தோற்றப்பிழை | உளவியல் தொடர் 4 | எழுத்து : அம்மு ராகவ்

1 1
Spread the love
Read Time:13 Minute, 24 Second

திரைப்படங்கள் பொழுதுபோக்கு கேளிக்கைதான். ஆனால் சில படங்கள் நம்மை அசைத்துப் பார்க்கும். கேள்வி கேட்க வைக்கும். யோசிக்க வைக்கும்.

வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவதைப் போல நல்ல கருத்தை நச்சாகவும், நச்சுக் கருத்தை நல்லதைப் போன்றும் நம்மை நம்பவைக்கும் சக்தி திரைப்படங்களுக்கு உண்டு.

‘சார்பட்டா பரம்பரை’ படத்தை பார்த்திருப்பீர்கள். அதில் நம்மை நம்பவைத்த பிம்பம் என்ன?

இரு குத்துச்சண்டை குழுக்கள். சார்பட்டா பரம்பரை ரங்கன் வாத்தியார், அவர் மகன் வெற்றி, அவரின் பிரதான சிஷ்யன் ராமன். அவரைப் பார்த்து ஆராதிக்கும் ஏகலைவனாக ஹீரோ கபிலன்.

இடியாப்பப் பரம்பரை வாத்தியார் துரைக்கண்ணு, வேம்புலி, டான்சிங் ரோஸ்.. ரங்கன் வாத்தியாரின் சார்பட்டா பரம்பரையைக் காக்க கபிலன் பல தடைகள் தாண்டி, பார்க்கும் நம் நாடி நரம்பை எல்லாம் முறுக்கேற வைத்து ‘அடிச்சி கொல்லுடா வேம்புலிய’ என்று வெறிகொண்டு ரங்கன் வாத்தியாரை வெற்றிபெற வைத்து ‘சார்பட்டா பரம்பரை’ மானத்தைக் காத்த கதையாகத்தானே காட்சிப் படுத்தப்பட்டது.

இதில் படம் பார்த்த பெரும்பாலான மக்களின் மன ஓட்டம் என்ன?

மோசமான இடியாப்பப் பரம்பரை டீம் வில்லன். நல்லவிதமான சார்பட்டா பரம்பரை ஹீரோ, கெட்டவனைத் தோற்கடித்து நல்லவன் வெற்றி பெற்றான். சூப்பர் படம். இதுதானே?

உண்மையில் இந்தப் படத்தில் கெட்டவர்கள் அல்லது வில்லன் யார்? இடியாப்பப் பரம்பரையா?

மீண்டும் படம் பாருங்கள்.

இடியாப்பப் பரம்பரை வீரர்கள் ஒருவரை ஒருவர் காட்டிக்கொடுத்து கொல்ல முயற்சிக்கவில்லை.  ஜாதிப் பெருமையோ உள்ளடி வேலைகளோ செய்ய வில்லை. குத்துச்சண்டை போட்டிக்குத் தயாராகாமல் சாராயம் குடிக்கவில்லை. அரிவாள் எடுத்து வெட்டிக்கொண்டு சண்டை இடவில்லை. பரம்பரை மானம் என்று விளையாட்டை இனமானத்தில் அடக்கி வீரர்களை வெறியேற்றவில்லை.

‘நான் வீரன். உனக்கு என்னை வெல்ல திராணி இருந்தால் என்னைக் களத்தில் வைத்து ஜெயித்துப் பார்’ என்று ஒரு True Sportsmanshipல் மட்டுமே இடியாப்பப் பரம்பரை டீம் படம் முழுவதும் குத்துச்சண்டையை அணுகினார்கள்.

தோற்றுப்போன டான்ஸிங் ரோஸ்கூட ஓரிடத்திலும் ரங்கன் வாத்தியாரையோ, சார்பட்டா பரம்பரை குழுவையோ பழித்துப் பேசவில்லை. தோற்றதையும் விளையாட்டின் அங்கமாகவே எடுத்துக்கொண்டார்கள். இனமான பரம்பரையில் விளையாட்டை வைக்கவில்லை. ஆனால் சார்பட்டா பரம்பரை?

சொந்த மகன் தனக்குப் போட்டியிட வாய்ப்பு கொடுக்கப்படவில்லை என்று தன் குழுவின் போட்டியாளனை வெட்டிக்கொல்ல ஆள் வைக்கிறான்.

சிஷ்யனும் அவன் மாமாவும் தங்கள் பங்கிற்கு உள்ளடி வேலைகள் செய்கிறார்கள்.

குழுவின் வாத்தியாரோ, விளையாட்டின் நுணுக்கங்களை நம்பாமல், ‘நம்ம மானத்தைக் காப்பாத்திடு’ என்கிறார்.

ஹீரோவோ சரக்கடித்து தொப்பை வளர்க்கிறான்.

குத்துச்சண்டைக்கு மரியாதை அளித்த இடியாப்பப் பரம்பரை வில்லனாக்கப்பட்டு, உள்ளடி வேலைகள் செய்த டீம் ஹீரோ ஆக்கப்பட்டது.

இதுபோன்ற காட்சிமயக்கங்களை வைத்துத்தான் இல்லாததை இருப்பதுபோல ஒன்றை உருவாக்குகிறார்கள்.

‘சபாஷ் மித்து’

இதுவும் ஒரு திரைப்படம்தான்.  அதுவும் கிரிக்கெட் பற்றிய படம்.

இந்திய கிரிக்கெட்டின் முக்கியஸ்தர்கள் அமர்ந்திருக்க எதிரில் பெண்கள் கிரிக் கெட் அணியின் தேசிய டீம் நிற்கிறது. அலுவலக ஊழியர் டீ கொண்டு வருகிறார். அமர்ந்திருப்பவர்களின் செலக்‌ஷன் கமிட்டி பெருந்தலை ஒரு கேள்வி கேட்கிறார்.

உங்களுக்கு கிரிக்கெட் பிடிக்குமா?

ஊழியர் பதில் சொல்கிறார். ‘‘புடிக்குமாவாவது, அது என் உயிர் மூச்சு சார். 30 வருஷமா இங்க வேலை செய்யறேன். எல்லா பெரிய வீரர்களையும் பார்த்திருக்கிறேன்.”

“அச்சா,  எங்கே இந்தியப் பெண்கள் கிரிக்கெட்டர் 5 பேர் பெயரைச் சொல்லுங்கள்?”

“மவுனம்…”

“3 பேர்.”

“அது வந்து சார்…”

“ஒருவர் பெயராவது?”

“ம்ஹும்…”

“சரி, நீங்க போங்க.”

இதுதாம்மா உங்க அடையாளம். உங்களுக்கெல்லாம் பட்ஜெட் கிடையாது. குடுக்கறத வாங்கிட்டு விளையாடுங்க. ஆண்கள் டீமில் பயன்படுத்திய ஜெர்ஸிக்களைப் பற்றி கேள்வி கேட்கப் போனபோது அவர்களுக்குக் கிடைக்கும் பதில் இது.

படம் முழுக்க மித்தாலி ராஜ் எனும் இந்தியாவின் பெண்கள் அணியின் தலைசிறந்த போட்டியாளரும், 10,000 ரன்களுக்கு மேல் குவித்த சாதனையாளரான அவரின் கிரிக்கெட் வாழ்க்கை என்று படமாக்கப்பட்டிருந்தாலும், இந்தப் படம் பொதுப்புத்தியில் கிரிக்கெட்டை ஆராதனை செய்பவர்களையும், விளையாட்டுக்குத் துறை வைத்து, பெண்கள் கிரிக்கெட் அணி ஒன்றுக்குப் போகக் கூட டூரில் புதர்ப்பக்கம் ஒதுங்குவதையும், அதே ஆண்கள் டீம் கடவுளுக்கு நிகராக மதிக்கப்படுவதையும் கன்னத்தில் அறைவதைப் போல கேள்வி கேட்கிறது.

நிஜம்தானே?

பெண்களுக்கே இந்திய மகளிர் கிரிக்கெட்டில் விளையாடுபவர்களின் பெயர் தெரியுமா என்ன? சச்சினும், தோனியும் 3 வயது குழந்தைகள் மனதில் புகுத்தப்பட்ட அளவிற்கு இவர்கள் ஏன் புகுத்தப்படவில்லை?

விளையாட்டும் வியாபாரம்தான், விளம்பரங்களின் வழி காசு கொட்டும் வியாபாரம்.

பூஸ்ட் ஈஸ் தி சீக்ரெட் ஆஃப் அவர் எனர்ஜி என்று குட்டிப்பையன் சொல்வதுபோலத்தானே விளம்பரங்கள் எடுக்கிறார்கள்? மித்தாலிகள் ஏன் கவனிக்கப்படுவதில்லை என்பது புரிகிறதா?

‘சார்பேட்டா பரம்பரை’ போல கிரிக்கெட்னா கோலிதான், தோற்றாலும் கிரிக்கெட் என்றால் அது ஆண்கள் டீம்தான்

என்று தோற்றப்பிழையாக்கி நம்மை நம்பவைத்த தந்திரம்தான்.

அமெரிக்காவில் திறமைக்கு மதிப்பளிக்கிறார்கள். ஆண், பெண், ஜாதி, இன வேறுபாடுகள் இல்லை. ஒரு சாதாரண ஊரில் இருந்துகூட அமெரிக்க நேஷனல் டீமிற்குத் திறமை இருந்தால் பங்கேற்க முடியும்.

கிரிக்கெட் விளையாடுவதில் உள்ள பாலின வேறுபாடு மிகப் பெரியது. இந்தியாவில் 5 சதவிகிதப் பெண்கள் கிரிக்கெட் விளையாடுகிறார்கள். ஆனால், 25 சதவிகித ஆண்கள் இந்த விளையாட்டை விளையாடுகிறார்கள்.

‘சபாஷ் மித்து’வில் இந்தியப் பெண்கள் கிரிக்கெட் அணி தனக்கான அடையாளத்தை எப்படி தக்கவைத்துக்கொண்டது என்பதைத்தான் ஹீரோ(யின்) வொர்ஷிப் இல்லாமல் சொல்லி இருக்கிறார்கள்.

ஒரு பெண் விளையாடப்போவதற்கான மறுப்பு வீட்டிலிருந்தே தொடங்குகிறது மித்துவுக்கு. முதன்முதலாக நாட்டிற்காக விளையாடச் செல்லும்போது, சத்துணவுக்காகப் பள்ளிக்குப் படிக்க வந்த குழந்தைகளைப் போல, பல மாநிலத்தின் ஏழைப் பெண்கள் விளையாட வந்திருப்பதும், தனக்கான உரிமைகளைக் கூட கேட்கத் தெரியாமல் இருப்பதும் கண்டு இயற்கையான தலைவியாக உருவெடுத்து உலகக் கோப்பையின் இறுதி ஆட்டம் வரை அணியைக் கொண்டு சென்று, சொந்த நாட்டின் ஆண்கள் டீம் ரசிகர் கூட்டத்தையும் விளையாட்டு அரசியலையும் திரும்பிப் பார்க்கவைப்பதாகக் கதை முடிகிறது.

இறுதியாக, ‘கிங் ரிச்சர்ட்ஸ்’ என்ற ஆங்கிலப்படம்.

அமெரிக்காவின் டென்னிஸ் சகோதரிகளான செரீனாவையும், வீனஸ் வில்லியம்ஸையும் இந்திய கிரிக்கெட் வீராங்கனைகளைத் தெரியாத உங்களுக்கு நிச்சயம் தெரிந்திருக்கும்.

தன் பிள்ளைகள் பிறப்பதற்கு முன்பே அவர்கள் என்ன படிக்கவேண்டும், எங்கே டென்னிஸ் பயிற்சி பெறவேண்டும், எந்த எந்த க்ராண்ட் ஸ்லாம் பட்டங்களை வெல்லவேண்டும் என்றெல்லாம் கனவு கண்டு, பிள்ளை பெற்று அதன்படியே வளர்த்து, பயிற்சி அளித்து உலகின் நம்பர் ஒன் டென்னிஸ் சகோதரிகளாக மாற்றிக் காட்டுகிறார். ஏழைக் குடும்பத்தின் தகப்பனுக்கு இது அமெரிக்காவில் சாத்தியப்பட்டது திறமைக்கு மதிப்பளிக்கும் நாடு என்பதாலேயே.

ஆஸ்கர் வென்ற இந்தப் படம் நம் நாட்டு விளையாட்டுத் துறைக்கும், அது சார்ந்த அரசியலுக்கும் சொல்லாமல் சொல்லும் உண்மை புரிந்தால், ஒலிம்பிக் கோல்ட் மெடலெல்லாம் இந்தியாவின் ஏதோ ஒரு குக்கிராமத்தில் வசிக்கும் இளைஞர்களால் நம் நாட்டுக்கு அநாயசமாகக் கிடைக்கும்.

விளையாட்டில் பெண்கள் ஈடுபடுவதை ஊக்குவிப்பதன் முக்கிய நோக்கம் பாலின சமத்துவம் தொடர்பான அணுகுமுறையாகும். பொதுவாக கல்வி, தொழில், பொதுவான வாழ்க்கைத் தெரிவுகள் ஆகியவற்றில் பெண்களின் சம உரிமை ஏற்கப்படும்போது, புரிந்துகொள்ளப்படும்போது, அது இயல்பாக, விளையாட்டு உலகில் அவர்களின் இடத்தை அவர்கள் பெறவும் உதவும்.

என்ன சொல்லி என்ன? இந்தக் கட்டுரையை நான் எழுதி முடிக்கும்பொழுது, செரீனா வில்லியம்ஸ் டென்னிஸிலிருந்து ஓய்வு பெற்றதாக அறிவித்தார். காரணம்? குடும்பமா? டென்னிஸா? என்ற கேள்வி அவர் முன்னே எழுப்பப்பட்டது.

ரிட்டையர்மெண்ட் என்ற வார்த்தையையே வெறுக்கும் செரீனா, ஓய்வெடுக்கிறேன் என்று அறிவித்தார்.

“நான் ஆணாக இருந்தால் இந்த நிலை எனக்கு வந்திருக்காது. என் மனைவி குடும்பத்தைக் கவனிக்க நான் என் கடைசி வலிமை வரை விளையாடி இருப்பேன். ஆனால், நான் பெண்ணாய் பிறந்துவிட்டேன். குடும்பமா? டென்னிஸா? என்ற நிலைக்குத் தள்ளப்பட்டபோது என் ஓய்வை அறிவிக்கிறேன்” என்றார் கண்ணீருடன்.

எழுத்து : அம்மு ராகவ்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
100 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
100%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

One thought on “தோற்றப்பிழை | உளவியல் தொடர் 4 | எழுத்து : அம்மு ராகவ்

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!