நாடகம் மற்றும் சினிமா நடிகர் பி.ஆர்.துரை தன் நாடக, சினிமா அனுபவத்தோடு தொடர்புடைய இயக்கிய ஆளுமைகளைப் பற்றியும் இங்கே தொடர்ந்து பதிவு செய்கிறார்.
உதிரும் நிலையில் உள்ள காகிதங்களையும், செல்லரித்துப் போன நிலையில் இருந்த பழங்காலத் தமிழ்ச்சுவடிகளையும் தேடித் தேடிக் கண்டுபிடித்து அவற்றையெல்லாம் புதுப்பித்து நூலாக்கி மீண்டும் இலக்கிய உலகிற்கு அர்ப்பணித்து இலக்கியவாதிகளை எல்லாம் புல்லரிக்கச் செய்த உன்னத மனிதர் உ.வே. சாமிநாத ஐயர் அவர்களைத்தான்.
சில வார்த்தைகள் சொன்னாலும் அதை அழகாகவும், அவருக்கே உரிய சிலேடையாகவும் கவிதை நயமாகவும் நம் செவிகளுக்கு எடுத்துரைத்தவர். கீர்த்திகள் அதிகம் பெற்று கலைமகளுக்கே ஆசிரியராக இருந்து இலக்கிய உலகிற்கு தமிழ்ப்பணி ஆற்றிய அற்புத மனிதர், வற்றாத ஜீவநதியாகிய வாகீச கலாநிதி கி.வா.ஜகந்நாதன் அவர்களைத்தான்.
ஜூபிடர் ஸ்தாபனத்தின் மிகப்பெரிய படைப்பாளியாகவும், கதை இலக்காவில் முதன்மை ஸ்தானம் பெற்ற ஒரு ஆளுமையாகவும் கோலோச்சி கண்ணாம்பா, பி.யு. சின்னப்பா நடித்த ‘கண்ணகி’ எனும் திரைப்படத்தை வெற்றி படமாக்கிய இணையற்ற கதை வசனகர்த்தாவாகிய இளங்கோவனைத்தான்.
கவி காளிதாசன், காளமேகம், பொய்யாமொழி போன்றவர்களுக்கு எல்லாம் இவர் நிகரானவர். அரசவைக் கவிஞராக வலம் வந்த இவர் எழுதிய ஆயிரக்கணக்கான பாடல்களைத்தான் மக்கள் இன்றும் போற்றிப் புகழ்கிறார்கள். ‘வீடு வரை உறவு, வீதி வரை மனைவி, காடு வரை பிள்ளை – கடைசி வரை யாரோ’ எனும் தத்துவத்தை இப்படி எளிமையாக எழுத இனி ஒரு கவிஞன் பிறப்பானா என்பது சந்தேகமே? ‘அர்த்தமுள்ள இந்து மத’த்தை எழுதி இலக்கிய உலகிற்கு அர்ப்பணித்த கவிஞர் கண்ணதாசனைத்தான்.
தரமான நாவல்கள் சிந்திக்க வைக்கும் சிறுகதைகள் மட்டுமே எழுதி வந்த இவர் திரைப்படத் துறையிலும் தன்னை உட்படுத்திக்கொண்டு சமூக அவலங்களை எல்லாம் திரைப்படமாக யதார்த்த ரீதியில் உருவாக்கிய இவரது படைப்புக்களான உன்னைப்போல் ஒருவன், ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள், காவல் தெய்வம், ஊருக்கு 100 பேர் போன்ற படங்கள் அனைத்தும் திரை உலகிற்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது. “ஜெயகாந்தனின் நாவல்களைப் படித்த பிறகுதான் நான் இலக்கியத்தையே கற்றுக் கொண்டேன்” என்று சௌந்தரா கைலாசம் அவர்களே சொல்லி இருக்கிறார் என்றால், J.K.யின் இலக்கிய பயணம் இனியதொரு நிகழ்வு தானே. எழுத்தை மட்டுமே தன் உயிர் மூச்சாகக் கொண்ட எழுத்தாளர் ஜெயகாந்தனைத்தான்.
‘குட்டி ஆடு மாட்டிக்கிட்டா குள்ளநரிக்குச் சொந்தம், குள்ளநரி மாட்டிக்கிட்டா குறவனுக்குச் சொந்தம், தட்டுக்கெட்ட மனிதனுக்கோ கண்ணில் பட்டதெல்லாம் சொந்தம், சட்டப்படி பாத்தா எட்டடி தான் சொந்தம்’, ‘கையில வாங்கினேன் பையில போடல காசு போன இடம் தெரியல’ போன்ற பாடல்களை எழுதிய பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தைத்தான்.
ஆனந்த விகடன் பரிசு போட்டியில் வேர்கள் நாவலை எழுதி முதல் பரிசு பெற்ற பண்பாளர் சேவா ஸ்டேஜ் நாடக மன்றத்திற்காக நந்தா விளக்கு நாடகத்தை எழுதிய எழுத்தாளர் கிருஷ்ணமணியைத்தான்.
புராண நாடகங்களை எழுவது என்பது ஒரு சிலருக்கே கைவந்த கலை. அந்தப் புராண இதிகாசங்களை நன்றாகப் படித்ததனாலும் சனீஸ்வர பகவானின் அருளும் இருந்ததனாலேயே இவரால் சனீஸ்வரனையும் எமதர்மனையும் நாடகமாக்கம் செய்ய முடிந்தது. எழுதுவதில் ஒரு இமாலய ஈடுபாடு இருந்ததனாலேயே அஸ்வத்தாமனையும் மேடை ஏற்றினார். இவர் எழுதிய இனியதொரு படைப்புதான் இசைக்கு முக்கியத்துவம் தந்த ‘எந்த ரோ மகானு பாவலு’ நாடகம். அந்த நாடகத்தை இசை உலகிற்குச் சீதனமாகத் தந்த ஸ்ரீகவியைத்தான்.
கற்பூரம் நாடகத்தின் மூலம் தன் எழுத்துத் திறமையை நாடக உலகிற்கும், திரைப்பட உலகிற்கும் நிரூபித்த சிறப்புக்குரிய மனிதர் சிங்காரவேலனைத்தான்.
இவர் R.S.மனோகர் நாடக்க குழுவில் நகைச்சுவைப் பகுதியை எழுதும் பொறுப்பில் இருந்தவர். நகைச்சுவை நடிகரும் ஆவார். இளைய பாரதம், கஸ்தூரி விஜயம், தேவைகள் போன்ற நல்ல நாடகங்களை எழுதியவர். தேவைகள் படத்திற்கு தமிழ்நாடு அரசின் சிறந்த படம் என்ற பரிசையும் பெற்றவர் குடந்தை சோமு எனும் ரவிசங்கரைத்தான்.
Dr.ஷ்யாமா அவர்கள் ‘சாவி’யில் பயிற்சி பெற்று பின்னர் பல்வேறு பத்திரிகைகளில் பல படைப்புகளைப் பதிவு செய்த ஒரு தலைசிறந்த பெண்மணி ஆவார். நாவல், கட்டுரை, சிறுகதை போன்ற பல படைப்புகளையும் எழுதியுள்ளார். மகாபெரியவா திவ்ய சரித்திரம் மற்றும் பாதுகை மகிமை நூலில் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை எழுதியுள்ளார். பெண் சிசுக்கொலையை ஆராய்ச்சி செய்து முனைவர் பட்டம் பெற்ற பிறகு 25-30 பெண் குழந்தைகளைக் காப்பாற்றி அவர்களுக்கென சாரதேஸ்வரம் என்ற பெயரில் தேன்கனிக்கோட்டை எனும் கிராமத்தில் 22 வீடுகளையும் DSVS அறக்கட்டளை மூலம் கட்டிக் கொடுத்துள்ளார். இதைத் தன் வாழ்க்கையின் லட்சியமாகக் கொண்டுள்ள Dr.ஷ்யாமா சாமிநாதனைத்தான்.
இவர் எழுத்தை மிகவும் நேசிப்பவர், சுவாசிப்பவரும் ஆவார். சிறுவர் இலக்கியம், நாவல், சிறுகதை, கட்டுரை மற்றும் பல்வேறு நூல்களை எழுதியவர், மொழிபெயர்ப்பாளரும் ஆவார். எண்ணற்ற நூல்களை எழுதியுள்ள இவர் துல்லியமான விமர்சகரும் ஆவார். ஆங்கிலத்திலும் பல்வேறு நூல்களை எழுதியுள்ளார். எழுத்து உலகில் ஒரு தெளிந்த நீரோடையாகிய காந்தலட்சுமி சந்திரமௌலியைத்தான்.
எழுத்தாளரும் சிறந்த மொழிபெயர்ப்பாளருமான பெருந்தகை த.நா. குமாரசாமி அவர்கள் 14 மொழிகள் அறிந்தவர். ஆறு நாவல்களும், ஆனந்த விகடன் போன்ற முன்னணி பத்திரிகைகளில் 500 சிறுகதைகளுக்கு மேல் எழுதியுள்ளார். 1930-ல் மரியாதைக்குரிய மாமனிதராகிய கவிஞர் ரவீந்திரநாத் தாகூர் அவர்களை அவரது இல்லத்தில் சந்தித்து, அவரது படைப்புகளை எல்லாம் தமிழில் மொழிமாற்றம் செய்ய அனுமதி பெற்றார்.
1940இல் A.K. செட்டியார் அவர்களுடன் இணைந்து காந்திஜி பற்றிய ஒரு ஆவணப்படத்தைத் தயாரிக்கும் பணியிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். அதுதான் உலகிலேயே முதன்முதலாக காந்திஜி பற்றி தயாரிக்கப்பட்ட ஆவணப்படம் என்பது குறிப்பிடத்தக்கது, தரமான மனிதராகிய தமிழறிஞர் தா.நா குமாரசாமியைத்தான்…
(தொடரும்)
எழுத்து : பழம்பெரும் நடிகர் பி.ஆர்.துரை