14.10.2022 அன்று மாலை சூரியன் வெட்கப்பட்டு கன்னம் சிவக்கும் அந்திப் பொழுதில், சென்னை மெரினா கடற்கரை என்கிற பிரமாண்ட மேடையில் பாடலாசிரியர் ஏகாதசி அவர்களின் “அவளுக்கும் நிலாவுக்கும் 6 வித்தியாசங்கள்” என்கிற காதல் கவிதை நூல் வெளியீடு நடந்தது.
நூல் வெளியீட்டு விழாக்கள் அரங்குகளில் நடக்கத்தான் பெரும்பாலும் பார்த்திருப்போம் ஆனால் கால் பாதங்களை கடலலை நனைக்கும் ஒரு ஈரத் தரையில், காதலர்கள் பெயரெழுதவும் குறு நண்டுகள் அதை வாசிக்கவுமென இருக்கும் மணல்பெரு வெளியில் ஒரு காதல் ஒரு நூல் வெளியீட்டு விழா என்பது புதுமையானதாக இருந்தது.
அத்தனை விரிந்த கடற்கரையில் எங்கே விழா நடத்துவதென யோசித்திருப்பார்கள் போல், கண்ணகி சிலை பேருந்து நிறுத்தம் அருகே உள்ள ஒற்றைப்பனை மரத்தருகே கூடியவர்கள், பின் வங்க கடல் அலையருகே சென்று விழாவை நடத்தினர்.
திருநங்கை மானு – கவிஞர் இரா. அசோக்குமார்
காதலை தொண்டை வரை சுமப்பதையே பெரும் அவஸ்தையென நினைக்கும் சமூகத்தில் வானளவு காதலை தங்களது உச்சந்தலையில் சுமக்கும் திருநங்கைகளில் ஒருவர் இந்தக் கவிதை நூலை வெளியிடத் தகுதியானவர் எனக்கருதிய கவிஞர் ஏகாதசி, திருநங்கை மானுவை வெளியிட வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
இந்நூலைப் பெற்றுக்கொள்ள முற்போக்குக்குக் கவிஞரும் துடிப்பு மிக்க இளைஞருமான இரா. அசோக்குமார் பெற்றுக்கொண்டார்.
திருநங்கைகளையும் திருநங்கைகளின் காதலையும் இந்த சமூகம் புரிந்து கொள்ளப்படவும் மனித குலத்தில் முதன்மை அந்தஸ்து பெறவேண்டியவர்கள் திருநங்கைகள் என்கிற அங்கிகாரத்தைப் பெற்றுத்தரும் களச்செயல்பாடுகளில் இவ்விழாவும் ஒன்றாகப்பட்டது.
வாழ்த்தியவர்கள்:
தமுஎகச மாநிலத் துணைச் செயலாளர் தோழர் கருப்பு அன்பரசன் தனது வாழ்த்துரையில் கடலின் உப்புக்காற்று இவ் விழாவால் இனிப்புக் காற்றாகிப் போனதென்றும்,
“இருவரும் சேர்கிறோம்
இருவரும் பிரிகிறோம்
பரவாயில்லை
இரண்டிலும் பிரியாமல் நாம்
இருவரும் தான் இருக்கிறோம்”
என நூலின் ஒரு கவிதையைச் சொல்லி சிலாகித்தும், ஒரு திருநங்கை நூலை வெளியிடுவதென்பது எத்தனை முக்கியத்துவம் வாய்ந்ததெனவும் உணர்வுப் பூர்வமாகப் பேசினார்.
தமுஎகசவின் மற்றொமொரு துணைச் செயலாளர் தோழர் மருதுபாரதி அவர்கள் ஏகாதசி அவர்களின் முந்தைய கால செயல்பாடு தொடங்கி இன்றுவரைக்குமான அவரின் பாடல்களின் அழகியலை வியந்தவர் பின்னர்,
“மூன்று குட்டிகளை ஈன்ற
ஆட்டின் வயிறுபோல
ஒட்டிக் கிடக்கிறது
உன்னைப் பார்க்காமல்
என் இதயம் “
என்பது போன்ற, இந்நூலிலுள்ள பல கவிதைகளைச் சொல்லிப் பாராட்டினார்.
மற்றும் தோழர் ஹேமா, ஃபாமிதா, ரேவதி, ப்ரியா மனோகரன், வசுமதி, சரத் எழுத்தாளர் கண்ணிகோவில் ராஜா, கவிஞர் ஹரிஹரன் போன்றோர் வாழ்த்தி விழாவிற்குச் சிறப்பு சேர்த்தனர். மேலும் இவ்விழாவில் எழுத்தாளர் மதுரை ஒமுருகன் அவர்களும் சாம் அவர்களும் கலந்துகொண்டனர். நூல் வெளியீட்டை கடற்கரை வந்த காதலர்களும் பொதுமக்களும் கண்டு ரசித்ததோடு, நூலையும் வாங்கி ஆங்காங்கே அமர்ந்து வாசிக்கத் தொடங்கினர்.
விழாவில் கலந்துகொண்ட ஒற்றைப் பனை, அவர்கள் கிளம்பியபின்னும் கடலையே பார்த்துக் கொண்டிருந்தது. ஒருவேளை கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்ற தன் காதலனுக்காக காத்திருக்கிறதோ என்னவோ, ஆனால் நீண்ட வருடங்களாகக் காத்திருக்கிறது பனை.
நூலை எழுதிய திரைப்படப் பாடலாசிரியர் ஏகாதசி அவர்களுக்கும், நூலைத் தயாரித்த “சமம்” வெளியீட்டிறகும் வாழ்த்துக்கள்!
நூலைப் பெற விரும்புகிறவர்கள் கவிஞர் ஏகாதசியின் 7299901838 எண்ணிற்கு 120 ரூபாய் Gpay அல்லது Phone pe செய்துவிட்டு, இதே எண்ணிற்கு உங்கள் முகவரியை அனுப்பித் திரும்பினால் உங்கள் கையில் “அவளுக்கும் நிலாவுக்கும் 6 வித்தியாசங்கள்” என்கிற நூல் கிடைக்கச் செய்வார்.
எல்லாம் வல்ல ஏக இறைக்கு முதற்கண் நன்றி… மிக அரியதொரு அருமையான நூல் வெளியீட்டு விழாவை நேரில் காண குடுத்து வைக்கவில்லை என்றாலும் இவ்வுரையைப் படித்ததும் என் காதிலும் கடலலையின் ஓசையும் என் காலைத் தொட்டு வருடி விட்டு குறுகுறுக்கும் நண்டையும் மனதார உணர வைத்த மேதகு இயக்குநர், பாடலாசிரியர் ஏகாதசி சகோதரருக்கு என் நெஞ்சம் நிறைந்த நன்றி!