சதுரகிரி சுந்தரமகாலிங்க சுவாமி திருக்கோவில் வரலாறு

2 0
Spread the love
Read Time:19 Minute, 57 Second

திசைக்கு நான்கு (கிரி) மலைகள் வீதம் பதினாறு மலைகள் சதுரமாக அமைந்த காரணத்தால் இம்மலை சதுரகிரி என்று பெயர் பெற்றது. மலையின் பரப்பளவு 64 ஆயிரம் ஏக்கர்.

சதுரகிரி சுந்தரமகாலிங்கம் மலைக்கோயில் எதிரில் உள்ள மலைப்பகுதியில் அமைந்துள்ளது சந்தன மகாலிங்கம் கோயில். பதினெண் சித்தர்களின் தலைமை பீடமாக சந்தனமகாலிங்கம் கோயில் விளங்குகிறது. இக்கோயில் வளாகத்தில் பார்வதி சந்தனமகாதேவியாகத் தனியாக்க காட்சியளிக்கிறார். ஆடி அமாவாசை நாளில் லட்சக்கணக்கான பக்தர்கள் சந்தனமகாலிங்கத்தை வழிபட வருவார்கள்.  இக்கோயில் வளாகத்தில் சட்டமுனியின் குகை மற்றும் பதினெண் சித்தர்கள், சனி பகவான், முருகன் மற்றும் விநாயகருக்குத் தனித்தனி சன்னதிகள் உள்ளன.

இங்கு சுந்தர மகாலிங்கம் சுயம்பு மூர்த்தியாக, சற்று சாய்ந்த நிலையில் அருள்பாலிக்கிறார். சுவாமிக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம். திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விளங்க இறைவனை பிரார்த்திக்கலாம். இங்குள்ள மலை மூலிகைகளும் அருவி நீரும் நோய்களை தீர்க்கவல்லவை.

சதுரகிரி மலையில் எல்லாவித மூலிகைகளும், மரங்களும், விலங்கினங்களும், பறக்கும் பாம்பு முதல் அனைத்துப் பறவையினங்களும் வாழ்கின்றன. கைலாயத்தில் சிவன் பார்வதி திருமணம் நடந்தபோது, அகத்தியர் தெற்கே வந்தார். அவர் சதுரகிரியில் தங்கி லிங்க வழிபாடு செய்தார். அவர் அமைத்த லிங்கமே சுந்தரமூர்த்தி லிங்கம்.

சதுரகிரியில் அகத்தியர் தங்கியிருந்த குன்றை கும்பமலை என்கின்றனர். அகத்தியர் பூஜித்த லிங்கத்தை சுத்தரானந்த சித்தர் பூஜித்து வந்தார். இதனாலேயே இந்த லிங்கம் சுந்தரமூர்த்தி லிங்கம் எனப்படுகிறது.

அருளை வழங்குவது சுந்தரமகாலிங்கம், பொருளை வழங்குவது சுந்தரமூர்த்தி லிங்கம் எனக் கூறுவர். சதுரகிரி கோயிலின் நுழைவுப் பகுதியில் இந்த லிங்கம் இருக்கிறது. இரவு 12 மணியளவில் இந்தச் சன்னதி அருகே யாரும் செல்வதில்லை. அப்போது, சித்தர்கள் அவரைத் தரிசிக்க வருவதாக ஐதீகம்.

சதுரகிரி மலையில் ஓடுகின்ற தீர்த்தங்களும், மூலிகைகளும் பல நோய்களை தீர்க்க வல்லது. இந்த மலை ஏறி இறங்கினால் உடலில் உள்ள வியர்வை வெளியேறி, மூலிகை கலந்த காற்று பட்டு பல நோய்கள் குணமாவதாகச் சொல்கிறார்கள்.

சித்த மருத்துவர்கள் பலர் மூலிகைகளை இங்கிருந்து சேகரித்துச் செல்கின்றனர். மகாலிங்கம் கோயிலிலிருந்து சாப்டூர் செல்லும் வழியில் உள்ள குளிராட்டி பொய்கையில் நீர் வற்றாது. இதில் குளித்தால் கிரக தோஷம் விலகும் என்பது நம்பிக்கை.

சுந்தர மகாலிங்கம் கோயிலிலிருந்து சற்று மேடான பகுதியில் சந்தன மகாலிங்கம் கோயில் அமைந்துள்ளது.

பிருங்கி மகரிஷி சிவனை மட்டும் வழிபட்டு, சக்தியைக் கவனிக்காமல் போய் விடுவார். எனவே, சிவனுடன் ஒன்றாக இணைந்திருக்க வேண்டி, அவர் உடலில் பாதியைக் கேட்டு, பூலோகம் வந்து சதுரகிரி மலையில் லிங்க பூஜை செய்தாள் பார்வதி தேவி. தினமும் சந்தன அபிஷேகம் செய்தாள்.

மகிழ்ந்த சிவன் பார்வதியைத் தன்னுடன் இணைத்து அர்த்தநாரீஸ்வரர் ஆனார் என தல வரலாறு கூறுகிறது. பார்வதி தான் அமைத்த லிங்கத்திற்கு அபிஷேகம் செய்ய ஆகாய கங்கையை வரவழைத்தாள்.

இங்குள்ள சந்தன மாரியம்மன் சன்னதி அருகில் ஓடும் தீர்த்தத்தால் சந்தன மகாலிங்கத்திற்கு அபிஷேகம் செய்கின்றனர். பார்வதி பூஜித்த சந்தன மகாலிங்கத்தை, சட்டைநாத சித்தர் பூஜித்து வந்தார்.

மகாசிவராத்திரியன்று பக்தர்களே சந்தன மகாலிங்கத்தின் மீது பூத்தூவி வழிபடுகின்றனர். இக்கோயிலில் சந்தன மகாலிங்கம், சந்தன விநாயகர், சந்தன முருகன், சந்தன மாரி என எல்லாமே சந்தன மயம்தான்.

18 சித்தர்களுக்கும் சிலை உள்ளது. செண்பகப்பூவை காயவைத்து வாசனைக்காக விபூதியில் கலந்து கொடுக்கிறார்கள். இங்கிருந்து ஒரு கி.மீ. தூரத்தில் வனகாளி கோயில் உள்ளது.

சிவனைப்போலவே அம்மனும் இங்கு நிரந்தரமாக தங்கி அருள்பாலிக்க வேண்டும் என விரும்பிய சித்தர்கள் நவராத்திரி நாட்களில் கடுமையாக தவம் இருந்தனர். இதை ஆனந்தமாக ஏற்ற அம்மன் ஆனந்தவல்லி என்ற திருநாமத்தில் லிங்கவடிவில் எழுந்தருளினாள்.

சுந்தரமகாலிங்கம் சன்னதிக்குப் பின்புறம் இவளது சன்னதி உள்ளது. நவராத்திரி நாட்களில் உற்சவ அம்மனின் பவனி நடக்கும். விஜயதசமியன்று அம்மனுக்கு மகிஷாசுரமர்த்தினி அலங்காரம் செய்து பரிவேட்டை நடக்கிறது.

சதுரகிரி மலை அடிவாரத்திலுள்ள கோட்டையூரில் பிறந்தவன் பச்சைமால். இவன் பசுக்களை மேய்த்து பிழைத்தான். இவனது பெற்றோர் தில்லைக்கோன் – திலகமதி. மனைவி சடைமங்கை. இவள் மாமனார் வீட்டில் பாலைக் கொடுத்துவிட்டு வருவாள். ஒருமுறை, பால் கொண்டு சென்றபோது எதிரில் வந்த துறவி அவளிடம் குடிக்க பால் கேட்டார். சடைமங்கையும் கொடுக்கவே, தினமும் தனக்குப் பால் தரும்படி கேட்டார். சடைமங்கையும் ஒப்புக் கொண்டாள். வழக்கத்தைவிட சற்று பால் குறைவதைக் கவனித்த சடைமங்கையின் மாமனார், இதுபற்றி மகன் பச்சைமாலுக்குத் தெரிவித்து விட்டார்.

பச்சைமால் தனது மனைவியை பின் தொடர்ந்து சென்று, அவள் துறவிக்குப் பால் தந்ததை அறிந்து கோபம் கொண்டு அடித்தான். தனக்குப் பால் கொடுத்ததால் அடி வாங்கிய சடைமங்கை மேல் இரக்கம் கொண்ட அவர், அவளுக்கு சடதாரி என்று பெயரிட்டு காக்கும் தேவியாக சிலையாக்கி விட்டு மறைந்தார்.

மனைவியைப் பிரிந்த பச்சைமால், மனம் திருந்தி, சதுரகிரிக்கு வந்த அடியவர்களுக்குப் பால் கொடுத்து உதவி செய்தான்.

சுத்தரானந்த சித்தர் என்பவர் செய்த பூஜைக்கும் பால் கொடுத்து உதவினான். சித்தர்கள் செய்த பூஜையில் மகிழ்ந்த சிவன் இத்தலத்தில் அவர்களுக்குக் காட்சி கொடுத்தார். பச்சைமாலுக்கும் சிவதரிசனம் கிடைத்தது. ஒருநாள், சிவன் ஒரு துறவியின் வேடத்தில், சிவபூஜைக்குப் பால் கொடுக்கும் காராம்பசுவின் மடுவில் வாய்வைத்து பால் குடித்துக்கொண்டிருந்தார். இதைக் கண்ட பச்சைமாலுக்குக் கடும் கோபம் ஏற்பட்டு, துறவியின் தலையில் கம்பால் அடித்தான். அப்போது, சிவன் புலித்தோல் அணிந்து காட்சி கொடுத்தார்.

சிவனை அடித்துவிட்டதை அறிந்த பச்சைமால் மிகவும் வருந்தி அழுதான். சிவபெருமான் அவனைத் தேற்றி, “நீ தேவலோகத்தைச் சேர்ந்தவன். உன் பெயர் யாழ்வல்லதேவன். நீ யாழ் மீட்டி என்னைப் பாடி மகிழ்விப்பாய். சிற்றின்ப ஆசை காரணமாக என்னால் சபிக்கப்பட்டு பூலோகத்தில் மனிதனாகப் பிறந்தாய். உன்னை மீட்டுச் செல்லவே வந்தேன்” என்று கூறி அவனுக்கு முக்தி அளித்தார். அத்துடன் அங்கிருந்த சித்தர்களின் வேண்டுகோளின்படி மகாலிங்கம் என்ற திருநாமத்துடன் அங்கேயே எழுந்தருளினார். இது லிங்கங்களிலேயே பெருமை வாய்ந்தது என சதுரகிரி புராணம் கூறுகிறது.

இன்றும் கூட மகாலிங்கம் சாய்ந்த நிலையில் இருப்பதையும், தலையில் அடிபட்ட தழும்பையும் காணலாம். அனைவரும் சுந்தர மஹாலிங்கம் தரிசனம் செய்து வாழ்வில் அனைத்து நலன்களையும் பெற வேண்டும்…

வணிகர் ஒருவருக்குச் சிவன் கோயில் கட்டும் ஆசை இருந்தது. ஆனால், பணம் போதவில்லை. பலரிடம் உதவி கேட்டும் இவரது தேவையை பூர்த்தி செய்ய முடியவில்லை. முனிவர் ஒருவர், சதுரகிரியில் உள்ள காலங்கிநாத சித்தரிடம் சென்றால் உனது விருப்பம் நிறைவேறும் என்றார். வணிகரும் சதுரகிரி வந்து காலங்கிநாதரைத் தரிசித்தார்.

அவர் அங்குள்ள சில மூலிகைகளைக் கொண்டு உலோகங்களைத் தங்கமாக்கி அவனிடம் கொடுத்தார். மீதமிருந்த தங்கத்தையும், தங்கம் தயாரிக்கப் பயன்பட்ட தைலத்தையும் ஒரு கிணற்றில் கொட்டி பாறையால் மூடினார். இந்தக் கிணற்றில் காவலாகக் கருப்பசுவாமியை நியமித்தார். இவரது சன்னதியில் மூன்று காய்களுடன் கூடிய பலாமரம் உள்ளது. இதனால், இவரை பிலாவடி கருப்பர் என அழைத்தனர். இந்த மரத்தில், ஒரு காய் விழுந்து விட்டால் இன்னொரு காய் காய்க்கும் அதிசயம் பல ஆண்டுகளாக நடக்கிறது.

ஆனந்த சுந்தரம் என்ற வியாபாரிக்கு சிவன்மீது அளவு கடந்த ஈடுபாடு இருந்தது. அவரது மனைவி ஆண்டாள். பெருமாள் பக்தை. இவர்கள் இருவரும், தான் வணங்கும் கடவுளே பெரியவர் என்று தர்க்கம் செய்வர். இதற்கு விடை காண இருவரும் சதுரகிரி வந்து தியானம் செய்தனர். இவர்கள் முன்பு சிவன் தோன்றினார்.

சிவபெருமானே! தாங்களே அனைத்துமாக இருக்கிறீர்கள், என்பதை என் மனைவியிடம் தெரிவிக்க வேண்டும், என வேண்டினார் வியாபாரி. சிவன் ஆண்டாளிடம் சென்றார். அவளோ, நான் உம்மை நினைத்ததே இல்லை. பெருமாளை நினைத்தே தவம் செய்தேன், என்றாள். அப்போது சிவனும், விஷ்ணுவும் இணைந்து சங்கரநாராயணராக காட்சி கொடுத்தனர். இதன் அடிப்படையில் மலை ஏறும் வழியில் சிவலிங்கம், விஷ்ணு லிங்கம் என இரட்டை லிங்கம் பிரதிஷ்டை செய்து ராமதேவ சித்தர் என்பவர் பூஜை செய்தார். இந்த சன்னதிக்கு எதிரே ராமதேவர் குகை இருக்கிறது.

நடுக்காட்டு நாகர் சன்னதியை அடுத்து, லிங்க வடிவ பாறை உள்ளது. இதை பெரிய மகாலிங்கம் என்கின்றனர். பெரிய மகாலிங்கத்திற்கு அடியில் சிறு லிங்கம் உள்ளது.

சாதாரண நாட்களில் இதற்கு மட்டுமே அபிஷேக ஆராதனை நடக்கிறது. சிவராத்திரியன்று மட்டும் பெரிய லிங்கத்திற்குச் சிறப்பு பூஜை நடக்கிறது.

மகாலிங்கம் கோயிலிலுள்ள ஆனந்தவல்லி அம்மன் சன்னதிக்குப் பின்புறமாகச் சென்று, மேற்குப் பக்கமாக ஏறி, கிழக்குப் பக்கமாக இறங்கினால் தவசிப்பாறையை (தபசுப்பாறை) அடையலாம். இது கடல்மட்டத்தில் இருந்து 5000 அடி உயரத்தில் உள்ளது. கோயிலில் இருந்து தவசிப்பாறை செல்ல குறைந்தது இரண்டு மணி நேரமாகும். இது மிகவும் சிரமமான பயணம். பாறைக்குச் செல்லும் வழியில் மஞ்சள் ஊத்து தீர்த்தம் உள்ளது. தீர்த்தமும், இப் பகுதியிலுள்ள மண்ணும் மஞ்சள் நிறத்தில் உள்ளது. பார்வதி இத்தலத்துக்குத் தவம் செய்ய வந்தபோது, உடன் வந்த புஷ்பகை, கெந்தகை, அமிர்தகை, கருணிகை, மிருதுபாஷிகை, சுச்லிகை, சுமுகை என்ற பணிப் பெண்கள் இந்த தீர்த்தத்தில் மஞ்சள் தேய்த்து குளித்ததால் இப்படி இருப்பதாகக் கூறப்படுகிறது. தவசிப்பாறையில் சித்தர்கள் தவம் செய்யும் குகை உள்ளது. குகைக்குள் ஒரு ஆள் மட்டுமே மிகவும் சிரமப்பட்டு செல்லும்படியான துவாரம் உள்ளது. உள்ளே சென்ற பிறகு, பத்து பேர் அமர்ந்து தியானம் செய்ய வசதியிருக்கிறது. இதனுள் ஒரு லிங்கம் உள்ளது. மனத் திடம் உள்ளவர்கள் மட்டுமே இந்தக் குகைக்குள் சென்று லிங்கத்தைத் தரிசனம் செய்ய முடியும்.

இந்தக் குகையில்தான் 18 சித்தர்களும் தினமும் சிவபூஜை செய்வதாகக் கூறப்படுகிறது. குகைக்கு மேலே ஒன்பது பெரிய பாறாங்கற்கள் உள்ளன. இவற்றை நவகிரக கல் என்கிறார்கள். இதற்கு அடுத்துள்ள பாறையின் கீழ் அமர்ந்தால், கடும் வெயிலிலும் மிகக் குளுமையாக இருக்கும். இதை ஏசி பாறை என்கின்றனர். தவசிப் பாறையிலிருந்து கிழக்குப் பக்கமாக கீழிறங்கும் வழியில் வெள்ளைப்பிள்ளையார் பாறை உள்ளது. பார்ப்பதற்கு விநாயகர் போல் தெரியும்.

இங்குள்ள ஒரு மரத்தின் இடையில் அரையடி உயர பலகைக்கல் விநாயகர் சிலை உள்ளது. அருகில் நடுக்காட்டு நாகர் சன்னதி உள்ளது. கோரக்கர் மலைக்கு நேர் மேலே செங்குத்தான மலையில் சற்று மேலே ஏறினால் ஒரு லிங்கம் உள்ளது. இளைஞர்கள் மட்டுமே போக முடியும். ரொம்பவே செங்குத்தான பாதை. அதனால், அனைவரும் முயற்சிக்க வேண்டாம்.

சதுரகிரி மலையில் கிடைக்கும் பல அற்புத மூலிகைகளில் முறிந்த எலும்பைக் கூட ஒட்டவைக்கும் மூலிகை இலை கூட இங்கே உள்ளது. முறிந்த எலும்புகளை ஒன்று கூட்டி, இந்த மூலிகை இலையை வைத்துக் கட்டினால் அதிசயத்தக்க வகையில் எலும்பு கூடும்.

பூமியில் எங்கும் காணக் கிடைக்காத ஜோதி விருட்சமும், சாயா விருட்சம் போன்ற அதி அற்புதமான மரங்கள், மூலிகைகள், இலைகள் இம்மலையின் மேல் உள்ளன. இறவாமை அளிக்கக்கூடிய கருநெல்லி போன்ற அரிய கனிவகைகள் இருக்கின்றன.

தவிர கோரக்க முனிவரால் உதகம் என்று குறிப்பிடப்படும் உதகநீர் சுனையும் உண்டு. மருத்துவ குனம் கொண்ட மரம், செடி, கொடிகளின் மேல் பட்டு இறங்கி வரும் தண்ணீர் தேங்கிய சுனைகள் இருக்கிறது. இந்தச் சுனையில் உள்ள நீருக்குத்தான் உதகம் என்று பெயர். பார்ப்பதற்குக் குழம்பிய சேற்று நீர்போல் காணப்படும். இந்த உதகநீர் மருத்துவ குணங்களைக் கொண்டது. இதுபோன்ற நீரை நாம் பருகிவிட முடியாது. விவரங்கள் அறிந்தவர்களின் மூலமும், துணையோடு அந்நீரை மருந்தாகப் பயன்படுத்த வேண்டும்.

இவை எல்லாவற்றையும்விட தூக்கிச் சாப்பிடும் விஷயம் ஒன்று உள்ளது. மலையில் மிக அடர்ந்த பகுதியில் மதி மயங்கி வனம் என்ற பகுதி உள்ளது. இங்கே உள்ளே சென்றவர்கள், மதியை மயக்கி அவர்கள் வெளியே வரவே முடியாது என்று கூறுகின்றனர்.

இன்றும் ஒவ்வொரு மாதமும் வருகின்ற அமாவாசை, பவுர்ணமி தினங்களில் சித்தர்கள், ரிஷிகள் மகாலிங்க பூஜை செய்ய வருகின்றனர். கூட்டம் கூட்டமாக நட்சத்திரங்கள் மலைப்பகுதியில் விழுகின்றன. வீடியோ கேமராக்களில் அதை நிறைய பக்தர்கள் பதிவு செய்து இருக்கின்றனர்.

இறை நம்பிக்கை உள்ள பக்தர்கள், வாழ்வில் ஒரு முறையேனும் இந்த மகாலிங்கத்தையும், சந்தன மகாலிங்கத்தையும் மனமுருக பூஜித்து வழிபட்டு வாருங்கள். நீங்கள் நினைத்ததை சாதிக்கும் வல்லமையை அந்த சிவம் உங்களுக்கு அளிக்கும்.

இருப்பிடம்: மதுரை மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்டிலிருந்து வத்திராயிருப்பு செல்லும் பஸ்களில் சென்றால், தாணிப்பாறை விலக்கில் இறங்கலாம். இங்கிருந்து 7 கி.மீ. தூரம் சென்றால் சதுரகிரி மலை அடிவாரமான தாணிப்பாறை வரும். அங்கிருந்து மலை ஏறி, 10 கி.மீ. நடந்தால் ஸ்ரீமகாலிங்கம் சுவாமியைத் தரிசிக்கலாம்.

Happy
Happy
100 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!