இன்றெல்லாம் விதவிதமான செல்போன்களை முக்கியமாக அதன் வகை களை வைத்து தரநிர்ணயம் செய்யும் பழக்கத்தை நான் காண்கிறேன். குழுவாகச் சேர்ந்து செல்பி எடுக்கும்போது அரை லட்சத்துக்கு கிட்டே இருக்கும் அலைபேசிகளும் அதை வைத்திருப்பவர்களும் ஒரு தலைவன் ஸ்தானத்திற்கு வந்து விடுவார்கள். இதுதான் இப்போது இருக்கும் மனிதர்களுக்கான தர தேர்வு.
அப்போதெல்லாம் புத்தகம்தான் இந்த செல்போனின் இடத்தைப் பிடித்திருந்தது. புத்தகம் கையில் வைத்துக்கொண்டே திரிவார்கள். வேலைக்குக் காத்திருக்கும், திருமணத்திற்குக் காத்திருக்கும் அண்ணன்களும் அக்காக்களும். நூலகம்தான் முக்கியமான நட்சத்திர அந்தஸ்து பெற்றிருக்கும் புத்தகக் காதலர்களுக்கும், காதலிப்பதற்காகப் புத்தகம் படிப்பவர்களுக்கும். புத்தகங்கள் வழியாகக் காதல் கடிதங்கள் பரிமாறப்படும். காதலிக்குப் பிடித்த எழுத்தாளரின் புத்தகத்தில் அவரிடமிருந்து கையெழுத்து வாங்கிக் கொடுத்து செல்வி அக்காவிடமிருந்து காதலை வாங்கிக் கொண்டார் செல்வம் அண்ணன். பேரே எவ்வளவு பொருத்தமில்லை! இன்றும் செல்வி அக்கா புத்தகங்களின் மீதான காதலைக் குறைக்காமல்தான் வாழ்ந்துகொண்டிருக்கிறது. அதைவிட செல்வம் அண்ணனையும்.
அப்போதும் தரம் பிரிப்பது இருக்கும். பாக்கெட் நாவல், தொடர்கதை பைண்டு செய்தது, பதிப்பகத்தில் அச்சடிக்கப்பட்ட புத்தகங்கள். இதில் பதிப்பகத்தில் அச்சடிக்கப்பட்ட புத்தகம் வைத்திருப்வர்கள்தான் இன்றைய அரை லட்சம் விலையிலான செல்போன் வைத்திருப்பவர்களுக்கான இடத்தைப் பிடித்த வர்கள். நம்மால் என்ன முடியும்? குமுதம், விகடன், கல்கி என தொடர்கதை களைத் தாள்களாகப் பிய்த்தெடுத்து பைண்டிங் கொடுக்கலாம். 5 ரூபாய் என நினைக்கிறேன். அதையும் மீறி விடுமுறையில் வந்த சேகர் மாமா வீட்டி லேயே பைண்டிங் போடச் சொல்லிக் கொடுத்தார்.
அதற்குப் பிறகு அந்த ஐந்து ரூபாயும் மிச்சம். சில சமயம் ஏதாவது ஒரு அத்தியாயம் விட்டுப் போயிருக்கும். என்ன செய்வது? கற்பனையை இட்டு நிரப்பிக் கொள்வேன். பக்கத்து வீட்டு அக்காக்கள் நூலகத் தோழிகள் எல்லாம் புத்தகப் பரிமாற்றத்தில், இதைப்படி, நல்லாருக்கும் என்று கொடுக்கும் ஆர்வத் தில் எத்தனைப் பேரைத் தெரிந்துகொள்ள முடிந்தது? நானோ போண்டா மடித்து வரும் பேப்பரைக்கூட படிக்காமல் குப்பையில் போட்டதில்லை.
சித்தி வீட்டில் படிக்கப் போனபோது ஒரு நல்லூழ் வாய்த்தது. ‘லெண்டிங் லைப்ரரி’. சித்தியுடன் நானும் செல்வேன். சித்தி ஒரு புக் மட்டும் எடுத்துக் கொண்டிருந்தவர் பின் எனக்காக இரண்டாக மாற்றினார். ஆனால் அங்கிருந் தவையெல்லாம் ரமணிசந்திரன் மட்டுமே. எனக்குப் பிடிக்காதென்றா நினைத்தீர்கள்? அவ்வளவு பைத்தியம் நான் அன்றைய தேதிக்கு. (இன்று கூட அவருடைய முதல் நூறு புத்தகங்கள் என் வீட்டில் தலைப்புக்குக் கீழ் கதா பாத்திரங்களின் பெயர் எழுதப்பட்டு அடுக்கி வைக்கப்பட்டிருக்கிறது). இன்று யார் யாரோ அவரைப் பின்பற்றி எழுதுகிறார்கள். அவரே எழுதுவதாய் வருவதுகூட அதுபோல இல்லை. ஆனால் பெண்களின் கற்பனை மண வாழ்வை அவரைப்போல மணக்கச் செய்தவர் எவருமில்லை.
இன்னொரு சித்தி பப்ளிகேஷன்ஸ் டிவிஷனில் வேலை பார்த்தவர். சித்தி யுடன் அலுவலகத்தில் செல்லும் நாட்களில் கூடவே போய் சாகித்ய அகாடமி யின் விருது பெற்ற தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நாவல்கள் மட்டுமே கிடைக்கும். புத்தகக் கண்காட்சி நடத்துவார்கள். கூடப்போய் உதவும் சாக்கில் முடிந்தவரை படித்துத் தீர்ப்பேன். புத்தகங்கள் வாங்க வரும் மனிதர்களைப் பார்க்கப் பார்க்க ஆசையாய் இருக்கும். நானும் நிறைய சம்பாதிப்பேன். அதில் நிறைய புத்தகம் வாங்கி வீட்டுக்குள் அடுக்கிக் கொள்வேன். இரவல் கேட்டால் லைப்ரரி போன்று பேரெழுதிக்கொண்டு தருவேன் என ஒரே லட்சியம் அப்போது.
வித்தியாசமான கதைகள் அப்போதுதான் படிக்கக் கிடைத்தன. அதைப் படிக்கப் படிக்க இன்னும் வேறு கோணமாய் சிந்தனை மாறிக்கொண்டே போனது. புத்தகங்களில் மட்டுமே இத்தகைய பரிணாம மாற்றங்களை நாம் காண முடியும். மிஷ்கின் படம் பார்த்துவிட்டு, விக்ரமன் படம் பார்க்க மாட்டேன் என சொல்ல முடியுமா? ஆனால் புத்தகத்தில் அது முடியும். சில தேர்ந்த எழுத்தாளர்களைப் படித்தபின் எது அற்புதமான எழுத்து என்ற ஒரு பந்தம் வந்துவிடும்.
இப்போதெல்லாம் மொத்தமாய் வண்டி எடுத்துப் போகிறார்கள். புத்தகம் எழுத் தாளரே போட்டுக்கொண்டு தேன்மிட்டாய் போல ஆளுக்கொன்று தருகிறார் கள். முகநூலில் விளம்பரம் செய்கிறார்கள். சத்தியமாய் தவறென்று சொல்ல வில்லை. புத்தகங்கள் மட்டுமே இன்னும் அதற்கான மதிப்பை இழந்துவிட வில்லை என்று தோன்றுகிறது. காரணம் புத்தகம் மட்டுமே நம்மை ஏன் எனக் கேட்கச் சொல்லிப் பழக்கியிருக்கிறது. பார்க்கிற இடத்தையெல்லாம் ரசிக்கச் சொல்லித் தருகிறது. ஒரு மூர்க்கனை, முரடனைப் புரிந்துகொள்ளும் மனப் பக்குவத்தை கையில் அளித்திருக்கிறது. புத்தகங்களை நாமும் நம்மைப் புத்தகங்களும் என்றும் கைவிடாதிருப்போம்.
(இன்னும் பேசுவோம்.)
சவிதா