ஒரு பெரிய பாறாங்கல்லைக் கொடுத்து சிற்பியை சிலை செதுக்கச் சொன்னால் என்ன செய்வார்?
அழகான சிலை செதுக்கி ஒரு மாயாஜாலத்தைக் காட்டுவார்.
சிலை எப்படி உருவாகியது?
அந்தப் பாறாங்கல்லின் தேவையில்லாதவற்றை நீக்கினால் ஒரு அழகான சிலை கிடைக்கிறது. செதுக்கியபின் மீதமுள்ள கற்கள் பயனற்றவை. அவற்றுக்கு சிலையிடத்தில் வேலையில்லை, வெறுங்குப்பை.
மூன்று மாதங்களுக்கு மேல் ஒரு பொருளை நீங்கள் பயன்படுத்தவில்லை என்றால் அது உங்களுக்கு அவசியமில்லாத பொருளாக இருக்கவே வாய்ப்புகள் அதிகம்.
உடை, எலக்ட்ரானிக் பொருட்கள், ப்ளாஸ்டிக் டப்பாக்கள், எவர்சில்வர் பாத்திரங்கள், காலணிகள், புத்தகங்கள், அட்டைப்பெட்டிகள் என இப்படி நீங்கள் சேர்த்துவைத்துள்ள குப்பைகள் வீட்டில் நிறைந்திருப்பதற்குப் பெயர்தான் குப்பையிசம்.
சிற்பியைப் போல வேண்டாதது விலக்கி அழகான சிலை வடித்தது போல தேவையுள்ளவைகளை மட்டுமே வாங்கி அதனை அதிகபட்சம் பயன்படுத்தி எளிமையாகவும், தூய்மையாகவும் வாழ்வதே மினிமலிசம்.
கஞ்சத்தனத்திற்கும் மினிமலிசத்திற்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு.
தேவைப்படும் பொருளையும் வாங்காமல் இருப்பது கஞ்சத்தனம். தேவைப்படும் பொருளை மட்டுமே வாங்குவது மினிமலிசம். தேவைப்படாத பொருட்களையும் வாங்கிக் குவித்து பரணில் அடுக்குவது குப்பையிசம்.
இதில் நீங்கள் யார்?
99% மனிதர்கள் குப்பையிசமாகத்தான் இருக்க வாய்ப்பதிகம்.
இவ்வுலகம், விளம்பரங்களால் வியாபாரம் செய்கிறது. எதிர்த்த வீட்ல இருக்கு, பக்கத்து வீட்ல இருக்கு, மேல் வீட்ல இருக்கு. உங்க வீட்ல இல்லையா? என்று கேட்ட உடனேயே ஒரு டேபிள் மேட்டை ஆர்டர் செய்கிறோம்.
கார் முதல் வீடு வரை குழந்தைகளை வைத்து விளம்பரம் செய்கிறார்கள். ஏதாவது ஒரு காரணம் சொல்லி, 100 ரூபாய் பொருளை 120 ரூபாய்க்கு உயர்த்தி 10% தள்ளுபடி என்று ஏமாற்றும் ஓயாத அதன் சத்தங்களில் தள்ளுபடிக்காகவும், விளம்பரங்களுக்காகவும், அடுத்தவர் வீட்டில் இருக்கிறது என்பதற்காகவும் நாம் தேவையில்லாமல் வாங்கிய அநாவசிய குப்பைப் பொருட்கள் எத்தனை எத்தனை?
அப்படித் தேங்கி நிற்கும் ஒவ்வொன்றையும் அதன் மதிப்பில் பணமாகக் கணக்கிட்டுப் பாருங்கள்? நீங்கள் ஏமாந்தது புரியும்.
இதைத்தான் மினிமலிசம், உச்சந்தலையில் கொட்டி உங்களுக்குச் சுட்டிக் காட்டுகிறது.
உண்மையில் மினிமலிசம் என்றால் என்ன? எப்படி நம் அன்றாட வாழ்க்கையில் அதைச் செயல்படுத்தமுடியும்?
பார்ப்போமா?!
மினிமலிசத்திற்கான எளிய பத்துக் கட்டளைகள் பற்றி என்ன சொல்லி இருக்கிறார்கள் என்று பார்ப்போம்:
1. எத்தனை வாங்குகிறோம் என்பது முக்கியமில்லை. எதை வாங்குகிறோம் என்பதே முக்கியம்.
ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் என்று விற்கப்படும், விளம்பரப்படுத்தப்படும் பொருட்களில் சிறியதாக ஒன்று எழுதப்பட்டிருப்பதை கவனித்திருக்கிறீர்களா?
‘இந்தச் சலுகை இல்லாமலும் இந்தப் பொருள் கிடைக்கும்.’
என்ன அர்த்தம்?
அதற்கு சலுகை விலை, சலுகை இல்லாத விலைகளை நீங்கள் ஒப்பிட்டு நோக்கினால் புரியவரும். அதாவது தனியாக ஒரு பொருளை வாங்கினால் ₹ 50 என்றால் இரண்டாய் வாங்கினாலும் அந்தப் பொருள் ₹ 50 ஆகத்தானே இருக்கவேண்டும்? ஆனால், அப்படி இருக்காது. ₹ 90 – ₹ 100 வரை அதன் விலை இருக்கும். எனில் ஒன்றுக்கு ஒன்று இலவசம் என்பது என்னாயிற்று? அந்த அளவிற்கு நீங்கள் கூர்ந்து கேட்கமாட்டீர்கள் என்பதுதான் இந்த வியாபார உக்தியின் பலம். அப்படி ஓரிருவர் கேட்டாலும், ‘இதோ பாருங்க மேடம், நாங்க தெளிவா இந்தச் சலுகை இல்லாமலும் கிடைக்கும்னு போட்டிருக்கோம். நீங்க ₹ 50க்கு தனியா வாங்கிக்குங்க’ என்று டெக்னிக்கலாகப் பதில் சொல்வார்கள்.
ஒன்று வாங்கச் செல்பவர்களுக்கு இரண்டாய் தலையில் கட்டும் உத்தியில் இந்த ஒன்று வாங்கினால் ஒன்று என்பது மிகப் பிரசித்தம். அதனால்தான் க்வாலிட்டி முக்கியமாகிறது. க்வாண்டிட்டி அல்ல.
ஒன்றை வாங்கும்பொழுது, தரமானதா, நீண்ட நாள் உழைக்குமா? சர்வீஸ் வசதி உண்டா என்று பார்ப்பது நல்லது. டிஸ்கவுண்ட்டோ / இலவசமோ அல்ல.
2. டிஜிட்டல் ஸ்டோர் ரூம்.
இது ஈ புக்குகளின் காலம். அலமாரி முழுவதும் புத்தகங்களை நிரப்பி அவற்றைக் கரையான்களுக்கு உணவாக்குவதற்குப் பதில் அரிய புத்தகங்களை டிஜிட்டலுக்கு மாற்றியோ, வாங்கும் புத்தகங்களை ஈ புத்தகங்களாகவோ சேமிக்கும்பொழுது நிறைய இடம் தேவைப்படாது. புகைப்படங்களுக்கும் இவை பொருந்தும். அப்படியும் எனக்குப் புத்தகங்களின் ஸ்பரிசம் வேண்டுமென்றால் அருகிலுள்ள லைப்ரரிக்குச் சென்று புத்தகங்கள் படிக்கலாம்.
3. தூக்கி வீசுங்கள்.
தேவையில்லாத ஒரு பொருளையும் சேமித்து வைக்காதீர்கள். என்றைக்காவது பயன்படும் என்று டி.வி. முதல் குளிர்சாதனப்பெட்டி வரை அவை மூடி வந்த அட்டைப்பெட்டிகள் இன்னும்கூட புழுதி மண்டி உங்கள் பரணிலோ, ஸ்டோர் ரூமிலோ அடைத்துக்கொண்டு இருக்கும். இரக்கமே இல்லாமல் இப்படி இடத்தை அடைத்துக்கொண்டு பயனில்லாமல் இருக்கும் பொருட்களை எல்லாம் கழித்துக் கட்டுங்கள். தேவையான பொருட்கள் மட்டும் வீட்டில் இருக்கட்டும்.
4. மறுசுழற்சியில் முதலீடு செய்யுங்கள்.
பேப்பர் கப்புகளோ, ப்ளாஸ்டிக் தட்டுகளோ பெருமைக்கோ, ஃபேஷனுக்கோ வாங்கிப் பயன்படுத்துவதற்குப் பதில் ஒரு எவர்சில்வர் தட்டும், டம்ளரும் குப்பை சேர்வதைத் தடுக்கும்தானே? இப்படி எளிமையாகத் திரும்பப் பயன்படுத்தக்கூடிய பொருட்களைப் பயன்படுத்தி, மறுசுழற்சிக்கு உதவாத ஒருமுறை பயன்படுத்தும் பொருட்களை அறவே தவிர்ப்பதன் மூலம், இயற்கைக்கும், நமக்கும் உதவிக்கொள்கிறோம்.
5. எல்லாப் பொருட்களுக்கும் அழகாய் ஒரு இடம்.
வேண்டாதது கழித்துக் கட்டியாயிற்று. இனி தேவையுள்ளவைகளை அழகாக்கி அவற்றிற்கென்று சரியான இடங்கள் தேர்ந்தெடுத்து வைக்கும்பொழுது உங்கள் வீடோ, அலுவலகமோ முன்னிலும் அழகாய் இருப்பதைக் காணலாம். ஒரு சாதாரண குப்பைத் தொட்டிக்கு ஆழகாய் வர்ணமடித்து அதற்கு ஓர் இடம் கொடுக்கும்பொழுது அது ஒரு மதிப்பிற்குரிய பொருளாகிறது.
6. எதிலும் சேமிப்பு
எந்தப் பொருள் வாங்கினாலும் அதில் எவ்வளவு சேமிப்பு கிடைக்கும் என்பதைப் பாருங்கள். சேமிப்பு என்றால் டிஸ்கவுண்ட் அல்ல.
ஒரு வீடு கட்டுகிறீர்கள் என்றால், இயற்கையான வெளிச்சம் பரவலாக வரும்படி வீட்டை வடிவமைத்தால், பகலில் மின்சாரப் பயன்பாடு கணிசமாகக் குறையும்தானே? பகலிலும் மின் விளக்கு தேவைப்படும் எத்தனை இடங்கள் பார்த்திருப்பீர்கள்? இது எவ்வளவு பெரிய அறியாமை?
எளிய தோட்டங்கள் அமைப்பது மூலம், காய்கறிகள் தூய்மையாகக் கிடைக்கும். மழை நீர் சேமிப்பு, சோலார் வாட்டர் ஹீட்டர் என்று கொஞ்சம் மெனெக்கெட்டால் ஏ.சி. கூட இல்லாமல் கத்தரி வெயிலில் கூட வீடு குளுமையாக வைக்குமளவிற்குத் திட்டமிடமுடியும்.
பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு ஆகும் செலவு, ஆடம்பரத் திருமணத்திற்கு ஆகும் செலவை, எளிமையாகச் செய்தால், கஷ்ட காலத்தில் அந்தப் பணம் உதவும். அட உங்களுக்கு கஷ்டமே இல்லையா? ஏதேனும் ஒரு ஏழைக் குழந்தையின் படிப்புக்குக் கூட உதவலாமில்லையா?
7. உங்கள் முடிவுகளை அடிக்கடி சரி பாருங்கள்.
மினிமலிசத்திற்காக நீங்கள் எடுத்த முடிவுகள், அதன் பலன்களை அடிக்கடி சரி பாருங்கள். ஏதேனும் தவறு இருந்தால் சரி செய்யுங்கள். மேம்படுத்துங்கள். ஒரு கட்டத்தில் உங்கள் அன்றாட வாழ்க்கைத் தேவை நிறைவாக இருக்கும். சரியான பாதையில் மினிமலிச வாழ்க்கை பயணப்படும்.
8. தேவையில்லா செலவுகளைக் குறையுங்கள்.
பேப்பரே இல்லாத ஒரு அலுவலகத்தை உருவாக்குங்கள் என்று மேல் அதிகாரியிடமிருந்து உத்தரவு வந்தது. குமாஸ்தாவுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. மேனேஜரிடம் கேட்டார்.
அவ்வளவுதானே, எல்லா பேப்பரையும் ஒரு செராக்ஸ் எடுத்து வைத்துக்கொண்டு எரித்துவிடுங்கள் என்றாராம். என்ன அறிவு?
இதுபோல மினிமலிசம் என்று கண்டபடிக்குச் செலவு செய்கிறீர்களா? சித்தாந்தத்தை ஒட்டியே உங்கள் செலவும் வாழ்வும் இருக்கிறதா என்பதைச் சரி பார்த்து அநாவசியச் செலவைக் குறையுங்கள்.
9. உங்களால் கட்டுப்படுத்த முடியாத ஒன்றைப் பற்றிக் கவலை கொள்ளாதீர்கள்.
அது அடுத்தவர் செய்யும் கேலியாக இருக்கலாம். பூனை தட்டி உடைத்த மண்பானையாக இருக்கலாம். நடந்து செல்லும்போது உடை கிழித்த முள் செடியாக இருக்கலாம். உங்களுக்கு எது அவசியமோ அதில் மட்டுமே உங்கள் கவனம் குவியட்டும்.
10. மகிழ்ச்சியில் மினிமலிசம் வேண்டாம்
தினமும் கண் விழிக்கும்போதே இன்றைக்கு நான் மகிழ்ச்சியோடே இருக்கப்போகிறேன். யாரும் அல்லது எதுவும் என்னைத் தடுக்க இயலாது என்று சபதமெடுங்கள். நன்றி சொல்லவேண்டியவர்களுக்கு நன்றி சொல்லத் தயங்காதீர்கள். மன்னிப்பு கேட்க வேண்டியவர்களிடம் மன்னிப்பு கேளுங்கள். வீட்டைப் போலவே மனதையும் விசாலமாக்கி குப்பைகள் இன்றி வைத்துக்கொள்ளுங்கள்.
மினிமலிசம் என்பது தேவைக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுப்பது பொருட்களுக்கு அல்ல என்பது புரிந்திருக்கும்.
மினிமலிசம் கடைப்பிடிக்கும் நாடுகள், நகரங்கள் எவை?
மும்பை, ஹாங்காங், ஜப்பானைப் பாருங்கள். அவர்களுக்கான இட வசதிகள் குறைவு. இருக்கும் இடத்தினை எப்படி முழுமையாகப் பயன்படுத்துவது என்பதுதான் அவர்களின் எண்ணமாக இருக்கும்.
300 சதுர அடி அப்பார்ட்மெண்ட்டில் 6 அடிக்கு டைனிங் டேபிள் வாங்க முடியாது. நீட்டினால் டேபிள் மடக்கினால் கட்டில் போன்ற ஐடியாக்கள் இதற்காக உதித்தவைதான்.
ஜப்பான், ஹாங்காங், சிங்கப்பூர் போன்ற இட நெருக்கடி உள்ள நகரங்கள், நாடுகளில் அப்பார்ட்மெண்ட்கள் கட்டப்படும் காரணமும் மினிமலிசம்தான். சிறிய தீவான சிங்கப்பூரில் அனைவருக்கும் தனி வீடென்பது எப்படிச் சாத்தியம்? தேவையானதற்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து, இருக்கும் இடத்தில் அனைவரும் மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி என்பதுதான் இதன் பொருள்.
மூன்று வருட சிங்கப்பூர் வாழ்க்கையில் குடும்பத்துடன் இருந்தும் ஊருக்குத் திரும்பி வரும்போது எனது பொருட்களை ஒரு பெட்டியில் அடைக்க முடிந்தது. அதனடிப்படையில் ஒரு மினிமலிஸ்ட்டாக இந்தக் கட்டுரையை எழுதுவதற்கான தகுதி இருப்பதாகவே கருதுகிறேன்.
உங்களிடம் 7 லட்சம் கோடி இருந்தால் எப்படி வாழ்வீர்கள்?
உலகின் பெரிய பணக்காரரான 90 வயது வாரன் பபெட்டின் சொத்து மதிப்பு இது.
அவரின் வாழ்க்கை முறை எப்படி இருக்கிறது?
1958ல், 30,000 டாலருக்கு வாங்கிய வீட்டில்தான் இன்றளவும் வசிக்கிறார்.
நம் வருமானத்திற்கு மீறிய ஒரு செல்போனை ஈ.எம்.ஐ.யில் வாங்கும் நமக்கு இதில் எவ்வளவு பெரிய செய்தி ஒளிந்திருக்கிறது?
ஆயிரம் பக்கங்களில் விளக்கப்படும் ஒரு அறிவுரையை குறுகத்தறித்த குறளொன்று ஏழு வார்த்தைகளில் அநாயசமாகச் சொல்லிச் செல்வது மினிமலிசம்தானே?
All is Well.
அருமை
Nice one
அருமையான கட்டுரை அம்மு ராகவ். படிக்கும் யாருக்கும் ஒரு உந்துதலை தரும்.தொடர்ந்து எழுதுங்கள். சிங்கப்பூரில் இருந்து ஒற்றை பெட்டியோட வந்தேன் என்பதே சாதனை தான்.சிறப்பு. அன்பு!