திரும்பிப் பார்க்காமல் நடந்து சென்ற அபர்ணாவையே பார்த்துக்கொண்டு என்ன செய்வது என்று தெரியாமல் நின்று கொண்டிருந்தான் அரவிந்தன்.
விறுவிறுவென்று மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்க வந்து நின்றவளை ஆச்சரியத்துடன் ஏறிட்டார் வேதாசலம் (அபர்ணாவின் தாத்தா).
“என்னடா..?” என்றவரை ஏறிட்டுப் பார்க்காமலேயே சொன்னாள்.
“தாத்தா.. என்னை எங்காவது வேற ஊர் காலேஜ்ல சேர்த்துவிட்டு அங்கேயே ஹாஸ்ட ல்ல விடுங்க.. நான் இனிமே இந்த ஊருக்கு வரவே மாட்டேன். லீவு விட்டா நீங்க வர்ற மாதிரி பாருங்க..” குரல் மெல்லியதாக வந்தாலும், திடமாக உறுதியாக வந்தது.
காரணம் தெரிந்து பேத்தி மேல் சிறிது பரிதாபம் வந்தாலும், அவரின் சாதிப் பெருமை முன்னால் வந்து அதைத் துடைத்தெறிந்து விடவே, பெருமிதமாக மீசையைத் தடவி விட்டுக்கொண்டே, “சரி.. முதல்ல ரிசல்ட் வரட்டும். அதுவரைக்கும் வேணா உங்க அத்தை வீட்ல போய் இரு. முடிஞ்சா அங்கேயே காலேஜ்ல சேர்த்து விட்டுர்றேன். உங்க அத்தை யும் தனியாத்தான் பொங்கித் தின்னுட்டு கெடக்கறா. நீ போனா ரொம்ப சந்தோஷப் படுவா..” என்றார்.
வேதாசலத்தின் ஒன்றுவிட்ட தங்கை கமலா தஞ்சாவூரில் வசித்து வந்தாள். ஒரே நாளில் கணவனையும், பையனையும் காவேரியின் கோபத்துக்குப் பறிகொடுத்துவிட்டு தனிமரமாக இருப்பவள். கணவர் வைத்துவிட்டுப் போன பேங்க் பேலன்ஸும் சொற்ப நிலமும் அவள் வயிறு வாடாமல் மட்டும் அல்ல, தாரளமாகவே வர, கோவில் ,குளம் என்று எந்நேரமும் வாழ்வை மாற்றிக் கொண்டிருந்தாள்.
விஷயத்தைச் சொன்னதும், “எனக்கு என்னண்ணா யாருக்காக நானிருக்கிறேன்னு தெரியாம பொழச்சுகிட்டுக் கெடக்கேன். அபர்ணாவ நா பாத்துக்கறேன்னு சொல்றதைக் காட்டிலும், என்ன அவ பாத்துக்கறாங்கறதுதான் சரியா இருக்கும். அனுப்பிச்சு வைண்ணா..!” என்றாள் சந்தோஷமாக.
அடுத்த நாளே கருக்கல் பொழுதிலேயே வேதாசலத்தின் அம்பாசிடர் சோழ தலை நகரத்தை நோக்கி விரைந்தது. அபர்ணா தஞ்சைக்குப் போன கையோடு அவளுக்குப் புது அலைபேசி வாங்கிக் கொடுத்து நம்பரையும் மாற்றிக் கொடுத்துவிட்டார் தாத்தா. இத்தனை செய்தும், ஏன் செய்தேன்.. என்று அவரும் சொல்லவில்லை.. எதற்காகச் செய்தீர்கள் என்று இவளும் கேட்கவில்லை. ஏற்கனவே பதில் எழுதப்பட்ட கேள்விகளைக் கேட்டுப் பயன் என்ன..?
துடித்துப் போனான் அரவிந்த். என்ன முயற்சி செய்தும், அபர்ணா எங்கு சென்றாள் என்பது அவள் உயிரான சிநேகிதிகளுக்கோ உறவினர்களுக்கோகூட தெரியவில்லை.
அவன் அப்பாவிடம் சொன்னால் போதும் “ஏழு கடல், ஏழு மலை தாண்டி இருந்தால் கூட தகவல் சேகரித்துத் தந்து விடுவார். ஆனால் இன்னமும் அவருக்கு விஷயம் தெரியாது என்பதுடன் தெரிந்தால், வேதாசலத்தைவிட மோசமாக நடந்துகொண்டால் என்ன செய் வது என்ற பயமும் வர, அரவிந்தன் தன்னால் முயன்ற அளவு தேடினான்.
பாக்யாவின் காலைப் பிடிக்காத குறையாகக் கெஞ்சினான். “தே..எனக்குத் தெரிஞ்சா நீ இப்புடி கெஞ்சறப்பக் கூடவா சொல்ல மாட்டேன். அந்தப்புள்ள எனக்கே தெரியாம எங்கியோ போயிருச்சேன்னு வெசனப்பட்டுக் கெடக்கேன். நீ வேற வந்து தொணப்பிக் கிட்டு..” என்று விட்டாள். பாவம்.. அவள்தான் என்ன செய்வாள்..? யாருக்குமே தெரியாமல் மறைந்தல்லவா போய் விட்டாள் அபர்ணா.
ஆனால் அரவிந்தன்தான் அவளைக் காணத் துடித்தானே தவிர, அபர்ணா பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. எப்போதாவது மலைக்கோவில் சம்பவம் நினைவுக்கு வந்து சிலிர்க்க வைத்தாலும், அதைத் துடைத்தெறியக் கற்றுக் கொண்டிருந்தாள். அந்த நினைவு வரும்போதெல்லாம் அத்தையுடன் கோவிலுக்கு, கடைத்தெருவுக்குப் போய் மனதை திசை திருப்பிக் கொண்டாள்.
ஊர் நிலவரம் அறியவும் தோழிகள் பற்றித் தெரியவும் போன் செய்ய மனம் துடித்தாலும் அடக்கிக் கொண்டாள். அடங்காத மனதின் ஓசையாய் ஒருநாள் பாக்யாவிற்கு போன் செய்து பேசினாள். அவள் குரலைக் கேட்டு அழுதேவிட்டாள்.
அவள், “ஏம்..புள்ள..ஒரு போன் பண்ண இவ்வளவு நாளாச்சா..?” என்றவள் கலகலத்தாள்.
அபர்ணா எதையும் மறைக்கவில்லை. தாத்தா சொன்னதைக் சொன்னவள், “எனக்கு தாத்தாதான்டி எல்லாம்.. அவர மீறி எதுவும் செய்ய மாட்டேன் புள்ள..” என்றவளிடம்..
“ஏய்.. அந்தப் பயபுள்ள நெதமும் உன்ற நம்பரக் கேட்டு தொல்ல பண்றாண்டி.. இவனுக்குப் பயந்தே நா ஆஸ்பத்திரிக் காட்டு வழியாகப் போறதில்ல” சலிப்புடன் சிரித்துக்கொண்டே சொன்ன பாக்யாவிற்கு, அபர்ணா சொன்ன பதில் தேள் கொட்டிய அதிர்ச்சியைக் கொடுக்கவே, ‘ஊம்’ கொட்டக்கூட முடியாமல் மலங்க மலங்க விழித்தாள்.
அப்படி என்னதான் சொன்னாள் அபர்ணா..?
(அலைகள் சுழலும்)
எழுத்து : விஜி முருகநாதன்