அன்னை பார்வதி தேவி, முருகனுக்கு ஞானவேல் வழங்கியது இந்த நன்னாளில் தான். அதனால்தான் அன்று வேலையும் வணங்குவது நல்லது என்று ஆச்சாரியார்கள் கூறுகின்றனர். அந்த ஞானவேல் கொண்டே ஞானபண்டிதன் அசுரவதம் புரிந்தார் என்பது வரலாறு.
தைப்பூச நாளில் முருகனுக்குரிய வேலை வழிபடுவதன் பயனாக தீய சக்திகள் நம்மை அண்டாது. இதனால் வறுமை நீங்கி செல்வமும், வசதி வாய்ப்புகளும் கிடைக்கப் பெறும் என்பது ஐதீகம்.
இந்துக்கள் கொண்டாடும் முக்கிய பண்டிகை மற்றும் விரத நாட்களில் ஒன்று தைப்பூசம்(Thaipusam). தமிழகம் மட்டுமல்லாமல் சிங்கப்பூர், மலோசியா உள்ளிட்ட வெளிநாடுகளில் வசிக்கும் உலக தமிழர்களும், முருகபெருமானுக்கு உகந்த முக்கிய நாளான தைப்பூச திருவிழாவை கொண்டாடுவது வழக்கம். முருக பக்தர்கள் பலர் தைப்பூச விரதத்தை 48 நாட்கள் இருப்பது வழக்கம். மார்கழி மாதத்தில் தொடங்கி தைப்பூசம் வரை விரதம் இருப்பது வழக்கம்.
இந்த திருநாளில் பக்தர்கள் முருகபெருமானுக்காக அலகு குத்தி காவடி தூக்கி வீட்டில் முருகனுக்கு நேர்த்திக்கடன் செய்வது வழக்கம்.
பிப்ரவரி 5ஆம் தேதிதான் நாள் முழுவதும் பூசம் நட்சத்திரம் இருக்கிறது என்பதால் அன்று தைப்பூச திருநாள் கொண்டாடப்படுகிறது.
அறுபடை வீடுகளில் மூன்றாம்படை வீடான பழனியில் தைப்பூசத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது. தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு தமிழகத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் பாதயாத்திரையாக வந்த வண்ணம் உள்ளனர்.
சிவன் நடராஜராக நடனமாடிய நாள் மார்கழி திருவாதிரை. சிவனும் அம்பிகையும் இணைந்து ஆடிய நாள் தைப்பூசம். இந்த வகையில் தைப்பூசம் சிவசக்திக்கு உரிய நாள் ஆகிறது. இதனால்தான் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில், திருவிடைமருதூர், திருப்புடைமருதூர் சிவாலயங்களில் இந்த விழா விசேஷமாக நடக்கிறது. பழனி முருகன் கோவிலில் இந்த விழா பிரசித்தமாக நடக்கிறது.
தரும்மிகு சென்னை வடபழநியில் தைப்பூச பால்காவடி சபையினர் கடந்த 49 ஆண்டுகளாக தைப்பூச விழாவை சிறப்புடன் நடத்திவருகின்றன. இந்த ஆண்டு 50வது பொன்விழா ஆண்டு கொண்டாடுகிறார்கள்.
தைப்பூச நாளில் குரு பகவானையும், சிவபெருமானையும், முருகப் பெருமானையும் வழிபடுவது மிகுந்த விசேஷசமாகும்.
நவகிரகங்களில் சூரியன் சிவாம்சம் கொண்டவர். இவர் தை மாதத்தில் தனது வடதிசைப் பயணத்தை தொடங்குகிறார். இதனை உத்ராயண புண்ணிய காலம் என்பர். இவர் இந்த மாதத்தில் மகர ராசியில் இருக்கிறார். சக்தியின் அம்சமாக திகழ்பவர் சந்திரன். தைப்பூச நாளில் சந்திரன் ஆட்சி பலத்தோடு கடக ராசியில் சஞ்சரிக்கிறார். அன்று மகரத்தில் இருக்கும் சூரியனும் கடகத்தில் இருக்கும் சந்திரனும் ஒருவருக்கொருவர் பலத்தோடு பார்த்துக்கொள்வர்.
இதற்கு என்ன அர்த்தம் தெரியுமா?அம்பிகை சிவகாமி கண்டுகளிக்க பரம்பொருளான சிவன் நடராஜராக ஆனந்த தாண்டவம் ஆடுகிறார். மார்கழி திருவாதிரையில் இறைவன் தனித்து ஆடுகிறார். தைப்பூசத் திருநாளில் சிவன் பார்வதி இணைந்து ஆடுவதாக சொல்வர். நடனமாடினால் மகிழ்ச்சி பிறக்கும். அந்த மகிழ்ச்சியில் திளைக்கும் இறைவனிடம் நாம் வேண்டியதை பெறலாம் என்பதால் இந்நாளை வழிபாட்டுக்குரிய நாளாக நிர்ணயித்தனர்.
இல்லற வாழ்வில் பெறும் இன்பத்தின் அடையாளம் குழந்தை என்பர். அம்மையப்பரான சிவபார்வதி மகிழ்ந்திருந்து ஈன்றெடுத்த ஞானக் குழந்தை முருகன். அந்த வகையில் பெற்றோருக்குரிய தைப்பூசம் பிள்ளைக்கும் சிறப்பான நாளாக அமைந்தது. தைப்பூச திருநாளில் சிவபார்வதி, முருகப்பெருமானை தரிசித்து வேண்டிய வரம் பெறுவோம்.
தைப்பூசமும் வடலூர் வள்ளலார் பெருமையும்
வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன், கடைவிரித்தேன் கொள்வாரில்லை என மக்களுக்கு நல்லுபதேசம் செய்தவர் வள்ளலார் கடலூர் மாவட்டம் வடலூர் அருகே மருதூரில் ஆசிரமக் கோயில் அமைத்தார்.
வடலூரில் சமரச சுத்த சன்மார்க்க சங்கத்தை நிறுவி 24 மணி நேரம் அன்னதானம் வழங்கியர் வடலூர் வள்ளலார் இராமலிங்க சுவாமிகள். இறைவனுக்கு உருவம் கிடையாது, ஜோதி வடிவானவர் என்று உலகிற்கு பறைசாற்றிய வல்லளார் அதற்கென ஞானசபை அமைத்து ஒவ்வொரு மாதமும் பூசநட்சத்திர தினத்தன்று ஆன்மிகவாதிகளுக்கு ஜோதி தரிசனம் தந்தவர். இவரைப் பின்பற்றி மாதந்தோறும் வடலூரில் பார்வதிபுரத்தில் உள்ள ஞானசபையில் பூச நட்சத்திர தினத்தில் 7 திரைகளை விலக்கி ஜோதி தரிசனம் நடக்கும்.
தை மாதத்தில் அவர் முக்தியடைந்ததால் தைப்பூச தினத்தன்று 7 திரைகளை விலக்கி ஜோதி தரிசனம் காண்பிக்கப்படும். இது மிகவும் பிரசித்தி பெற்ற விழாவாக வடலூர் சுற்று வட்டாரப் பகுதி மக்களால் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படுகிறது. இந்த தைப்பூச விழாவிற்குத் தமிழகம் உள்ளிட்ட உலகெங்கிலும் இருக்கும் வள்ளலார் சபையினர் இங்கு வந்து ஜோதி தரிசனம் பார்த்துச் செல்வர்.
இந்த ஆண்டுக்கான விழா (இன்று) 4-ஆம் தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. காலை 5 மணிமுதல் அருட்பெருஞ்ஜோதி அகவல் பாராயணம் பாடப்பட்டது. காலை 7.30 மணிக்கு மருதூர் வள்ளலார் சன்னதியில் மருதூர் கிராமவாசிகளால் கொடியேற்றப்பட்டு நற்கருங்குழியில் உள்ள வள்ளலார் சன்னதியில் நற்கருங்குழி கிராமவாசிகளால் கொடி யேற்றப்பட்டது.
பார்வதிபுரத்தில் உள்ள வள்ளலார் ஞானசபையில் காலை 10 மணிக்கு தைப்பூச விழாவிற்கான கொடியேற்று விழாவும் நடைபெற்றது. இக்கொடியினை பார்வதிபுரம் கிராமவாசிகள் ஏற்றிவைத்து விழாவினை தொடங்கிவைத்தனர். இதைத் தொடர்ந்து திரு அருட்பா கருத்தரங்கம், சன்மார்க்க கருத்தரங்கங்கள் நடத்தப்பட்டு வருகிற.
நாளை 5-ஆம் தேதி காலை 6 மணி, 10 மணி, நண்பகல் 1 மணி இரவு 7 மணி, 10 மணி, மறுநாள் அதிகாலை 5.30 மணி என 6 வேளைகளில் 7 திரைகளை நீக்கி ஞானசபையில் ஜோதி தரிசனம் நடக்கவுள்ளது. இதனைத் தொடர்ந்து 7-ந் தேதி நண்பகல் 12 மணி முதல் மாலை 6 மணிவரை வள்ளலார் முக்தியடைந்த சித்தி வளாகத் திருஅறை தரிசனம் நடைபெறும். இதையொட்டி சிறப்பு பஸ் வசதி மற்றும் ரயில் வசதி செய்யப்பட்டுள்ளது.