நாடகம், சினிமா எனப் பயணித்துக்கொண்டிருக்கும் பழம்பெரும் நடிகர் பி.ஆர்.துரை தன் நாடக, சினிமா அனுபவத்தோடு தொடர்புடைய இலக்கிய ஆளுமைகளைப் பற்றியும் சினிமாவின் பழம்பெரும் வரலாறு பற்றியும் இங்கே பதிவு செய்கிறார்.
நாடக உலகில் அரை நூற்றாண்டு காண்பது என்பது மிகப் பெரிய விஷயம். அதைச் செய்து சாதித்துக் காட்டியவர் குடந்தை மாலி. நாடகம் எழுதுவதற்கு நல்லதொரு அனுபவ ஞானம் இருக்க வேண்டும், அந்த ஞானம் இருந்ததினால்தான் இவரால் எண்ணற்ற நாடகங்களை எழுத முடிந்தது. அவைகளில் ‘ஞானபீடம்’ நாடகம் இவருக்கு ஹைலைட்டாக அமைந்தது.
நல்ல முத்தான கருத்துடன், சத்தான பல நாடகங்களைப் படைத்தவர். எப்போதும் அடுத்து அரங்கேற்றும் நாடகத்தைப் பற்றியே சிந்தித்தவண்ணம் இருப்பார். படைப்பாளி என்பதால் மற்ற கலைஞர்களின் படைப்புகளையும் பார்த்துப் பாராட்டும் பண்புள்ளவர். அவர்தான் குறையொன்றும் இல்லை என்று சொல்லி மற்றவர்களைச் சந்தோஷப்படுத்தும் இனிய நண்பர் குடந்தை மாலி.
குடந்தை மாலி, 1959ல் துர்கா டிராமாடிக் அசோசியேஷன்ஸை ஆரம்பித்தார். பின்னர் அக்குழு நாடகமித்ரா எனப் பெயர் மாற்றம் அடைந்தது. அதன்பிறகு அதே குழு மாலி ஸ்டேஜ் நாடகக் குழுவாக மாறியது. அதன் தலைவராக இருந்த மாலி என்கிற என். மகாலிங்கம் 1957ஆம் ஆண்டு நாடக உலகில் ‘தந்தை என் தெய்வம்’ நாடகம் மூலம் நாடக உலகில் காலடி எடுத்து வைத்தார்.
இவருக்குத் தமிழை ஊட்டியவர் ம.பொ.சி. மகாலிங்கத்தை குடந்தை மாலி என ஆக்கியவர் ம.பொ.சி. மேடை ஏறக் காரணமாக இருந்தவர் திரு என்.கே.டி முத்து.
நடிகர் திரு. எஸ்.வி.சேகர், “மாலியின் நாடகங்கள் controversy create பண்ணினாலும் அதையும் மீறி சாதித்துக் காட்டியிருக்கிறது” எனப் பாராட்டியுள்ளார். நடிகர் திரு. ஏ.ஆர்.எஸ். அவர்கள் “கடவுள் எங்கே என்ற மாலியின் நாடகம் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் உட்பட பல ஜாம்பவான்களால் பாராட்டப்பட்டது” என்று கூறியிருக்கிறார்.
அருங்கவி கவிஞர் பிறைசூடன்
வெள்ளை உடையும் வெளிப்படையான பேச்சுமே பிறைசூடன் அவர்களின் அடையாளம். நீரணிந்த நெற்றியில் குங்குமத்துடன் வலம் வந்த இவர் கவிதை உலகில் ஒரு வற்றாத ஜீவநதி, பெருக்கெடுத்து ஓடும் காவேரி, எதிர்நீச்சல் போட்டுத்தான் ஜெயிக்க முடியும் என்பதை உணர்த்தும் வைகைநதி, அமராவதி நதி போல் அமைதியான மனிதர், ஊற்றுநீர் போல் இனிப்பானவர். இதையெல்லாம் தாண்டி இவரிடம் மற்றும் ஒரு சிறப்பு இருக்கிறது. அதுதான் அவரது கள்ளம் கபடமற்ற சிரிப்பு.
மரபுக் கவிதையோ, புதுக்கவிதையோ எதுவானாலும் இவருக்கு கைவந்த கலை. கவியரங்கத்தில் இவரது தலைமை என்றால் நகைச்சுவை கலந்த கலகலப்பு அதிகம் இருக்கும், அங்கு பேச்சாளர்களாக வந்திருப்பவர்கள் கூட இவரது தலைமை உரையை கேட்டு பிரமிப்பார்கள்.
ரசிகப் பெருமக்களும் மகுடிக்குக் கட்டுப்பட்ட நாகம் போல் பிறைசூடன் அவர்களின் பேச்சைக் கேட்டு மெய்மறந்து போவார்கள்.
படைப்புலக பிரம்மன் கூட ஒரு சில நிமிடம் ஓய்வெடுப்பான். ஆனால் பிறைசூடனுக்கு ஓய்வென்பதே பிடிக்காது. அதனால்தான் தமிழ்த் திரைப்படங்களுக்கு 5,000 பாடல்களுக்குமேல் இவரால் எழுத முடிந்தது.
அறிவை அளவுக்கதிகமாக்க கொடுத்த இறைவன் ஏனோ இவரது ஆயுள் கணக்கை மட்டும் குறைத்து எழுதிவிட்டான். இது இலக்கிய உலகிற்கும், தமிழ்த் திரைப்பட உலகிற்கும் மிகப்பெரிய இழப்பு.
மேல்பத்தூர் நாராயண பட்டதிரி மலையாளத்தில் எழுதியுள்ள நாராயணியத்தை தமிழில் நூலாக எழுதி வெளியிட்டதுதான் பிறைசூடனின் அற்புதப் படைப்பு. அதுவே கடைசிப் படைப்பாகவும் இருந்து மோட்சத்திற்கும் வழிகாட்டியது.
இந்த சிவராத்திரி அன்றுதான் இவரைப் பற்றி எழுத எனக்கு சந்தர்ப்பம் கிடைத்தது. அதுவும் சிவபெருமானின் விருப்பமே.
(தொடரும்)