திரையரங்கமும் திரைப்படமும்
மிக முக்கியமான, தமிழ்நாட்டின் மையத்தைப் பேசாமலிருக்கிறோம். ஆம். சினிமா. சினிமாவையும் தமிழ்நாட்டையும் தனித்தனியாகப் பிரித்துவிடவே முடியாது. கிரிக்கெட் கூட தமிழ்நாட்டைப் பொறுத்தவரை அடுத்த இடம்தான். அதுவும் ஒரு சம்பவத்தைச் சொல்லும்போது அந்த வருடத்தை நினைவு கூரும்போது நம்மால் எப்படி எந்தப் படத்தையும் குறிப்பிடாமல் தாண்ட முடியும்?
அம்மாவுக்குக் காய்ச்சல் வரும்போதெல்லாம் ‘துலாபாரம்’ சினிமா ஞாபகம் வந்துவிடும். அழுது அழுது காய்ச்சல் வந்தது எனச் சொல்லாமல் அந்த காய்ச்சல் முடிவுக்கு வராது. பாட்டியால் ‘தங்கப்பதுமை’ கதையைக் கூறாமல் ஒப்பிட்டு தட்டமுடியாது. ஐந்து பழமொழிகளையும் ‘தூக்குத்தூக்கி’யையும் கேட்டுக் கேட்டே மனப்பாடமாக்கி விட்டது அப்பாவின் சினிமா. அம்மாக்கள், சித்திகள் எல்லாம் பாலசந்தரின் கதாநாயகிகளின் பிம்பங்களைக் கொண்டிருந் தார்கள்.
எங்கள் ஊரின் ஒதுக்குப்புறத்தில்தான் அந்தத் தியேட்டர் இருந்தது. கொட் டகையெல்லாமில்லை. தியேட்டரேதான். எனவே எனக்குப் பெருமை அதிகம். நகரத்துக்கு வந்த சினிமாவின் இரண்டாம் சுற்றுக்கு வரும் படங்கள் மட்டுமே. சில சமயம் பழைய படங்கள். ஒருமுறை ‘பூந்தளிர்’ போட்டிருந்தார்கள். எனக்கு நினைவு தங்கிய முதல் படம். குழந்தை படம் முழுவதும் நடந்து கொண்டே இருக்கும். பாட்டில் பாலைக் குடிக்கும். அம்மா சிலையில் போய் பால் குடிக்கும். அதற்கப்புறம் எங்கு சென்றாலும் தொலைந்து விடுவேனோ என்ற பயம் நிரந்தரமாக ஒட்டிக் கொண்டது.
நேர்கோடான வாழ்வியல் தன்மைகளைப் பேசும் கதைகள் மட்டுமே. வன்முறை எனில் அதிகபட்சம் சிவப்பு இங்க் மட்டுமே. அம்மா திண்டி தீர்த்தங்களுடன் கூடையில் ஒரு பெரிய துண்டை எடுத்துக் கொள்வார். எதற்குத் தெரியுமா? கிளைமாக்ஸில் வரும் சண்டைக் காட்சிகளெனில் எனக்குப் பயம். துண்டை விரித்துக் கீழே உட்கார்ந்துகொள்வேன். பயம். மூஞ்சில் குத்துவது போலவே இருக்கும். சினிமாவிற்கு வர மாட்டேன் என அடம்பிடிப்பேன். பக்கத்து வீட்டு அக்கா போஸ்டரை கிழித்துவந்து சண்டைக் காட்சிகள் இல்லையென சொல்லி ஏமாற்றி அழைத்துப்போவார்.
ஆடிவெள்ளி, துர்கா போன்ற படங்களெல்லாம் அவ்வளவு பிடிக்கும். ஆடி வெள்ளியில் வந்ததுபோல் மிருகம் வந்துவிடக்கூடாதென வேண்டுதலுடனே மாரியம்மன் கோவிலைக் கடப்பேன் தினமும். அன்றெல்லாம் பெண்களுக்குப் பிடித்தால்தான் சினிமா. பிழிய பிழிய சோகம், வன்முறை குறைவு, பாக்யராஜ் டைப் ரொமான்ஸ் இதுபோல கல்லா கட்டியவர்கள்தான் அதிகம்.
பெண்கள் காட்சி என்பதுதானே காலைக்காட்சிக்குப் பெயர். இன்று தோழி களுடன் சினிமாவுக்குப் போவதைக்கூட கடுப்பாகப் பார்க்கிறார்கள் சிலர். ஆனால் அன்று தெருவிலுள்ள பெண்கள் எல்லாம் சேர்ந்து கணவரை வேலைக்கு அனுப்பிவிட்டு போகாத சினிமா உண்டா என்ன? அதுவும் தியேட்டர் இல்லாத ஊரிலிருந்து விருந்தினர் வருகையில் மதியக்காட்சி பார்த்துவிட்டு திரும்பி வீட்டுக்கு வந்து சாப்பிட்டுவிட்டு இரவுக் காட்சிக்கு அடுத்த படம் என ஒருநாளைக்கு இரண்டு படம் போன கதைகளெல்லாம் பல உண்டு.
பேச வந்த விஷயம் அதுவல்ல. குடும்ப உறவுகள், மண உறவுகள் போன்ற கதைகளாக இருந்தாலும் சரி. சமூக உணர்வுகள் சொல்லும் படமாக இருந் தாலும் சரி. படம் சொல்லும் பாடமென்று ஒன்று இருக்கும். துரோகம் செய்தவன் தப்புவது இல்லை. பேராசை பெருநஷ்டம்… பணக்காரனெல்லாம் திமிர் பிடித்தவன்.. பெண்களெல்லாம் ஒருவனின் கைப்பிடியில் வாழ மட்டுமே தகுதியானவர்கள். இதுபோல தோற்றம் கொடுக்கக்கூடிய படங்கள்.
இதில் எல்லாத் தப்பையும் செய்துவிட்டு வில்லன் கடைசியில் திருந்துவார். இல்லையெனில் பொயட்டிக் ஜஸ்டிஸ் ஆக ஒரு விஷயம் நடக்கும். அதுவும் கடைசியில் வில்லனைக் கொல்ல சூலாயுதத்தை கதாநாயகன் தூக்கும்போது வில்லனின் மனைவியோ கதாநாயகனின் காதலியோ காலை பிடிப்பாள்.. ஏனெனில் கொலை செய்தால் கதாநாயகன் சிறைக்குச் சென்றுவிடுவானே.. கொலை செய்தால் சிறைக்குத் தானே செல்ல வேண்டும் என்ற நீதி மீதான நம்பிக்கை இருந்தது நமக்கு.
கொலை செய்துவிட்டு தண்டனை அனுபவித்துவிட்டு வெளியே வரும்போது நாயகனுக்குத் தலை நரைத்துப் போயிருக்கும். அதாவது நீதி தன் கையில் சட்டத்தை எடுத்துக்கொள்ள அனுமதிப்பதில்லை. எனக்குத் தெரிந்து சட்டத் தைக் கையில் எடுத்துக்கொள்வதைப் பற்றி S.A. சந்திரசேகர் சிவந்த கண்களுடன் கூடிய விஜயகாந்தை வைத்துப் படங்கள் எடுக்க ஆரம்பித்தார். அதுவரை வன்முறையை அப்பட்டமாகக் காண்பித்த படங்கள் இல்லையென நினைக்கிறேன். அவர் சிஷ்யன் அந்தப் பாதையை ஹைடெக்காக மாற்றி விட்டுவிட்டார். ஜென்டில்மேன் படத்தில் கடைசியில் தலை காரில் வந்து விழும் சீனுக்கெல்லாம் நான் நடுங்கித்தான் விட்டேன்.
இதெல்லாம் இன்றைக்குச் சொன்னால் சின்னப் பிள்ளைகளெல்லாம் விழுந்து விழுந்து சிரித்துவிடும். எந்தத் தப்பையும் மறைக்கலாம், கொலையெல்லாம் ஒரு விஷயமேயில்லை. குண்டர்கள் கலாச்சாரம், டப்டப்பென பலியாகும் உயிர்கள், எதன் மூலமாகவேணும் அடையலாம் என்பதான இலக்கு என சினிமா மட்டுமல்ல, காலமே பயங்கரமாகத்தான் முன்னேறிவிட்டது. ஆன போதும் அன்றைய நெறிமுறைகள் போலிஸின் மேலிருந்த பயம் நிறைந்த மரியாதை, நீதித்துறையின் பேரிலிருந்த நம்பிக்கை எல்லாம் நீர்த்துப்போய் விட்டன என்பதை ஒத்துக்கொண்டுதான் ஆகவேண்டுமில்லையா?
(இன்னும் பேசுவோம்)
எழுத்து : சவிதா