ஆச்சரியத்தில் அசத்திய கோல்குண்டா கோட்டை  

1 0
Spread the love
Read Time:17 Minute, 19 Second

சுமார் ஆறு நாட்கள் தொடர்ந்து காலையில் இருந்து இரவு வரை நிற்க நேரமில்லாமல் ஹைதராபாத் பகுதியில் பல்வேறு பகுதிகளைச் சுற்றிப் பார்த்தோம்.

முதல் நாள் ஹைதராபாத்தில் இருந்து கிளம்பி கீசர குப்தா  என்கிற கோயில், திருப்பதியைப் போன்று மிகப் பெரிய மலை உச்சியில் அமைக்கப்பட்டுள்ள யாதகிரிகுட்டா, 108 கோபுரங்களின் கலசங்கள் சுரேந்திரபுரி மற்றும் லும்பினி பார்க், என்.டி.ஆர். கார்டன், ஏரிக்கு நடுவே உள்ள ஒரே கல்லாலான புத்தர் சிலையை ஹுசைன் சாகர் லேக்கில் தரிசனம் செய்தோம்.

இரண்டாம் நாள்ஸ்ரீசைலத்தில் கண்ணை கவரும் ஆக்டோபஸ்   வியூ,    ஆளை மிரட்டும் அடர்ந்த காடுகளின் நடுவே ஜங்கிள் சபாரி,  ஆச்சரியத்தில் ஆழ்த்திய ராமானுஜர் சிலை,  பார்க்க வேண்டிய பழங்குடியினர் கண்காட்சியகம் ஆகியவற்றை கண்டுரசித்தோம்.

மூன்றாம் நாளான இன்று பார்ப்பவரை அதிசயிக்க வைக்கும் கடிகாரக் காவலாளி,  யாராலும் திறக்கமுடியாத இரும்பு போன்ற கோட்டைகள், பழங்காலத்தில் நவீனத் தொழில்நுட்பங்களுடன்  மிகப்பெரிய கல்லறைகள், ஆச்சரியத்தில் அசத்திய கோல்குண்டா கோட்டை, ஹைராபாத்தில் மூன்றாம் நாள் சிறந்த பயண அனுபவமாக அமைந்தது. 

மூன்றாம் நாள் காலையில் 8.22 மணிக்கெல்லாம் கிளம்பி நாங்கள் தங்கியிருக்கும் அறையிலிருந்து  எங்களது காரில்  சாலர் ஜங்  மியூஸியம் நோக்கிச் சென்றோம். 

சாலர் ஜங்  மியூசியத்தை 10:00 மணிக்குத்தான் திறந்தார்கள். நாங்கள் அங்கே செல்வதற்கே 9.30 மணி ஆகிவிட்டது. 9.30 மணியிலிருந்து 10 மணி வரை காத்திருந்தோம். பிறகு மிக அதிகமான கூட்டம் வந்துவிட்டது. 

கூட்டத்திற்கு நடுவே நாங்கள் வரிசையில் நின்று எங்களது இடத்திற்கான டிக்கெட்டை பெற்றுக் கொண்டால் ஒரு நபருக்கு நுழையக் கட்டணம் 50 ரூபாய். நாங்கள் முதலிலேயே சென்றுவிட்டதால் அந்த வரிசையில் முன்னதாக இருந்து அதற்குரிய டிக்கெட்டை பெற்றுக்கொண்டோம்.

அங்கேயும் மொபைல் உள்ளே கொண்டு செல்வதற்கு 40 ரூபாய் டிக்கெட் பெற்றுக் கொள்கின்றனர். கேமராவிற்கும் தனியாகக் கட்டணம் உண்டு. நாங்கள் உள்ளே சென்றபொழுது அந்தக் காலத்தில் ராஜாக்கள் வாழ்ந்த பல்வேறு விதமான பொருட்களை அங்கேயே காட்சிப்படுத்தி இருந்தார்கள்.

நாம் எங்குமே காணமுடியாத பல்வேறு விதமான பொருட்கள் அங்கு இருந்தன. ராஜாக்கள் இவ்வளவு வசதியாக இவ்வளவு ஆடம்பரமாக வாழ்ந்து இருந்தார்கள் என்கிற தகவல்களை நாம் மிகத் தெளிவாக அங்கே தெரிந்துகொள்ள முடிந்தது.

மர  வேலைப்பாடுகளாகட்டும், பீங்கான் வேலைப்பாடுகளாகட்டும், சேலை தயாரிப்பு, இன்னும் இன்னும் நாம் சொல்லிக்கொண்டே போகலாம். அவ்வளவு விதமான பொருட்கள் அங்கே குவிந்து கிடக்கின்றன. அவற்றையெல்லாம் நாம் பார்ப்பதற்கு நிச்சயமாக ஒருநாள் வேண்டும்.

ஆனால் நாங்கள் ஒரு மூன்றிலிருந்து நான்கு மணி நேரம் மட்டுமே பார்க்க முடிந்தது. அதற்கு மேல் எங்களுக்கு கால் வலிக்க ஆரம்பித்துவிட்டது.  அமர்ந்து ஓய்வு எடுத்து சுற்றிப் பார்த்தாலும் தொடர்ந்து இயல்பாக நடந்து சென்று பார்ப்பதில் மிகுந்த சிரமம் இருந்தது. அங்கே நாம் சரியாக 10.50  மணிக்கெல்லாம் கடிகாரம் இருக்கும் பகுதிக்குச் சென்று விட்டோம்.

கடிகாரம் இருக்கும் பகுதியில் பெல் அடிக்கும் என்று தெரிவித்திருந்தார்கள். ஒரு காவலாளி  அந்தக் கடிகாரத்தின் உள்ளே இருந்து வெளியே வந்து சரியாகப் பதினோரு மணிக்கு 11 முறையும்,  12 மணிக்கு 12 முறையும் மற்ற நேரங்களில் அந்தந்த நேரத்திற்கு உரிய முறையில் மணியடிப்பதாகவும்,  அவசியம் அதனைப் பார்க்க வேண்டும் என்றும் தெரிவித்து இருந்தனர்.

நாங்கள் 10.50க்குப் போய் அமர்ந்து பதினொரு மணிக்கு மிகச் சரியாக அந்தக் கண்கொள்ளா காட்சியைக் கண்டுகளித்தோம். அந்தக் கடிகாரம் கொல்கத்தாவில் தயாரிக்கப்பட்டது என்று தகவல் தெரிவித்தார்கள். இன்னும் சில இடங்களில் இது போன்று கடிகாரங்கள் இருப்பதாகத் தெரிவித்தார்கள்.

சுமார் 100 வருடங்களுக்கு மேலாக அந்தக் கடிகாரம் இயங்கிக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்தனர். மீண்டும் நாங்கள் 11.50 மணிக்கெல்லாம் ஒருமுறை அமர்ந்து 12 மணிக்கு கடிகாரத்தில் மணி அடிப்பதை மீண்டும் ஒருவரைக் கண்டு ரசித்தோம். மணி அடிப்பதற்கு சுமார் இரண்டு நிமிடங்கள் முன்பாக காவலாளி வெளியே வந்து விடுகிறார். மிக அருமையான விஷயம் இது என்று அனைவரும் தெரிவித்தார்கள்.

சுமார் ஒரு மணியைப் போல் நாங்கள் அங்கிருந்து வெளியே வந்தோம். நாங்கள் மொபைல் போனை வாகனத்திலேயே விட்டுவிட்டோம். ஆனால் அது தவறு என்பது எங்களுக்குப் பின்புதான் தெரிந்தது. மொபைல் போன் இல்லாமல் எங்களது ஓட்டுநரைக் கண்டுபிடிக்க மிகுந்த சிரமப்பட்டோம். 

அதற்காக முன்பே அவரது தொலைபேசி எண்ணைக் குறித்துக்கொண்டு சென்றோம். வேறு ஒருவரின் எண்ணிலிருந்து கேட்டு வாங்கிப் பேச முயற்சி செய்தோம். வேறு எண்ணில் இருந்து அவர்களிடம் பேச முயற்சி செய்து அதன் பிறகு நாங்கள் அவரைத் தொடர்பு கொண்டோம். ஆனாலும் உடனடியாக மொபைல் இருப்பது போன்று அவரை எங்களால் பிடிக்க இயலவில்லை. சிறிது சிரமப்பட்டுத்தான் அவரைப் பிடித்து காரில் ஏறிக்கொண்டோம். அங்கிருந்து நேராக சவம்லா அரண்மனை  இருக்கக்கூடிய பகுதிக்குச் சென்றோம். அங்கு ஒரு ஹோட்டலில் மதிய உணவு சாப்பிட்டோம்.

மதிய உணவு மிகவும் அருமையாக இருந்தது. டிபனும் கிடைக்கின்றது. மதிய உணவுடன் தோசை, பூரி, இட்லி போன்ற உணவுகளும் நல்ல முறையில் கிடைத்தது. அந்தப் பகுதியில்  சவம்லா அரண்மனை, சார்மினார் மற்றும் மியூசியம் மூன்றும் அருகருகே அமைந்துள்ளன.

முதலாவதாக நிசாம் மியூசியம் சென்றோம். மியூசியத்தில் சில மணி நேரங்கள் பார்த்துவிட்டு அங்கிருந்து கிளம்பினோம். 125 ரூபாய் கட்டணம் வசூலிக்கின்றனர். அதைப் பார்த்துவிட்டு அங்கிருந்து  சவம்லா அரண்மனையில்  ஒரு ஆளுக்கு 100 ரூபாய் கட்டணம் வசூல் செய்கின்றனர். கேமராவிற்கு அங்கே உள்ளே அனுமதி கிடையாது.

சவம்லா அரண்மனையில் மொபைல் போன் கொண்டுசெல்லலாம். கேமரா கொண்டுசென்றால் அதனை ரூமில் வாங்கி வைத்து விடுகிறார். மிகப்பெரிய அரண்மனையாக இருக்கின்றது. அதன் உள்ளே எல்லாம் நாம் சென்று பார்க்க கூடிய வகையில் அமைத்திருக்கிறார்கள்.

 மிகப் பிரம்மாண்டமான முறையில் ஈரானிய டைல்ஸ் மூலம்  மிக அருமையாக, நேர்த்தியாக அமைத்துள்ளனர். ராணிக்குத் தனியாக மாளிகை. ராஜாவிற்குத் தனியாக மாளிகை என அனைத்துமே மிக அருமையாக இருந்தது. அங்கேயும் கால் வலிக்கும் அளவிற்கு  மிக நீண்ட தூரம் நாம் அரண்மனையைச் சுற்றிப் பார்க்க வேண்டியிருக்கின்றது.

அரண்மனை உள்ளே அடுப்படிகளையும், வாகனங்களையும் பார்த்துவிட்டு அங்கிருந்து மீண்டு நாங்கள் முன்பகுதிக்கு வந்து சேர்ந்தோம். சுமார் இரண்டு மணிநேரத்திற்கு மேலாகப் பார்க்க வேண்டிய இடங்கள் அங்கே அமைந்திருக்கின்றன.

சவம்லா அரண்மனையில் இருந்து  சார்மினார் பகுதியைச் சென்று பார்த்தோம். அங்கு மிகப் பெரிய க்யூ நின்றது. அந்த வரிசையில் இருந்து சார்மினார் மேலே ஏறி சார்மினார் முழுவதும் பார்த்தோம். 

சார்மினார் பகுதியில்  எங்களுக்குப் பசி அதிகமாக இருந்தபோது நிமிர எதிரே தெரிந்தது. ஹோட்டல். அங்கு எங்களுக்கு பிஸ்கட் மற்றும் டீ  வாங்கிச் சாப்பிடச் சொன்னார் எங்களின் ஓட்டுநர். மிக அருமையான முறையில் சூப்பராகச் செய்யப்பட்டிருந்தது. அந்தப் பகுதியில் அந்தக் கடைதான் மிக ஃபேமஸ் என்று தெரிவித்தார்கள்.

சார்மினார் பகுதியில்  மிக அதிக அளவிலான சாமான்கள் விற்கின்றன. வளையல்கள் விற்கக்கூடிய ஒரு தனி தெருவே அங்கே அமைத்திருக்கின்றது. முத்துக்களும் வாங்கலாம் என்று தெரிவித்தார்கள். ஆனால் முத்துக்களின் விலை மிக அதிகமாக்க கூறினார்கள். 

நாங்கள் ஒரு முத்து  மாலை  150 ரூபாய் என்று கூறி அவரிடம் முத்துமாலை 20 ரூபாய்க்குக் கேட்டேன். அவளோ இல்லை நூறு ரூபாய் என்று கூறினார். பிறகு அவரே 60 ரூபாய் என்று கூறினார். பிறகு அவரே இரண்டு முத்து மாலைகளை 100 ரூபாய்க்குப் பெற்றுக் கொள்ளுங்கள் என்று கூறினார். 

சிறிது நேரம் கழித்து இல்லை, இல்லை 3 மாலைகளை  100 ரூபாய்க்கு பெற்றுக் கொள்ளுங்கள் என்று கூறினார். எங்களுக்குச் சந்தேகம் வந்துவிட்டது. அப்படியெனில் முத்துமாலை தரமில்லாமல் இருக்க வேண்டும் என்கிற எண்ணத்தில் நாங்கள் அதனை வாங்கவில்லை. 

சார்மினார் பகுதி முழுவதுமே கடைகள்தான். லட்சக்கணக்கான ரூபாய்களுக்கு அங்கே வியாபாரம் நடைபெறுகிறது. திரும்பிய பக்கமெல்லாம் மனித்த தலைகள்தான்.

அங்கிருந்து நாங்கள் கோல்கொண்டா கோட்டைக்குச் செல்வதற்கு முயற்சி செய்தோம். அதற்கு முன்பாக மெக்கா மஸ்ஜித் என்கிற மசூதியைச் சென்று வழிபட்டோம். மெக்கா மஸ்ஜித் மிகப் பெரியதாக அமைந்திருந்தது. அங்கேயே தூண்கள் மிக அருமையாக இருந்தன.

அந்த மசூதியில் நன்றாக வழிபட்டுவிட்டு அங்கிருந்து தங்களது பயணத்தை கோல்கொண்டா கோட்டை நோக்கிப் பயணித்தோம். கோட்டை நோக்கிச்  செல்லும்பொழுது எங்களது டிரைவர் எங்களிடம் மிக அருமையான முறையில் கட்டப்பட்டிருந்த கோல்கொண்டா கோட்டை தடுப்புச் சுவர்களைக் குறித்து விளக்கினார்.

 சுமார் எட்டு விதமான  தடுப்புச் சுவர்கள் இருப்பதாக எங்களுக்கு அவர் தெரிவித்தார். முதல் கோட்டையின் வழியாக நாங்கள் உள்ளே செல்கிறோம் என்று தெரிவித்தார். முதல் கோட்டையின் வழியாக நாங்கள் உள்ளே சென்று கோல்கொண்டா கோட்டையை  அடைந்தோம். 

கோல்கொண்டா கோட்டையைச் சுற்றிப் பார்ப்பதற்கு மிக அதிகமான நேரம் தேவை. எங்களுக்குக் கிடைத்த நேரத்தில் நாங்கள் நன்றாகச் சுற்றிப் பார்த்தோம். அங்கிருந்து நாங்கள் இரவு 6.30 மணிக்கு  நடைபெறும் லைட் அண்ட்  சவுண்ட் ஷோவைக்  காண்பதற்காக டிக்கெட் எடுத்தோம்.

எக்ஸிக்யூட்டிவ் என்கிற பகுதியில் 140 ரூபாயும், ஆர்டினரி என்கிற பகுதியில் 120 ரூபாய்க்கும் டிக்கெட் விற்றார்கள். நாங்கள் 140 ரூபாய் பெற்றுக்கொண்டு சென்றோம்.  சரியாக ஒரு மணி நேரம், அதாவது  6.30 மணி முதல் 7.30 மணி வரை (ஆங்கிலத்தில்)  ஆறு முப்பது என்றால் ஆறு முப்பதுக்கு ஆரம்பித்துவிடுகிறார்கள். நாங்களோ 6 மணிக்கெல்லாம் உள்ளே சென்றுவிட்டோம்.

 அந்த நிகழ்ச்சியில் லைட்டை மட்டும் காண்பித்து கதையைச் சொல்கிறார்கள். அரை மணி நேரத்தில் நமக்குத் தூக்கம் வந்துவிடும். ஆனால் ஆர்வமாக வரலாறு கேட்டால் கண்டிப்பாகத் தூக்கம் வராது. அதில் கோல்கொன்டா அரண்மனையைப் பற்றியும் அரண்மனையில் உள்ள ராஜாக்களைப் பற்றியும் மிகத் தெளிவாகப் பல்வேறு விஷயங்களை எடுத்துச் சொல்கின்றனர்.  முஸ்லிம் ராஜாக்கள் இங்கே உள்ள இந்துப் பெண்களைத் திருமணம் செய்வது மற்றும் அவர்களுடைய வணிகரீதியான விஷயங்கள் அனைத்தையும் மிகத் தெளிவாக எடுத்துக் கூறுகின்றனர்.

முஸ்லிம் காலத்தில் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெருமாள் கோயிலை நிறுவியது தொடர்பாகவும் தகவலைத் தெரிவிக்கின்றனர். அவர்கள் வாழ்க்கை வரலாறு நம்மை அதிசயிக்க வைக்கிறது. 

இரவு 8.50 மணிக்குப்  பிறகுதான் நாங்கள் கோல்குண்டா கோட்டையில் இருந்து  கிளம்பினோம். ஒன்பது முப்பது மணி அளவில் எங்களது அறையை அடைந்தோம். இரவு உணவு முடித்துவிட்டு ஓய்வு எடுக்கத் தயாரானோம்.

(பயணம் தொடரும்) 

எம்.எஸ்.லெட்சுமணன், காரைக்குடி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!