கடவுள் சாட்சி!
கடவுள் இருக்கிறாரா? எனில் எங்கே இருக்கிறார்? நம்மைப் படைத்தவர் அவர்தான் எனில் நம் துன்பங்களின்போது எங்கே செல்கிறார்?
இப்படி ஓர் நிச்சயமற்ற உலகில் ஏன் மனிதர்களை வைத்தார்?
கடவுள் மனிதனைப் படைத்தாரா?
மனிதன் கடவுளைப் படைத்தானா?
பிரபஞ்சத்தை, உலகைத் தோற்றுவித்தவர் இறைவன் என்றால் மனிதரைத் தவிர அவர் படைத்த மற்ற ஜீவராசிகளுக்கு உணவு, கூடு, இனப்பெருக்கம், தவிர்த்து ஏன் கடவுளோ, துதிகளோ, பிரார்த்தனைகளோ தேவைப்படவில்லை?
ஒரு மடத்தில் அதன் குருவானவர் தினம் பூஜை செய்கிறார், ஒரு பூனை குறுக்கே வந்து பூஜையைக் கெடுக்கிறது.
சீடர்களைக் கூப்பிட்டு பூஜை முடியும்வரை பூனையைத் தூணில் கட்டச் சொல்கிறார். தினமும் அவ்வாறே செய்யப்படுகிறது.
குரு மறைகிறார், அவருக்குப் பின் வந்த மாடாதிபதிகளும் மறைகிறார்கள். ஆனால் பூஜை நடக்கும்போது, தூணில் கட்டப்படும் பூனை சம்பிரதாயம் மட்டும் மறையவில்லை. பூனையே இல்லாவிட்டால் பூஜை இல்லை என்ற அளவிற்கு பூனை பூஜையை வென்றது.
இந்தக் கதை படித்ததிலிருந்தே, இறைவன் என்ற தத்துவத்தை விட்டுவிட்டு பூனை என்ற வழிபாட்டு சாங்கியங்களில் மட்டுமே கவனம் செலுத்துகிறோமோ என்ற எண்ணம் அடிக்கடி தோன்றும்.
முகநூலில் ஒரு அம்மையார் சொற்பொழிவாற்றும் வீடியோ ஒன்றைப் பார்க்க நேரிட்டது.
ஆயிரம் பேருக்கு அன்னதானம் செய்ய ஆசை, ஆனால் கையில் காசில்லை, அதனால் மனவருத்தம். பெரும் சோகம்.
ஏன் அன்னதானம் என்றால் தலை வாழை இலை போட்டு மனிதர்களுக்குத்தான் உணவளிக்கவேண்டுமா என்ன?
ஒரு வெல்லத்துண்டு ஒரு ரூபாய் இருக்குமா? அதை வாங்கி ஒரு எறும்புப் புற்றின் அருகே கொண்டு வையுங்கள். ஆயிரம் பேருக்கு அன்னதானம் செய்ய முடிந்ததல்லவா?
மிகவும் யோசிக்கவைத்த காணொளி அது. சாங்கிய ரூல்களில் சிக்கிக்கொண்டு கடவுளிடம் பேரம் பேசி உண்டியலில் பணம் போட்டு, ட்யூப் லைட்களில் உபயதாரர் பேரெழுதி, அடப்போங்கப்பா! என்று கடவுள் மீது ஒரு பெரிய வெற்றிடம் வந்த நேரத்தில்தான் சிக்மண்ட் ப்ராய்டின் சிந்தனைகள் படிக்கக் கிடைத்தது.
உளப்பகுப்பாய்வின் தந்தை என்றழைக்கப்படுபவர் சிக்மண்ட் ப்ராய்ட்…
மதம் என்பது ஒரு பிரமை என்கிறார். பிரமை என்றால் இல்லாத ஒன்றை இருப்பதாக நினைப்பது. ஃபிராய்டின் ஆக்கங்கள் அனைத்தையும் ஏற்றுக் கொண்டவர்கள் கூட இந்தக் கூற்றுக்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். காரணம் இவர்களெல்லாம் மத நிறுவனங்களால் ஆதாயம் பெறுபவர்கள் அல்லது மூளைச்சலவை செய்யப்பட்டவர்கள்.
கடவுளை உருவாக்கியவர்கள் எல்லோருமே தங்களுடைய குணாதியங்களைத்தான் அந்தக் கடவுளுக்கும் கொடுத்திருக்கிறார்கள். தனக்கு விருப்பமானவற்றை கடவுளுக்கு விருப்பமானது என்றும், தான் வெறுப்பவற்றைக் கடவுளுக்குத் தகாதது என்றும் கட்டமைத்தனர்.
அதனால் தான் அனைத்து மதங்களும் அன்பை மட்டுமே போதிக்கின்றன என்று ஒரு புறம் கூறிக்கொண்டே, மறுபுறம் மாற்று மதங்களின் மீது துவேசத்தைக் காட்டுகின்றன.
அருகிலிருக்கும் நம்மால் பாதிக்கப்பட்ட மனிதர்களை விட்டுவிட்டு, இறந்த பின்னால் இறைவனுக்குப் பதில் சொல்ல வேண்டுமே என்று இல்லாத இறைவனை நினைத்து துக்கப்படுகிறவர்கள் தானே நாம்.
யுட்யூப் இளைஞர்களின் மொழியில் சொன்னால்.. இறை பற்றிய எதிர்க் கருத்தாக, மனதை ஊடுருவி கேள்வி கேட்டு அது ‘வேற லெவலாக’ இருந்தது.
கடவுள், மதம் பற்றிய என்னுடைய தேடல்கள் போல உங்களுடைய தேடல்களும் இருக்குமா என்று தெரியவில்லை.
எதற்கு வம்பு, சாமி கும்பிட்டோமா, கறி சோறு வெட்டினோமா, செல்ஃபி எடுத்தோமா என்று எளிமையாக ஒரு வழிபாடு உங்களுக்கு அமைந்திருக்கலாம்.
கடவுள் என்றால் கட – உள் என்றெல்லாம் தத்துவம் சொல்லிவிட்டு சரி, கடந்து உள்ளே நுழையும்போது எது கடவுள்? ஏன் இங்கே சர்க்கரைப் பொங்கல்? என்ற கேள்விகள் எல்லாமே எழுவதைத் தவிர்க்கமுடியவில்லை.
ஏன் இங்கே தூணில் பூனையை கட்டிவைத்து பூஜை செய்கிறீர்கள் என்ற கேள்விக்கு பல்லாண்டு காலமாக இதுதான் மடத்தின் வழக்கம் என்ற பதில்தான்… அது என்றோ ஒருநாள் பூனையின் சேட்டைக்கான தண்டனை என்ற உண்மையைக் கொண்டுவந்தது. ஆனால் இந்தத் தெளிவு நமக்கு வராத அளவிற்கு ஒவ்வொரு மதத்தின் மதகுருமார்களும் பார்த்துக் கொள்வார்கள்.
மனிதன் நாகரிகமடைந்து இவ்வுலகில் எத்தனையோ வல்லரசுகள் தோன்றி இருக்கிறது, உலகை ஆண்டிருக்கிறது. மன்னர்கள் என்று பெரும் சக்தி படைத்த மனிதர்கள் பெரும்படை கொண்டு கோலோச்சி இருக்கிறார்கள். ஆனால், அவர்கள் எல்லாம் இப்பொழுது எங்கே?
இன்கா நாகரிகம் என்பது அப்படி கோலோச்சிய ஒரு பண்டை நாகரிகம். தென்அமெரிக்க நாட்டில், கொலம்பஸ் எல்லாம் வருவதற்கு முன்பாகவே சண்டைகளாலும், சமாதானத்தாலும் ராஜ்ஜியத்தைக் கட்டி எழுப்பிக் காத்த நாகரிகம்.
கொலம்பஸ் வருகைக்கு முந்தைய மிகப்பெரிய பேரரசாக இன்கா இருந்ததாம்.
பெரு நாட்டின் மிக உயர்ந்த மலைப் பிரதேசத்தில் இன்றளவும் இந்த நாகரிகத்தின் கட்டட மிச்சங்கள் உண்டு. ஆச்சரியமாக கடல் மட்டத்திலிருந்து மிக உயர்ந்த அந்த மலைப் படுகைகளில் உப்பளங்களும் உண்டு. இன்றளவும் அங்கே உப்பு தயாரிக்கப்படுகிறது. அதே ஆயிரம் ஆண்டுகள் பழமையான முறையில். அப்படிப்பட்ட பேரரசில் வழக்கம்போல கடவுளுக்கு மரியாதையும் பயமும் இருந்தது.
வெறுமனே கடவுளுக்குப் பயந்தால் போதுமா? ஏதேனும் காணிக்கை கொடுத்தால்தானே நம்மைப் பாதுகாப்பாக வைத்திருப்பார்?
என்ன செய்யலாம் என்று அந்தப் பேரரசில் யோசித்தார்கள்.
சிறந்த காணிக்கையைக் கொடுப்போம் என்று முடிவு செய்தார்கள்.
ஒரு சிறுமியையும், இரண்டு குட்டிப் பயல்களையும் காணிக்கையாகக் கடவுளுக்குக் கொடுக்கலாம் என்று ஏகமனதாக முடிவாகியது.
அதுவும் எப்படி?
மூன்று அப்பாவி குழந்தைகளையும் அந்தக் குளிரான மலை உச்சியில் கொண்டுபோய் அப்படியே விட்டுவிட்டு வந்துவிடவேண்டும். குளிரில் குரூரமாகச் சாகும் அந்தப் பிஞ்சுகளின் துன்பத்தில் இறைவன் இன்கா பேரரசைக் காப்பார்.
மன்னர் முடிவு செய்தால் மறுக்க முடியுமா? அதற்காக மன்னரின் குழந்தைகளோ, மந்திரிகளின் குழந்தைகளையோவா அனுப்ப முடியும்?
யாரோ ஒருவரின் அப்பாவிக் குழந்தைகள் மலை உச்சியில் விடப்பட்டார்கள். இன்கா பேரரசின் மன்னரும், அதிகாரப் பட்டாளங்களும், ஏன் மக்களே கூட மகிழ்ந்திருப்பார்கள்.
என்ன ஒரு அற்புதமான காணிக்கை? இதைவிட கடவுளை குஷிப்படுத்த முடியுமா? இனி இன்கா பேரரசு உலகை ஆளும். இன்காவின் மக்களை இறை காக்கும்.
இறைவன் காத்தாரா?
சில ஆண்டுகளுக்கு முன்பாக இன்கா பேரரசு இருக்கும் மாச்சுபிச்சு மலைப்பகுதிகளில் தொல்லியல் ஆராய்ச்சி நடந்தபோது ஒரு உடலைக் கண்டுபிடித்தனர்.
நவீனகால ஆராய்ச்சியில் அது 500 வருடங்களுக்கு முன்னர் கடவுள் இன்கா பேரரசைக் காக்க மலை உச்சியில் குளிரில் விடப்பட்ட சிறுமி என்பது ஆராய்ச்சியின் முடிவு.
எந்தப் பேரரசு காக்கபடவேண்டுமென்று அதிகார மையமும், அரசும் தீர்மானித்ததோ அந்தப் பேரரசு இன்று தடம் தெரியாமல் அழிந்திருக்க, அவர்களால் அப்பாவியாகக் கடவுள் பெயரால் கொல்லப்பட்ட சிறுமியின் சடலம் பத்திரமாகக் காக்கப்பட்டது.
இயற்கையாலா?
இறைவனாலா?
எழுத்து : அம்மு ராகவ்