உசிலம்பட்டி அருகே சுமார் 300 ஆண்டுகள் பழமையான சிவன் கோவிலை கிராம மக்கள் கண்டுபிடித்துள்ளனர். கோவில் வரலாறு தெரிய தொல்லியல் துறை ஆய்வு நடத்த வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ளது தொட்டப்பநாயக்கனூர் கிராமம். இக்கிராமத்தின் விலக்கில் காட்டுப்பகுதிக்குள் பழமையான கோவில் சிதிலமடைந்த நிலையில் புதர்மண்டி காணப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் ஜமீன் காலத்து கட்டடம் என நினைத்தவர்கள் அதனைக் கண்டுகொள்ளவில்லை. தற்போது இக்கிராம இளைஞர்கள் அதன் அருகில் சென்று ஆராய்ந்தபோது அது மிகவும் பழமையான சிவன் கோவில் என்பது தெரியவந்தது.https://youtu.be/suYyvLxGWbk
இதனையடுத்து கிராம ஊராட்சி மன்றத் தலைவர் பாலமுருகன் உதவியுடன் கிராம மக்கள் கோவிலைச் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். இக் கோவில் வெளிப்புறச் சுவரில் பெண் தெய்வம் யானையின் வயிற்றைக் கிழித்து வெளியே வருவது போன்றதும் காளி ருத்ரதாண்டவம் ஆடுவது போன்றும் பாம்பு கீரி பக்கத்தில் ஒருவர் மகுடி ஊதுவது போன்றும் கலைநயமிக்க சிற்பங்கள் கோவில் சுவரில் உள்ளது.
மேலும் கோவில் கருவறைப் பகுதி முற்றிலும் மண்ணால் மூடியுள்ளது. அங்கு சிவலிங்கம் இருப்பதற்கான அடையாளங்கள் இருப்பதால் இது சிவன் கோவிலாக இருக்கலாம் என கிராமமக்கள் தெரிவித்தனர். இக்கோவில் கட்டப்பட்டு சுமார் 200 முதல் 300 ஆண்டுகள் வரை இருக்கலாமென்றும் பாண்டிய, சோழ மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்டதா என்பது குறித்து தொல்லியல் துறை ஆய்வு நடத்தி இக்கோவில் வரலாற்றை வெளிக்கொண்டு வர வேண்டும் என்று அரசுக்கு தொட்டப்பநாயக்கனூர் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.