“சர்…சர்…” என்று பறந்த ராக்கெட்டுகளும், பூக்கள்கூட வெடிக்குமா என்ற கேள்விகளைத் தொடுக்கும் பாணங்களும் தாரை தப்பட்டை முழங்க “ஹோ” என்ற சப்தத்துடன் அலைகடலாய் மக்கள் ஆர்ப்பரிக்க, ஆடும் சூரனையே பார்த்துக்கொண்டு அமைதியாய் வேலுடன் காத்திருந்த முருகக் கடவுள் என்று கோலாகலமாக நடந்து கொண்டிருந்தது சூரன் திருவிழா.
அபர்ணாவின் மனம் முழுக்க சந்தோஷம் அலையடிக்க, எல்லாவற்றையும் முக்கியமாக முகுந்தனை மறந்து ஆனந்தமாக ஆடும் சூரனையே பார்த்துக் கொண்டு இருந்தாள். அதிகமாக ஆடும் எதுவும் அடங்கும் அழியும் என்பது போல ஒவ்வொரு சூரன் தலையையும் வெட்டி, கடைசியாக அவள் தாத்தா வீடு இருக்கும் திசையில் ஆடத் தொடங்கியது ஆள்சூரன் எனப்படும் ராஜாசூரன். புராணங்களில் போற்றப்படும் அசுரர் குலத் தலைவன் சூரபத்மன் பொம்மையாக இருந்தாலும் தலைவனலல்லவா..! அதற்கேயுரிய கம்பீரத்துடன் ஆரவாரத்துடன் ஆடிக்கொண்டு இருந்தான்(தது).
ஆடிக்கொண்டே ஆள் மாற்றினார்கள். அப்போதுதான் அவனைப் பார்த்தாள். யாரைப் பார்க்க மாட்டோம் என்று அலட்சியமாக நினைத்தாளோ, அவனும் அந்த வருடம் வருவான் என்று கனவு கண்டாளா..! என்ன..? ஆனால் அரவிந்த் இந்தத் திருவிழாவிற்கு மட்டும் தவறாமல் வந்து கொண்டிருந்தான் என்பது அவள் அறியாதது.
அவள் அந்தத் திருவிழாவை எவ்வளவு ரசிப்பாள்… உற்சாகமாக க் கலந்து கொள்வாள் என்பதெல்லாம் அவன் அறியாததா…? அதனால் நிச்சயமாக வருவாள் என்று வருடந்தோறும் அவளைப் பார்ப்பதற்காகவே வந்து ஏமாற்றத்தைத் தொண்டையில் குத்தும் வேலாக விழுங்கிப் போய்க் கொண்டிருந்தான்.
அந்த வருடமும் காலையிலேயே வந்துவிட்டு அவள் வந்திருக்கிறாளா என்று தேடிக்கொண்டு இருந்தான். அபர்ணா வந்ததும் கணக்குப் பிள்ளை மனைவி சமைத்த சாப்பாட்டைச் சாப்பிட்டுவிட்டுப் படுத்தவள்தான், அலுப்பில் மாலை ஐந்தரை மணிக்குத்தான் விழித்தாள்.
“என்னம்மா, இப்புடி ஒரு ஒரக்கம்? சரி.. அதுவும் நல்லதுக்குத்தான். ரவைக்கு கண் விழிக்கணுமே” சிரித்தார் தாத்தா.
அவருக்கு இணையாகச் சிரித்துக்கொண்டே அழகாக வேறு சேலை உடுத்தி ரெடியாகி கணக்குப்பிள்ளை மனைவியுடன் தெற்குத் தெரு, மேற்குத் தெரு என்று வரிசையாக ஆடிய சூரர்களைப் பார்த்துவிட்டு இவர்கள் வீதிக்கு வரும் போதுதான் அவனைப் பார்த்தாள்.
முதலில் அவன் பார்த்தால் இவளுக்கென்ன… என்று நினைத்தாலும், என்றோ ஆனந்தித்து ஆராதித்த நினைவுகள் துளைக்கவே, மெதுவாக உள் திண்ணைக்குள் சென்று உட்கார்ந்து கொண்டாள். அங்கிருந்து அரவிந்தன் நிற்பது நன்றாகவே தெரிந்தது. இன்னும் கொஞ்சம் சதை கூடி, கன்னம் பளபளக்க அடர்ந்த மீசையின் கீழ் பற்கள் பளபளக்க பக்கத்தில் நின்ற தன் தோழனிடம் எதையோ சொல்லிச் சிரித்தபோது தனக்குக் கல்யாணம் ஆகிவிட்டது என்பதையே மறந்து அபர்ணாவின் மனம் அவனை ரசிக்க ஆரம்பித்தது.
ரசித்துக்கொண்டே இருந்தவளின் செல்போன் ஒலியெழுப்பவே, யார் என்று பார்த்தாள். அரவிந்த்தான் அனுப்பி இருந்தான்.
“ஏன் தூங்கவில்லையா?”
“இல்லை… தூக்கம் வரவில்லை.”
“எதாவது மெலடியாகப் பாடல் கேளுங்க. தன்னப் போல தூக்கம் வந்திரும்…”
“உங்களுக்கு என்ன பாடல் பிடிக்கும்…?”
“வெள்ளைப் புறா ஒன்று…”
“அட… என் ஃபேவரைட்…”
டைப் அடித்துக்கொண்டே நிமிர்ந்து பார்த்தவளுக்கு ஏமாற்றம்… காரணம் அங்கே அரவிந்த் இல்லை.
ஏமாற்றத்துடன் உள்ளே திரும்பலாம் என்று நினைக்கும்போது சரியாக சூரன் தலை வெட்டவும் “அரோகரா… அரோகரா…” என்று பக்தர்களின் குரல்கள் வானைத் தொடவும், நாதஸ்வர ஓசையுடன் பூஜை நடைபெற ஆரம்பித்தது. உள்நடையில் நின்றபடியே கன்னத்தில் போட்டுக்கொண்டு மானசீகமாக ஆரத்தியைத் தொட்டு ஒற்றிக்கொண்டவளின் இதயத் துடிப்பை நிறுத்துவது போல் கேட்டது அந்தக் குரல்…
அது…
(அலைகள் சுழலும்…)
எழுத்து : விஜி முருகநாதன்