மலேசியா முருகன் கோவிலை இயற்கையாக limestone படிமங்களுடன் உள்ள குகைகளுக்குள் அமைத்துள்ளார்கள். பக்கத்திலுள்ள குகைகளில் அனைத்து புராண நிகழ்ச்சிகளையும் உருவங்களாகச் செய்து வைத்துள்ளார்கள். பார்த்துக்கொண்டே வரும்போது வடலூர் வள்ளலார் உருவமும் அதன் மேல் தமிழிலும் எழுதப்பட்டிருந்தது. ஆச்சரியத்துடன் மகிழ்ச்சியாகவும் இருந்தது. வள்ளலாரின் கொள்கைகளுடன் நாங்கள் வளர்க்கப்பட்டது நினைவில் வந்தது.
இராமலிங்க அடிகளார் தேவையில்லாத இந்துமத ஆசாரங்களை புறந்தள்ளியவர். எந்த வழிபாட்டுச் சடங்குகளையும் கடைப்பிடிக்காமல் இறைவனை ஒளி வடிவமாக வணங்கும் ‘அருட்பெருஞ்சோதி ‘வழிபாட்டை முன்வைத்தார். இதை நிறைய பேர் குறிப்பாக அவருடன் இருந்தவர்களே அவரை விட்டு விலகியபோது ‘கடைவிரித்தேன் கொள்வாரில்லையே’ என்று வருத்தப்பட்டார். ஆனால் இன்று எல்லா ஊரிலும் வள்ளலார் சங்கம், சேவை மய்யம், பணி மன்றம் என்று நிறைய பாரக்கிறோம்.
அவர் வாழ்ந்த காலத்தில் வங்காளத்திலிருந்து தமிழ்நாடு வரை பஞ்சம் தலைவிரித்தாடியது. லட்சக்கணக்கான மக்கள் மாண்டனர். அன்றிருந்த மத ஆச்சாரங்கள், தீண்டாமை, ஊழ்வினை போன்றவை நிலமையை மேலும் தீவிரமாக்கின.
எல்லா அறங்களிலும் முதன்மையானது எளியோருக்கு உணவிடுவதே என்று கருதி வடலூரில் சத்திய தருமச்சாலையை ஆரம்பித்து அங்கு அன்னதானத்தை ஆரம்பித்தார். இன்றுவரை அவர் ஏற்றிய அடுப்பு அணையாமல் எரிந்து கொண்டுள்ளது. மக்களின் உதவியுடன்தான் இந்த திட்டம் இன்றுவரை தங்குதடையில்லாமல் நடைபெற்று வருகிறது. வீட்டில் எது விளைந்தாலும் முதலில் தருமச்சாலைக்குக் கொண்டுபோய் கொடுத்து வருவது இன்றும் உண்டு. நானே வீட்டிலிருந்து சுரைக்காய், அவரைக்காய் எல்லாம் கொடுத்திருக்கிறேன்.
தைப்பூசம் மிக விசேஷமான ஒன்று. அன்னதானம் நிறைய இடங்களில் நடைபெறும். அதனால் வடலூர் வாழ மக்கள் வேறு எந்த உருவ வழிபாட்டையும் செய்யமாட்டார்கள். முருகன், விநாயகர், மாரியம்மன் போன்ற எந்த வழிபாடும் இருக்காது.
இப்போதெல்லாம் இவை தலைதூக்குகின்றன. இருந்தாலும் மிருகங்களை பலியிடுதல் போன்ற சாங்கியங்கள் இன்று வரை இல்லை.
ஒரு சிறந்த பகுத்தறவறிக் கொள்கைகளை மக்களிடம் கொண்டுசேர்த்த மகான் வள்ளலார். கேரளத்தின் நாரயணகுரு, வங்காளத்தின் ராசாராம் மோகன்ராய், ராமகிருஷ்ண பரமஹம்சர் போன்றவர்களின் முன்னோடி. நான் பிறந்தது, படித்தது, வளர்ந்தது எல்லாமே வடலூர் என்பதில் எனக்கு எப்போதும் பெருமை உண்டு.
பாட்டு குகைகளில் (Batu caves) வள்ளலாரைப் பார்த்தபோது மனம் வடலூர் வரை சென்றுவிட்டது.
Mangai Arasi முகநூல் பக்கத்திலிருந்து