

அம்மாவுடன் வேலை செய்த கீதா அக்கா (யாரையும் அப்போது ஆன்ட்டி என்றோ அத்தை என்றோ கூப்பிட்டு பழக்கமில்லை. எல்லாருமே அக்காதான்) என்னிடம் இந்தக் கேள்வியைக் கேட்பதுண்டு… “ஏண்டீ நீங்கெல்லாம் இந்தப் பொட்டுக்கடலை, வெல்லம், ஊறவெச்ச அரிசி இதெல்லாம் திருடித் தின்ன மாட்டிங்களா?”
“அதெல்லாமா சாப்டுவீங்க”ன்னு ஆச்சரியத்துடன் கேட்பேன்.
பள்ளி இடைவேளையில் பாட்டிகளின் வயிற்றுப்பாடுகளுக்கு விற்கப்பட்ட அந்தத் தின்பண்டங்கள்தான் எத்தனை ருசி? கல்கோனா, கம்மர்கட், எலந்தவடை, நெல்லிக்காய், மாங்காய் உப்பும் காரமும் புளிப்புமாய் சப்பிக் கொண்டு யூனிபார்மி்ல் அப்பிக்கொண்டு நட்போடு கலகலத்த சுவை இன்னும் அகலவில்லை. கண்டிப்பாக குழுவில் ஒருவர் எப்போதும் காசு எடுத்து வர மாட்டார். ஆனால் எல்லாருக்குமாகவே கூறு போடப்பட்டிருக்கும் கட்டில்கார பாட்டியின் மாங்காய்.

கொய்யாப்பழமும் சீத்தாப்பழமும் சாப்பிட்டால் எனக்குக் காய்ச்சல் வருமென் பதும் மாங்காய் சாப்பிட்டால் சூடு பிடித்துக்கொள்ளும் என்பதும் என் அம்மா வின் அசைக்கமுடியாத நம்பிக்கை. ஆனால் நான் பள்ளிக்கூடத்தில் அதை வாங்காமல் நகரமாட்டேன். ஆனால் என் அம்மாவின் முன் சாப்பிட்டால் மட்டும் தவறாமல் காய்ச்சல் வந்துவிடும். எப்படி எனக் குழம்பிவிடும். திருடனுக்குத் தேள் கொட்டினாற்போல எப்படி இது சாத்தியமென யோசிப் பேன். பிரபஞ்ச விதியாக இருக்குமென இப்போது தோன்றுகிறது.
மாங்காய்க்கே சூடு என்றால் அம்மிக்கல்லில் மிளகாயையும் உப்புக்கல்லை யும் ஒரு அரக்கு அரக்கிவிட்டு பின் புளியம்பழத்தைக் கொட்டையெடுத்து ஒன்றாய் திரட்டி சப்பித் திரிந்ததற்கெல்லாம் என்ன ஆகியிருக்க வேண்டும்? ஒன்றும் ஆகாது. அதுவும் பிரபஞ்ச விதிதான் போல.
பள்ளி முடிந்து வீடு வந்தால் வீட்டில் ஆளுமிருக்காது. சாப்பிடவும் ஒன்று மிருக்காது. கடுப்பாக இருக்கும்.
எதிர்வீட்டில் செட்டியார் குடும்பங்கள் உண்டு. கோமிட்டி செட்டியார் என்றால் கோபித்துக் கொள்வார்களோ என்னமோ? அவர்களின் நறுவிசு யாருக்கும் வராது. சிங்காரி அக்காவின் (ஆம். சிங்காரியேதான்) கணவர் பஸ் ஸ்டாண் டில் ஸ்வீட் கடை வைத்திருந்தார். அக்காதான் மொத்த பட்சணமும் செய் வார். தட்டை மாவை உருட்டி வாழையிலையில் (பிளாஸ்டிக் கவர் புழக்கம் அவ்வளவாக இல்லை அப்போது) வைத்து அழுத்த மரத்தில் ஒரு அச்சு செய்து வைத்திருப்பார். அதன் நுனியில் S என செதுக்கப்பட்டிருக்கும். மைசூர்பாகு கட்டை என ஒன்றிருக்கும். சதுரங்களாக ஒரே வடிவத்தில் சட்சட்டென பில்லைகள் விழும். நுணுக்கமான கருவிகள் எல்லாம் அவர் களிடம்தான் கிடைக்கும். தனியொரு ஆளாய் எல்லாம் செய்து முடித்து விடுவார்.

பெண் பிள்ளைகள் கிடையாதென்பதால் நான் உசத்தி. உட்காரவைத்து தலையை நீவி பெரிதாய் பூக்கள் போட்ட ரிப்பனாய் மடித்து வாரிவிடுவார். அம்மாவிடம் அதேமாதிரி பூ போட்டு விடச் சொல்லி சண்டை போடுவேன். ஒருமுறை k.சுமதி கேட்டாள். “நம்ம போட்டிருக்க ரெட்டை சடைல எது அம்மா சடை, எது அப்பா சடை சொல்லு பாப்போம்”. அவளுக்கு மடித்துக் கட்டிய சடையே முழம் அளவு நீளத்தில் அடர்த்தியாய் இருக்கும். பெரிய பூ வைத்து ரிப்பன் போட்டுக் கொள்வாள். வேப்பெண்ணெய் வாசம் அடிக்கும். அவளுக்குத் தெரியாதது எனக்குத் தெரியப்போகிறதா?
“நீயே சொல்லுடி”..
“வலது பக்கம் இருக்க சடைதான். அம்மா சடை. ஏன்னா நாம ஒரு பக்கமா பூ வெச்சா அந்தப் பக்கம்தான வைக்கிறோம்.”
சுமதி எவ்வளவு புத்திசாலி.
சிங்காரி அக்காவின் தின்பண்டங்கள் எப்போதாவதுதான் கிடைக்கும். சாயந் திரத்தில் பசிக்குமென சொன்னால் யாருக்கும் புரியாது. கண்டதைச் சாப்பிட் டால் ராத்திரிக்குச் சாப்பிட முடியாதென உட்கார வைத்து விடுவார்கள். காபி கிடைக்கும் எத்தனை முறை கேட்டாலும். பண்டிகை சமையல் நடந்து கொண் டிருந்தால் 12 மணிக்குத்தான் சாப்பாடு.

இப்போதெல்லாம் பிள்ளைகள் வீட்டுக்கு வருமுன் நாலாவது வேளையாகச் சாப்பிடவென மாலைநேரம் மாற்றப்பட்டுவிட்டது. வீதிதோறும் பிரெட் சாண்ட்விச், பப்ஸ், பேல்பூரி சாமாச்சாரங்கள்.. குர்குர்ரே, புட்டிங், சுண்டல் வகையறாக்கள் என மாலைநேர விருந்து தடபுடலாகிறது. சாப்பாடு சாப்பாடு என அலைந்து அலைந்து போன இரண்டு தலைமுறை அனுபவிக்காமல் விட்டதை பிள்ளைகள் வயிற்றைத் திறந்து கொட்டுகிறோம். பிள்ளைகளால் இன்று சாதாரண.. ஆம். சாதாரண இட்லி சாம்பாரை சாப்பிட வைக்க முடிவதில்லை.
என் பிள்ளைகள் குழந்தைகளாயிருக்கும்போது நான் சிரித்துக்கொண்டே சற்று பெருமையாய்(!)கூடச் சொல்வதுண்டு. வெள்ளையாய் இட்லி இருந்தால் சாப்பிட மாட்டார்கள் என… இட்லி ப்ரை, புதினா இட்லி, பொடி இட்லி ப்ரை, மசாலா இட்லி என இட்லிக்கே அத்தனை தசாவதாரங்களும் செய்து வண்ணம் மாற்றி டப்பாவிற்குள் அடைத்தால்தான் காலியாகத் திரும்பி வரும்.
இதெல்லாம் எதனுடைய நீட்சி? இட்லியையே திருவிழாவில்தான் பார்ப் போமென முழங்கிய பரம்பரையில் வந்தவர்கள்தான் நாம். என்றோ எங்கோ மூட்டை தூக்கிய சாதம் தீர்ந்து போனபிறகு போனால் போகிறதென இரண்டு இட்லி மட்டும் ஓட்டலில் சாப்பிட்டுவிட்டு வந்த கூட்டம்தான். வாழையிலை விரித்து நாலு வகை வைத்தால் பாவாடை நாடாவை தளரச்செய்து அன்று தின்னால்தான் உண்டு எனச் சாப்பிட்ட கும்பல்தான். மைசூர்பாகை வில்லை போடச்சொல்லி கேக்கென உருமாற்றிக்கொண்டு பிறந்தநாள் வாழ்த்துப் பாடியவர்கள்தான், இன்று சுவிக்கி எப்போது வருவான் எனக் காத்துக் கொண்டிருக்கிறோம். இதிலும் ஒரு அரசியல் ஒளிந்திருக்கிறது.
இன்னும் பேசுவோம்..

எழுத்து : சவிதா