
தோல்வி கண்டு துவளாதே
துயரம் கண்டு வருந்தாதே
முயற்சியோடு முட்டிப் பார்
முண்டும் விதைதான் செடியாகும்!
மழையில் நனைந்த மரங்கள்தான்
காடாய் நின்று வளங்கொழிக்கும்
வாழ்வில் வளையக் கற்றுக்கொள்
வளைவின் பணிவை ஏற்றுக்கொள்
வளைந்து செல்லும் பாதைதான்
சிகரம் காணும் ஒத்துக்கொள்!
நெட்டை மரங்கள் வெட்டப்படும்
நிமிர்ந்து நடந்தால் தட்டப்படும்
பெற்றோர் சொல்லுக்குக் கட்டுப்படு
உற்றார் சுற்றார் போற்றிடுவார்!
வளரிளம் பருவப்பெண்கள் நீ!
வளர்ந்தால் வீட்டின் கண்கள் நீ
கல்வி தந்திடும் கருவூலம்
அது பள்ளி என்னும் அறிவூலகம்!
அன்பாய் பேசக் கற்றுக்கொள்
அதனால் அழிவில்லை புரிந்துகொள்
பண்பாய் பணிவாய் பழகிடு
உண்மை மட்டும் உரைத்திடு
தெம்பாய் நீயும் இருப்பதற்கு
புன்னகை ஒன்றே மருந்தாகும்!
ஆசிரியரின் அறிவுரைகள்
அதுதான் வாழ்வின் நடைமுறைகள்
ஒழுக்கம் ஒன்றே உயிராகும்
அது இருந்தால் நல்ல பயிராகும்!
ஓய்வு என்று சொல்லாதே
கடலலை என்றும் நில்லாதே
வீசும் தென்றல் ஓயாது
இயற்கை என்றும் தூங்காது!
வாழ்வியல் பாடம் கற்றுக்கொள்
வலியினில் வழியுண்டு ஏற்றுக்கொள்!
ஒழுங்காய் செல்லும் நதிதானே
கடலைச் சென்று சேர்ந்திடுமே
ஒழுக்கத்தோடு நீ இருந்தால்
உலகம் உன்னைப் போற்றிடுமே!

கவிஞர் பொன்.பனகல் பொன்னையா