“அபர்ணா… அபர்ணா…” என்ற கணவனின் அழைப்பில் மொபைலை ஆஃப் பண்ணிவிட்டு “வந்துட்டேங்க” என்றபடி படுக்கையறைக்குள் நுழைந்தாள். போர்வைக்குள் இன்னமும் கண்களை மூடியபடி படுத்திருந்த கணவனின் அருகில் சென்றவள் “என்னங்க” என்றாள்.
“மணி என்ன..?” என்றான்.
“ஆறுங்க” என்றாள்.
“ஆறுதானா… இன்னும் ஒரு மணி நேரம் டைம் இருக்கு ஆஃபீஸ் கிளம்ப..” என்றபடி “வா” என்று அவள் கையைப் பிடித்து இழுத்தான்.
“என்னங்க இது. விடுங்க..” என்றபடி திரும்பியவளை “வாடி” என்றபடி படுக்கையில் தள்ளி னான். சரியாக அரைமணி நேரம் கசங்கிய மல்லிகையாய் கிடந்தவளை உதறிவிட்டு பெருமூச்சுடன் கிடந்தவனிடம் இருந்து அருவருப்புடன் எழுந்தவளைப் பார்த்து, “ஜடம்…ஜடம்…” என்று திட்டியபடி வெறுப்புடன் திரும்பிப் படுத்துக் கொண்டான்.
மெதுவாக எழுந்து குளியலறைக்குள் நுழைந்து ஷவரைத் திருப்பிவிட்டு நின்றாள். அவன் முரட்டுத்தனத்தின் சாட்சியாக ஆங்காங்கே ‘சுரீர்’ என்றது. கண்கள் ஷவரின் அருவி பொழிய லுக்குப் போட்டியாக வழிந்தன.
அவளுக்கும் முகுந்தனுக்கும் திருமணமாகி இரண்டு ஆண்டுகள் முடிந்து விட்டன. கல்யாண மான புதிதில் இரவு, பகல் பாராத அவன் காமத்தை அவள் காதல் என்றுதான் நினைத்தாள். ஆனால் நாட்கள் செல்லச் செல்லத்தான் அது வெறி என்று புரிந்துகொண்டாள். அவளுக்குப் பிடிக்கிறதோ இல்லையோ அவனுக்குத் தேவைப்பட்டால், தேவைப்படும்போது அவள் ஒத்து ழைக்க வேண்டும். அந்த நேரத்தில் அவளுக்கு உடம்பு சரியில்லையா, மனது சரியில் லையா என்பது பற்றியெல்லாம் அவனுக்குக் கவலையில்லை. அவனுக்கு வேண்டியது வேண்டிய நேரத்தில் கிடைக்க வேண்டும்.
அவளுக்கு என்ன பிடிக்கும், பிடிக்காது.. ரசனை என்ற வார்த்தைக்கு அர்த்தமாவது தெரியுமா என்றுகூடத் தெரியாது. தெரிந்ததெல்லாம் நினைத்த நேரத்தில் அவளை நாடுவதும், பணம் சம்பாதிப்பதும்தான்.
அவன் ஒரு சிறிய கம்பெனி வைத்திருந்தான். மோட்டார் உதிரிப் பாகங்கள் செய்து விற் பனை செய்து கொண்டிருந்தான். நல்ல வருமானம் வந்து கொண்டிருந்தது. அதை மிகப் பெரிய கம்பெனியாக்க ஆசை கொண்டிருந்தான். அதற்குத் தேவையான பொருட்கள் வாங்க வும் மீட்டிங்குக்காகவும் அடிக்கடி வெளியூர் போய் விடுவான். அப்போதுதான் அவளுக்கு விடுதலையான நேரம். அதனால் அவன் வெளியூர் பயணங்களை ஆவலுடன் எதிர்பார்ப்பாள்.
அவனை விவகாரத்து செய்துவிட்டு போய்விடுவோமா என்றுகூட நினைப்பாள். ஆனால் என்ன சொல்லி விவகாரத்துப் பெறுவது? ‘குடித்தானா? அல்லது அடித்தானா?” இல்லையே. நாய் மாதிரி தோணும்போதெல்லாம் புணர்வது பிடிக்கவில்லை என்று சொல்ல முடியுமா? சொன்னால் அதெல்லாம் ஒரு வயசுக்கு சில பேர் இப்படித்தான் இருப்பாங்க. போகப் போக சரியாப் போயிரும். விட்டுப்பிடி. பொறுத்துப் போ…” என்றுதான் சுற்றம் சூழ அறிவுரை சொல்வார்கள்.
அதுவும் வேண்டிய வசதிகள், தனி கிரெடிட் கார்டு, போக வர அவள் வசதிக்கு கார் என்று எல்லாமே சமையலுக்குக் கூட ஆள் வைத்துக் கொள்ளத்தான் சொன்னான். ஆனால் அவளுக்குச் சமையல் கலை மேல் இருந்த காதலால் மறுத்துவிட்டாள். இதையெல்லாம் பார்த்தால் “பைத்தியக்காரி” என்று அவளைத்தான் எள்ளுவார்கள்.
அவளுக்கும் பிடித்த இயற்கை, ஓவியம், புத்தகம், கிளாசிக் சினிமாஸ், மியூசிக் எந்த ஒன்றி லாவது ஆர்வம் வேண்டுமே. ஊஹீம்… இதைச் சொன்னாலும், “இதெல்லாம் ஒரு பிரச் சினையா..? எம் புருஷங்கூடத்தான்..” என்று இழுப்பார்கள்.
இந்த வயதிலும் அவள் நலத்தையே எண்ணி அவளுக்காகவே வாழும் தாத்தாவை நினைத் தும் அடக்கிக் கொள்ளுவாள்.
அப்படியும் அடங்க மறுக்கும் உணர்வுகளே கதையாகவும், கவிதையாகவும் வெளியே தெரித் தன. இன்னமும் கதைகளை முகநூலிலோ, புத்தகங்களிலோ போடவில்லை. கவிதையை மட்டுமே வெளிக் கொணர்ந்திருந்தாள்.
ஈரோடு மாவட்டத்தில் இருந்து பத்து கிலோமீட்டர் தள்ளி இருந்த ஒரு கிராமத்தில் பிறந்தவள். அவளின் ஐந்தாவது வயதில் பெற்றோர் இருவருமே ஒரு விபத்தில் போய்விட, அப்பாவின் பாட்டி, தாத்தா வீட்டில் வளர்ந்தாள். அம்மா, அப்பா இல்லை என்ற குறையே தெரியாமல்தான் வளர்த்தார்கள். பாட்டி அவள் பத்தாவது படிக்கும்போது போய்விட்டாலும் தாத்தா தளராமல் தாங்கினார்.
பிளஸ்டூ வரை அங்கேயே இருந்தது. படிப்பின் லட்சியங்களோடு பதின்பருவத்தின் வண்ணக் கனவுகளும், அதற்கே உரிய உணர்வுகளும், தோழிகளுடனான குதூகலமுமாகப் பள்ளிக்குச் சென்று கொண்டிருந்தாள். பொதுப் பரிட்சை முடிந்து ரிசல்டுக்காகக் காத்திருந்த சமயத்தில்..
அவளது டீன்ஏஜ் கனவுகளுக்கு உயிர் கொடுப்பது போல் வந்தான் அவன்.
அவன் பெயர்…
(அலைகள் சுழலும்)
எழுத்து : விஜி முருகநாதன்