வேர்களில் தொடங்கியது… |(தொடர்-3) | எழுத்து : சவீதா

2 0
Spread the love
Read Time:7 Minute, 27 Second

தண்ணீர் தண்ணீர்

எத்தனையோ அதிர்ச்சிகளில் மீளாத அதிர்ச்சியாய் மாறிப்போன ஒன்று தண்ணீரை விலை கொடுத்து வாங்குவதுதான். இத்தனைக்கும் குடிநீர் மட்டும் தான். இன்னும் புழங்க லாரி லாரியாய் தண்ணீர் வாங்க வேண்டுமானால் இன்னும் என்னென்ன புலம்புவேனோ?

என் பாட்டி முதற்கொண்டு வீட்டுப் பெரியவர்கள் அனைவருக்கும் கை தாராளம். கம்மியாய் சொப்புப் பாத்திரத்தில் குழம்பு வைக்கவே வராது. அப்புறம் தண்ணீர் பஞ்சமெல்லாம் நினைத்துக்கூடப் பார்த்ததில்லை. இப்போது நம் காலை நனைத்து ஓடுகின்ற வெள்ளம் போலத்தான். என் அப்பா விளையாட்டாய் தண்ணீர் எடுக்க கஷ்டப்பட்டுக்கொண்டு ‘அம்மாக்கும் பொண்ணுக்கும் காவேரியைத்தான் திருப்பி விடணும்’ என்பார். வாக்கு பலித்து காவிரி தண்ணீர் வீட்டுக்கே வந்து சேர்ந்தது.

அதற்குமுன் சேந்து கிணறு. வாளியோ குடமோ அவரவர் திண்தோளுக்கு ஏற்ப. குடத்தைக் கீழே போட்டு ‘நொக்கு’ விழுந்துவிடும். வீட்டுக்கு மறைக்க முயன்று தோற்று திட்டுக்களும் அடிகளும் தனி. இந்தத் தலைமுறைக்கு அந்த வார்த்தை தெரியுமா என்று தெரியவில்லை.  நொக்கெடுக்க, ஈயம் பூச ஆட்கள் சாலையில் வந்தவண்ணம் இருப்பார்கள்.

பழைய துணிகளைப் போட்டு புதிய பாத்திரங்கள் வரவு இருக்கும். போர்வெல்லில் சில சமயம் தண்ணீர் உள்ளே போய்விடும். தொடர்ந்து அடித்துக்கொண்டே இருக்க வேண்டும். சீக்கிரம் வர ஒரு குடம் தண்ணீரை அதனுள்ளேயே ஊற்றுவார் கள். மாங்காயைக்கூட அந்த போர்வெல்லின் கைப் பம்பின் நடுவே வைத்து உடைத்திருக்கிறோம்.

வாசலில் நீர் வர ஆரம்பித்த பிறகு முறை வைத்து குடத்தில் தண்ணீர் பிடிப்பது. வாசலில் இருக்கும் சிமெண்ட் தொட்டிக்கு மூன்று குடம், பாத்திரம் கழுவும் இடத்தில் உள்ள தொட்டிக்கு நான்கு குடம், பின் குளிப்பதற்கு உள்ள தொட்டியை நிரப்புவது என குடக் கணக்குப் போட்டுக்கொண்டே சுமக்க வேண்டும்.

பாசி படர்ந்து தொட்டிகளை பிளீச்சிங் பவுடர் போட்டு சுத்தம் செய்து வைக்க வேண்டும். ஏமாந்தால் புழுக்கள் வைக்கும். பின் குடிப்பதற்கு உள்ள உலோகப் பாத்திரங்கள். சாம்பலும் புளியுமாய் விளக்கி வைத்த பின் துலங்கும் முகமும் பாத்திரமும். தண்ணீர் வரும் நேரமும் நாளும் முதல் மந்திரியின் ப்ரோடா கால் போல அத்தனை ஏற்பாடுகளுடனும் தயாராய் இருக்கும்.

செம்பு அண்டா, பித்தளை போனி, கடாரம், அன்னக்கூடை, சில்வர் தவளை எனப் பெயரிட்ட பாத்திரங்களே அடுப்பங்கறையில் தண்ணீரின் ஆதிக்கத்தை சொல்லுமே. அவசரத்துக்கு அடகுக் கடைக்குப் போவதற்கு உண்டான மதிப் புடைய பாத்திரங்கள்.  தும்பா, லோட்டா, சொம்பு, குவளை என மொண்டு குடிப்பதற்கு எத்தனைப் பெயர். ‘அச்சமில்லை அச்சமில்லை’ படத்தில் ஒரு சொம்பில் காலலம்பும் கச்சிதத்துக்கு ஒரு சீன் வைத்ததுக்கே தண்ணீர் சிக்கனத்தைப் புரிந்துகொள்ள முடியும். சொம்பு நிறைய தண்ணீரை ஏந்தி நிற்க ஒரு பெண்ணாவது வேண்டாமா என்ன?

எங்களுக்கு முன் தலைமுறையில், படித்துறையில் துணி துவைத்ததும், இரண்டு பர்லாங் நடைக்கு இரண்டே குடம் கிடைத்த கதைகளும் தனி. புழங்கும் தண்ணீருக்கு படும் சிரமங்கள் இருக்கட்டும். குடிதண்ணீர்தான் பணம் விழுங்குகிறது. வாட்டர் ப்யூரிபையர்கள் அத்தியாவசியத் தேவையாகி விட்டது. முகமன் கருதி சொம்பு நிறைய தண்ணீர் நீட்டினால் ஆயிரம் விசாரணைகளுக்குப் பிறகே வாங்கிக்கொள்ளப்படுகின்றன. நேரே நடந்து டீக்கடையில் ‘குடிக்கக் கொஞ்சம் தண்ணீ கொடுங்க’ன்னு கேட்கும் சாதாரணம் எல்லாம் இன்று இல்லை.

வீட்டுப் பெரியவர்கள் நுழையும்போதே தண்ணீர்தான் கேட்பார்கள். கழுத்திலும் சட்டையிலுமாய் லேசாய் சிந்திக்கொண்ட நீருடன் அந்தப் பயணக் களைப்பை நீக்கிக்கொள்ளும் அழகே தனி. சாப்பிடும் முன் தண்ணீர் வைக்காததுதான் வீடுகளில் ஆகப் பெரும் துயரம். பெரும்பாலான பெண்கள் மறந்து விடுகிறோம். எரிச்சலில் நீங்களே எடுத்து வைத்துக்கொள்ளக் கூடாதா என்று கூடத் திட்டி விடுகிறோம். ஆனால் சாப்பிடும்முன் சொம்பு நிறைய நீர் வைப்பது என்பது குங்குமமோ, திருநீறோ இட்டுக்கொண்ட நெற்றியைப் போல ஒரு நிறைவு. சம்பிரதாயமான ஒரு தொடங்கல். சொல்வதுதான். பெரும் பாலும் மறந்துதான் போகும். 

மூலையில் மண்கொட்டி பானை வைத்து வெட்டிவேரை முடிச்சிட்டு கோடைக்காலம் முழுதும் தண்ணீருக்குக் கூட ருசி கூட்டின காலங்கள் ஆச்சரிமாயிருக்கின்றன. எத்தனையோ வசதிகள் வந்துவிட்டன. புழங்கும் பொருட்களில் நேரத்தை, சிரமத்தைக் குறைக்கும் எத்தனை பொருட்கள் வந்துவிட்டன. ஆனால் யாரிடமும் நேரமில்லை. எதற்கும் நேரம் சரியாயில்லை. பற்றாக்குறையாகவே நீண்டுகொண்டிருக்கிறது காலம். இன்னும் வீடுகளில் ப்ளாஸ்டிக் பாட்டில்களில் நீர் நிரப்பி வைக்க சண்டை போட்டுக் கொண்டிருக்கிறோம் வகையில்லாமல்.

(இன்னும் பேசுவோம்)

எழுத்து : சவீதா

Happy
Happy
50 %
Sad
Sad
0 %
Excited
Excited
50 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!