கோத்தகிரி அருகே, தும்பிபெட்டு இருளர் பழங்குடியினப் பெண் ஸ்ரீமதி, விடா முயற்சியால் மருத்துவர் கனவை நனவாக்கி, பலரின் பாராட்டைப் பெற்றுள்ளார்.
நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகே தும்பிபெட்டு இருளர் கிராமத்தைச் சேர்ந்த பாலன், ராதா தம்பதியின் 21 வயதாகும் மகள் ஸ்ரீமதி, அங்குள்ள தனியார் பள்ளியில், 2019ம் ஆண்டில் பிளஸ் 2 முடித்தார்; மருத்துவப் படிப்புக்கான, ‘நீட்’ தேர்வு எழுதினார்.
எதிர்பார்த்த ‘கட் -ஆப்’ மார்க் இல்லாததால் இடம் கிடைக்கவில்லை. தொடர்ந்து, ‘நீட்’ தேர்வு பயிற்சியில் தீவிரமாக ஈடுபட்டார். நான்காவது முறையாக நடப்பாண்டு, ‘நீட்’ தேர்வில், 370 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சிப் பெற்றார்.
ஸ்ரீமதி பத்திரிகையாளரிடம் பேசும்போது “கடந்த, 2019ம் ஆண்டில் ‘நீட்’ தேர்வு எழுதினேன்; இடம் கிடைக்கவில்லை. வேறு துறையில் சேர்ந்து படிக்கும் எண்ணம் இல்லை. ஏழை, எளிய மக்களுக்குச் சேவையாற்ற வேண்டும் என்பதுதான் என் குறிக்கோளாக இருந்ததால், நான்காவது முறையாக ‘நீட்’ தேர்வு எழுதினேன். திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லுாரியில் இடம் கிடைத்துள்ளது” என்றார் மகிழ்ச்சியாக.
நீலகிரியில் முதல் இருளர் சமுதாயப் பெண் மருத்துவப் படிப்பில் சேர்ந்துள்ளதால், அனைத்துத் தரப்பினரும் பாராட்டி வருகின்றனர். நீலகிரி கலெக்டர் அம்ரித் நேற்று ஸ்ரீமதியை அழைத்து வாழ்த்துத் தெரிவித்தார்.
Read Time:2 Minute, 11 Second