முகநூல் உளவியல் | அம்மு ராகவ் | தொடர் 1

முகநூல் உளவியல்
3 0
Spread the love
Read Time:14 Minute, 18 Second

கிளி ஜோசியம் பார்த்திருக்கிறீர்களா?

“வாம்மா மீனாட்சி… ஐயாக்கு ஒரு நல்ல சீட்டா எடுத்துப் போடு.”

இறகு பிய்க்கப்பட்டு பறப்பது தடுக்கப்பட்ட மீனாட்சி தத்தித் தத்தி வரும். ஏதோ ஒரு சீட்டை எடுக்கும். உடனே ஓரிரு நெல்லோ, விதையோ உணவாகக் கொடுக்கப்படும். மீனாட்சி எனும் அந்தக் கிளி மீண்டும் கூண்டுக்குள் சென்றுவிடும்.

அந்த நெல்மணிகள்தான் பசியுடன் இருக்கும் கிளிக்கான கூலி. ஆங்கிலத்தில் ரிவார்ட். ஓரிரு வாழைப்பழத்துக்காக தெருவில் பிச்சை எடுக்கும் யானை தொடங்கி, மக்கள் கை தட்ட, வானத்தில் எகிறி குதித்து தண்ணீரில் விழுந்து பயிற்றுநர் கொடுக்கும் மீன் துண்டை வாங்கும் டால்பின் வரை இதை நீங்கள் காணலாம்.

இதே உளவியல்தான் முகநூல் என்றழைக்கப்படும் ஃபேஸ்புக்கிலும் பயன்படுத்தப்படுகிறது.

எனில் அந்தக் கிளியும், டால்பினும் யார்?

நீங்களும், நானும்தான்.

ஆச்சரியமாகவும், அதிர்ச்சியாகவும் இருக்கும். ஆனால் இதுதான் அறிவியல், இதுதான் உளவியல், உருப்படியாக உருப்படாமல் போவதற்கான எளிய வழி.

ஆணோ, பெண்ணோ, நீங்களோ, நானோ ஃபேஸ்புக்கில் நம்மை தொடர்ந்து இயங்க வைப்பது எது?

நோட்டிபிகேஷன்.

எத்தனை பேர் உங்கள் போஸ்ட்டுக்கு லைக் போட்டிருக்கிறார்கள்?

கமெண்ட் போட்டிருக்கிறார்கள்?

அதில் ஆர்ட்டின் எத்தனை?

ப்ளூ லைக் எத்தனை?

சிரிப்பான் எத்தனை?

நமக்குப் பிடித்த பெண்ணோ, ஆணோ என்ன போஸ்ட் போட்டிருக்கிறார்கள்?

அவர்களுக்கு யார் லைக் போட்டிருக்கிறார்கள்?

அதில் ஆர்ட்டின் விட்டது யார் யார்?

ப்ளூ லைக் போட்டது யார் யார்?

என்னுடைய ஸ்டோரியை என்னுடைய ‘க்ரஷ்’ பார்த்தானா? பார்த்தாளா? ஆர்ட்டின் விட்டிருக்கிறார்களா?

டிங், டிங்

யாரிது மெசஞ்சரில்? இது என்ன முன்பின் தெரியாதவர் மெசேஜ் அனுப்பி இருக்கிறார். என் போஸ்ட் சூப்பர், போட்டோ சூப்பர்.

வாவ்.. என்னை கவனிக்கவும் பேஸ்புக்கில் ஆளிருக்கிறதா? இத்தனை லைக்கா? கமெண்ட்களா?

எனில் நான் உலகறிந்த பிரபலம்தானே?

இப்படி ஃபேஸ்புக் ஆப்பை திறந்தவுடன் சூழ்நிலை மறந்து நம்மை அதனுடன் கட்டிப்போடுவது எது?

கிளிக்கு நெல்,

உங்களுக்கு லைக், கமெண்ட், ஷேர்.

Nucleus accumbens என்று ஆராய்ச்சியாளர்கள் இதற்குப் பெயர் வைத்திருக்கிறார்கள்.

நம் மூளைக்கான ரிவார்ட் சென்டர் இதுபோன்ற புகழ்ச்சி, நம்மை யாரெல்லாம் கவனிக்கிறார்கள், புகழ்கிறார்கள் என்ற எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக ஃபேஸ்புக் வடிவமைப்பில் நெல்லும், பொரியும் வைக்க அந்த விர்ச்சுவல் உலகமே மெய்யானது என்று நாம் மூழ்கிப்போகிறோம்.

மனித குணங்களின் மொத்த வடிவத்தை ஃபேஸ்புக்கில் பார்க்கலாம்.

காமம், காதல், குரோதம், வன்மம், பக்தி, மத வெறி, சாதி வெறி, மார்கெட்டிங், நூதன ஏமாற்று வேலைகள், பொய்யான காதல், உண்மையான காதல்,  முகமிலிகள், அன்பு, உதவி, அரவணைப்பு, கோபம் என்று மெய்யுலகைப் போலவே மெய்நிகர் உலகமும் இயங்குகிறது.

பெண்ணிடம் இப்படிப் பேசுங்கள், பெண்களை மதியுங்கள், ஜாதி, மதச் சண்டை வேண்டாம், அன்பு செய்வோம் என்பதெல்லாம் இந்த பேஸ்புக் உளவியலில் வேலைக்காகாத ஏட்டுச் சுரைக்காய்கள்.

ஃபேஸ்புக்கின் அஸ்திவாரமே நீங்கள் டிஜிட்டல் திண்ணையில் உட்கார்ந்து உங்கள் பொன்னான நேரத்தைப் புரணி பேசிக் கழிக்கவேண்டும் என்பதுதான்.

சிகரெட்டும் சாராயமும் தயாரிக்கும் கம்பெனிகளைத் திறந்துகொண்டே மது ஒழிப்பு பிரச்சாரமும், புகைப்பிடிப்பது புற்று நோயை உண்டாக்கும் என்ற பிரச்சாரமும் என்றைக்காவது வெற்றி பெற்றிருக்கிறதா?

இதில் ஒரு சிறிய பாகத்தை எடுத்துக்கொண்டு துப்பட்டா போடுங்கள் தோழி என்று சொல்லாதீர்கள் என்று சொல்வதை யார் கவனிப்பார்கள்?

ஃபேஸ்புக்கிற்கு தீவிரவாதி முதல், ஆன்மிகவாதி வரை அனைவரும் தேவை.

அனைவருக்குமான தேவைகள் என்ன என்பதையே உளவு பார்க்கிறது, தகவல் திரட்டுகிறது, உங்கள் தேவைகளை வியாபாரிகளுக்கு விற்பனை செய்கிறது, லாபம் பார்க்கிறது.

முகநூலின் வடிவமைப்பே நம் உளவியலை ஒட்டித்தான் இருக்கிறது.

நமது ஆசைகளை வைத்து வியாபாரம் செய்கிறது.

என் மதம் மேல் ஆசை

ஜாதி மேல் ஆசை

அடுத்த ஆண், பெண் மேல் ஆசை

அங்கீகாரத்தின் மேல் ஆசை

புகழ்ச்சிமேல் ஆசை

ஒளிவட்டத்தின் மேல் ஆசை

ஆசைக்கு விலை உண்டு, அதற்கு நெல் மணிகள் உண்டு.

‘மீனாட்சி, ஐயாக்கு / அம்மாக்கு ஒரு லைக் போடு, ஆர்ட்டின் போடு, கமெண்ட் போடு’ என்று நம்மைத்தான் கூண்டுக்கிளியாக்கி வைத்திருக்கிறது பேஸ்புக்.

யூதர்கள் தங்கள் குழந்தைகள் டி.வி. பார்ப்பதை, குறிப்பாக கார்ட்டூன் பார்ப்பதை விரும்பமாட்டார்கள். செஸ், படங்கள் வரைவது, கணிதம் இப்படித்தான் அவர்கள் குழந்தைகள் வளர்க்கப்படுவதை விரும்புவார்கள்.

ஏன்?

கார்ட்டூன் என்பது குழந்தைகள் விரும்பிப் பார்க்கும் ஒரு பொம்மைப்படம்தானே? ஆபாசங்களின்றி அவர்கள் சிரித்து மகிழவும் தடை விதிப்பது எவ்வளவு குரூரம்.

இல்லை… அதில் ஒரு உளவியல் இருக்கிறது. கார்ட்டூன் என்பது யாரோ சிலரின் கற்பனை. அந்தக் கற்பனையைப் பார்க்கும் குழந்தை அதைத் தனதாக்கி மகிழ்கிறது. குழந்தையின் உண்மையான கற்பனைத் திறனை டாம் & ஜெர்ரியும், சின்சானும் மழுங்கடிக்கிறார்கள் என்பதே அந்த உளவியல். தன் கற்பனை, சிந்தனையை இழந்து அடுத்தவர் கற்பனையில் சிந்திக்கும் குழந்தை எப்படி அறிவாளியாக இருக்கமுடியும்?

உலகின் தலைசிறந்த அறிவாளிகள், வியாபார காந்தங்கள் எப்படி யூதர்களாக இருக்கிறார்கள் என்பது உங்களுக்குப் புரிந்திருக்கும். உபரித் தகவல் குழந்தைகளுக்கான பல பிரபல கார்ட்டூன்களில் யூதர்கள் உருவாக்கியவையும் உண்டு. இதென்னடா அநியாயம் என்று நினைப்பீர்களேயானால் ஃபேஸ்புக்கும் அதைத்தான் உங்களுக்கும் செய்கிறது.

இதே குழந்தைகளுக்கான கார்ட்டூன் படங்களின் அடுத்த உளவியல் பரிமாணமும் உண்டு. சில நாடுகள் டாம் & ஜெர்ரி என்ற பிரபல பூனை, எலி கார்ட்டூன் சித்திரத்தை தடை செய்தது. காரணம்?

படம் முழுக்க வன்முறை, இது குழந்தைகள் மனதில் வன்மத்தை விதைக்கும்.

உண்மைதானே?!

2016 ல் பேஸ்புக் ஓனரான மார்க் ஸுக்கர்பெர்க்கை உலகின் பெரிய யூத செல்வந்தர் என்று பார்ச்சூன் பத்திரிகை புகழாரம் சூட்டியது என்பது கொசுறு தகவல்.

முகநூலின் உளவியல் எளிமையானது.

யார் கணக்குத் தொடங்குகிறார்?

ஆணா, பெண்ணா?

அவர் யாருக்கெல்லாம் லைக் போடுகிறார்?

அவர் லைக் போடுவதை ஒத்த மற்ற நபர்கள் யார் யார்? அவர்களை எல்லாம் அவருக்குக் காட்டு. உங்களுக்கு இவரைத் தெரிந்திருக்கலாம். நீங்கள் இவருடன் நட்பு கொள்ள விரும்புகிறீர்களா? போன்ற செய்திகளை அவருக்கு அனுப்பு.

ஆன்மிகம் பார்க்கிறாரா? அது சார்ந்த குழுக்கள் எல்லாம் அவர் பார்வைக்கு அனுப்பு.

டயட் பற்றி தேடுகிறாரா? அது சம்பந்தப்பட்ட குழுக்கள், பிரபலங்கள், போஸ்ட்களை அவர் கண்ணுக்குப் படும்படி அனுப்பு.

அரசியல் பிரியரா? அந்தக் கட்சி சார்ந்த அடிதடி சண்டைகளைத் தொடர்ந்து அவர் டைம்லைனில் வரச்செய். குறிப்பாக அவரை டென்ஷனாக்கும் எதிர்க்கட்சி கேலிகளை அவருக்கு காண்பி. அப்பொழுதுதான் சண்டை வரும். கும்பல் சேரும். வைரலாகும்.

இதனால் பேஸ்புக்கிற்கு என்ன பயன்?

அடுத்தவர் கார்ட்டூனை எப்படி தான் வரைந்த தனது சிந்தனையாக ஒரு குழந்தை ஏற்றுக்கொள்கிறதோ அதேபோல சதா சர்வ நேரமும் உங்களை முகநூல் தவிர வேறொன்றைப் பார்க்காமல் செய்யவைக்கும் முழு உத்தியே முகநூல் உங்களுக்குச் செய்யும் சேவையாக செய்கிறது.

ஒரு நாளின் 24 மணி நேரத்தில் கணிசமான நேரம் ஃபேஸ்புக்கில் செலவழிக்கும் நபர், அது தரும் விளம்பரங்களை நம்புகிறார். அது தரும் அரசியல் செய்திகளை நம்புகிறார். ஃபேஸ்புக்கால் கட்டமைக்கப்படும் அரசியல் கட்சி வெற்றி பெறுகிறது. அதில் திரித்துச் சொல்லப்படும் செய்தி உண்மை என்று நம்பவைக்கப்படுகிறது. சக்திமானை உண்மை என்று நம்பி மாடியிலிருந்து குதித்த குழந்தையைப் போல நீங்களும் ஃபேஸ்புக்கை நம்பி உங்கள் சுயத்தைத் தொலைக்கிறீர்கள்.

கணவன், மனைவி இருவரும் சமூக வலைதளங்களில் மூழ்கியிருக்க, குழந்தைகள் ஆளுக்கொரு பக்கம் இன்ஸ்டாக்ராமும், பப்ஜியுமாக முகத்தை டிஜிட்டல் திரையில் மூழ்கி இருக்கிறார்கள்.

முகநூலில்  காட்டுகிற நலம் விசாரிப்பை …வாழ்த்துப் பகிர்வை…ரசனை போற்றுதலை ஏன் நேரிடையாக நம்மைச் சுற்றியுள்ளவர்களிடம் காட்டுவது இல்லை?

எதிரே வருபவரைப் பார்த்து ஏன் புன்னகைக்க முடிவது இல்லை?

தோழமையுடன் ஏன் மனம் விட்டு  பேசுவது இல்லை?

மனைவியிடம் சமையலை நல்லா இருக்குன்னு வாய் திறந்து சொல்வது இல்லை?

மகன் மகளிடம் என்ன முகம் பூரிப்பாக இருக்கு… லவ்வா என்று கேட்க முடிவதில்லை?

தெருவில் பசியோடு சுற்றிக் கொண்டிருக்கும் ஒரு  நாய்க்குட்டிக்கு பிஸ்கட் வாங்கிப் போட வேண்டும் என்று ஏன் தோன்றுவதில்லை?

கைக்கெட்டும் தூரத்தில் இருக்கும் மனிதர்களுடன் பேச நேரமில்லை. எங்கோ இருக்கும் யாரோ ஒருவரின் லைக்கிற்காக நாளின் பெரும்பகுதியை ஃபேஸ்புக் கேட்கிறது.

நீங்கள் ஏன் பேசுகிறீர்கள்?

ஏன் சுயமாய் சிந்திக்கிறீர்கள்?

அதை உங்களுக்காக நாங்கள் செய்கிறோம் என்கிறார் மார்க்.

இதுபோன்ற கட்டுரைகள் உண்மையை உடைக்கும்போதோ, ஃபேஸ்புக் நம்மை அடிமைப் படுத்துகிறதோ என்று மக்கள் நினைக்கும்போதோ புதிய பரிமாணத்தில் இவை புத்துயிரூட்டப்படும்.

மெட்டாவர்ஸ் என்று அதற்குப் பெயர். மொபைலுக்கும் கண்களுக்கும் நடுவில் மெய்யுலகம் இருப்பதையும் சோசியல் மேய்ப்பர்கள் விரும்பவில்லை. வி ஆர் என்று பெயரிட்டு கண்ணில் மாட்டி உல்லாச உலகம் உனக்கே சொந்தமென்று  நம்மை மென்று விழுங்க அடுத்ததாகத் தயாராகிறார்கள்.

ஆர்ட்டின் விட நீங்கள் ரெடியா?!

Happy
Happy
100 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
67%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
33%

3 thoughts on “முகநூல் உளவியல் | அம்மு ராகவ் | தொடர் 1

  1. இன்றைக்கு சமூக வலைதளத்திற்குள் சிக்கி மீளமுடியாமல் இருப்பவர்களுக்கு சவுக்கடி கொடுக்கும் அருமையான பதிவு. வாழ்த்துக்கள்.

  2. எண்ணத் துணிந்தவை உள்ளபடியே எண்ணத்தை தூண்டுகிறது. வாழ்த்துகள் கவிஞர் அம்முராகவ்

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!