மாநில அரசுகளின் அதிகாரங்களைப் பறிக்கும் முயற்சி | வேல்முருகன் காட்டம்

1 0
Spread the love
Read Time:6 Minute, 26 Second

தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவரும் பண்ருட்டி தொகுதி எம்.எல்.ஏ.மான தி.வேல்முருகன் கூட்டுறவுத் துறையில் தேசிய கொள்கை உருவாக்க குழு அமைப்பது மாநில அரசுகளின் அதிகாரங்களைப் பறிக்கும் முயற்சி! என்று அறிக்கை வெளியிட்டுள்ளார். அதன் விவரம் இங்கே.

கூட்டுறவுத்துறைக்கு தேசிய கொள்கை உருவாக்க முன்னாள் ஒன்றிய அமைச்சர் சுரேஷ் பிரபு தலைமையில் குழு அமைத்து ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா உத்தரவிட்டுள்ளார். மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த 47 உறுப்பினர்களைக் கொண்ட குழு புதிய தேசிய கூட்டுறவு கொள்கையை உருவாக்கும் என்றும்  தமிழ்நாட்டில் இருந்து காந்தி கிராம ஊரக நிறுவனத்தின் கூட்டுறவு துறை தலைவரான டாக்டர் பிச்னை உள்பட 3 பேர் குழுவில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூட்டுறவு அமைச்சகம் என்ற பெயரில் பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய அரசு, கடந்த 2021இல் புதிய அமைச்சகத்தை உருவாக்கியிருந்தது.

தமிழ்நாட்டில் கூட்டுறவு அமைச்சகம் பல ஆண்டுகளாகச் சிறப்பாகச் செயல்பட்டு வரும் நிலையில், மாநில அரசுகளின் நிர்வாகத்திலும் கூட்டுறவு அமைச்சகம் முக்கியப் பங்காற்றுகிறது. இச்சூழலில்,  ஒன்றிய அரசு தனியாக கூட்டுறவு அமைச்சகத்தை உருவாக்கியிருப்பது, மாநில அரசுகளின் அதிகாரங்களில் தலையிடும் முயற்சி அனைத்து அரசியல் கட்சிகளும், ஜனநாயக முற்போக்கு சக்திகளும் குற்றம்சாட்டியிருந்தன.

இக்குற்றச்சாட்டுகளை பொருட்படுத்தாத ஒன்றிய அரசு, கூட்டுறவுத்துறைக்கு தேசிய கொள்கை உருவாக்க முன்னாள் ஒன்றிய அமைச்சர் சுரேஷ் பிரபு தலைமையில் குழு அமைத்திருப்பது கண்டனத்துக்குரியது.

ஜி.எஸ்.டி. வரி உள்ளிட்ட நிலுவைத் தொகைகளை வழங்காமல் மாநிலங்களுக்கு வரவேண்டிய வருவாயைக் குறைத்து வரும் ஒன்றிய அரசு,  அதிகாரம் அனைத்தும் தன்னிடமே குவிக்கும் வகையில் செயல்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாகத்தான்,  கூட்டுறவு அமைச்சகமும், அதற்கான கொள்கை உருவாக்கமும்.

தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில், அனைத்து துறைகளிலும் கூட்டுறவின் பங்கு மகத்தானதாக உள்ளது. வேளாண்மை, கட்டுமானம், மருத்துவமனைகள், மருந்தகங்கள், உணவகங்கள், காய்கறி விற்பனை, பண்டக சாலைகள், பொது விநியோகம் என பன்முகப் பணிகளில் கூட்டுறவு அமைப்புகள் ஈடுபட்டு மக்களுக்கான இயக்கமாக மாறி உள்ளது.

முக்கியமாக, கூட்டுறவு வரலாற்றில் தமிழகத்திற்குப் பெரும் பங்கு உண்டு. இந்தியாவிலேயே முதன்முதலாக திருவள்ளூர் மாவட்டம் திரூர் என்ற கிராமத்தில்தான் விவசாயிகளுக்கு என முதல் கூட்டுறவு கடன் சங்கம் 1904இல் ஏற்படுத்தப்பட்டது.

நாட்டின் விடுதலைக்குப் பிறகு, கூட்டுறவு அமைப்புகள் வாயிலாகத்தான், வறுமை ஒழிப்பு, பசுமைப் புரட்சி, வெண்மைப் புரட்சி, சிறுதொழில் விரிவாக்கம், சமூகநலத் திட்டங்கள் அமலாக்கம், ஐந்தாண்டு திட்டப் பணிகள், கைத்தறி, வீட்டுவசதி, பொது விநியோகம் என பன்முகத்தன்மையுடன் கூட்டுறவு அமைப்புகளின் பணி விரிவுபடுத்தப்பட்டது.

ஆனால், ஒன்றிய அரசின் கூட்டுறவு அமைச்சகமும், அதற்கான கொள்கை உருவாக்கமும், அனைவருக்குமான பொதுவிநியோக திட்டத்தை சிதைக்குமே தவிர, மக்களின் சேவைக்கு வழிவகுக்காது என உறுதியாகக் கூறலாம். அதுமட்டுமின்றி மாநில அரசுகளின் அதிகாரம் முற்றிலும் பறிக்கப்பட்டு, அனைத்து அதிகாரமும் ஒன்றிய அரசின் வசம் செல்லும்.

குறிப்பாக, ஒன்றியத்தில் ஆளும் பா.ஜ.க. அரசு,  தங்களது கட்சியின் செல்வாக்கை வளர்த்துக் கொள்வதற்காக, கூட்டுறவு நிறுவனங்களை தங்கள் வசம் கொண்டு வருவதற்கான ஏற்பாடே, இந்தக் கூட்டுறவு அமைச்சகமும், அதன் கொள்கை உருவாக்கமும்.

எனவே, மாநிலத்தில் சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி என்று உறுதியாகச் செயல்படும்  தமிழ்நாடு அரசு, கூட்டுறவு அமைச்சகத்தையும், கொள்கை உருவாக்கத்தையும் ஏற்க மறுப்பதோடு, அந்த அமைச்சகத்தையே கலைக்க வேண்டும் என குரல் எழுப்ப வேண்டும்.

கடந்த அ.தி.மு.க. ஆட்சியில், கூட்டுறவு நிறுவனங்களில் அரங்கேறிய நிர்வாகச் சீர்கேடுகள் நடைபெறாதவண்ணம் பார்த்துக்கொள்வதோடு, கூட்டுறவு அமைப்பின் மீது மக்களுக்கு உள்ள நம்பிக்கைத் தன்மையை தமிழ்நாடு அரசு உருவாக்க வேண்டும்” என்று தி.வேல்முருகன் தன் அறிக்கையில் கூறியுள்ளார்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!