்று வருகின்றன. இவை இருமாநில எல்லையில் அமைந்திருக்கிற சோதனைச் சாவடிகளைக் கடந்தே வருகின்றன.

சில வேளைகளில் தடை செய்யப்பட்ட பொருட்களும், கவனிப்பு அடிப்படையில் நுழைந்து விடுவதுண்டு. மேலும் சந்தடி சாக்கில், கேரளாவின் அண்டை மாவட்டமான கொல்லம், கோட்டயம் கண்ணூர் பத்தனம்திட்டா போன்ற மாவட்டங்களில் உணவுக்காகப் பயன்படுத்தப்படும் கறிக்கோழிகளின் கடைசல்கள் மற்றும் அங்குள்ள மருத்துவக் கழிவுகள் ஆபரேஷன் மூலம் அகற்றப்படும் சதைப் பிண்டங்கள் போன்ற கழிவுகள் ஆபத்தை விளைவிக்கும் நோய்க் கிருமிகளைக் கொண்டவை. இதுபோன்ற கழிவுகள் கொண்டுவருகிற வாகனங்கள் இரவு நேரத்தில், தமிழக எல்லைப் பகுதியான புளியரை செங்கோட்டை தேன் பொத்தை, தென்காசி பகுதிகளில் கொட்டிவிட்டுப் போவது சுகாதாரக் கேடுகளை விளைவிப்பதால் அது பிரச்சினையானதால் மாவட்ட நிர்வாகம் அதுபோன்ற வாகனங்களைத் தடை செய்தும், மீறி நுழைந்தால் அவற்றைப் பறிமுதல் செய்யவும் உத்தரவிட்டு இருந்தது. ஆனால் இவற்றைத் தொழிலாய் கொண்ட வாகனங்களில் இன்றளவும் தமிழக எல்லைப்புறத்தில் கழிவுகள் கொட்டுவதை வாடிக்கையாக வைத்துள்ளன. 

இதனிடையே கடந்த மாதம் 21-ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை பிளாஸ்டிக் மற்றும் மருந்துக் கழிவுகளை ஏற்றி வந்த 15 கேரள லாரிகள் சோதனைச் சாவடிகளில் பிடிபட்டுள்ளன. இவற்றில் சில மருத்துவக் கழிவுகளைக் கொண்டது கண்டறியப்பட்டு அவர்களுக்கு தலா மூன்று லட்சம் அபராதமும், மற்றவைகளுக்கு தலா 30 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பிரச்சினை இன்று நேற்றல்ல பல ஆண்டுகளாக நடக்கிறது. தமிழகப் பகுதிகளை கேரளா தங்கள் கழிவுகளின் கூடாரமாக மாற்றிக்கொண்டிருக்கிறது என்று பல அரசியல் கட்சித் தலைவர்கள் குரல் கொடுத்தபோதும் தமிழகத்தில் யாரும் கண்டுகொள்வதில்லை. தொடர்ந்து இந்த அசம்பாவிதம் நடந்துகொண்டேதான் இருக்கிறது. இத்தனைக்கும்

தமிழகப் பகுதிக்குள் கேரளக் கழிவுகளைக் கொண்டுவந்து கொட்டுவதற்கு அனைத்துத் துறை அதிகாரிகளும் உடந்தையாக இருந்து வருகின்றனர்.

தேனி மாவட்டம், காமாட்சிபுரம் சீப்பாலக்கோட்டையை ஒட்டியுள்ள கள்ளப்பட்டி மலை அடிவாரத்தில் லாரி லாரியாக மருத்துவக் கழிவுகளை கொட்டி வருகின்றனர். இதற்காக ஒரு பகுதியை விலைக்கு வாங்கி இரவோடு இரவாக ஜே.சி.பி. மூலம் பெரிய பள்ளம் தோண்டி மருத்துவக் கழிவுகளை மூடி விடுகின்றனர்.
இதுவரை 300க்கும் மேற்பட்ட லோடு மருத்துவக் கழிவுகள் இங்கு கொட்டப்பட்டுள்ளன. சனிக்கிழமைதோறும் இரவு 12 மணிக்கு மேல் அதிகாரிகளின் துணையோடு இந்தக் கழிவுகளைக் கொட்டி வருகின்றனர். இதேபோல இறைச்சிக் கழிவுகள், செப்டிக் டேங்க் கழிவுகளையும் நமது வனப்பகுதியிலும், ரோட்டோரங்களிலும் கொட்டி நாசம் செய்து வருகின்றனர். எல்லையில் உள்ள வனத்துறை, வருவாய்த்துறை, போலீஸ் சோதனைச் சாவடிகளைக் கடந்து வர, அதில் பணியாற்றும் அனைத்துத் துறை அதிகாரிகளையும் கவனித்து விடுகின்றனர். இதனால், இவர்கள் கழிவுகளை ஏற்றி வரும் லாரிகளைக் கண்டுபிடித்து தடுப்பதில்லை.


ஒருமுறை கழிவுகளை ஏற்றி வந்த ஒரு லாரி டிரைவர், சோதனைச் சாவடியில் இருந்த போலீசாருக்குப் பணம் கொடுக்காமல் சென்றுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த போலீசார், அந்த லாரியைத் துரத்திச் சென்று மிரட்டிப் பணம் கேட்டுள்ளனர். பணம் கொடுக்காததால் டிரைவரின் மெபைல் போனைப் பறித்துள்ளனர். இச்சம்பவம் பற்றி அறிந்த மாவட்ட போலீஸ் நிர்வாகம் சோதனைச் சாவடி பணியில் இருந்த போலீசார்மீது நடவடிக்கை எடுத்துள்ளது.
ஆனால் விஷக்கழிவுகளை தமிழகத்தில் கொண்டுவந்து கொட்டும் கேரள அரசைக் கண்டித்து எந்த ஒரு போராட்டமும் நடத்தாத மார்க்சிஸ்ட் கம்யுனிஸ்ட் கட்சி தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அபராதம் விதிக்காத ஒரே மாநிலம் கேரளாதான் என்று பெருமையடிக்கும் வகையில் குறிப்பிட்டுள்ளது சர்ச்சையாகியுள்ளது.

தமிழக மார்க்ஸிஸ்ட் கட்சியின் டுவிட்டர் வலைதளத்தில் நேற்றுமுன்தினம் (4-12-2022) வெளியான அந்தப் பதிவில் தூய்மையில் கேரளா முதலிடம், தேசியப் பசுமைத் தீர்ப்பாயம் அபராதம் விதிக்காத ஒரே மாநிலம் கேரளா. கழிவு மேலாண்மைத்துறையில் கேரளா குறிப்பிடத்தக்க தலையீடுகளை செய்துள்ளது என்று பசுமைத் தீர்ப்பாயம் தனது தீர்ப்பில் கூறியது. மற்ற மாநிலங்களுக்குப் பல கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்று தமிழக மார்க்சிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது அனைத்துத் தரப்பு மக்களிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஏற்கெனவே பலமுறை கேரளக் கழிவுகளை ஏற்றிவந்த லாரிகளைப் பிடித்து அபராதம் போடப்பட்டுள்ளன. அதன் விவரம் இங்கே…

2017 செப்டம்பர் 1ம் தேதி பொள்ளாச்சி அருகே மீனாட்சிபுரம் பாறைமேடு பகுதியில் கழிவுகளுடன் மூன்று சரக்கு வாகனங்களை கிராம மக்கள் வளைத்துப்பிடித்தனர். கேரளாவில் இருந்து கொண்டு வரப்பட்ட கழிவுகளை, பணம் வாங்கிக்கொண்டு கொட்ட அனுமதித்த அருள்பிரகாஷ் கைது செய்யப்பட்டார்.

2018 ஜூன் 23ம் தேதி நீலகிரி மாவட்டம் நாடுகாணி அருகே மருத்துவக் கழிவு ஏற்றி வந்த இரண்டு லாரிகளைப் பொதுமக்கள் சிறை பிடித்தனர். விசாரணையில், கேரளா, பெருந்தல் மண்ணாவில் இருந்து மருத்துவக் கழிவு ஏற்றி வந்த இரண்டு லாரிகளும் கேரளாவுக்குத் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டன.

2019 ஜனவரி 27ம் தேதி ஆனைமலை லக்கம்பாளையம் அருகே கேரளா, திருச்சூரில் இருந்து கொண்டு வரப்பட்ட மருத்துவக் கழிவுகளுடன் வந்த லாரி பொதுமக்களால் சிறைபிடிக்கப்பட்டது. லாரிக்கு அபராதம் விதித்து, கேரளாவுக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டது.

2020 ஜூலை 30: நாமக்கல் மாவட்டம் ப.வேலுார் ஜேடர்பாளையம் பிரதான சாலையில் மருத்துவக்கழிவு கொட்டிய லாரி பறிமுதல் செய்யப்பட்டது. கேரளா, ஆலப்புழாவில் இருந்து கழிவு கொண்டுவரப்பட்டது தெரியவந்தது. இருவர் கைது செய்யப்பட்டனர்.

2021 ஏப்ரல், 21ம் தேதி பொள்ளாச்சி செம்மணாம்பதி அருகே இரட்டைமடை பிரிவு தோட்டத்தில் கேரள மருத்துவக் கழிவுகள் கொட்டுவது கண்டுபிடிக்கப்பட்டது. மூன்று டிப்பர் லாரிகள், ஒரு பொக்லைன் இயந்திரம் சிக்கின. இந்த வழக்கை விசாரித்த பசுமை தீர்ப்பாயம், கேரள அரசு இந்த பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று உத்தரவிட்டது.

2022 பிப்ரவரி, 13ம் தேதி பொள்ளாச்சி புளியம்பட்டி அருகே கேரளக் கழிவுகளுடன் லாரி சிறை பிடிக்கப்பட்டது. எர்ணாகுளத்தில் இருந்து மருத்துவக் கழிவு ஏற்றி வந்தது விசாரணையில் தெரியவந்தது. லாரிக்கு, 30  ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. லாரி மீண்டும் கழிவுடன் கேரளா திருப்பி அனுப்பி வைக்கப்பட்டது.

2022 அக்டோபர், 11ம் தேதி பொள்ளாச்சி ஊஞ்சவேலாம்பட்டிக்கு உட்பட்ட பெரியாக்கவுண்டனுாரில் மீன் கழிவு கொட்ட வந்த லாரியை பொதுமக்கள் சிறைபிடித்தனர். கேரளா, பட்டாம்பியில் இருந்து துாத்துக்குடிக்கு மீன் ஏற்றிச்சென்ற அந்த லாரிக்கு, 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

நடவடிக்கை தேவை

தமிழக-கேரள எல்லையில் அமைந்துள்ள கோபாலபுரம், வீரப்பகவுண்டனூர், நடுப்புணி, மீனாட்சிபுரம், செம்மணாம்பதி, கோவிந்தபுரம் வழியாகக் கழிவுகளை ஏற்றிய லாரிகள் கோவை மாவட்டத்துக்குள் வரகின்றன. இப்படி வரும் லாரிகளை அந்தந்த கிராம இளைஞர்களே கண்காணித்துப் பிடித்துவிடுகின்றனர். பிடுபடும் லாரிகள் மீது போலிசார் வழக்குப் பதிவதில்லை. அந்தந்த உள்ளாட்சி நிர்வாகம் சார்பில் அபராதம் விதிக்கப்படுகிறது. உடனடியாக அந்த லாரியை கேரளா செக்போஸ்ட் வரை கொண்டுசென்று விட்டுவிடும் பணியில் உள்ளூர் இளைஞர்கள் ஈடுபட்டுவருகின்றனர்.

கோவை மாவட்ட எஸ்.பி. பத்ரி நாராயணன் இது பற்றி கூறியபோது, “கேரளாவில் இருந்த கழிவுகளை கோவை மாவட்டத்துக்குள் கொண்டுவந்து கொட்டும் சம்பவங்கள் சமீபகாலமாக நடக்கவில்லை. இதற்கு போலிசார் மேற்கொண்டுள்ள தீவிர கண்காணிப்பு முக்கிய காரணம். தமிழகம்-கேரளா எல்லையில் அமைந்திருக்கும 11 செக்போஸ்ட்களைக் கடந்து செல்லும் வாகனங்களை 24 மணி நேரமும் போலிசார் கண்காணிக்கின்றனர். எல்லையோர கிராம மக்களும் தகவல் தெரிந்தால் உடனுக்குன் வாகனங்கப் பிடித்து விடுகின்றனர். இதன் காரணமாக கழிவுகளைக் கொண்டுவருவது கட்டுக்குள் வந்திருக்கிறது. எனினும் உஷாரா இருக்கும்படி எல்லையோ காவல் போலிசார் அனைவருக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது” என்றார்.

கேரள அரசின் தொடரும் கழிவு அவலம் தொடராமல் தடுக்கவேண்டியது அரசின் கடமையும் நம் எல்லையோரத் தமிழர்களின் கடமையுமாகும் என்பதை ஒவ்வொருவரும் நினைவு கொள்ளவேண்டிய ஒன்று.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!