மகாளபட்சம் என்பது ஆவணி மாதம் பௌர்ணமிக்கு மறுநாள், பிரதமை திதியில் தொடங்கி புரட்டாசி மாதம் அமாவாசை வரை நீடிக்கும். இறந்த வர்களின் ஆன்மாக்கள் பித்ரு லோகத்தில் இருந்து எமதர்மராஜனின் அனுமதி யோடு பூலோகத்திற்கு வந்து தனது சந்ததியினரையும், தெரிந்தவர்களையும் காண வரும் காலமே இந்த மகாளய பட்சம் என்று சொல்லப்படுகிறது.
பட்சம் என்ற சொல்லுக்கு 15 என்று பொருள். ஒரு அமாவாசை தொடங்கி பௌர்ணமி வரையிலான 15 நாட்கள் 15 திதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. திதி என்பதற்கு சூரியனுக்கும், சந்திரனுக்கும் இடைப்பட்ட தூரம் என்று பொருள். அமாவாசையன்று, சூரியனும் சந்திரனும் இணைந்து இருப்பார்கள். பிரதமை, துவிதியை, திருதியை, சதுர்த்தி, பஞ்சமி, சஷ்டி, சப்தமி, அஷ்டமி, நவமி, தசமி, ஏகாதசி, துவாதசி, திரயோதசி, சதுர்த்தசி, பௌர்ணமி என்ற 15 நாட்கள் சுக்லபட்சம் என்றும், பௌர்ணமிக்கு அடுத்த நாள் பிரதமை தொடங்கி அமாவாசை வரையிலான 15 நாட்கள் கிருஷ்ணபட்சம் என்றும் கூறப்படு கின்றது.
ஜோதிடத்தில் பித்ரு தோஷமும் நிவர்த்தியும்
ஜோதிடத்தில் ஒருவருக்கு நல்ல தசாபுத்திகள் நடைபெற்றாலும், வாழ்வில் சில தடங்கல்கள் ஏற்படும். இதனால், வெற்றி பெறுவது எளிதாக இருக்காது. மேலும், குழந்தைகளின் கல்வி, முன்னேற்றம், திருமணம், புத்திரபாக்கியம் ஆகியவற்றிற்கு ஏற்படும் தாமதங்களுக்கு குலதெய்வ வழிபாடு இல்லாததும், பித்ருக்களுக்குச் செய்யவேண்டிய கடமைகளை விடுபட்டதும் முக்கிய காரண மாக அமைந்துவிடுகின்றது.
பித்ருக்களை சந்தோஷப்படுத்தும் அமாவாசை வழிபாடு
ஒவ்வொரு மாதமும் அமாவாசை நாளில், பித்ருக்களுக்கு எள், தண்ணீர் இறைத்து வழிபாடு செய்யும் திலதர்ப்பணம் அளிப்பது முன்னோர்களின் ஆசியைப் பெற்றுத்தரும் எளிய வழிபாடு ஆகும். இவற்றில் சிறப்பாக, சூரியன் தெற்கு நோக்கிப் பயணத்தை தொடங்கும் ஆடி அமாவாசை மற்றும் வடக்கு நோக்கிப் பயணத்தை தொடங்கும் தை அமாவாசை ஆகிய நாட்கள் மிகவும் விஷேசமாகும்.
ஆவணி மாதப் பெளர்ணமிக்கு அடுத்த நாள் தொடங்கி புரட்டாசி மாத அமாவாசை வரையிலான 15 நாட்கள் மகாளயபட்சம் என்று கூறப்படுகின்றது. இந்த 15 நாட்களும் பித்ரு வழிபாட்டிற்கு உகந்த நாட்களாகும். மகாளயபட்ச காலத்தில் நம் முன்னோர்களுக்குத் தர்ப்பணம் செய்ய வேண்டும். இந்நாளில் தீர்த்த தலங்களுக்குச் சென்று எள், தண்ணீர் இறைத்து, அவர்களது தாகம் தீர்க்க வேண்டும். இந்தக் காலகட்டத்தில் வரும் பரணி மஹாபரணி என்றும், அஷ்டமி மத்யாஷ்டமி என்றும், திரயோதசி கஜச்சாயை என்றும் கூறப்படு கிறது. மாதந்தோறும் முன்னோர்களுக்குத் தானம் செய்ய முடியாதவர்கள் இந்தக் காலத்தில் தானங்களைச் செய்வதால் 12 மாதங்களிலும் தானம் செய்த பலன் கிடைக்கும்.
பதினைந்தாம் நாள் (25 செப்டம்பர்) மகாளய அமாவாசை திதிக்கு முன் சொன்ன அத்தனை பலன்களும் நம்மைச் சேர முன்னோர் ஆசி வழங்குதல்.
வழிபாடு செய்வது எப்படி?
இந்த நாட்களில் ராமேஸ்வரம், கன்னியாகுமரி, தனுஷ்கோடி, வேதாரண்யம், கோடியக்கரை, காவிரி ஆறு உள்ளிட்ட புனித இடங்களில் நம் முன்னோர் களுக்குத் தர்ப்பணம் செய்தால் வாழையடி வாழையாக நம் வம்சம் தழைத் தோங்கும். நம் முன்வினை பாவங்கள் நீங்கி, பித்ருக்களின் ஆசியால் வளமும், மன நிம்மதியும் கிடைக்கும்.
புண்ணிய தீர்த்தங்கள், ஆலயங்களில் வேதியர்கள் உதவி கொண்டு திதி அளிக்கலாம். அவ்வாறு செய்ய வசதி இல்லாதவர்கள் வீட்டிலேயே எளிய முறையில் முன்னோர்களை நினைத்து, கிழக்கு நோக்கி ஆசனத்தில் அமர்ந்து, ஒரு தாம்பாளத்தில் எள், தண்ணீரை இறைத்து, அதனை கால் படாமல், நீர்நிலைகள் அல்லது அரச மரத்தில் சேர்க்கலாம்.
இந்தக் காலகட்டத்தில் பசுக்களுக்கு அகத்திக்கீரை அளிப்பதும், ஏழை எளிய வர்களுக்கு வஸ்திரம், செருப்பு, குடைகள் தானமாக அளிப்பதும், பிராமணர் களின் உணவிற்குச் செலவழிப்பதும், காகங்களுக்கு உணவு அளிப்பதும் நல்ல பலனை தரும்.
தமிழகத்தில் ஆறுகள் மேற்கில் இருந்து கிழக்காக ஓடிக்கொண்டிருக்கும், சில இடங்களில், தெற்கில் இருந்து வடக்கு நோக்கி ஓடும். இதற்கு உத்திரவாகிணி என்று பெயர். அத்தகைய இடங்களில் முன்னோர்களுக்கு வழிபாடு செய்வது மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்றாகும்.
பித்ருக்கள் ஆசியும் வாழ்க்கை வளமும்
மஹாளயபட்சம் காலத்தில் முன்னோர்களை வழிபடுவதன் மூலம் புத்திர பாக்கியம், ஞானம், கல்வி, சத்ரு ஜயம், சுக சம்பத்துக்கள் ஆகியவை கிடைக்கும்.
குடும்பத்தில் சண்டை, சச்சரவு, திருமண தடை, திருமண முறிவு, துர் மரணங்கள், குழந்தை இன்மை, கடன் தொல்லை, சந்தோசம் இல்லாமை, போன்றவைகள் வருவதற்கு முக்கிய காரணமே. பித்ருக்களின் தோஷமும், சாபமும்தான் இதிலிருந்து விடுபட வருகின்ற மகாளய பட்சம் அமாவாசை யில் பித்ருக்களுக்கு எள் தர்பணங்கள் செய்து, ஒருவருக்கு அன்னதானம் செய்து, காகத்திற்கு எள் சாதம் வைத்து பித்ருக்களை வணங்க எல்லாம் வளங்களும் பெற்று சந்தோசமாக வாழலாம்.
- ஜோதிஷவாசஸ்பதி
- தி.சுந்தரமூர்த்தி, மயிலாடுதுறை