பவழமல்லியை எப்படி நினைத்துக் கொள்கிறீர்கள்? ஈரமில்லாமல் அந்தப் பூவை நம்மால் கற்பனை செய்யவே முடியாது. இரவு முழுவதும் நனைந்ததில் ஆரஞ்சு வண்ண காம்புகளோடு நினைக்கும்போதே ஒரு குளிர் பரவுகிறது இல்லையா? இப்படித்தான் நம் சிறுவயது ஞாபகங்கள் நம்மைக் குளிர்விக்கின்றன. ஏதுமறியா அந்தப் பேதை மனத்திற்கு ஏங்க வைக்கின்றன.
ஊர் எப்படி நினைவில் நிற்கிறது? எந்த ரூபத்தில்? எத்தகைய நினைவுகளின் படிமங்களில் அது நம்முள் உறைகிறது? அந்த நிலப்பரப்பு ஏற்படுத்துகின்ற பாதிப்பில் முழுகிப்போன குடும்பங்கள் எத்தனை? ஊரைத் தாண்ட முடியாது பைத்தியக்காரனின் காலில் கட்டிய சங்கிலி போல இறுக்கிக் கட்டிக் கொண் டிருக்கும் மனிதர்கள் எத்தனை?
இப்படித்தான் பேசிக்கொண்டிருந்தோம் போன வருடமெல்லாம். நிலைமை பழைய மாதிரி திரும்பிவிட்டது என்று சொல்ல முடியாதில்லையா? ஒரு ஆயுள் தண்டனைக் கைதி தன் பழைய வாழ்வுக்குத் திரும்ப முயல்வதைப் போல எனச் சொல்லலாம். அவ்வளவுதான். பாதிப்புகளடைந்த அத்தனை பேரும் நியூ நார்மல் என்ற ஒரு வார்த்தையை வைத்துக்கொண்டு நாட்களைக் கடத்த முடியாத நிலைமையிலிருக்கிறோம்.
வெள்ளத்தின் போதும் கொரோனாவின்போதும் நிறைய பேரை அடையாளம் கண்டுகொள்ள முடிந்திருந்தது. யார் நமக்கு முதல் தேவை என அடையாளம் காண முடிந்தது. காசு பற்றிக் கவலையில்லை, மனிதர்கள் எனக்கு அவசியமில்லை என்று இறுமாந்திருந்தவர்களை இரும்புக்கரம் கொண்டு விதி சுழற்றி அடித்தது. இறுகப் பற்றிக் கொள்ளும் மனிதர்களை, நேசம் பற்றிய புரிதல்களை, மேற்பூச்சு பகட்டுக்காரர்களை- அத்தனை பேரையும் அடையாளம் காட்டிவிட்டு போயிருக்கிறது.
உறவாலும் அன்பாலும் கட்டியிருந்த இழைகளை விட்டே இத்தனை தூரம் தள்ளி வந்து விட்டோம் என்பதே வெகு தாமதமாகத்தான் புரிந்திருக்கிறது. சேர்ந்து சுற்றிய பயணங்களை, பார்க்க முடியாத கடைசி முகத்தை, சத்தம் போட்டு அழக்கூட முடியாத அவலத்தை உணர்ந்த நொடியில்தான் மூப்படைந்திருக்கிறோம் நாம். உண்மையில் தலை சிலுப்பி என்றும் துணிந்தே நிற்கும் நானெல்லாம் கிளையொடியும் ஓசைக்கே நடுங்குபவளாய் மாறிவிட்டேன்.
Exposure- இதற்கு சரியான தமிழ் வார்த்தை தேடுவதைவிட இது இல்லாமல் போனது எத்தனை வேதனை. நம் குழந்தைகளின் விளையாட்டுச் சத்தமும், பள்ளிப் பரபரப்புகளோ யூனிபார்ம் துவைக்கத் தேவையிருக்காத ஆன்லைன் க்ளாஸ்களோ சற்றும் உவப்பாயிருக்கவில்லை.
4 மணி பெல் அடித்ததும் ‘ஓ‘வென கத்திக்கொண்டு புத்தகப்பை சுமந்து பள்ளிக்கூட மதிற்சுவரை ஓடிக் கடக்கும் நம் தலைமுறைக் களிப்பெல்லாம் நம் பிள்ளை களுக்கு வாய்க்கவே இல்லை. கீற்று போட்ட மாங்காய், கலாக்காய் என எத்தனை புளிப்புப் பண்டங்கள். ஒருத்தி கையிலேயே மிளகாய்த்தூள்+உப்பு கலவையைக் கொட்டிக்கொண்டு குழுவாய் நின்று எச்சிலே பார்க்காமல் தொட்டுச் சாப்பிட்டுக் கொண்டு… கழுவாமல் கண்ணைத் தேய்த்துக்கொண்டு விட்டேன் ஒருமுறை. அத்தனை பேருமே பதறியதும் அந்தக் கண்சிவப்பும் அப்போதும் விடாமல் சாப்பிட்ட மாங்காய்த் துண்டும் நம் பால்யத்தை எத்தனை உயிர்ப்பாய் வைத்துக் கொண்டிருந்தன?
உடைந்த ஓட்டுச் சில்லை வைத்துக்கொண்டு நொண்டி ஆடுவோமில்லை, அந்தச் சதுரங்களைத் தாண்டிய பெருமிதம் என்றேனும் நம் தீபாவளி போனஸ் பணம் பார்த்து வந்திருக்கிறதா நமக்கு? ஓட்டு வீடுகளைப் பார்ப்பதே அபூர்வமாகி விட்டது. கண்ணாடி ஓடு ஒன்றைப் பதித்திருப்பார்கள் வெளிச்சத்திற்காக. விட்டத்தை வெறிக்கும்போதெல்லாம் பெரியவளான பின் வீடு கட்டும்போது 10, 15 கண்ணாடி ஓடுகள் பதித்து வீட்டை வெளிச்சமாக்கி வைத்துக்கொள்ள வேண்டும் என நினைத்துக் கொண்டதுண்டு.
சீமை ஓடுகள் கூட அங்கங்கே காணப் படுகிறது. மெலிந்த வளை ஓடுகளான நாட்டு ஓடுகள் பாழடைந்துபோன வீடுகளில் மட்டுமே இருக்கிறது. சில்லு சில்லாய் சிதைந்து போன நம் அப்பாவித்தனங்களை நினைவுபடுத்தியபடி.
விட்டத்தை வெறிக்காதே என எப்போதும் திட்டுவாள் சித்தி. பயங்கர கனவென்று மறுநாள் சொன்னால் தூலத்துக்கு அடியில் படுக்காதே என்பார்கள். தூங்குபவர் களை எழுப்ப, நள்ளிரவில் திருட, ஓட்டு வீடு வெகு வசதி. ஆன்டெனா ஞாபக மிருக்கிறதா? சரியான திசையில் வைத்து கீழே வந்து பூஸ்டரை சரிசெய்து மிகத் துல்லியமான பட உருவாக்கத்தில் வயலும் வாழ்வும், ஒலியும் ஒளியும் எல்லாம் பார்த்தது தவப்பயன். அதில் முதலில் அடிவாங்குவது ஓடுகள்தான். ஏறி ஏறி ஓடுகளை உடைத்துவிட்டு பெரியவர்களிடம் திட்டு வாங்குவோம்.
மரச்சட்டத்தில் பதிக்கப்பட்ட இரும்புக் கம்பிகளாலான சன்னல், கதவின் கீழ்பக்கம் டிசைனுக்காகப் பொருத்தப்பட்ட மரத்தில் ஏறி நின்றுகொண்டு ஆடும் ரயில் ஆட்டம், பார்த்தீனிய பூவை பிய்த்து மூக்குத்தி என வைத்துக்கொள்ளும் அழகியல், செங்கொன்றை பூக்களை பூதத்தின் நகங்கள் போல ஒட்டிக் கொண்டது… ஞாபமிருக்கிறதா? மேல் இமையை லேசாக மடக்கி சிவந்த சதைப் பாகம் தெரியுமாறு நம்மில் இளையவர்களைப் பயப்படுத்துவோமே?
பின்னாலிருக்கும் புழக்கடையில் பாதம் மண்பட சிலிர்க்கும், மழை வந்தால் வழுக்கும். பெண் பிள்ளைகளை உட்கார வைத்து தலையைச் சுத்தம் செய்து கொண்டே பாட்டிகளிடம் ரகசியம் பகிர வைக்கும். கிணற்றில் சேந்துவதற்கு ஒவ்வொரு வீட்டிலும் இரும்புத் தோண்டியும், எவர்சில்வர் குடங்களுமென தகுதிக்கேற்ப, சேந்தும் திறத்திற்கேற்ப இருக்கும். என்றேனும் பாதாளச்சங்கிலி யில் மாட்டுவதற்கென கிணற்றுக்குள் சில முக்கியப் பொருட்கள் தவமிருக்கும். இன்றைக்கு மனக்கிணற்றில் எடுத்துப்போட அத்தனை அவசங்கள் இருக்கின்றன. பாதாளச்சங்கிலியைத்தான் தொலைத்துவிட்டிருக்கிறோம்.
(இன்னும் பேசுவோம்.)
எழுத்து : சவிதா
நீங்கள் எழுதுவதைப் படிக்கும் பொழுதெல்லாம் ஊரின் பழைய நினைவுகள் வந்து வந்து போகிறது.