மறைந்த நமது முன்னோர்கள் மொத்தமாக ஒருசேரக் கூடும் காலமே மகாளய பட்சம். பட்சம் என்றால், 15 நாட்கள் என்பது பொருள். அதாவது மறைந்த நமது முன்னோர்கள், 15 நாட்கள் நம்மோடு தங்கக்கூடிய காலங்களை மகாளய பட்சம் என்று கூறுகிறோம். புரட்டாசியில் வரும் அமாவாசையே மகாளய அமாவாசை.
நம் முன்னோர்களுக்கு விருப்பமான இடம் அவர்களின் சந்ததிகள் வசிக்கும் வீடுதானே. எனவேதான் அவர்கள் மஹாளய பட்சமான பதினைந்து நாட்களும் நம் இல்லத்திற்கு நம்மை காண வருகிறார்கள் என்பது நம்பிக்கை. இந்த பதினைந்து நாட்களும் நம் வசிப்பிடத்தை சுத்தமாக வைத்திருந்து நம் முன்னோர்களை வணங்கி வந்தால் நம் வாழ்க்கை வறுமை நீங்கி விருத்தியடையும். ஆனால் வீடற்ற ஆதரவற்றவர்களுக்கு யார் திதி வழங்குவது? அப்படி ஆதரவற்று இறந்த 3000 பேர்களுக்கு திதி கொடுத்திருக்கிறார் நாகையைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (64) என்பவர்.
இவர் சாதி, மதம் பாராமல் கடந்த 2012-ம் ஆண்டு முதல் ஆதரவற்றோர் இறந்தால் அவர்களுக்கு இறுதிச் சடங்கு செய்துவருகிறார். இவரது தன்னலமற்ற சேவையில் முதியவர்கள் பெண்கள் குழந்தைகள் என 3,000க்கும் மேற்பட்ட உடல்களுக்கு இறுதிச்சடங்கு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் நாளை செப்டம்பர் 25-ம் தேதி மகாளய அமாவாசை வருவதோடு அதற்கு முந்தைய 15 நாட்கள் மகாளய பட்சம் என்பதால், தான் அடக்கம் செய்த 3,000க்கும் மேற்பட்ட முன்னோர்களுக்கு உறவாக இருந்து ஒரே இடத்தில் திதி அளிக்க ராஜேந்திரன் முடிவு செய்தார்.
சமூக சேவகர் ராஜேந்திரன் மகாளய பட்சத்தை முன்னிட்டு, ஒரே இடத்தில் ஐதீக முறைப்படி, ‘திதி’ அளித்த நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. அதன்படி, நாகை புதிய கடற்கரையில், ஐதீக முறைப்படி குடும்பத்தினருடன் திதி அளித்தார்.
மனித நேயத்திற்கு எடுத்துக்காட்டாக இருந்துவரும் ராஜேந்திரனின் இந்தச் செயல், பொதுமக்கள் மத்தியில் வியப்பை மட்டுமல்ல நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து ராஜேந்திரன் கூறுகையில், அனாதை உடல்களை அடக்கம் செய்யும்போது எந்தவித சம்பிரதாயமும் இன்றி மண்ணில் புதைப்பது தன்னை வெகுவாக பாதித்ததாகவும் பூவுலகில் உயிரிழந்த மனிதர்களுக்கு மரியாதையுடன் அடக்கம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் தனக்கு மேலோங்கி வந்தது தான் இதற்குக் காரணம்” என்றார்.
“பித்ருலோகத்தில் இருக்கும் முன்னோர்கள் மகாளயபட்ச நாட்களில் பூ உலகத்திற்கு வருவார்கள். ஆத்மாக்களுக்கு அவரது உறவினர்கள் திதி அளித்து ஆத்மாக்களை புண்ணியம் அடைய வைப்பார்கள். ஆதரவற்ற நிலையில் மறைந்த ஆத்மாக்களும் வந்து உறவுகள் இல்லாததால், அந்த ஆத்மாக்கள் ஏமாற்றத்துடன் திரும்பும் என்பதால், ஆதரவற்ற ஆத்மாக்களுக்கும் நானே உறவு என்ற முறையில் நிழலாக நின்று 3,000க்கும் மேற்பட்ட நபர்களின் புகைப்படங்களை வைத்து ஐதீக முறைப்படி தர்ப்பணம் அளித்துள்ளது தனக்கு மன நிறைவை ஏற்படுத்தி உள்ளது” என்றார் ராஜேந்திரன்.