தனித்தமிழ் போராளி புலவர் இறைக்குருவனார் நினைவு நாள்!

1 0
Spread the love
Read Time:7 Minute, 16 Second

மறைமலையடிகளார், பாவாணர், பாவலரேறு பெருஞ்சித்திரனார் ஆகியோர் வழியில் தமிழ் மொழி, இனம், நாட்டுரிமைகளுக்காகத் தம் வாழ்நாள் முழுவதும் களம் கண்டவர் இறைக்குருவனார்.

இவர் கழகக் காலப் புலவர்களுக்கு இணையான தமிழ்ப் புலமைப் பெற்றவர்.

மாணவப் பருவத்திலேயே இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் மாணவர்களை ஒருங்கிணைத்துப் போராடி சிறை சென்றவர்.

பாவலரேறுவிற்குப் பின் ‘தென்மொழி’ இதழின் ஆசிரியர் பொறுப்பில் தனது இறுதிக் காலம் வரை சிறப்புறச் செயலாற்றியவர்.

மனுதரும நூல் எரிப்புப் போராட்டத்தில் தென்மொழி ஆசிரியர் பெருஞ்சித்திரனாருடன் இணைந்து கலந்துகொண்டு சிறை சென்றார்.

தமிழீழம் சென்று தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரனின் அன்பைப் பெற்று, போராட்டக் களத்தில் சந்தித்தவர்.

தமிழ்வழிக் கல்வி, திருக்கோவில் வழிபாடும் தமிழில் குடமுழுக்கும், திருக்குறள் திருமணம், திருவள்ளுவர் ஆண்டு, வாழ்வியற்சொல் அகர முதலி, தமிழாரம், வல்லினம் மிகுதலும் மிகாமையும் உள்ளிட்ட பல்வேறு நூல்களை எழுதியவர்.

எமது அமைப்பிற்கு வழிகாட்டியாய் நின்று தமிழியக் கருத்துகளை விதைத்தவர்.

திருவாரூர் மாவட்டம் நன்னிலத்திற்கு அருகில் அமைந்துள்ள தீவாமங்கலம் என்னும் சிற்றுரில் முத்தையா, மீனாட்சி அம்மாள் ஆகிய இருவருக்கும் மகனாகப் பிறந்தார். இவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் சாமிநாதன். தனித் தமிழிலும் சிவ நெறியிலும் நாட்டம் கொண்டதால் மறைமலை அடிகளைப் பின்பற்றி இறைக்குருவன் என்று தம் பெயரை மாற்றிக் கொண்டார். பள்ளியில் பயிலுங்கால் திருக்குறள் முழுவதையும் மனப்பாடம் செய்தார். பாடல்கள் எழுதுவதிலும் வல்லவர் ஆனார்.

அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் சேர்ந்து புலவர் பட்டம் பெற்றார். அப்பொழுது தென்மொழி என்னும் இதழை மாணவத் தோழர்களிடம் அளித்து தனித்தமிழ் உணர்வைப் பரப்பினார்.

கடலூர் தூய வளனார் உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகப் பணி புரிந்தார். பின்னர் மதுரையில் வெற்றித் தனிப் பயிற்சிக் கல்லூரியில் சில ஆண்டுகள் பணியாற்றினார். சென்னையில் சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தில் பதிப்பாசிரியராகவும் சுதேசமித்திரன், மாலை முரசு, முரசொலி ஆகிய நாளிதழ்களில் துணை ஆசிரியராகவும் இருந்து பணி செய்தார். செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகர முதலி பதிப்பாசிரியராகவும் இருந்தார்.

1968இல் தேவநோயப் பாவாணர்   தலைமையில் உலகத் தமிழ்க் கழகம்  தோற்றுவித்தபோது அதில் இணைந்தும் பொறுப்பேற்றும் இயங்கினார். இறைக்குருவன் பொதுச் செயலாளராக இருந்தபோது தஞ்சையில் தமிழன் பிறந்தகத் தீர்மானிப்பு மாநாடு பாவாணர் தலைமையில் நடந்த நிகழ்வு குறிப்பிடத்தக்கது.

தமிழ் வழிக் கல்வியை வலியுறுத்தி நடந்த பரப்புரைச் சுற்றுப் பயணத்திலும் தமிழ் அறிஞர்கள் நூறு பேர் உண்ணாநோன்பு அறப் போராட்டத்திலும் கலந்து கொண்டார்.

தமிழ் ஈழப் போராட்டம், மொழி ஈகிகளின் வீர வணக்க நாள் ஆகிய நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.

பழ. நெடுமாறன் தலைமையில் இயங்கும் உலகத் தமிழர் பேரவையில் துணைத் தலைவராக இருந்தார்.

தென்மொழி அவையம் , பாவலரேறு பெருஞ்சித்திரனார் அறக்கட்டளை, பாவலரேறு தமிழ்க் களம் ஆகிய அமைப்புகளின் நிகழ்வுகளில் முகாமையான பங்காற்றினார்.

திருக்குறள் பாடி, தேவாரம் ஓதித் தமிழ் நெறியில் பல திருமணங்களை நடத்தி வைத்தார்.

பாவை என்னும் மகளிர் இதழ், வலம்புரி என்னும் திங்களிதழ், குன்றக்குடி அடிகளார் நடத்திய தமிழகம் என்னும் இதழ் ஆகியவற்றைப் பொறுப்பேற்று நடத்தினார். தம் இறுதிக் காலத்தில் மக்கள் தொலைக்காட்சியில் ஊரும் பேரும் என்னும் நிகழ்ச்சியில் தொடர்ந்து உரையாற்றினார்.

புலவர் இறைக்குருவனாரின் திருக்குறள் புலமையைப் போற்றி தமிழ் அறிஞர் அ.கி.பரந்தாமனார்  திருக்குறள் மணி என்னும் பட்டத்தை வழங்கினார். திருக்குறள் செந்தொண்டர் தமிழ்த் தேசியச் செம்மல், மொழிப் போர் மறவர், இதழ் மாமணி ஆகிய பட்டங்களை பல்வேறு அமைப்புகள் வழங்கின. கன்னியாக்குமரி திருவள்ளுவர் அறக்கட்டளை 133000 உருவா பணக்கொடையை இறைக்குருவனாருக்கு வழங்கிச் சிறப்பித்தது.

புலவர் இறைக்குருவன் இசையிலும் விருப்பம் கொண்டிருந்தார் . பாரதிதாசன், பாவலரேறு பெருஞ்சித்தனார், ஆகியோரின் பாடல்களில் சிலவற்றுக்குத் தாமே இசை அமைத்துப் பாடிவந்தார். தம் இசைத் திறனை மேலும் வளர்த்துக் கொள்ள இசைக் கல்லூரியிலும் சேர்ந்து இசை பயின்றார். மலேசியா, சிங்கப்பூர், ஈழம் ஆகிய நாடுகளுக்கும் சென்று தமிழ் பரப்பினார்.

1969ஆம் ஆண்டில் பெருஞ்சித்திரனாரின் மூத்த மகள் பொற்கொடியை விரும்பி மணந்து கொண்டார். மகனுக்குத் தமிழ்ச்செம்மல் என்றும் பெண் மக்கள் இருவருக்கும் இசைமொழி என்றும் அங்கயற்கண்ணி என்றும் பெயர்களைச் சூட்டினார்.

தமிழ் மொழி, இன, நாட்டுரிமைக்காக அயராது உழைத்த தமிழ்ச் செம்மலாகத் திகழ்ந்த இறைக்குருவன் ஐயாவின் பத்தாம் ஆண்டு நினைவு நாள் (23-11-2021) இன்று.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!