நாடகம், சினிமா என பயணித்துக்கொண்டிருக்கும் பழம்பெரும் நடிகர் பி.ஆர்.துரை தன் நாடக, சினிமா அனுபவத்தோடு தொடர்புடைய இலக்கிய ஆளுமைகளைப் பற்றியும் சினிமாவின் பழம்பெரும் வரலாறு பற்றியும் இங்கே பதிவு செய்கிறார்.
1867ஆம் ஆண்டு பிறந்த சங்கரதாஸ் சுவாமிகள் தமிழ் நாடகத்தந்தை எனப் போற்றப்பட்டவர். இம்மாமனிதரை நாடக உலகின் அஸ்திவாரம் என்றும் சொல்லலாம், ஆலமரம் என்றும் சொல்லலாம். அவ்வளவு பெருமைக்குரியவர்.
1918ஆம் ஆண்டு தத்துவ மீனலோச்சனி வித்துவ பால சபா எனும் பெயரில் ஒரு நாடக மன்றத்தைத் தொடங்கி சீமந்தினி, சத்தியவான் சாவித்திரி, பார்வதி கல்யாணம், அரிச்சந்திரா, பிரகலாதா, வள்ளித்திருமணம், சதி அனுசுயா, பவளக்கொடி ஆகிய நாடகங்களை எழுதி, இயக்கி பிரதான பாத்திரத்திலும் நடித்து ரசிகப் பெருமக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியவர் இவர்.
அம்மானை எனும் புராண நூலில் இருந்து ஒரு கதையைத் தேர்ந்தெடுத்து அதற்கு அபிமன்யு சுந்தரி என்ற பெயரைச் சூட்டி 100 பாடல்களுடன் 3 மணி நேரம் நடக்கக்கூடிய அற்புதமான ஒரு நாடகத்தை ஒரே நாள் இரவில் எழுதி முடித்தார். காலை 4 மணி அளவில் சுபம் என்று எழுதி நிறைவு செய்து நித்திரைக்குச் சென்றதாக ஒரு பதிவு இருக்கிறது.
நாடகத்தில் பால அபிமன்யுவாக நடிக்க அவரது முதல் மாணவன் என்ற பெருமைக்குரிய T.K.சண்முகம் என்ற 12 வயது சிறுவனைச் தேர்ந்தெடுத்தார். அவர்தான் பிற்காலத்தில் அவ்வை சண்முகம் ஆகவும், பத்மஸ்ரீ சண்முகமாகவும் கலை உலகில் வலம்வந்த நாடக மேதை T.K. சண்முகம்.
சங்கரதாஸ் சுவாமிகள் எழுதிய நாடகங்கள்தான் இன்றளவும் ஸ்பெஷல் நாடக நடிகர்களுக்குப் பயனுள்ளதாக இருக்கிறது என்பது சத்தியவாக்கு.
ஒருமுறை சுவாமிகள் சனீஸ்வரனாக நடித்தபோது அவரது பயங்கரமான தோற்றத்தைப் பார்த்துப் பயந்துபோன ஒரு பெண்ணுக்கு கர்ப்பமே கலைந்து விட்டதாம். இது விஷயம் கேள்விப்பட்ட சுவாமிகள் அன்று முதல் இனி நடிப்பது இல்லை என்று ஒரு முடிவை மேற்கொண்டாராம். அதனால்தான் சுவாமிகள் ஓய்வில்லாமல் எண்ணற்ற நாடகங்களை எழுதி குவித்தார்.
1922ஆம் ஆண்டு காலமான சங்கரதாஸ் சுவாமிகளின் திருவுருவச் சிலையை, பேரறிஞர் அண்ணா அவர்கள் மதுரையில் திறந்து வைத்தார் என்பதும், நடிகர் சங்க வளாகத்தில் சங்கரதாஸ் சுவாமிகள் கலையரங்கம் என்ற ஒரு நாடக அரங்கமும் நிறுவப்பட்டு இருந்தது என்பது மகிழ்ச்சிக்குரிய செய்தியே.. மனோகரா திரைப்படம், பராசக்தி திரைப்படத்திற்குப் பிறகு வெளியிடப்பட்டு மகத்தான வெற்றியைப் பெற்றது. நடிகர் திலகம் சிவாஜி கணேசன், கிரிஜா, கண்ணாம்பா, T.R. ராஜகுமாரி, S.A. நடராஜன், S.S. ராஜேந்திரன், M.K. முஸ்தாபா, காக்கா ராதாகிருஷ்ணன் போன்ற பிரபல நடிகர்கள் எல்லாம் நடித்திருந்த அந்தப் படத்தின் கலைஞர் கருணாநிதி எழுதிய வசனம் மிகவும் புகழ் பெற்றது.
படத்தின் மூலக்கதையை எழுதியவரோ பம்மல் சம்பந்த முதலியார் எனும் மிகப்பெரிய ஜாம்பவான். இவர் சங்கரதாஸ் சுவாமிகளின் சமகாலத்திலேயே வளம் வந்த மிகப்பெரிய கதாசிரியர்.
அப்போதே B.A. பட்டம் பெற்ற பெருந்தகை. காலாரிஷி, சதிசுலோச்சனா, மனோகரா, யயாதி, ராமலிங்க சுவாமிகள், சந்திரஹரி, ரத்னாவளி, ஊர்வசி சாகசம், சபாபதி, வேதாள உலகம் போன்ற எண்ணற்ற நாடகங்களைப் படைத்திருந்தாலும், இவர் மிகவும் எளிமையானவர் மட்டுமல்ல, இனிமையானவர். கலை உலகில் இவர் ஒரு கருவூலம். சாதனையாளர்களின் முதல் வரிசையில் இடம் பெற்றிருந்த பண்பாளர் பம்மல் சம்பந்த முதலியார்தான்.
(தொடரும்)