நுகர்வும் வணிகமும்
இந்த உலகம் வணிகமயமானது. நாய்ப்பாசம் முதல் தாய்ப்பாசம் வரை எல்லாமே வரவு செலவு எதிர்பார்க்கும் வணிகக் கணக்குகள்தான். ‘பத்து மாசம் உன்னை சொமந்து பெத்தேன் தெரியுமா?’ என்பதில் எனக்குத் தேவையானதை நீ செய்யவேண்டும் என்ற மறைமுகக் கணக்கும், எதிர் பார்ப்பும் இருக்கிறது.
கோவிலுக்குச் செல்கிறீர்கள்.
‘இதோ பாரு உனக்கு அர்ச்சனை, உண்டியல்ல காசு போடறேன். என்னைய நல்லா கவனிச்சிக்கோ’ என்ற வணிகத்தில்தான் பக்தி வியாபாரம் செழிக்கிறது.
‘டேய்… 100 ரூவா உண்டியல்ல போட்டு 100 கோடி ஆர்டர் ஓக்கே ஆகணும்னு கேக்கறியே நியாயமா?’
‘அர்ச்சனை பண்ணின சரி. அந்தத் தேங்காய சட்னி பண்ணி நீதானே சாப்பிடப்போற…’ என்றோ கடவுள் சட்டையைப் பிடித்து மண்டையி லடித்துக் கேட்டால் என்னாகும்?
பக்தி வியாபாரம் படுத்துவிடும். உண்டியல் காய்ந்துவிடும், மலர்கள் கடவுளுக்காக இல்லாமல் அலங்காரங்களுக்கு மட்டும் என்றாகிவிடும்.
ஆக, ஒரு கொடுக்கல், வாங்கல் வியாபாரம் நல்லபடி நடக்க, இருபக்க நேர்மை அல்லது எதிர்பார்ப்பு பூர்த்தி செய்யப்படவேண்டும்.
சமீபத்தில் பிள்ளைகளுக்குப் பிடிக்குமே என்று இங்குள்ள ஒரு பிரபல கடையில் ஆன்லைனில் க்ரில் சிக்கன் ஆர்டர் செய்தேன்.
கொடுத்த காசு அதிகம், கொடுக்கப்பட்ட சிக்கனோ வாயில் வைக்க முடியாத தரத்தில் இருந்தது.
போனில் அந்தக் கடையை அழைத்து புகார் செய்தேன். குழந்தைகளுக் காக ஆர்டர் செய்யப்பட்ட உணவு இப்படி தரமில்லாமல் இருக்கிறதே? ஏன்?
அவர்கள் அளித்த பதில் என்ன தெரியுமா?
‘இதுவரைக்கும் எங்க கடைல வாங்கின ஒருத்தரும் கம்ப்ளெயிண்டே பண்ணினதில்லைங்க மேடம், நீங்க என்ன புதுசா பண்றீங்க? எங்க ஐட்டமெல்லாம் தரமாகத்தான் இருக்கும்.’
எப்படி புகாருக்கான பதில்? சூப்பர் இல்லையா?
நானாவது, என்ன நான் காசு கொடுத்து வாங்கிய உணவு இப்படி தரமில்லாமல் இருக்கிறதே என்று கேள்வியாவது கேட்டேன்.
ஆனால் நம்மில் 99 சதவிகிதம் மக்கள் என்ன கருமமோ உணவு கேவலமா இருக்கு என்று குப்பையில் போட்டுவிட்டு அடுத்த கடை எது என்று தேடிப் போய்விடுவார்கள்.
இது சரியா? நம் காசுக்கு மதிப்பில்லையா? இங்கே யார் முதலாளி? யாருக்கு உரிமை அதிகம்?
நுகர்வோரான நாமா? வியாபாரம் செய்யும் அவர்களா?
ஒரு நுகர்வோராக நம் உரிமைகள் என்ன என்பது நமக்கு குறைந்தபட்ச அளவாவது தெரியுமா என்றால், தெரியாது என்பதே உண்மை.
இதனால்தான், கலப்படம், எக்ஸ்பையரி தேதி தாண்டியும் விற்கப்படும் பொருட்கள், பொய்யான தகவல் தரும் விளம்பரங்கள், விலை ஏற்றிப் பின் தள்ளுபடி செய்யப்படும் விற்பனைகள் என்று நாம் தினம் தினம் ஏமாந்துபோகிறோம்.
ஒரு பொருளை வாங்கும்பொழுதுகூட அதில் என்ன கலந்திருக்கிறது, எதைக்கொண்டு தயாரித்திருக்கிறார்கள், எப்பொழுது தயாரிக்கப்பட்டது, என்ன விலை என்று எதையுமே நாம் சரிபார்ப்பதில்லை.
காரணம் – ப்ராண்டின் மீதான நம்பிக்கை, விளம்பரங்கள், கண்கவர் பாக்கேஜ்கள். குறிப்பாக குழந்தைகளுக்கான தின்பண்டங்களில் கூட நாம் இவற்றை எல்லாம் சரி பார்க்காமல் வாங்கிக் கொடுக்கிறோம்.
எவ்வளவு பெரிய அறியாமை இது?
இந்த அறியாமைக்கான முதல் காரணம், நாம் வாங்கும் பொருட்களுக் கான பில்லினை நாம் கேட்டுப் பெறுவதில்லை. வாரண்டி கார்ட், பில் போன்றவற்றைப் பாதுகாத்து பிரச்னை வரும்போது அதைக் கொண்டு புகார் அளித்து நிவாரணம் பெறுமளவிற்கான பொறுமை, அதைப் பற்றிய ஞானம் நமக்கு இருப்பதில்லை.
இதுதான் பிரச்னைகளுக்கான முதல் காரணமாக அமைகிறது.
10 ரூபாய்க்கு நீங்கள் வாங்கும் பிஸ்கெட் அல்லது சிப்ஸ் பாக்கெட் சரியில்லை என்றால் கூட அந்தக் கம்பெனியின் கன்ஸ்யூமர் கம்ப்ளெயிண்டுக்கு புகார் அளித்து நிவாரணம் பெறமுடியும்.
சுவாரஸ்யமான சில கேஸ்களைப் பார்க்கலாம்.
டி.வி.யில் நாம் அதிகமாகக் கண்ட ஒரு விளம்பரம், நறுமண சென்ட் விற்கும் கம்பெனியுடையது.
அந்த சென்ட்டை அடித்தால், பெண்கள் ஓடோடி வந்து உங்களைக் காதலிப்பார்கள் என்று விளம்பரம் செய்தார்கள்.
அதை நம்பி ஒரு இளைஞர் அதன் எல்லா சென்ட்டையும் வாங்கி உபயோகித்தார், ஒரு பெண்ணும் ஏறிட்டுக்கூடப் பார்க்கவில்லை, வெறுத்துப் போய், இந்தக் கம்பெனி என்னை ஏமாற்றிவிட்டது என்று நுகர்வோர் கோர்ட்டில் வழக்குப்போட, கம்பெனி மானம் போய்விடுமே என்று அவரைச் சமாதானப்படுத்தி கோர்ட்டுக்கு வெளியே கேஸை சுமூகமாக முடித்துக்கொண்டார்கள்.
உங்கள் வீட்டு சிலிண்டர் டெலிவரியின்போதுகூட எடை சரியாக இருக் கிறதா என்பதைச் சரி பார்த்து சொல்லும்படி நீங்கள் கேட்க முடியும். பெட்ரோல் போடும்போது கூட அளவு, தரம் சரியாக இருக்கிறதா என்பதை நீங்கள் கேட்டால், அவர்கள் உங்களுக்குச் சரி பார்த்துச் சொல்லவேண்டும்.
அதிகபட்ச சில்லறை விலைக்கு மேல் ஒரு பொருளை விற்பது சட்டப் படி குற்றம். ஆனால் நடப்பது என்ன?
எத்தனை முறை அதை நாம் கேள்வி கேட்காமல் வாங்கி இருப்போம்? 10 ரூபாய் பொருளுக்கு 12 கேட்கிறான். இதெல்லாம் ஒரு குத்தமா என்று கேட்பீர்கள் என்றால் அதன் விலை 20 சதவிகிதம் அதிகம், அதை உங்களிடமிருந்து திருடி இருக்கிறார்கள் என்பதை எப்படி உங்களுக்குப் புரிய வைப்பது?
ஒரு பொருளை வாங்காமல் ஒரு நாளும் நம்மால் இருக்கமுடியாது எனும்பொழுது குறைந்தபட்ச நுகர்வோர் உரிமைகள் பற்றி தெரிந்து கொள்ளாமல் இருப்பது எவ்வளவு தவறு?
என்ன செய்யலாம்?
வாங்கும் பொருட்களுக்கான டாக்ஸ் பில் கேட்டு வாங்கி பத்திரமாக வைத்துக்கொள்ள வேண்டும்.
வாரண்டி கார்ட் அந்த வாரண்டி காலம் முடியும் வரை பத்திரமாக வைத்துக்கொள்ள வேண்டும்.
எல்லாப் பொருட்களிலும் அதன் பாக்கேஜ்களில் கன்ஸ்யூமர் கம்ப்ளெயிண்ட் செய்ய போன் நம்பரும், இ மெயிலும் கொடுத்திருப்பார் கள். அதற்கு வாங்கிய பில், பொருளின் படம், பிரச்னைகள் என்ன என்று விரிவாக எழுதி புகார் அளிக்கலாம்.
நல்ல கம்பெனிகள் வாடிக்கையாளர்களை மதித்து உடனடியாகப் பதில் அளிப்பார்கள்.
உங்களுக்கான பதில் திருப்தி அளிக்கவில்லை என்றால் நுகர்வோர் நீதிமன்றம் மூலம் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளலாம். நீங்களே வக்கீலாக உங்கள் வழக்குக்காக வாதாடலாம்.
முதலில் உங்கள் உரிமைகளை விட்டுக்கொடுக்காதீர்கள்.
காசு கொடுப்பது நீங்கள். அதற்கான முழு சேவை உங்களுக்கு வழங்கப் படவேண்டும்.
கம்ப்யூட்டர் பில்லாக இருந்தாலும் பொருள், தொகை, மொத்தத் தொகையைச் சரி பாருங்கள். அதில் கூட தில்லுமுல்லுகள் நடக் கின்றன.
நீங்கள் கேட்கும் ஒவ்வொரு கேள்வியும் நுகர்வோருக்கான மதிப்பை அதிகரிக்கும், கலப்படம், தில்லுமுல்லுகள் குறையும், அரசுக்குச் சரியான வரிகள் சென்று சேரும்.
இதுவே மக்கள் சக்தி.
எழுத்து : அம்மு.