வேர்களில் தொடங்கியது – 8 || எழுத்து : சவிதா

2 0
Spread the love
Read Time:11 Minute, 0 Second

அவர் எனக்கு நன்கு தெரிந்த டைலர்தான். அந்தளவுக்குத் தொழில் சுத்தமில்லை. சொன்ன தேதியில் கொடுக்கத் தவறியதைச் சொல்லவில்லை. அது அவர்களுக்கான பெரும்பான்மை குணம் என்பதும் நடைமுறை சிக்கல்களும் இப்போது பழகிவிட்டது. மற்றபடி அளவு சரியாயிருந்தால் போதுமென திருப்தியாகி விடுவேன். அவர் திடீரென பிசியாகி விட்டார். வரும் சில்லறைத் தையல்களையெல்லாம் திருப்பி அனுப்பிக் கொண்டிருந்தார். பிறகுதான் தெரிந்தது ஒரு பள்ளிக்கூடத்தின் சீருடை ஆர்டர் கிடைத்தது என்று. சரி. செட்டிலாகிவிட்டார் என நினைத்தேன்.

இன்றைய பள்ளிச் சூழ்நிலையில் ஒரு குழந்தைக்குச் சீருடை என்பது கிட்டத் தட்ட 3 செட்கள் +  2 விளையாட்டுச் சீருடை செட்கள். விளையாட்டுச் சீருடையை வாரத்தில் குறிப்பிட்ட இரு நாட்கள் மட்டுமே அணிய வேண்டும். அன்று கேன்வாஸ் ஷூவும் அணிந்து செல்ல வேண்டும். அன்று விளையாட மட்டும்தானா என்றால், இல்லை. வழக்கம் போலப் பாடங்களும் நடக்கிறது. ஒரே ஒரு பாடப்பிரிவு மட்டும் விளையாட்டு. பரீட்சை நேரங்களில் அதுவும் ஒதுக்கப்பட்டுவிடும். ஆனால் அந்த விளையாட்டுச் சீருடையை அந்தக் கிழமைகளில் மட்டுமே அணிய வேண்டும். போன வருடம் வாங்கிய ரெண்டு செட் புதிதாகவே இருக்கிறது. ஒரு செட் கொடுங்கள் எனக் கேட்டால் நடக் காது. வருடத்திற்கு 3 செட் வாங்கியே ஆக வேண்டும்.

இதற்குப் பிறகு  ஸ்போர்ட்ஸ் டே வரும். அந்த நாளிலும் ரெகார்டு டேன்ஸ் ஆடும் குழந்தைகள். ஒரு வகுப்பில் இருக்கும் குழந்தைகள் ஒரு பாடலில் பங்கேற்பார்கள். கூட்டத்தில் அடித்துப் பிடித்து தம் குழந்தையைக் கண்டுபிடிப்பதற்குள் பாட்டு முடிந்துவிடும். இதில் உபயோகப்படுத்தும் உடைகள் எல்லாம் வேறு நாளில் போட்டுச் சென்றால் நாய் குதறி விட்டுவிடும். அப்படி டிசைன் செய்வார்கள்.

வகுப்பிலிருக்கும்  குழந்தைகள் அனைத்தும் கலந்துகொள்ள வேண்டிய கட்டா யம். அதனால் நம் குழந்தையை வேண்டாம் எனத் தடுக்க முடியாது. கண்டிப் பாகக் கலந்துகொண்டே ஆகவேண்டும். வருட இறுதியில் வரும் ஆண்டு விழாவும் கிட்டத்தட்ட இப்படித்தான்.

ஒரு முறை ஒரு பெரிய பள்ளியில் ஆண்டு விழாவை என்னிடம் டியூஷன் படிக்கும் மாணவியின் ஆசைப்பட்டதால் கலந்துகொள்ள சென்றிருந்தேன்.  அப்போதுதான் தெரிந்தது,  அதற்கும் பாஸ் வாங்க வேண்டும் என்று.  ஒரு குடும்பத்திலிருந்து அதிகபட்சம் நான்கு பாஸ்கள் மட்டுமே ஆண்டு விழா விற்கு அனுமதிக்கப்படும். அதற்குமேல் அனுமதிக்கப்படமாட்டாது. இதெல் லாம் எங்கள் பள்ளியில் கிடையாது எனச் சிலர் பெருமைப்பட்டுக் கொள்வீர்கள். சில விதிவிலக்குகள் உண்டுதான். எனினும் பெரும்பாலான பள்ளிகள் இப்படித்தான்.

குழந்தைகளை மட்டுமல்ல. ஆசிரியைகள் அதைவிட பாவப்பட்டவர்கள்.  இந்தப் பள்ளியின் ஆண்டு விழாவிற்கு ஆசிரியைகளை வைத்து அழைப்பிதழ் அடித்திருந்தார்கள்.  நம்புங்கள். கிட்டத்தட்ட நான்காயிரம் மாணவர்களுக்கும்  மேற்பட்ட குழந்தைகள் படிக்கும் பள்ளி அது.  ஆனால் அத்தனை அழைப் பிதழ்களும் ஒவ்வொரு அழைப்பிதழாக ஆசிரியைகளின் கரங்களால் மெல்லிய அட்டையில் கைவேலை செய்யப்பட்டு உருவாக்கப்பட்டது. அவர்களின் கையெழுத்தில் இருந்தது.

அப்படியானால் அவர்களின் வேலை நேரம் முடிவடைந்த பிறகு ஒவ்வொரு ஆசிரியையும் இதைச் செய்துவிட்டே வீட்டிற்குச் சென்று இருக்கக்கூடும்.  ஒவ்வொரு ஆசிரியையும் ஒவ்வொரு அழைப்பிதழையும் செய்வதற்கு எவ்வளவு சிரமப்பட்டு இருப்பார் என்று தோன்றியது.  ஒரு A4  பேப்பரில் கம்ப்யூட்டர் பிரிண்ட் அவுட் செய்து கொடுத்தால்கூட நாம் அந்த ஆண்டு விழாவுக்குப் போகத்தான் போகிறோம்.  ஆனால் சம்பளம் கொடுக்கிறோம் என்ற பெயரில் அந்த ஆசிரியைகள் எவ்வளவு உறிஞ்சப்படுகிறார்கள் என்று பார்க்கும்போது வேதனையாக இருந்தது.

என் சிறுபிராயத்தில் 5ம் வகுப்பு வரை சீருடை அவசியமாக இருக்கவில்லை. ஆனபோதும் பெரிதாய் அரசுப் பள்ளிக்கு என்ன சீருடை இருந்துவிட போகிறது. ஆழ்ந்த நீலம், மெரூன், தர்மபுரி அவ்வையாரில் மட்டும் கரும் பச்சை இருந்தது. என் சித்தி திருமணத்திற்குப் புதுத்துணி எடுப்பதற்குப் பதில் சீருடைதான் எடுத்துக் கொடுத்தார்கள். அதற்கு அழவேண்டும் என்பது கூடத் தெரியவில்லை எனக்கு.

அப்போதெல்லாம் பாவாடை சட்டைதான். என் உறவினர் குழந்தைகளெல்லாம் மிடியும் ப்ராக்குமாக அலையும். நமக்கு டைலர் எடுத்தது போக மிச்சத் துணியில்தான் பெரும்பாலும். சிறுவயதில் மயில் பாவாடை என்று அப்போது ட்ரெண்டிங்.

மோகன் மாமாவிடம் ஆசையாய் கேட்க மும்பையிலிருந்து 100 ரூபாய் மணி ஆர்டர் செய்திருந்தார். ஆழ்ந்த மெரூன் கலரை மோகன் மாமா கலரென்றே இன்னும் நினைவு அடுக்குகளில் மிச்சமிருக்கிறது.

பெண்கள் புடவை வாங்குவதெல்லாம் மூட்டைக்காரர்களிடம்தான். மின்சாரக் கனவில் பிரபுதேவா போன்று பெண்களின் மனதை முழுதாகத் தெரிந்தவர்கள் புடவைக்காரர்களும், வளையல்காரர்களும்தான். சூழ்ந்து கொள்ளும் பெண் களின் கூட்டத்தில் வெற்றிலை வாயோடு கண்ணன் போன்றதான விகசிப்பில் புடவைகளை விரித்துக் காட்டிக் கொண்டிருப்பார்கள். அத்யந்த சிநேகிதி என்றாலும் புடவையை மட்டும் விட்டுத்தர மாட்டார்கள். மறைத்து வைத்த காசெல்லாம் வெளியில் வரும்.

பட்டுப்புடவைக்கு அப்போதெல்லாம் அதே துணியில் பிளவுஸ் துணி கிடைக் காது. புல்வாயில்தான். சீக்கிரம் வெளுத்துவிடுமென சந்தன சோப்பில் மட்டுமே துவைப்பார்கள். பட்டுப்புடவை சரிகைக்கு மேட்சாக கையில் கரை வேண்டுமானால் மெனக்கெட வேண்டும். அதைத் தனியாக வெல் க்ரோ வைத்துத் தைத்துக் கொடுப்பார்கள். கொஞ்சம் இளைத்துவிட்டால் சட்டென கீழிறங்கி மானத்தை வாங்கும்.

நகைகளென்றால் இன்று இருக்கும் எந்தப் பாடும் இல்லை. அன்னப்பட்சி போட்ட டாலர் செயின், தாமரைப் போட்ட டாலர் செயின் இதுதான் பிரதானம். ஜிமிக்கிகளில் கிளிக்கூண்டு ஜிமிக்கி திடீரென்று புகழ்பெற்று விட எல்லார் காதுகளிலும் கூண்டு தொங்கியது. விடுபெற்று விட்டோமென குறியீடு போலும்.

இன்றைக்கு அநியாயத்திற்குத் திருமண பிளவுஸ் நான்கைந்திற்கு தையற் கூலி 40,000 என இந்தப் பெண்கள் கூறுகையில் மயங்கி விழாமலிருந்தது பெரும்பாடு. (இரண்டு பவுனாவது வாங்கியிருக்கலாமே. பெண் மனது அய்யா.. தங்கத்துடனே பணத்தை ஒப்பிட்டுப் பார்த்து வளர்ந்துவிட்டது). தகவல் கேட்ட பொழுது பேட்ச் வொர்க், ஆரி வொர்க், எம்பிராய்டரி எனப் பிரித்து மேய்ந்தார்கள். ஒன்றே ஒன்று தைத்துக் கொண்டேன் 2500க்கு. அதுதான் குறைந்தபட்சமாம். கண்ணில் படும்போதெல்லாம் அந்த ஐந்து ஐந்நூறு நோட்டுகளும் இம்சிக்கின்றன. எல்லாரும் 100 புடவை வைத்திருக்கிறார்கள் தெரியுமா எனத் தோழி கேட்கிறாள்.

புடவையில் எப்படி பட்டு, ஸ்பெஷல் சாதா, ப்ளெயின் சாதா, மசாலா சாதா, ஆனியன் என விதவிதமாக இருக்கிறதோ அதேபோல் சுடிதாரிலும். இப்போதெல்லாம் டாப்ஸிலும். அதற்கான உள்ளாடைகள்.

பெண்கள் உலகத்தின் ஆடைத் தேர்வுகள் உங்களை வியப்பின் உச்சியில் ஆழ்த்துபவை. அந்தத் துறையில் இருந்தால் மட்டுமே உங்களுக்குப் புரியக் கூடும். இந்த விஷயத்திற்கு ஒரு பதிவு பத்தாது என நினைக்கிறேன். மேலும் பேசுவோம்.

எழுத்து : சவிதா

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
100 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!