நினைவலைகள் தொடர்ந்து வந்தால் – 13 || எழுத்து : விஜி முருகநாதன்

0 0
Spread the love
Read Time:6 Minute, 41 Second

மொபைலில் வந்த அரவிந்த்தின் படத்தைப் பார்த்து அதிர்ந்தவள், சட்டென்று நெட்வொர்க்கை ஆஃப் செய்தாள். திரும்பி வந்தவளை வரவேற்றது காலியாக இருந்த இருக்கை. முகுந்தன் சாப்பிட்டுவிட்டு அவசரமாகப் புறப்பட்டுக் கொண்டிருந்தான்.

“வர்றேன்.”

“போயிட்டு கால் பண்ணுங்க…”

“ம்…ம்…” என்றபடி ஷூவை அணிந்தவனையே பார்த்தாள். எப்போதும் வரும் ஆச்சரியம் அப்போதும் வந்தது. நினைத்தபோதெல்லாம் மேலே விழுபவன், கம்பெனிக்குப் போகும்போதோ அல்லது  வெளியூர் போகும்போதோ ஒரு முத்தமோ, மெல்லிய அணைப்போ… ஊஹும்… ரொமாண்டிக்கான விஷயங்களோ, ரசனையான பொழுதுகளோ எதுவுமே கிடையாது. சின்ன சில்மிஷங்கள், வெட்கத்துடன் கூடிய அவளின் சின்னச் சிணுங்கல்கள் இதற்கெல்லாம் இடமே இல்லாத தாம்பத்யமாகவல்லவா அமைந்து விட்டது  அவள் வாழ்க்கை.

அவனைப் பொறுத்தவரை பெண் என்பவள் ஆணின் உடல் சூட்டின் தேவைக்காகப் படைக்கப்பட்டவள், அவளுக்கென்று உணர்வுகள் கிடையாது அல்லது தேவையில்லை.

“ச்சை…” நெஞ்சுவரை கசந்துகொண்டே கதவைத் தாழ்ப்பாள் போட்டுவிட்டுத் திரும்பியவள், மறுபடியும் மொபைல் டேட்டாவை ஆன் செய்தாள். அரவிந்தின் சாட்டில் “சாரிங்க…அவர் அவசரமா வெளியூர் போகப் புறட்டுட்டு இருந்தாரு. அதான் கட் பண்ணினேன்…”

கொஞ்சம் நேரம் கழித்து மீண்டும் கால் வந்தது. கட் செய்தாள். பேசினால் அவள்தான் என்று கண்டுபிடித்து விடுவானே… கொஞ்ச நாள் கழித்து பேசி உண்மையைச் சொல்லி விடுவோம். அதையே டைப் செய்தாள்.

“ஓ.கே.ங்க. உங்க குரல் கேட்கணும்னு ஆசைப்பட்டேன். நீங்க சொல்றதும் சரிதான். திடீர்னு வந்தவன நம்பறதும் கஷ்டந்தான்…”

திடீர்னா? எப்போதும் என்று இல்லாவிட்டாலும் முகுந்தனின் முரட்டுத்தனங்களோடு அரவிந்தின் மென்மையை ஒப்பிட்டுப் பார்க்கவே செய்வாள். மலை உச்சியில் அவன் அணைத்த அந்த சில விநாடிகள் ,அவளுள் தங்கியிருந்தது. எவ்வளவு பட்டுப் போல், தென்றல் தீட்டுவது போல் அணைத்தான்.

ஒருவேளை தாத்தாவும் அவன் அப்பாவும் சம்மதித்திருந்து அவர்கள் திருமணம் நடந்திருந்தால் படுக்கையின் முட்கள் மல்லிகையாக, தினம் தினம் கொண்டாடும் இடமாக அல்லவா இருந்திருக்கும்? இப்படியெல்லாம் நினைத்துவிட்டு, ‘ச்சே…ச்சே… என்ன நினைப்பு இது…?” உள்ளுக்குள்ளே அதட்டிக் கொள்வாள்.

முகுந்தன் மட்டும் நல்ல கணவனாக, உடல் மேல் வைக்கும் ஆசையை மனதின் மேலும் வைப்பவனாக இருந்தால் அவள் ஏன் இப்படியெல்லாம் நினைக்கப் போகிறாள். பெருமூச்சுடன் சொல்லிக் கொள்வாள் மீண்டும்.

இப்போது அரவிந்த்தின் வருத்தம் தாக்க. ‘‘அதெல்லாம் இல்லீங்க… பேசுவேன். எனக்கா ஒரு மூடு வர்றப்ப கூப்பிடுறேன்.”

“அப்ப… இப்ப மூடு சரியில்லையா..? என்னங்க ஆச்சு… சொல்லாம்னா சொல்லுங்க…”

அவன் பதிலில் மனம் ததும்பியது. அப்படியே அவனிடம் தன் துக்கங்களைச் சொல்லிக் கதறிவிடலாமா.. என்று அடைத்துக்கொண்டு வந்தது.

அடக்கிக் கொண்டவள். ‘பொறு மனமே… பொறு… அவள்தான் எங்கே போய் விடப் போகிறாள்? இல்லை அவன்தான் எங்கே போய் விடப் போகிறான்? இப்போது வேண்டாம். பிறகு பார்த்துக் கொள்ளலாம். தனக்குள் நினைத்தவள்..

“நத்திங்…லேசா தலை வலிக்கறது. பிறகு பேசறேன்…”

“ஓ.கே.ங்க..டேக் கேர்…” என்றபடி ஷாட்டை ஆஃப் செய்தான்.

மொபைலையே  பார்த்தபடி நின்றவளுக்குக் கண்ணில் நீர் திரண்டது. திரண்ட நீரின் இடையே ஊடாடத்  தொடங்கின அவள் கவிதைகள்.

அவளுக்கென்று எவ்வளவு கனவுகள் இருந்திருக்கும்? இந்தச் சமூகத்தில் ஆணின் அந்தரங்கக் கனவுகளுக்கு அவன் நண்பர்கள் விழியாகிப் போகின்றனர். ஆனால் எக்காலத்திலும் பெண்களின் உடல் சார்ந்த கனவுகள் வெளியே சொல்லமுடியாத பார்வையற்றவை. தப்பித் தவறி வெளியே தெரிந்தால், தெரிவித்தால் ‘வெறி பிடித்தவள்’, ‘அலைச்சல் கேஸ்’ படிக்காமலேயே கிடைக்கும் கொடிகட்டிப் பறக்கும் பட்டங்கள்தான் எத்தனை? கவிதையாகவோ, கதையாகவோ வந்தால் யாரோ ஒருவருடையது என்று தப்பித்துக் கொள்ளலாம்.

மனதின் அந்தரங்கம் சொல் வழியே ஆட்சி செய்ய எழுத ஆரம்பித்தாள். உள்ளம் மெல்ல மெல்ல அமைதியாக ஆரம்பித்தது.

எழுதியவற்றைப் படிக்காமலேயே மூடி வைத்தவளின் கண்கள் மெதுவாக மூட ஆரம்பிக்க, வெகு நாட்கள் கழித்து மெதுவாக ஒரு முகம் அவள் கனவில் தென்பட ஆரம்பித்தது.

அது அரவிந்தின் முகம்.

தூக்கம் கண்களை வருட, ஏதோ ஒரு சந்தோஷம் மாய ஆட்சி செய்ய, நித்ராதேவியின் உலகிற்குள் சுற்ற ஆரம்பித்தாள். எங்கோ கிணற்றுக்குள் இருந்து ஒலிப்பது போல் மெலிதாகக் கேட்க ஆரம்பித்தது அலைபேசியின் அலைகள்…

‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌(அலைகள் சுழலும்)

எழுத்து : விஜி முருகநாதன்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!