சரஸ்வதி பூஜையின் தனிச்சிறப்பு

0 0
Spread the love
Read Time:7 Minute, 52 Second

கல்விக்கு முதன்மை தெய்வமாகச் சிறந்து விளங்கும் கலைவாணியை ஆண்டுதோறும் சரஸ்வதி பூஜையாக வணங்கிவருகிறோம். நவராத்திரி விழாவின் ஒன்பதாவது நாளை சரஸ்வதி பூஜையாகக் கொண்டாடு கிறோம். அதை முன்னிட்டு ஒன்பது நாட்கள் வீடுகள் தோறும் கொலு வைத்து சொந்தம் பந்தங்களை அழைத்து சரஸ்வதி தேவிக்கு பூஜை செய்து வணங்குவார்கள். இந்த நாளில் கொலு வைத்தவர்கள், வைக்காதவர்கள் என அனைவரும் சரஸ்வதி தேவியை வழிபட வேண்டும். தமிழகத்தில் இந்த ஆண்டு செவ்வாய், புதன் கிழமைகளில் சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை கொண்டாடப்படுகிறது.

ஆயகலைகள் அனைத்திற்கும் தலைவியான சரஸ்வதி தேவியே, கல்வி செல்வத்திற்கும் அதிபதியாகவும் அதிதேவதையாகவும் விளங்குபவள். கலைமகள், வாணி, பாரதி, காயத்ரி, வாகீஸ்வரி, சகலகலாவல்லி, நான்முகன் நாயகி எனப் பல்வேறு திருப்பெயர்களால் போற்றப்படுபவள் சரஸ்வதிதேவி, சைவ, வைணவ அடியார்கள் மட்டுமின்றி ஜெயின் மற்றும் புத்த சமய மக்களாளாலும் வழிபடப்படுகிறவள் சரஸ்வதி தேவி.

வித்யா, சின்மயி, ஞானவல்லி, ஞானக்கொடி, ஞானக்கொழுந்து, ஞானப்பிராட்டி, நாமடந்தை, நாவேறு செல்வி, நாவுக்கரசி, நாமிசைக்கிழத்தி, கலைமகள், வாக்கின் செல்வி, வாக்குதேவி, வாக்கு வாதினி, அன்னவாகினி, சொல் மங்கை, சொல்லிருங்கிழத்தி எனப் பல நாமங்கள் சரஸ்வதிக்கு இட்டு அழைக்கப்படுகிறாள்.

விஜயதசமி நாளில் படிப்பைத் தொடங்கினால் குழந்தைகள் வாழ்வில் வெற்றி பெறுவார்கள் என்பது நம்பிக்கை. இதனால் அன்று கோயில்களில், குழந்தைகளைத் தமிழின் முதல் எழுத்தான ‘அ’என்ற எழுத்தை விரலைப் பிடித்து எழுதச் செய்து அகரம் பழக்கும் நிகழ்ச்சி நடைபெறும். அதன்பிறகு, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளைப் பள்ளியில் சேர்ப்பார்கள்.

கல்வி அறிவைத் தந்து நம்மை வல்லவர்களாக்கும் சக்தி படைத்தவள் சரஸ்வதி. கல்விக்கு அதிபதியான சரஸ்வதி தேவியையும், நம் தொழிலுக்கும், ஜீவனத்திற்கும் துணை புரியும் கருவிகளையும் பூஜை செய்து வணங்கும் நாள்தான் ஆயுத பூஜை.

விஜயதசமி அன்று, மாணவர்கள் முன்தினம் பூஜையில் வைத்த புத்தகத்தை எடுத்து, சரஸ்வதியின் அருள் பரிபூரணமாக அமையட்டும் என்று பிரார்த்தனை செய்துவிட்டு படிக்கவேண்டும். அதேபோல் தொழில் கருவிகளை எடுத்து வைத்து, தொழில் சிறப்பான முறையில் மேன்மையடைய பிரார்த்தனை செய்து அன்றைய தொழிலைத் தொடங்க வேண்டும்.

ஆயுதபூஜைக்கான காரணம்

கொடூரச் செயல்புரிந்த அரக்கன் மகிஷாசுரனை எட்டு நாட்கள் கடுமையான போருக்குப் பிறகு துர்கா தேவி கொன்றாள். அசுரனைக் கொன்ற பிறகு, தேவியின் ஆயுதங்கள் பூஜைக்காக வைக்கப்பட்டன. இதை நினைவுகூரும் வகையில், மக்கள் இந்நாளில் தங்கள் அன்றாட வாழ்க்கைக்குப் பயன்படுத்தும் கருவிகளை  வழிபடுகின்றனர். பல இடங்களில், குறிப்பாக தென்னிந்தியாவில் இது சரஸ்வதி பூஜையாகவும் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் தினசரி நம் வாழ்வில் பயன்படுத்தும் சிறிய கத்தி, கரண்டி, வாகனங்கள் உட்பட அனைத்து கருவிகளையும் கழுவி, சுத்தம் செய்து சந்தனம், குங்குமம், விபூதி இட்டு, பொரி, அவல், சுண்டல் செய்துவைத்து மலர்களால் அலங்கரித்து வழிபட வேண்டும். அலுவலகங்களிலும் அதேபோல் பொரி கடலை அவல் சுண்டல் வைத்து இயந்திரங்களுக்கு மரியாதை செய்யப்படுகிறது.

அதேபோல் இன்று நாம் ஏதாவது கலையைக் கற்றுக் கொண்டிருந்தால் அதைக் கற்றுத் தரும் குருவிற்கு நிச்சயம் மரியாதை செலுத்த வேண்டும். அப்படி குருமார்கள் அருகில் இருந்தால், ஏதாவது பொருள் வாங்கிக் கொடுத்தும், அவர்களிடம் ஆசிர்வாதம் பெற வேண்டும். குருவை நாம் மதித்து, மரியாதை செலுத்துவதால் குருவின் அருளுடன் சேர்த்து, தெய்வத்தின் அருளும் நமக்கு நிச்சயம் கிடைக்கும்.

திருவாரூர் மாவட்டம் கூத்தனூர் அருகே உள்ள பூந்தோட்டத்தில் கூத்தனூர் சரஸ்வதி ஆலயம் உள்ளது. இது தமிழகத்திலேயே சரஸ்வதிக்கென்றே உள்ள தனிக்கோயில். இக்கோவிலில் சரஸ்வதி பூஜை அன்று அம்பிகையின் பாதங்களில் பக்தர்கள் மலரிட்டு அர்ச்சனை செய்யலாம். அன்றைய தினம் காலை சரஸ்வதி தேவிக்கு, ருத்ராபிஷேகம் நடைபெறும்.

வேலூரில் இருந்து பிரித்து தனி மாவட்டமாக உருவாக்கப்பட்ட திருப்பத்தூர் மாவட்டத் தில் உள்ளது, வாணியம்பாடி. இங்குள்ள அதிதீஸ்வரர் கோவிலில், சரஸ்வதிக்குத் தனிச் சன்னிதி அமைந்துள்ளது. பிரம்மதேவனின் சாபத்தால் பேசும் தன்மையை இழந்தாள், சரஸ்வதி. அந்த சாபம் நீங்குவதற்காக, இத்தலம் வந்த சரஸ்வதி தேவி, ஆலயத்தில் அருளும் பெரியநாயகி அம்மனையும், அதிதீஸ்வரரையும் வணங்கி சாபம் நீங்கப் பெற்றாள். இறைவனை நினைத்து சரஸ்வதி இசை மீட்டிப் பாடிய தலம் என்பதால் இந்த ஊருக்கு ‘வாணியம்பாடி’ என்ற பெயர் வந்தது. கோவிலுக்குள் தனிச் சன்னிதியில் வீணை ஏந்திய வாணி அருள்பாலிக்கிறார்.

திருவாரூர் தியாகராஜர் சரஸ்வதி தேவி

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில் அருள்பாலிக்கும் சரஸ்வதிக்கு, கையில் வீணை இருக்காது. இத்தல அம்பிகையின் பெயர் ‘யாழைப் பழித்த மொழியம்மை’. அன்னையின் குரல் தன்னுடைய யாழை விட இனிமையானதாக இருந்த காரணத்தால், இங்குள்ள சரஸ்வதிதேவி தன்னுடைய கையில் வீணை இல்லாமல் அமர்ந்திருக்கிறாள். அதேபோல் திருவாரூர் தியாகராஜர் கோயிலிலும் வீணை கையில் ஏந்தாத சரஸ்வதி தேவி தனிச் சந்நிதியில் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!