
எதற்குச் சிரித்தார்கள்… தெரியாது. எதற்காகக் குதூகலித்தார்கள் தெரியாது… எதற்கோ சிரித்தார்கள்… எதற்கோ குதூகலித்தார்கள்… காரண காரியம் எதுவு மில்லை. ஆனாலும் சிரித்துக்கொண்டும், வாய் ஓயாமல் பேசிக்கொண்டுமே இருந்தார்கள், அபர்ணாவும் அவளின் செல்லத் தோழிகளும்.
சித்திரையில் பத்து மணி சூரியன் சுர்ரென சுட்டதெல்லாம் உரைக்கவே இல்லை. உலகத்தில் ஏதோ விஷயம் இருந்தது அவர்களுக்குப் பேச, காதலிலிருந்து கம்ப்யூட்டர் வரை.
பள்ளியிலிருந்து சமையல் வரை… பச்சைப் பசெலென்று சுற்றியிருந்த மரங் களும், கீழே தூரத்தில் தெரிந்த சிவன் கோவில் கோபுரமும், சந்தை கூடும் மைதானமும், நகரத்தின் மையத்தில் நின்றிருந்த கூரை மூடிய தேரும், தீப்பெட்டி வீடுகளும், பரவசத்தில் ஆழ்த்த… பாக்யாவின் அப்பா புதிதாக அவளுடைய பிறந்த நாளுக்குப் பரிசளித்திருந்த பைனாக்குலரில் தூரத்தில் தெரிந்த வீடுகளைக் கண்டுபிடித்துக் கொண்டிருந்தார்கள்.

வரிசை வைத்து மூவரும் பார்த்துக்கொண்டு “ஏய்பா எங்க வீடு டி..பள்ளிக் கொடம்டி..” என்று கத்திக் கொண்டிருந்தார்கள்.
அபர்ணாவின் முறை வந்ததும் சுற்றிலும் ஒவ்வொன்றாகப் பெரிதுபடுத்திப் பார்த்துக்கொண்டே வந்தாள். மலையின் உச்சிப் பகுதியை பைனாக்குலரின் கண்ணால் பார்த்தவள் அதிர்ந்தாள். பக்கத்தில் வந்து நின்றது அரவிந்தன் முகம். நெஞ்சுக்குள் படபடக்க, வயிற்றுக்குள் சிலீர் என்ற உணர்வு வர மீண்டும் பார்த்தாள்.இப்போது காணவில்லை மனம் கவர்ந்தவன் முகம்.
‘நல்லாத்தான் பைத்தியம் பிடிச்சுருக்கு நமக்கு’ என்று மனதிற்குள் நகைத்தவளின் முகம் பளீரெனவே “என்னடி..ரின் மினுமினுப்பு மூஞ்சில?” அபர்ணா மறைக்காமல் சொன்னாள். அவர்களும் அண்ணாந்து பார்த்தார்கள். யாரும் கண்ணுக்குப் படவில்லை. “சரி.. வாடி.. கோவிலுக்குப் போய்ப் பார்த்தா தெரியுது.. மையல் கொண்ட உன் கண்ணுக்கு மட்டுந்தான் உன் கண்ணாளன் முகம் தெரியுதா..? இல்லை எங்க கண்ணுக்கும் தெரியுதான்னு…!”
“சரி..சரி.. வாங்கடி …வெரசாப் போவோம்..” என்றபடி ஒருவருக்கொருவர் போட்டி போட்டுக்கொண்டு உச்சியை அடைந்தார்கள்.
முதலில் காலை வைத்த அபர்ணா “நான்தான் பர்ஸ்ட்” என்று கத்திக்கொண்டே கையைத் தூங்கினாலும், கண்கள் சுழன்றன.

‘எங்கே போனான்..?’ சுற்றியும் பார்த்தாள். காணவில்லை. அதற்குள்.. “புஸ்..புஸ்..” என்று மூச்சிரைக்க ஒன்றன் பின் ஒருவராக ஏறி வந்த மூவரும், ஆயாசமாக “ஸ்” என்றபடி படிகளை ஒட்டிய திட்டில் உட்கார்ந்தவர்கள் கேட்ட முதல் கேள்வியே.. “எங்கடி ஏ.ஆர்..?” ஆவலாகக் கேட்ட அவர்கள் கேள்விகளுக்குத் தோள்களைக் குலுக்கி, ‘தெரியாது’ என்று உதட்டைப் பிதுக்கினாள்.
“அப்ப உனக்கு மையல் கொண்ட கண்ணேதான் போ..” மீண்டும் கலகலத்தபடி அங்கிருந்த தண்ணீர்க் குழாயில் முகம், கைகால் கழுவிவிட்டு பூமிக்கும், வானத் திற்குமாய் உயர்ந்திருந்த அரசமரத்தடியில், சிம்மாசனமிட்டிருந்த மூஷிக வாகன னிடம் முதல் வேண்டுதலை வைத்துவிட்டு உள்ளே நுழைந்தனர். நுழைந்த நான்கு பேரும் தேடியது அவன் ஒருவனைத்தான்.

யார் கண்ணிலும் படவில்லை. கோவிலைச் சுற்றி வந்து கருவறைக்குள் நுழைந்தவர்கள் கண்ணில் பட்டான் அரவிந்த்.
‘தேடி தேடிக் கண்டுகொண்டேன்’ என்று இவர்கள் கண்கள் நோக்க, நோக்கிய வனோ இவர்கள் வந்ததே தெரியாமல் தேங்காய் பழத்தட்டைக் கொடுத்து பவ்ய மாக அர்ச்சனைக்குப் பேர் சொல்லிவிட்டு கண்களை மூடி நின்று கொண்டி ருந்தான்.
எதிர்ப்புறமாக இவர்கள் நிற்க, அர்ச்சகர் அர்ச்சனை முடித்து தீபாராதனை முடிந்து தீபத்தட்டை முன்புறம் நீட்டும் வரை கண் திறக்கவில்லை அவன். திறந்த பின்பும் கற்பூர ஆரத்தியை ஒற்றிக்கொண்டு தேங்காய் பழத்தட்டைக் கையில் வாங்கும் வரை கூட இவர்களை உணர்ந்தானில்லை.
பின்பு பார்த்தவன் கண்களில் மின்னல் மின்னியது. ஆனந்த அதிர்ச்சி. அன்று அவனுக்குப் பிறந்த நாள். கல்லூரிக்கு விடுமுறை எடுத்துக்கொண்டு மலைக்கு வந்திருந்தான். பிறந்தநாளும் அதுவுமாக மனம் கவர்ந்தவளின் தரிசனம். கேட்கவா வேண்டும். உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை சந்தோஷம் ஓடியதை இவர்களால் உணர முடிந்தது.

முருகன் தரிசனம் முடித்து இவர்கள் வரும் வரை காத்திருந்தவன், மேலே வள்ளி தெய்வானை சந்நிதிக்கு இவர்களை முன்னால் விட்டு பின்னால் ஏறினான். தொடர்ந்து வந்தவனால் தொடர முடியாமல் போனது அவர்களின் குதூகலப் பேச்சை. மௌனமாகப் படியேறினார்கள்.
முருகனின் மணவாட்டிகள் இருவரையும் கும்பிட்டுவிட்டு முன்னால் வந்து நின்று ஒரே நேர்க்கோட்டில் தூரத்தில் தெரிந்த சிவன்மலையையும், பழனிமலையையும் சூடம் ஏற்றி வணங்கி விட்டுத் திரும்பினார்கள். அதுவரை அரவிந்தும் பின்னால்தான் வந்து கொண்டிருந்தான்.
தோழிகள் இரண்டடி முன்னால் சென்றுவிட.. அப்போதுதான் யாரோ தின்று போட்டிருந்த வாழைப்பழத்தின் மேல் சரியாக அபர்ணா காலை வைக்க, தடுமாறியவளை “என்னங்க… பார்த்து…” என்றபடியே தாங்கிப் பிடித்தான். பிடித்தவனும் விடவில்லை, பிடிபட்டவளும் விடுபட விரும்பவில்லை.

எத்தனை நேரம் நின்றார்களோ, இவளைக் காணாமல் “அபர்ணா.. அபர்ணா” தோழிகளின் குரலில் சட்டென்று மோனநிலை கலைய, நின்ற நிலை தெரிய, முகமெங்கும் செம்பூக்கள் வரிகள் எழுத, உதடு துடிக்க, அவனிடமிருந்து விடுவித்துக்கொண்டு வேகமாகப் படிகளில் இறங்க ஆரம்பித்தாள் அபரிதமான அழகு கொண்ட அபர்ணா.
“ஏய்..எங்கடி போன..?” என்று ஆரம்பித்து தோழிகளுக்கு, அவளின் சிவந்து கிடந்த வதனமும், மேல்படியில் இறங்க ஆரம்பித்திருந்த அரவிந்தனின் மென்மையான முகமும் எதையோ உணர்த்த ஒருவர் கையை ஒருவர் பிடித்தபடி வேகமாக இறங்க ஆரம்பித்தார்கள்.
நடந்த அத்தனையும் வள்ளி தெய்வானையைத் தவிர யாரும் பார்க்கவில்லை என்றுதான் அபர்ணாவும், அரவிந்தும் நினைத்தார்கள். உலகம் முழுவதும் காதல் வசப்பட்டவர்களின் நினைப்பு இதுதான். தங்களைத் தவிர தங்கள் நேசம் யாருக்கும் தெரியாது என்று. ஆனால் உலகம் காதல் வசப்பட்டவர்களை எளிதாகக் கண்டுபிடித்து விடுகிறது.

ஆணும் பெண்ணுமாக இருவர் அருகருகே நிற்க, அவர்கள் காதலர்களா? இல்லை உறவு முறையா என்பதையெல்லாம் மிக எளிதாக ஊகித்து விடுகிறது. ஊகித்ததை வெளியே பரப்பவும் செய்கிறது.

கால் தடுக்கி விழப்போன அபர்ணாவை அரவிந்த் தாங்கிப் பிடித்த விதமும், அணைத்தபடி நின்ற சில விநாடிகளும் இன்னும் இரு கண்களும் பார்த்தோடு, கணக்குப் போடவும் வைத்து விட்டது.
அதனால்… அப்படிப் பார்த்ததால் விளைந்தன அனர்த்தங்கள் பல… அவை…
(அலைகள் சுழலும்)