மனம் உணவாலானது என்கிறது ஆயுர்வேதம்.
உடல்நலப் பிரச்சினைகளுக்கு மட்டுமல்ல,அதிகரித்துவரும் மனநலப் பிரச்சினை களுக்கு மாறிவரும் உணவுப் பழக்கவழக்கமும் ஒரு காரணமென்றால் நம்பு வீர்களா?
எண்சாண் உடம்பிற்கு வயிறே பிரதானம்.
ஒரு செடி வளர்க்கிறீர்கள். அதற்கு என்ன உரம் போடுவீர்கள்?
அழகான உங்களுக்குப் பிடித்த நிறத்தில் உள்ள உரமா? உங்களுக்குப் பிடித்த வாசனையாக உள்ள உரமா? உங்களுக்குப் பிடித்த நடிகர் சொல்லிய உரமா?
இது என்ன கேள்வி?
அந்தச் செடிக்கு எது சரியான உரமோ அதைத்தான் போடுவேன் என்கிறீர்களா?
சரிதான்.
இப்பொழுது கேள்வியை மாற்றிக் கேட்கிறேன்.
நீங்கள் சாப்பிடும் உணவு எப்படி இருக்கவேண்டும்?
வாசனையாக இருக்கவேண்டும், கலர்புல்லாக இருக்கவேண்டும், மொறுமொறுப் பாக இருக்கவேண்டும், சூப்பர் சுவையாக இருக்கவேண்டும். இனிப்பாக இருக்க வேண்டும்.
வாவ். சரி,
இப்பொழுது இதற்குப் பதில் சொல்லுங்கள்:
உங்கள் உடல் ஒரு செடி. உங்கள் வயிறு அதாவது நீங்கள் உண்ணும் உணவை ஜீரணம் செய்து உங்களை வலுவாக்கும் குடல் அதுதான் வேர். இப்பொழுது நீங்கள் சாப்பிடும் உணவுதான் உங்கள் உடல் எனும் செடிக்கான உரம்.
அப்படி என்றால் நீங்கள் உங்கள் உடலுக்குப் போடும் உரம் என்ன? எப்படிப்பட்டது? அது சரியான உரம்தானா? செடியின் வேருக்கான உணவா? அல்லது நாவின் ருசிக்கான உணவா?
குழப்பமாக இருக்கிறதா?
நமக்கிருக்கும் நரம்பில்லாத நாக்கு என்பது சுவை மொட்டுக்களின் வசிப்பிடம். அதன் வேலை ஒரு உணவு நன்றாக இருக்கிறதா, கெட்டுப்போயிருக்கிறதா என்று கண்டறிவது மட்டுமே. உணவைச் செரிக்க, அதை உடலுக்கு உரமாக்க நாக்கின் பணி என்று எதுவுமே இல்லை. அது குடலின் பணி. ஆனால் குடல் என்றைக்குமே நீங்கள் விரும்பும், ருசிக்கும் உணவினை எதிர்பார்ப்பதில்லை.
அதற்குத் தேவை நல்ல புரதம், மாவுச்சத்து, காய்கறிகள், கீரைகள் அடங்கிய நார்சத்து, நல்ல கொழுப்பு, தண்ணீர், விரதம். இவ்வளவுதான்.
உண்மைதான் இல்லையா?
வயிற்றுக்கு ருசி என்பது தேவைப்படாதபொழுது அந்த வேருக்கான உணவைத் தராமல் கண்ட குப்பை உணவுகளை ருசிக்காக உண்பதால் நமக்குத் தேவையில் லாத பல வியாதிகள் வருவதைப் பார்க்கிறோம்தானே?
நமக்கு வரும் உடல், மனம் சார்ந்த பிரச்னைகளில் பெரும்பாலானவை நாம் உண் ணும் தவறான உணவுகளால் வருபவைதான்.
மனச்சிதைவு, மனஎழுச்சி, மனச்சோர்வு, நீரிழிவு, உடல் எடை கூடுதல், தைராய்டு, மலச்சிக்கல், மாதவிடாய் கோளாறுகள், தோல் அலர்ஜிகள், ஒற்றைத் தலைவலி, இருதய கோளாறுகள், பல் சொத்தை, குறைவான நோய் எதிர்ப்பு சக்தி…
-இப்படி அன்றாடம் நமக்கு வரும் பல சிக்கல்களுக்கு நாம் உண்ணும் உணவே பிரதான காரணமாக இருக்கிறது.
20 வயதிலெல்லாம் டைப் 2 டயபடிக் வருவதைச் சாதாரணமாகப் பார்க்கிறோம்.
நம் கணையத்தின் ஆயுள் சுமார் 100 ஆண்டுகள். 100 வயது வரை நமக்கு இன்சுலினைச் சுரந்து நம்மைக் காக்கவேண்டிய கணையத்தை 20 வருடங்களில் சாகடிக்கிறோம் என்றால் அதற்கு முக்கிய காரணம் நாம் உண்ணும் தவறான உணவுகள்தான்.
உலகின் ஒவ்வொரு உயிரினத்திற்கும் தனது உணவு எது என்பதில் சந்தேகமே இருப்பதில்லை. மனிதனுக்குத்தான் எதை உண்பது, எவ்வளவு உண்பது என்பது மிகப்பெரிய குழப்பமாக இருக்கிறது.
ஆறறிவுள்ள நாம்தானே மற்ற உயிரினங்களுக்கு முன்னோடியாக இருக்க வேண்டும்? ஆனால் இங்கே நாம் என்ன உண்பது என்பது நமக்கே தெரியாமல் ஒரு டயட்டிசியனைத் தேடுவதுதான் விந்தை.
இதைப் படிக்கும் உங்களுக்கு ஒரு சலிப்பு தோன்றலாம். ‘என்னாங்க வாய்க்கு ருசியா சாப்பிடத்தானே சம்பாதிக்கிறோம்? அதைச் சாப்பிடாதே, இதைச் சாப் பிடாதே என்று கட்டுப்பாடுகள் போட்டுச் சாப்பிடுவதால் வாழ்ந்து என்ன பயன்?’
உண்மைதான். ஆனால் பிரச்னை வாய்க்கு ருசியாகச் சாப்பிடுவதில்தான் தொடங்குகிறது. நீங்கள் வயிற்றுக்கு ருசியானதை அதாவது உடலுக்குத் தேவையான உரமாகத்தான் உணவைத் தேர்ந்தெடுத்து உண்ணும்பொழுது உலகின் ஆரோக்கிய மனிதராக நீங்கள் இருப்பீர்கள்.
மினிமலிசம் கட்டுரையில் உலகின் மிகப்பெரிய பங்குச்சந்தை கோடீஸ்வரரான வாரன் பஃபட்டைப் பற்றிப் படித்தோம். இதில் சமீபத்தில் மறைந்த நம் நாட்டின் வாரன் பஃபெட் என்று அறியப்பட்ட ராகேஷ் ஜுன்ஜூன்வாலா பற்றிப் பார்க்கலாம்.
வாரன் பஃபெட் வயது 90களில், இன்றைக்கும் ஷேர் மார்கெட்டில் ஆக்டிவாக இருக்கிறார். மறைந்த ராகேஷ் ஜுன்ஜூன்வாலாவின் வயதோ 62. கட்டுக் கடங்காத சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு சிறுநீரகம் செயலிழக்க மறைந்தார்.
அவர் பங்குச் சந்தையில் சம்பாதித்த சொத்து மதிப்பு 40,000 கோடிகளுக்கு மேல், வாரனைப் போல 90 வயதுக்கும் மேல் வாழ்ந்து பல சாதனைகள் புரிய வேண்டியவர் 62 வயதில் மறைந்தது எவ்வளவு பெரிய இழப்பு?
பங்குச் சந்தையில் பல அறிவுரைகள் வழங்கி பல்லாயிரக்கணக்கானோருக்கு குருவாக விளங்கியவர், கடைசியில் சொன்ன அறிவுரை என்ன தெரியுமா?
நான் செய்த முதலீடுகளிலேயே மிகவும் மோசமான முதலீடு என்பது என்னு டைய உடல்நலனுக்காக நான் செய்த முதலீடுதான். உடல்நலனில் அக்கறை செலுத்தாததை இப்பொழுது அனுபவிக்கிறேன். நீங்களாவது உங்கள் உடல் நலனில் கவனம் கொள்ளுங்கள்.
எவ்வளவு பெரிய உண்மையைச் சொல்லி மறைந்திருக்கிறார் பாருங்கள். 40,000 கோடி சொத்தில் உலகின் உன்னத மருத்துவமனை, டாக்டர்கள், உபகரணங்கள் ஏன் மருந்துக் கம்பெனியையே விலைக்கு வாங்கக்கூடிய சக்தி படைத்தும் ஏன் தன் வாழ்நாளின் குறைந்தபட்ச 25 ஆண்டுகளை இழந்தார்?
ஏனென்றால் ஆரோக்கியத்தைப் பணத்தால் வாங்க முடியாது. ஆரோக்கியத்திற் கான சாவி உங்கள் சமையலறையில் உள்ளது. உங்கள் ருசி அடக்கத்தில், கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த உண்மை புரிந்து ஆரோக்கியமான உணவுகளை ஒழுங்கோடு உண்பவர்களே உண்மையில் உலகின் மிகப்பெரிய செல்வந்தர்கள்.
“மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றி உணின்” என்பது 2000 வருட வள்ளுவன் வாக்கு!
விரதங்களைப் போற்றாத மதங்களே இவ்வுலகில் இல்லை. ஏதோ ஒரு பெயரில் விரதங்கள் எனப்படும் உண்ணாமல் வயிற்றுக்கு ஓய்வு கொடுக்கும் ஒரு வழக் கத்தை மனிதகுலம், கடவுளின் பெயரால் கடைப்பிடித்து வந்திருக்கிறது.
உணவு இல்லாவிட்டால் நம் உடல் என்னாகும்?
தாம் லுவாங் குகையில் மாட்டிக்கொண்ட சிறுவர்கள் பற்றிப் படித்திருக்கிறீர்களா?
ஜூன் 2018இல் ஒரு புட் பால் கோச் தனது 12 மாணவர்களை ட்ரெக்கிங்கிற்காக அந்த நீண்ட குகைக்குள் அழைத்துச் செல்கிறார். சைக்கிளில் சென்று குகை வாயிலில் நிப்பாட்டி, சுற்றிப் பார்த்துவிட்டு மாலைக்குள் வீடு திரும்புவதே திட்டம்.
ஆனால் விதி மழை ரூபத்தில் வந்தது.
அது ஒரு சுண்ணாம்புக் கல் மலை. திடீரெனப் பெய்ய ஆரம்பித்த பெருமழையால் மேலிருந்து நீர் கசிந்து குகைக்குள் காட்டாற்று வெள்ளமாய் பாயத் தொடங்கியது. கிட்டத்தட்ட 2.5 கிலோமீட்டர் குகை உள்ளே ஒரு மேடான பகுதியில் கோச்சும் 12 மாணவர்களும் சிக்கிக்கொண்டார்கள்.
1000 மக்கள், 100 டைவர்கள், 900 போலீஸ், 2000 ராணுவ வீரர்கள், ஹெலிகாப்டர், ஆம்புலன்ஸ் என்று 18 நாட்கள், பல உலக நாடுகள் உதவி செய்ய அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டார்கள்.
சரி, இதற்கும் இந்தக் கட்டுரைக்கும் என்ன சம்பந்தம்?
10 நாட்களுக்கும் மேலாக அங்கே சிக்கிக்கொண்டவர்களுக்குப் பாறையில் வழிந்த மழை நீர்தான் பிரதான உணவு. பூரி வடைகறியோ, மட்டன் பிரியாணியோ அல்ல.
சதா சர்வ நேரமும் அரவை மிஷின் போல எதையாவது உண்டுகொண்டு உடலை அசைக்காமல் இருப்பதால் நமக்கு வரும் வியாதிகளை வென்றெடுக்க தூய்மை யான உணவும், விரதங்களும் மிக முக்கியம்.
ருசி என்ற திரையை விலக்கினால் மட்டுமே வயிற்றுக்கான உணவு என்பதில் தெளிவு கிடைக்கும்.
என்னால் பீட்ஸா, பர்கர் சாப்பிடாமல் இருக்க முடியாதுப்பா என்று நீங்கள் நினைக்கலாம். 5-ல் வளையாத 50 நீங்கள். ஆனால் உங்கள் குழந்தைகளுக்குக் கற்றுக்கொடுக்க நல்லுணவின் ஞானம் உங்களுக்கு வேண்டும்தானே?
நம் வருங்காலச் சந்ததிகளை, ஐந்திலேயே வளைப்போம், நல்லுணவால் வளர்ப் போம்.
(தொடரும்)