தெய்வத்தால் முடியாததும் முயன்றால் முடியும்
திருவள்ளுவர் உரைத்த வாய்மையிலும் வாய்மை
சிறிய எறும்பு வரிசையாகச் செல்வதும் முயற்சியே
சேமித்து மழைக் காலத்திற்கு வைப்பதும் முயற்சியே
சின்ன சிலந்தியின் வலை கட்டுதலும் முயற்சியே
சிக்கும் பூச்சிகளைப் பிடித்து உண்பதும் முயற்சியே
துள்ளி ஓடிடும் புள்ளிமான் தப்பித்தல் முயற்சியே
தன்னிகரில்லா புலியிடம் தப்பி உயிர் பிழைப்பதும் முயற்சியே
வானிலிருந்து வந்து மீனைக் கவ்வுவது பருந்தின் முயற்சியே
வச்சக் குறி தப்பாமல் வந்து கவ்வுவதும் முயற்சியே
தூக்கணாங்குருவி கூடு கட்டுவதும் பெரிய முயற்சியே
தூரிதுப்பட்டை குச்சிகளால் சிறப்பாய் கட்டுவது முயற்சியே
ஜல்லிக்கட்டில் பிடிபடாமல் காளைகள் வெல்வது முயற்சியே
ஜல்லிக்கட்டில் இளைஞர்கள் காளையை அடக்குவது முயற்சியே
பறவைகள் விலங்குகள் உயிர் வாழ்வது முயற்சியே
பண்பட்ட மனிதன் வாழ்வில் சிறப்பதும் முயற்சியே
முயல் ஆமையிடம் தோற்றது முயலாமையால்
முயன்று இருந்தால் முயலும் ஆமையும் வென்றிருக்கலாம்
முயற்சி எதுவும் செய்யாமல் வீட்டிலேயே
முடங்கிவிட்டு வெற்றி இல்லை என்பது முட்டாள்தனம்
ஒரே ஒருமுறை முயன்றுவிட்டு தோல்வி அடைந்து
ஒரேயடியாக இடிந்து துவள்வது கோழைத்தனம்
எடிசன் எத்தனை முறை முயன்றார் மின்சாரத்திற்காக
எல்லோரும் முயல்வோம் வெற்றி பெறும்வரை.