சஞ்சலம் | சிறுகதை | தேவி லிங்கம்.

5 0
Spread the love
Read Time:37 Minute, 31 Second

கிணி கிணியென மணியடிக்கும் சப்தமும் ஏதோ பனிப்பிரதேசத்தில் இருப்பது போல் புகைமண்டலமும் சாம்பிராணி வாசமும்  “கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை சாமியே! ஐய்யப்போ, சாமியே ஐய்யப்போ! ஏத்தி விடப்பா! தூக்கிவிடப்பா” என்ற  பஜனைக் குரல்களு மாய், சுற்றிலும் கேட்டுக்கொண்டிருக்க, பொந்துக்குள்ளிருந்து எட்டிப் பார்க்கும் குட்டி எலியைப் போல், போர்வைக்குள்ளிருந்து தலையை மட்டும் நீட்டி எட்டிப் பார்த்தாள் விநோதினி.

கலைந்த பரட்டைத் தலையும் கொடுவாயும் அழுக்குத் தள்ளிய கண்களுமாய், எழுந்திருப் பதற்கே வெட்கமாக இருந்தது ஐந்து வயது விநோதினிக்கு. இன்னும் கொஞ்சம் நேரம் தூங்கு வது போல் நடிக்கலாம் என்றால், அடுக்களையிலிருந்து பாட்டி, “விநோதினி எந்திரி… போய் மூஞ்ச கழுவிட்டு பல்லை விளக்கிட்டு வந்து பூஜைல கலந்துக்க,” என்ற குரல் கேட்டது.

இனி தப்பிக்க முடியாது. விருட்டென பாய், போர்வையைச் சுருட்டி ஓரமாய் வைத்துவிட்டு, முகம் கழுவிக்கொண்டு வருவதற்கும் தாத்தா கோவிந்தசாமி முந்திரி, திராட்சை, கற்கண்டு, அவல் கலந்த பிரசாதம் தருவதற்கும் சரியாக இருந்தது.

தாத்தா சபரி மலைக்கு போக மாலை போட்ருக்கார். மாலை போட்டிருக்கும் சமயத்தில் அவர் பெரும்பாலும் மௌனமாக இருப்பார். ஐந்தரை அடி உயரம், பெரிய அகலக்கண்கள். முறுக்கி விடப்பட்ட மீசை. நெற்றி நிறைய பட்டையாய் விபூதி. பார்ப்பதற்கு ரொம்ப கம்பீரமா, அழகா இருப்பாரு. எங்கப் போனாலும் இடுப்பில்சிறிய முனைகள் தீட்டப்பட்டு, உறைக்குள் பளபளக் கும் குத்துவாள் இருக்கும்.

குண்டு குண்டான விரல்கள், அகன்ற உள்ளங்கை, உருண்டையான கைகள், தும்பைப்பூ நிறமாகச் சலவை செய்து, மடிப்புக் கலலையாத ஜிப்பா, அந்த அடுக்கி வைத்த ஜிப்பாக் களுக்கு இடையே கைக்குட்டைகளில் கொட்டி வாசனைக்காகப் பாட்டியால், மடித்து வைக்கப் படும் ஜவ்வாது.

அவருக்கென்று தனிஅறை. அதற்குள் அவரைத் தவிர யாரும் (பாட்டி உட்பட) அவரது அனுமதியில்லாமல் செல்லமுடியாது. பெரிய இரும்புப்பெட்டியும் அதனுள்ளே அடுக்கடுக்காக, தங்க, வைர நகைகள் இருந்தன. விநோதினிக்கு மட்டும் தாத்தாவிடம் தனிச் சலுகை இருந்தது. பாட்டிக்கு ஏதாவது செலவுக்குப் பணம் தேவைப்படும்பொழுதெல்லாம், விநோதினி யிடம் சொல்வாள். விநோதினி தாத்தாவின் கைகளைப் பிடித்துத் தொங்கிக்கொண்டே பணப் பெட்டியிலிருந்து கட்டுக்கட்டாகப் புதிதாக, மடமடவென, மொரமொரப்பான ரூபாய் தாள்களை நைசாக எடுத்துவந்து பாட்டியிடம் கொடுப்பாள்.

அதை ஓரக்கண்ணால் தாத்தா பார்த்துக்கொண்டிருந்தாலும், விநோதினியை அவர் ஒன்றுமே சொன்னதில்லை. நான்கு மகன்களில் மூன்று மகன்களுக்குத் திருமணம் ஆகி, அவர்களுக்கு வாரிசு, ஏதோ ஒரு காரணத்தால் இறந்துவிடுவதுதாக இருக்க, நாலாவது பையன் கண்ண னுக்குத் திருமணமாகிப் பிறந்த முதல் குழந்தை விநோதினி. குடும்பத்தின் முதல் வாரிசு.

பளிங்கியாய் மின்னும் கண்களும், செப்பு வாயும், உருண்டை முகமுமாய் இவள் பிறந்ததற் குப் பின்பு அடுத்தடுத்து ஆறு மாதத்திற்கெல்லாம் அனைவருக்கும் வாரிசுகள் பிறந்து, வீடே குழந்தைகள் கூடாரமாக மாறியது.

தாத்தா கோவிந்தசாமி விநோதினியை அதிர்ஷ்டத்தின் தேவதையாகப் பார்த்தார். அவளுக்கு வேண்டியதையெல்லாம் பார்த்துப் பார்த்துச் செய்தார். வெளியூர் போகும் சமயங்களில்கூட பேத்தியையும் கூடவே அழைத்துச் சென்றார். பாட்டி சீதாலட்சுமி பதின்மூன்று வயதில் இவரைக் கட்டிக்கொண்டு வந்து அடுப்படியிலேயே குடும்பத்திற்காக உழைத்துக்கொண்டிருப்பவள்.

எந்த நேரத்தில் எந்த உறவினர் வந்தாலும், அவர்களை உணவு உண்ணாமல் அவள் அனுப் பியதே இல்லை. வீட்டிற்கு வருப்பவர்கள் எல்லாம் சீதாவை நடிகை பத்மினியைப் போலவே இருப்பதாகக் கூறுவதைக் கேட்டு கோவிந்தசாமி பெரிய மீசையை முறுக்கிக்கொண்டு பெரு மிதத்தோடு ரசித்துச் சிரிப்பார்.

இவர்களது ஒத்துமையையும் பொருத்தத்தையும் ஊரே மெச்சும். எப்பொழுதுமே வாசலில் யாராவது நான்கு பேர் நின்றுகொண்டே இருப்பார்கள். திருவிழாக்குப் பணம். கல்யாணத்திற் குப் பணம். வசதி குறைந்த உறவினர்கள் யாராவது உதவி கேட்டு யாராவது நின்று கொண்டே இருப்பார்கள்.

அன்று காலையில் கோவிந்தசாமி வாசலில் கூண்டில் அடைத்து வளர்க்கப்பட்டு வந்த புறாக் களுக்குத் தானியங்களைப் போட்டுக்கொண்டிருந்தார். சில புறாக்கள் அவர் கையில் வந்த மர்ந்துகொண்டே தானியங்களைக் கொத்தித் தின்றது. விநோதினிக்குப் புறாக்களின் கழுத்து நிறங்களும், அதன் சிறிய கண்களும், கீழே விழுந்து கிடக்கும் அதன் மென் இறகுகளும் மிகவும் பிடிக்கும் என்றாலும், இரவு நேரத்தில், கண் விழிக்கையில் கேட்கும் புறாக்களின் சத்தமும், கூண்டின் நாற்றமும் குமட்டிக்கொண்டு வரும்.

“தாத்தா! எனக்குப் பேச்சுப் போட்டி வச்சிருக்காங்க. எழுதித்தாங்க  தாத்தா,” எனக் கேட்டுக் கொண்டிருந்தாள் விநோதினி.

“இரும்மா… தாத்தா குளிச்சிட்டு, சேது வாத்தியார்ட்ட கேட்டு புக் வாங்கிட்டு வந்து உனக்கு எழுதித் தர்றேன் சரியா,” என்ற தாத்தாவைக் கட்டிக்கொண்டாள் விநோதினி.

“சரி, அப்ப தாத்தாவுக்கு, நீ ஒண்ணு செய்யணும் செய்வீயா,” என்று கேட்டார் கோவிந்தசாமி.

“போங்க தாத்தா. எனக்குத் தெரியும். முதுக சொறிஞ்சிவிடச் சொல்லுவீங்க. நான் மாட்டேன். அதான் பூணூல் கிடக்குள்ள, அதை இப்படி அப்படி இழுங்க. அரிப்பு போய்டும். உங்க முதுகுல அழுக்கா இருக்கு. நான் சொறியறப்ப, நகத்துல அழுக்குப் போய் நகமெல்லாம் கறுப்பாகிடுது. நான் மாட்டேன்” என்ற விநோதினியை, “அட, சுத்தக்கார பாப்பாத்தி, வாடீ என் கன்னுக்குட்டீ” எனக் கொஞ்சினார் கோவிந்தசாமி.

அப்பொழுது அங்கே அலுமினிய அன்னக்கூடை நிறைய துவைக்கப்போகும் துணிகளை அமுக்கி ஒரு இடுப்பில் வைத்து கைகளால் இடுக்கிக்கொண்டு மறு கையில் கார்த்திகாவைப் பிடித்துக்கொண்டு நின்றாள் வாசுகி பெரியம்மா. நடு பெரியம்மா. பெரிய பெரியம்மாவின் பெயர் கமலா.

வாசுகி பெரியம்மா ஏனோ தெரியவில்லை. என்னை ஏதாவது சொல்லிக்கொண்டே யாரிட மாவது திட்டிக்கொண்டே இருப்பாள். கார்த்திகா இவளோடு விளையாடும் பொழுதெல்லாம் அவளை அடித்து அறைக்கு இழுத்துக்கொண்டு போய்விடுவாள். ஆனால் கார்த்திகாவிற்கு, விநோதினியை மிகவும் பிடிக்கும். அம்மாவிடம் அடி வாங்கினாலும் விளையாடுவதற்கு இவளிடம் ஓடி வந்துவிடுவாள்.

“வா விநோ! குளிச்சிட்டு வந்திரலாம்” என கையைப் பிடித்து அழைத்தாள் வாசுகி.

அவள் எப்பவுமே, இப்படித்தான் தாத்தா, பாட்டி இருந்தாள் கொஞ்சுவாள். அவர்கள் அருகில் இல்லையெனில் திட்டுவாள்.

எதற்கென்றே காரணம் புரியாமல் அழுகை வரும்பொழுதெல்லாம், ஓடிச்சென்று தாத்தா கட்டிலில் படுத்து உறங்கிவிடுவேன்.

“பெரியம்மா, பெரியம்மா. இன்னைக்கு எனக்கு ஸ்கூல்ல பேச்சுப் போட்டி இருக்கு. எனக்குத் தலைய குளிப்பாட்டி விடுறீங்களா? டீச்சர் சொல்லச் சொன்னாங்க,” என தொணத்தொணவென பேசிக்கொண்டிருந்தவளை, “வா செல்லம், குளிப்பாட்டி விடுறேன்” எனக் கையைப் பிடித்துக் கொண்டு, மாமனாரைப் பார்த்து மெலிதாய் சிரித்து வைத்தாள் வாசுகி.

“ஜாக்கிரதையா போயிட்டு ஜாக்கிரதையா வரணும். அங்க பராக்குப் பார்த்துட்டு, புள்ளைங் களுக்கு எதாவது ஆனுச்சி, தொலைச்சிடுவேன்” என்ற மாமனாரைப் பார்த்துத் தலையை மட்டும் ஆட்டினாள் வாசுகி. மாமனாரிடம் எதிர்க்க நின்று பேசவோ, பதில் பேசவோ அந்தக் குடும்பத்தில் பழக்கம் இல்லை.

தூரத்தில் ஆற்றங்கரை தெரிந்தது. சூரியன் கொஞ்சம் கொஞ்சமாகத் தனது ஆரஞ்சு வண்ணக் கதிர்களைப் புவியின் மேல் பதித்துக்கொண்டிருந்தான். அங்கொன்றும் இங்கொன்றுமாய்  அமர்ந்து, காலைக்கடன்களை முடித்துக்கொண்டிருந்த ஆண்கள், பெண்கள் குரல்கள் கேட்ட தும் எழுந்து நகர்ந்துகொண்டிருந்தனர். விநோதினியைப் பிடித்திருந்த கையை வெடுக்கென உதறிவிட்டு, “சனியன், எங்கப்போனாலும் என் பொண்ணுக்குப் போட்டிக்கு வந்துடுது. அந்தக் கிழவனும் கிழவியும் இந்தக் குட்டிப்பிசாச தூக்கித்  தலைல வச்சிட்டு ஆடுறாங்க.”

“பாருங்க கலாக்கா! என் தலையெழுத்தை, நாலாவது கொழுந்தன் போஸ்ட் ஆபிஸ்ல்ல ஆபிசர், ஓர்படியா மொட்டை கிராமத்துக்காரி. ‘அ’ன்னா ஆ’வன்னா கூட படிக்கத் தெரியாது. மன்னார்குடியில இதோட அப்பனும் ஆத்தாளும் வரிசையா புள்ளைய பெத்துகிட்டு, இத வளர்க்க முடியலேன்னு இங்கக் கொண்டுவந்து விட்டுடுச்சிங்க! கிழவன் இதுதான் முதல் பேத்தின்னு, தாங்கு தாங்குன்னு தாங்கறாரு. நான் எதாவது சொல்ல முடியுமா? சொத்து முழுசா அவரு கையில இருக்கு! வெளில போடீன்னு சொல்லிட்டா, அப்பன் பேச்சைக் கேக்கற கையாலாகாத புருசனை வச்சிகிட்டு, இரண்டு புள்ளைங்கள வச்சிக்கிட்டு நான் என்ன பண்றது? தனியா வாய்யா! தலைஞாயிறுல எங்க அம்மா வீட்டோட போயிடுவோம், தனியா எதாவது கடை வச்சிட்டு பொழச்சிப்போம்னு சொன்னா, நான் கட்டுன சனியன் கேக்கமாட் டேங்குது. வடிச்சி கொட்டி எழவு கொடுக்கறேன். எல்லா சனியனுங்களுக்கும்” என்று முகம் முழுவதும் வெறுப்பு. எரியும் கண்ணாடிப் பொருட்களென வெடித்துச் சிதறி கத்திக்கொண் டிருந்தாள் வாசுகி.

காதில் விழுபவற்றின் சரியான அர்த்தங்களைக்கூட புரியாத விநோதினி, சட்ரஸ் பலகையை மீறி வழியும் தண்ணீரில் கையநீட்டி, நீர் விரல்களின் வழியே பிளவுபட்டு, பிரிந்து ஊற்று வதைக் கண்டு ரசித்துக்கொண்டிருந்தாள். பக்கத்தில் அவளோடு கார்த்திகாவும் பாவாடை யைக் காற்றோடு நீரில் அழுத்திப் பெரிய முட்டை மாதிரி செய்து மிதந்து கொண்டிருந்தாள்.

“வா! கார்த்திகா இங்க! தலைய பாரு! செம்பட்டை யா இருக்கு  முடி எங்கையாவது பொடரிக்கு கீழ இறங்குதா? நானும் என்னன்வோ பண்றேன். முட்டை கொடுக்கறேன், பால் கொடுக் கறேன். சனியனே, எனக்கு வந்து பொறந்தீயே! அங்கப்பாரு விநோவுக்கு எவ்வளவு கருகருன்னு முடிய பாரு! இந்தா இந்த ஷாம்புப் போட்டு நல்லா தேய்! ஒரு பாக்கெட் தான் இருந்துச்சி” என்ற வாசுகியைப் பரிதாபமாகப் பார்த்தாள் விநோதினி.

“பெரியம்மா, எனக்கும் ஷாம்பு வேணும் பெரியம்மா! டீச்சர் குளிச்சிட்டு வரச் சொன்னாங்க. எல்லாரையும் வெல்கம் பண்ணணுமாம்” என்ற விநோதினியை,

“வாடீ என் தங்கம். அது தங்கச்சி குளிக்கட்டும். இந்தத் துணி துவைக்கற சோப்பு இருக்குல்ல, இத தலைக்கு தேய்ச்சா நல்லா நுரை வரும்” என்ற வாசுகியிடம்,

“வேணாம் பெரியம்மா. இது மண்டைய எரியுது…” என சுணங்கிய விநோதினியை எரிச்சலாகப் பார்த்தாள் வாசுகி.

“அப்ப அடுத்த தடவை தாத்தாட்ட பெரிய பாட்டில்ல ஷாம்பு வாங்கிட்டு வரணும். நீ கேட்டா தாத்தா வாங்கிக் கொடுப்பாரு சரியா?” என்ற வாசுகியைப் பார்த்து, “சரி, பெரியம்மா, பாட்டீல்ல வாங்குனா தினமும் எனக்கு ஷாம்புப் போட்டு குளிப்பாட்டுவீங்கல்ல?” என்ற விநோதினியின் கண்கள் கார்த்திகாவின் தலையிலிருந்து கலர் கலராக வண்ணக் குமிழிகளாய் பறந்துக்கொண்டிருக்கும் குமிழிகளையும், மல்லிகை வாசனையாய் ஆற்றுநீரில் கலந்து ஓடிக்கொண்டிருக்கும் ஷாம்புவையும் ஏக்கமாகப் பார்த்துக்கொண்டிருந்தது.

குளித்து முடித்து இருவரையும் அழைத்துக்கொண்டு வந்துகொண்டிருந்த வாசுகி பாலத்துக்கு அடியில் அரையிருட்டாக, கணுக்கால் வரை தண்ணி ஓடிக்கொண்டிருந்த இடத்தில், துணைக் குக் கூடவே வந்துகொண்டிருந்த அடுத்த வீட்டு கலாவிடம், “நீங்க முன்னாடி போயிட்டு இருங்க கலாக்கா. இந்தப் புள்ளைங்களுக்கு ஒண்ணுக்கு வருதாம். நின்னு கூட்டிட்டு வந்தர்றேன்,” என்ற வாசுகியிடம், “சரி வாசுகி, நான் முன்னாடி போறேன் அவுகளுக்கு காபி போடணும், எருப்புப் புடிச்சது. எரிஞ்சி விழுவும். பார்த்து வா” என்று கடந்து போனாள் கலா.

அத்தை அந்தப் பக்கம் போனதும், பாலத்துக்கு அடியில் படிந்து கிடக்கும் கொஞ்சம் பெரிய கற்களை நகர்த்தமுடியாமல் நகர்த்தி, அதற்குக் கீழே சுருண்டுகொண்டு, தன்னை மறைத்துக் கொண்டிருக்கும்  இறால்களை,  கைகளால் தடவித் தடவிப் பிடித்து சிறிய நசுங்கிய அலு மினிய குண்டான்களில் போட்டுக்கொண்டிருக்கும் சிறுவன்களை, வியப்பாக வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தாள் விநோதினி.

அவளுக்கு எல்லாமே புதுசாக, புதுமையாகத் தெரிந்தது. அனைத்தையும் பார்த்துப் பார்த்து அதைப் பற்றி யோசித்துக்கொண்டே இருந்தாள். திடீரென கழுத்தில் கறுப்புக் கயிற்றில் தொங்கிக் கொண்டிருந்த டாலரைப்  பிடித்துப் பார்த்தாள் வாசுகி.

“ஏது விநோ இது! இன்னைக்கு குளிப்பாட்டுறப்பதான் பார்த்தேன். உனக்கு நல்லாவே இல்லை. சிவப்பு கல்லு வச்சி, பட்டிக்காடு மாதிரி,” என்ற வாசுகியைப் பார்த்து தண்ணீரில்  குதித்துக் கொண்டே பதில் சொன்னாள் விநோதினி.

“அதுவா பெரியம்மா, தாத்தா நேத்து கட்டிவிட்டாரு.. சிங்கப்பூர்லேர்ந்து விக்கறதுக்கு வந்துச்சாம். அழகா இருந்துச்சாம். தாத்தாக்கு ரொம்பப் பிடிச்சிருந்துச்சாம்… திருஷ்டி படாம இருக்குமாம். அழகா இருக்கா பெரியம்மா,” என்றவாறே வாசுகியைப் பார்க்க அவளது விழிகள் அகன்று விகாரமாய் அந்த டாலரை பார்த்துக்கொண்டிருந்தது.

அடர் இளஞ்சிவப்பு நிறத்தில், நீருக்கு அடியில் உள்ள நாணயத்தை பளீரென பிரதிபலிப்பது போல் மங்கலாய் அதே நேரத்தில் கண்கூசும் ஒளியோடு, சுற்றிலும் ஏழு ரூபி கற்களும் நடுவில் ஒரு வெள்ளை மாணிக்கக் கல் என அத்தனை சௌந்தர்யத்தோடு இருந்தது அந்த டாலர்.

“பாட்டீ, நான் ஸ்கூலுக்குப் போயிட்டு வர்றேன் பாட்டீ. இன்னைக்கு சுதந்திர தினம். நான் போய் பேசணும். தாத்தா எழுதிக் கொடுத்தாங்களே, நேரு மாமா பத்தி, மனப்பாடம் பண்ணிட்டு இருக்கேன். என்னைச் சாப்ட சொல்லாத. எனக்கு இந்த பட்டனை மட்டும் போட்டுவிடு,” என்ற விநோதினியின் கழுத்தைப் பார்த்து திடுக்கிட்ட சீதாலெட்சுமி, “எங்கடி கழுத்துல இருந்த கறுப்புக் கயிறக் காணோம்? டாலர் எங்க? எங்கங்கல்லாம் போன? அடிப்பாவி, விலை அதிகம்டி, ஒஸ்திரகம், தாத்தாக்கு தெரிஞ்சா என்னை கொன்னுபுடுவாரே! உன்னை சரியா கவனிச்சிக்கலேன்னு திட்டுவாரே. அப்பவே சொன்னேன். சின்னப்புள்ளை கழுதுல போடாதீங்கன்னு. இப்படி தொலைச்சிட்டு வந்து நிக்கிறீயே!”

“பாட்டி, நிஜம்மா எனக்குத் தெரியல பாட்டீ. காலையில பெரியம்மாவோட குளிக்க போனேன். மறுபடி எங்கையுமே போகல பாட்டீ. சத்யமா எனக்குத் தெரியாது” என அழத் தொடங் கியவளைப் பார்த்துப் பரிதாபமாக வந்தது சீதாலெட்சுமிக்கு.

மனதிற்குள்ளாகவே பேசத் தொடங்கினாள். மனதிற்குள் பேசினாலும் அதற்கேற்றவாறு, விரல் களையும் கைகளையும் ஆட்டிக்கொண்டிருந்தாள். வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு, சீதா யாரோடோ பேசிக்கொண்டிருப்பது போலவே தெரியும். மனதில் உள்ளதை வாய்விட்டு சொல் லக்கூட முடியாத பெரும்பான்மையானவர்களின் நிலை இதுதான்.

“பாவம், பச்சை மண்ணு. அதுக்கென்ன தெரியும்? என்ன வரம் வாங்கி வந்துச்சோ, பத்து மாசத்துலேர்ந்து அப்பனையும் ஆத்தாவையும் பிரிஞ்சி இங்க வந்து கிடக்கு.”

“இங்க இரண்டு பேரு இருக்காளுங்க, பொச்செரிச்ச புடுச்சவளுக, பச்சக் குருத்தப் பார்த்து பொறாமைப்பட்டுகிட்டு சாப்பாடுகூட நேரத்துக்குத் தர மாட்டேங்கறாளுங்க. தான் புள்ளைங் களுக்கு கீழ வரைக்கும் வச்சித்திணிக்கிறாளுக, பசிக்குதுன்னு கேட்கக்கூட தெரியாம துணிய சுருட்டி வச்சிகிட்டு பச்ச மண்ணு படுத்துக் கிடக்கறத பார்த்தா வயிறெல்லாம் குழையுது.

பக்கத்து வீட்டு சௌந்தரவல்லி அக்கா நேத்து சொல்லிட்டுப் போகுது. “சீதா, இனி சாப்பாட வாசுகி கிட்ட கொடுத்துவிடாத. அவ புள்ளைக்கு முட்டைய ஊட்டிவிட்டு, விநோதினிகிட்ட இருக்கற முட்டையையும் எடுத்து, தன் புள்ளைக்கே ஊட்டிவிடுறா. பாவம் இந்த விநோதினிப்புள்ள. வெறுஞ்சாதத்தை வெடுக்கு வெடுக்குன்னு இரண்டு வாய் தின்னுட்டு சிரிச்சிட்டே போகுது. பார்க்க வயித்தெரிச்சலா இருக்குது. உன் சின்னப்பையன் வந்தா, புள்ளைய ஊருக்கே கூட்டிட்டுப் போகச் சொல்லு. இன்னும் எத்தனை நாளு அப்பா அம்மாவ பிரிஞ்சி இந்தப்புள்ள இருக்கும். இங்க உள்ளவளுகளும், கடுப்பாதான ஆவாளுக, அவ அவ புருஷன் புள்ளைகள பார்ப்பாளுவளா, மத்தவ குழந்தைகள பார்ப்பாளுவளா?,” என்ற சௌந்தரவல்லி அக்காவின் குரல் காதுலேயே ஒலித்துக்கொண்டிருந்தது.

விளக்கமாறை எடுத்துக்கொண்டு மூலை முடுக்கெல்லாம் கூட்டிப் பெருக்கி, டாலரைத் தேட ஆரம்பித்தாள் சீதாபாட்டி..

புழக்கடை, அடுப்படி கொல்லைப்புறம், பூவரசமரக் கிணத்தடி, தண்ணி ஊத்தி வைக்கும் பெரிய அரிக்கேன் சட்டி, பெரிய பித்தளைக் குவளை நெல்லு, ஊறவைக்கும் பெரிய மரத் தொட்டி, சாமி ரூம் பொட்டகம்… எதையும் விட்டுவைக்கவில்லை. இருப்பினும் அந்த டாலர் கிடைக்கவே இல்லை.

 இரவு சீதா, கோவிந்தசாமியிடம் சொன்னபோது, “அது இலேசில அவுந்து விழாது. படு முடிச்சில்ல போட்ருந்தேன். எதையாவது வச்சி அறுத்துருந்தாதான் டாலரை எடுத்துருக்க முடியும்” என்று நெற்றி சுருங்க யோசித்தவர், “சரி சரி, விடுங்க.. வேலையப் பாருங்க” என்று யோசனையாகக் கொல்லைபுறம் சென்றுவிட்டார். சில விஷயங்களைத் தெரிந்துகொள்ள அமைதியாக இருக்கவேண்டும் என எண்ணிக் கொண்டார்.

இரண்டு மாதங்கள் சென்றிருக்கும். மிக விசாலமான கூடம் அது. மெரூன் நிறத்தில் சிமெண்ட் பூக்கள் செய்யப்பட்டு அங்காங்கே வழவழப்பாக பாலீஷ் செய்யப்பட்ட தரையில் அந்தப் பூக்கள் நட்சத்திர வடிவில் பதிக்கப்பட்டு, அத்தனை அழகான தரைத்தளம் அது. விநோதினிக்கு எப்பவும் கன்னங்களில் பாட்டியின், கிணற்றில் நீர் இறைத்து இறைத்தே, புடவை நனைந் திருக்கும். வயிற்றைப்போல் சில்லென்றிருக்கும் தரைகள் பட்டுக்கொண்டிருப்பது ரொம்ப பிடிக்கும். சளி பிடிக்கும் என அதட்டும் பாட்டியை, ஏமாற்றிவிட்டு தரையில் சில்லென்று படுத்துவிடுவது வழக்கம்.

ஏதேனும் பேய்க்கதை பேசும்பொழுதோ, பேய்ப்படம் பார்க்கும்பொழுதோ, கார்த்திகாவோடு, வாசுகி பெரியம்மா அறையிலும், இல்லையென்றால் பிரியாவோடு திலகா பெரியம்மா அறையிலோ விநோதினி படுத்துவிடுவது வழக்கம். திலகா பெரியம்மா அதிகம் பேசவே மாட்டாள். படுத்தவுடனே தூங்கிவிடுவாள். இரவுகள் திடீரென கனவு கண்டு கத்துவாள். இவளுக்கு அங்கு படுக்கவே பயமாக இருக்கும்.

அவளுக்கு எப்பொழுதுமே, பாட்டியோடு படுப்பதுதான் பிடித்திருந்தது. நடு இரவில் ஏதேனும் குரல் கேட்டோ, தண்ணி தவித்தோ, கண் விழிக்கும்பொழுதெல்லாம் கண்ணுக்குப் புலப்படும். அவளுக்குக் காரணம் புரியாத பெரியவர்களின் நிர்வாண உடல்களும், அர்த்தம் புரியாத பேச்சு ஒலிகளும் ஏனோ அவளுக்கு அருவெறுப்பூட்டின.

அன்று பக்கத்து வீட்டில் சியாமளா அக்கா பெரிய மனுசி ஆகிட்டான்னு வீடே கலகலப்பாக இருந்தது. தாத்தா எனக்கு மாம்பழ நிற பட்டுப்பாவடை தைத்து வாங்கி வந்திருந்தார்.

எங்கள் கடை வாசலிலேயே அந்த டெய்லர் கடை இருந்தது. அவருக்குச் சிறு பிள்ளைகளின் உடை தவிர வேறு எதுவும் தைக்கத் தெரியாது..

ஒரு முறை ஒரு பெண்ணுக்கு உள் பாவாடை தைத்துக்கொடுத்து, அது கழுத்துக்குக் கீழே இறங்காமல் போக, அப்படியே கடைவீதி வந்து சட்டையைப் பிடித்து சண்டை போட, தாத்தா தான் பணம் கொடுத்து அந்தப் பெண்ணைச் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தார்.

மாம்பழ நிறப் புதுப் பாவடையும், பாட்டி போட்டுவிட்ட இரண்டு ஜதை தங்க வளையலுமாக, காலையிலிருந்து விளையாடியவள். இரவானதும் கண்ணைச் சுற்றியது. “பாட்டீ பாட்டீ… வா பாட்டி படுக்க. எனக்குத் தூக்கம் வருது” எனக் குழறினாள்.

“பாரு, விநோ குட்டி. இந்த லட்டெல்லாம் நான்தானே உருட்டணும். நீ போய் கார்த்திகாவோட வாசுகி பெரியம்மாட்ட படுப்பியாம், நான் லட்டு செஞ்சி முடிச்சதும், உன்னைத் தூக்கிப்பனாம், சரியா!”

“அங்க பாரு, பாட்டிலில் பால் ஆத்தி வச்சிருக்கேன். நீ ஆடிக்கிட்டே சாப்பிட்டு இருக்க மாட்ட, எடுத்துக் குடிச்சிட்டு போ,” என்றாள் சீதா.

“சரி பாட்டி, உன் கைய பிடிச்சிட்டுதான் தூங்குவேன். சரி சரி, உன் புடவையக்கொடு. அதோட குஞ்சத்தை மூஞ்சில இழுப்பிக்கிட்டே தூங்கிடுவேன்..” என்றாள் விநோதினி.

“அந்த மர பீரோவில இருக்கும் எடுத்துக்கோ,” என லட்டு உருட்டுவதில் கவனமாக இருந்தாள் சீதா.

“பாட்டீ, நான் ஒண்ணு கேக்கவா, அப்பா, அம்மா வந்தா என்னைக் கொடுத்துடுவீயா? என்னைக் கொடுக்காத பாட்டீ. அந்த அம்மாவ பார்த்தாலே எனக்குப் பிடிக்கல. என்னைத் திட்டிட்டே இருக்காங்க. நான் கறுப்பா இருக்கனாம். நான் உன்னை மாதிரி கட்டையா இருக்கனாம். திமிராம் பாட்டீ எனக்கு. எனக்கு அந்த அம்மா வேணாம் பாட்டீ” என விம்மி விம்மி சொல்லி முடித்தாள் விநோதினி.

“வாடீ என் தங்க மயிலு, அழகு மயிலு, தங்க கலசம். யாரு வந்தாலும் உன்னைக் கொடுக்க மாட்டேன். போய் தூங்குடி கண்ணு..” என்பவளைப் பார்த்துச் சிரித்துக்கொண்டே தூங்கப் போனாள் விநோதினி.

காலையில் கண் விழித்ததும், சுற்றிலும் அனைவரும் பதற்றமாக நின்றுகொண்டிருக்க, தன்னையே அனைவரும்  பார்த்துக்கொண்டிருப்பதாய் உணர்ந்த விநோதினி கையைப் பிசைந்துகொண்டு கண்கலங்க நின்றுகொண்டிருந்த பாட்டியை நோக்கி நகர்ந்தாள்.

அப்பொழுதுதான் வாசுகி பெரியம்மா ஆற்றுக்குச் சென்று குளித்துவிட்டு, துவைத்த துணிகள் தோள்களில் தொங்க, புடவையை ஏற்றிக் கட்டிய உள்பாவாடையைச் சுற்றியவாறே இரு தோள்களையும் மறைத்துத் தொங்கவிட்டிருந்தாள்.

“நில்லுடி அங்கேயே!” எனச் சொல்லியவாறே பளீரென வாசுகி பெரியம்மா கன்னத்தில் அறைந்தார் சுப்புராயன் பெரியப்பா. நானும் கார்த்திகாவும் பெரிய இரும்புப்பூக்கள் நிறைந்த கேட்டில் ஏறி நின்றுகொண்டு நடப்பவற்றைப் பார்த்துக்கொண்டிருந்தோம்.

“கட்டின பொண்டாட்டிய வாசல்ல நிக்க வச்சி அறஞ்சிட்டீல்ல. நான் எங்க அம்மா வீட்டுக்குப் போறேன்” என்ற வாசகி பெரியம்மாவை யாருமே சமாதானமப்படுத்தவில்லை.

காரணம் புரியாமல் குழம்பியவளின் முன்பு, அவளது அறையிலிருந்து, எடுத்துவரப்பட்ட அவளது பெட்டியைத் திறந்தான் சுப்புராயன். அதில் காணாமல்போன விநோதினியின் டாலர், கொலுசுகள், தோடுகள் அதோடு நேற்றிரவு விநோதினி தூங்கியதும் அவளிடமிருந்து திருடப் பட்ட ஜோடி வளையல்களும் இருந்தன.

வாசுகி பெரியம்மா அழத் தொடங்கினாள். “இது நான் செய்யல. யாரோ செஞ்சிட்டு என் மேல பழியப் போடுறாங்க” என்று ஆவேசமாகக் அலறத் தொடங்கினாள்.

“சரி, நிப்பாட்டுடி திருட்டு முண்டை. எல்லாரு முன்னாடியும் என்னை இப்படி அசிங்கப்படுத் திட்டியேடி” என்பவனைப் பார்த்தாள் வாசுகி.

“சரி, போய் துணிய மாத்து வாசுகி.  போனாப்போகுது. இனி இப்படிச் செய்யாதே! உனக்கு என்ன வேணுமோ எங்ககிட்ட கேளு. விநோதினிக்குச் செய்யற மாதிரிதானே கார்த்திகாவுக்கும் எல்லாமே செஞ்சி தர்றோம். இந்த வீட்ல என்னத்துக்கு குறைச்சல்? எதுக்கு குறைச்சல்? நான் தான் காலைல விநோதினிக்குப் பால் கொடுக்க வர்றப்ப, வளையல காணுமேன்னு தேடி னேன். உன்னையும் ரூம்ல காணோம். திரும்பறப்ப  பெட்டிய அவசரத்துல நீ மூடி அதுலையே சாவிய வச்சிட்டு போயிட்ட. பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான். நல்ல பொண்ணு நீ. என்ன புத்தி இது உனக்கு…” என்றாள் சீதாலட்சுமி பாட்டி.

“இவ்வளவு அசிங்கத்து அப்பறம் நான் இங்க இருக்கமாட்டேன். நீ தனிக்குடுத்தனம் வரீயா இல்லையா?” என நடந்ததற்கு ஒரு மன்னிப்புகூட கேக்காமல் பேசும் மனைவியை விசித்திர மாகப் பார்த்தான் சுப்புராயன்.

“போடீ நாயே! நான் எங்கையும் வரமாட்டேன்” என தலையிலடித்துக்கொண்டான்.

துணிகளை அகற்றியவாறே வேகமாகத் தன் அறைக்குச் சென்றவள். அனைவரும் வாசுகி உடைமாற்றுகிறாள் என நினைத்திருக்க அடுத்த நிமிடமே வாயைப் பொத்திக்கொண்டே இருமியப்படியே, “அய்யோ, எரியுதே, எரியுதே… வலி தாங்க முடியலையே… காப்பாத்துங் களேன்…” என அலறியப்படியே “என்னைக் காப்பாத்துங்க. என் புள்ளைங்களுக்காவது என்னைக் காப்பாத்துங்க” என்று வலி தாங்காமல் அலறிய வாசுகியைத் தாங்கிப் பிடித்த சுப்பு ராயனிடம், “நீங்க நேத்து வாங்கிட்டு வந்த சயனைட்ட வாழைப்பழத்துல வச்சி தின்னுட் டேங்க,” என்று துடிதுடித்து உயிரைவிட்டிருந்தாள் வாசுகி.

“பாட்டீ… நான் அம்மாவோட போகல பாட்டீ… நானும் கார்த்திகாவோட இங்க இருக்கேன் பாட்டீ… கார்த்தீகாவ பார்த்துக்கற மாதிரி நீ என்னையும் பார்த்துக்க பாட்டி.. நீ சொன்ன தெல்லாம் கேட்பேன் பாட்டீ… சமர்த்தா சாப்பிடுவேன்… நகையெல்லாம் தொலைக்க மாட்டேன் பாட்டீ..” என அழுதுகொண்டே சீதா பாட்டியுடம் தூங்கிப்போனவளைத் தூக்கிக்கொண்டு பேருந்தில் ஏறினான் விநோதினியின் தந்தை கண்ணன்.

எழுத்து:தேவி லிங்கம், வேதாரண்யம்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
100 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!