வேர்களில் தொடங்கியது-6 எழுத்து : சவிதா

1 0
Spread the love
Read Time:11 Minute, 23 Second

‘அலெக்சா’ நின்னுக்கோரி வரணும்’ என்றால் பாடல் வந்து விடுகிறது. பால் பணியாரம் செய்ய பத்து நிமிடத்தில் பதினைந்து விதமான பரிந்துரைகள் வந்துவிடுகின்றன. முகநூல் கணக்கு போல யூட்யூப் சேனல்கள் முளைத்து விட்டன. எத்தனை வெளிநாடுகள், வெளியூர்கள் ‘வாழா என் வாழ்வை வாழவே’ என பறந்தாலும் கடைசியில் வீட்டில்தான் அடைக்கலம். வீடு தரும் பாதுகாப்பை வேறெங்காவது அடைந்திருக்க முடியுமா? எப்போது இல்லாவிட்டாலும் இந்த நேரத்தில் நாம் வீட்டின் அருமையை பலமாக உணர்ந்திருக் கிறோம். தலைக்கு மேல் ஒரு கூரை என்பது மிக மிக அத்தியாவசியம். குடும்ப அமைப்பில் இருப்பவர்கள் அதற்காக வாழ்நாள் முழுவதுமே கூட அதற்காக உழைக்க நேர்கிறது.

சொந்த ஊரே மறந்தாயிற்று. இதில் சொந்த வீட்டுக்கெங்கே போவது என்ற நிலைமைதான் சிறுவயதில். 25 ரூபாய் வாடகைக்கு குடியிருந்தோம். 88, 89 வாக்கில் என நினைக்கிறேன். அம்மாவின் உத்தியோகம் கிராமங்களில். பஸ் வசதி இருக்கும் கிராமத்தில் குடியேறிவிடுவோம். கிராமத்தி்ல் வாடகை வீட்டில் இருப்பது போன்ற கொடுமை வேறில்லை. எங்குமே டாய்லெட் கட்ட மாட்டார்கள். பம்பு செட் எடுக்கும்போது குளித்துக் கொள்கிறீர்களா என்பார்கள். டாய்லெட் இருக்கும் வீட்டுக்குத்தான் அலைய வேண்டும். இதுவரைக்கும் என் அம்மா தனக்காக வீடு பார்த்ததைவிட சென்னையில் இருக்கும் தன் உறவினர்கள் வந்தால் வசதியாகத் தங்குவதற்கான வீட்டையே தேர்ந்தெடுப்பார். வளர்ந்த பிறகு நான் எரிச்சலாய் சொல்வதுண்டு. நாலு நாள் வர்றவங் களுக்காக இதெல்லாம் தேவையா என.

டாய்லெட் இருக்கும் வீடுதான் வேண்டும் எனக் கேட்டுவிட்டால் அரை ஆள் உயரத்துக்குச் சுற்றுச்சுவர் கட்டி ஆழ குழிவெட்டி கருங்கல்லை போட்டுக் கொடுத்து விடுவார்கள். கதவெல்லாம் கிடையாது. தண்ணீர் சொம்புதான் அடையாளம். அது மட்டும்தான் பிரச்னை. மற்றபடி கொல்லை இருக்கும். பழ மரங்கள் இருக்கும். கடுமையான கோடையிலும் சிலுசிலுவென ஓட்டு வீடு இருக்கும்.  அதிலும் வளை ஓடுகள், சீமை ஓடுகள் என வகைகள் உண்டு. கண்ணாடி பதித்த ஓடு வெளிச்சத்துக்காக ஒன்றிரண்டை பதித்திருப்பார்கள். அண்ணாந்து பார்க்கும்போது நாம் வீடு கட்டினால்  10, 15 கண்ணாடி ஓடு வைக்கணும் என்று நினைத்துக் கொள்வேன். உடைந்த சிறு ஓட்டைகளின் வழியே ஊடுருவும் அந்தக் கதிர்களின் ஒளி ஓவியம்தான் எத்தனை அழகு. ஓட்டுச்சில்லில் தாலி கட்டிய விளையாட்டுகள் எத்தனை?  ஓட்டுச்சில்லை தூக்கி எரிந்து நொண்டி ஆடுவோமே.. ஒருமுறை ஆடிப் பார்க்க வேண்டும். மூட்டைப்பூச்சி என்று ஒரு இனம் இருந்ததே அதெல்லாம் இன்றும் இருக்கிறதா?

எங்கு போனாலும் கொல்லையில் வெந்நீர் அடுப்பு ஒன்று வைக்க இடமிருக்கும். அதில் தண்ணீர் வைக்கும்போதே யூகலிப்டஸ் இலைகள், வேப்பிலை என போட்டு ஒரே மூலிகைக் குளியல்தான். கைநிறைய வேப்பெண்ணெய் தலையில் வைத்து எரியும் அடுப்பு பக்கத்தில் வைத்து சர்ரக் சர்ரக் என தலையைச் சீவி விடுவார் பழனியம்மா அக்கா.. பள்ளியிலிருந்து அந்த வாரத்தில் சுமந்து வந்திருந்த பேனெல்லாம் அடுப்பில் படபடவென பொரியும். சமையலுக்கு மண்ணெண்ணெய் ஸ்டவ்வும், குமிட்டி அடுப்பும். கரி போட்டு ஒரு அட்டையை வைத்து விசிறினால் குமிட்டி அடுப்பு தணலாகவே இருக்கும். பருப்பு வாசம் ஊரைக் கூட்டும்.

ஸ்டவ்வில் திரி போடுவதெல்லாம் தனி கலை. பட்டைத்திரி, உருண்டைத்திரி, புனல், கேன் எல்லாம் அடுப்படியின் அத்தியாவசியங்கள். பம்பு ஸ்டவ் மண்ணெண்ணெய் குறைவாகச் செயல்படுவதற்கான குறுக்கு வழி. அதைக் குத்தி விடுவதற்கான பின்கள் தனியே கிடைக்கும். ஆரம்பிப்பதுதான் கடினம். பற்றவைத்துவிட்டால் காற்றும் தீயும் சேர்ந்து எரியும் சத்தத்துடன் ஜகஜக வென காரியங்கள் முடிந்துவிடும். கையோடு எல்லா ஊருக்கும் எடுத்துச் செல்லும் குட்டி உரல் ஒன்று. ஆபிஸ் விட்டு வந்தவுடன் அம்மா அடைக்கு போட்டு உட்கார்ந்து அரைப்பார். பின் நான் பெரியவளானபோது கூட இதையாவது செய்யேன் என எந்த வேலையையுமே அவர் எனக்குத் தந்ததில்லை.

பிறகு சற்றுத் தள்ளி தர்மபுரி வந்து சேர்ந்தோம். ஒண்டுக்குடித்தனம். முறை வாசல், முறைத் தண்ணீர் எல்லாம் முறைதான்.  முறைமாமன்கள் மட்டு மில்லை. ஒரு அந்தரங்கம் கிடையாது. போண்டா போட்டால், குழந்தையை அடித்தால், புதுப்புடவை கட்டினால், மூச்சு விட்டால் கூட அனைவரும் அறிவர். ஆனால் ஆகப் பெரும் பிரச்னை டாய்லெட் தான். இங்கு மனிதர்கள் வந்து அள்ளிப் போவார்கள்

நினைக்கையிலேயே அந்த வாழ்வை எப்படி வாழ்ந்தோம் என்பதைவிட அதைச் சுமந்தவர்களை எண்ணிப் பார்க்கையில் கூசிக் குறுக வைக்கிறது. உலகின் மிகப்பெரிய அவலம் அது. அதை எழுதும்போதே கைகள் நடுங்குகின்றன.

பிறகுதான் வீட்டை விட்டுத் தள்ளி டாய்லெட்டுகள் கட்ட ஆரம்பித்தார்கள். இன்று சற்று வளர்ந்த குழந்தைகளிடம் காலைக்கடன் பற்றிக் கேட்டால் கூட அந்தரங்கத்தில் தலையிட்டதாய் நினைத்து முகத்தைச் சுருக்குகிறார்கள். அன்று வெட்கமில்லாமல் இன்னொரு காபி கொடுக்கறயா.. இன்னும் போகவே இல்ல என்பார்கள் வயிற்றைத் தடவிக்கொண்டு.  அன்று பக்கெட் தூக்கிக்கொண்டு ஊரே பார்க்கும்படிதான் போக வேண்டும். குளியல் ரூம்களின் கதை தனி. பாசம் படிந்த தொட்டிகள். தண்ணீர் நிரப்பிய பேரல்கள், துவைப்பதற்காகப் போட்ட கருங்கல்கள், மஞ்சள் உரைக்கும் கல் என அந்த யுகமே வேறு.

சமையலறை பெரும்பாலும் ஓரத்தில் கழுவும் தொட்டியுடன் இருக்கும். சில ஒண்டுக்குடித்தனத்தில் குளிக்கும் இடம் கூட அதுதான். ஆம். அதில்தான். சமையலறையில் குடங்கள் தண்ணீர் நிரப்பப்பட்டு பெரும் பகுதியை ஆக்கிரமித்து இருக்கும். இன்று கூட வீடு சுத்தம் செய்யும் நாட்களில் வீடு மொத்தமும் சுத்தம் செய்யும் நேரமும் சமையலறை சுத்தம் செய்யும் நேரமும் ஒன்றாக இருக்கும். நாம் நம் வாழ்வை உணவுடன் வெகு இறுக்கமாகப் பிணைத்துக் கொண்டதன் வடிவம் அது. காரை போட்ட வீடுகள்தான் பெரும்பாலும். ரெட் ஆக்சைடு போட்ட வீடென்றால் கூடுதல் அழகு. பாலிஷ் போடப்படாத வாசற்படியில் கோலமிட்டு மஞ்சள் தடவி அந்தத் தரையில் மாக்கோலமிட்டு… அப்பா.. அந்தப் பெண்களிடம்தான் எத்தனை நுண்அழகியல்..

வீட்டின் முன்வாசலில் கட்டிய வருடத்தை பதிப்பார்கள். சிமெண்ட் தொட்டி ஒன்று இருக்கும். கால் அலம்பாமல் யாரும் வீட்டிற்குள் நுழைய முடியாது. காலலம்பி தண்ணீர் கொடுத்து மனைவிகளின் பெருமிதமாக அன்றைக்கு விகசிக்கும். சிரிப்புதான் வருகிறது இன்று. இரும்புக் கம்பிகளால் வராண்டா வசதியான வீட்களில் இருக்கும். பெஞ்சுகள்தான் பெரும்பாலும் உட்காரு வதற்கு. மிதியடியாக ஏதையாவது பயன்படுத்தியதாக நினைவே இல்லை. சாக்கு வேண்டுமானால் இருக்கும் மழை பெய்தால் ஒழுகும் இடங்களில் போட. சதுர சதுரமாய் சட்டமிட்ட படங்களை வீட்டுச்சுவர் முழுவதும் ஆணியடித்துத் தொங்கவிட்டிருப்போம்.

பூஜையறை தெய்வங்கள் கிடைத்த இடத்தில் வாழ்ந்து கொண்டன. சமையலறை செல்பில், தாழ்வாரத்தில் மூலையில் அடைக்கப்பட்ட ஸ்டாண்டில் ஒரு பழைய புடவையில் தைக்கப்பட்ட ஸ்க்ரீனில் தேவைப்பட்டபொழுது அதன் மறைவில் வாழப் பழகியிருந்தன. பட்டணம் வர வர வசதிகள் வர வர விச்ராந்தம் குறுகிப் போயிற்று. எவ்வளவு முடியுமோ அவ்வளவு அடைத்துக் கிடக்கிறது இன்றைய வீடு. எடுத்து எடுத்து வெளியில் போட்டும் தீரவில்லை தேவையில்லாத பொருட்களும் தேவையில்லாத மனிதர்களும். போகி ஒருநாள் போதவில்லை பழையது கழிக்க..

(இன்னும் பேசுவோம்)

எழுத்து : சவிதா

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
100 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!