“அரவிந்த்” அதுதான் அவன் பெயர். அபர்ணாவின் டீன்ஏஜ் கனவுகளுக்குச் சொந்தக் காரன். அரவிந்த் அப்போது பெருந்துறையில் உள்ள கல்லூரியில் இரண்டாம் வருடம் பொறியியல் படித்துக் கொண்டிருந்தான். தினமும் பைக்கில் வந்து கொண் டிருந்தான்.
அரவிந்தின் அப்பா மளிகைக் கடையுடன் கூடிய ஸ்டேஷனரி கடையும் வைத் திருந்தார். அபர்ணாவின் பள்ளி அவர்கள் கடையைத் தாண்டித்தான் இருந்தது.
அவனுக்கு ஒன்பதரை மணிக்குத்தான் கல்லூரி ஆரம்பிக்கும். அங்கிருந்து இருபது நிமிடப் பயணம்தான். ஒன்பது மணிக்குத்தான் கிளம்புவான். இவள் பள்ளி ஒன்பதரை மணிக்குத்தான். பிளஸ் டூ என்பதால் முதல் வருடத்தில் இருந்தே எட்டரை மணிக்கே ஸ்பெஷல் கிளாஸ் எடுத்துக் கொண்டிருந்தார்கள்.
அபர்ணா, பாக்யா, வடிவு, கோகிலா நால்வரும்தான் ரொம்ப சிநேகிதம். இதில் கோகிலா மட்டும் கொஞ்சம் தொலைவிலிருந்து வந்து கொண்டிருந்தாள். மீதி இருவரும் அபர்ணா வீட்டுக்குப் பக்கத்திலேயே இருந்ததால் ஒன்றாகவே போவார்கள், வருவார்கள். நால்வருமே அழகுதான் என்றாலும் உயரத்திலும் அளவான அவயங்களாலும் அபர்ணா சிலை அழகுதான்.
அவள் அப்படி அழகாக இருப்பதில் மீதி மூவருக்கும் அவ்வளவு பெருமை. படிப்பில் ஒருவருக்கொருவர் போட்டிப் போட்டுக் கொண்டாலும் எதிலும் ஒருவரையொருவர் விட்டுக்கொடுக்கவே மாட்டார்கள். அதிலும் அபர்ணாவிற்குப் பெற்றோர் இல்லாததால் கூடுதலாக ஒரு குழந்தையைக் காபந்து செய்வது போல் பாதுகாப்பார்கள்.
முதலில் அரவிந்த் அவளைப் பார்ப்பதைக் கண்டுபிடித்ததே பாக்யாதான். பள்ளி விட்டதும் வீடு திரும்ப பத்து நிமிட நடைதான். ஆனால் அதை இவர்கள் அரை மணிநேரம் ஆக்கிவிடுவார்கள். மெது என்றால் அப்படி ஒரு மெது நடையுடன்… பார்த்த சினிமா, டீச்சர், ஊர்க்கதை, உலகக் கதை எல்லாமே அப்போதுதான். குனிந்த தலை நிமிராது, பார்ப்பவர்கள் கூட ‘அப்படி என்னதான் பேசிட்டு போகுங்க தெனத்திக்கும்..’ என்று நினைத்துக் கொள்வார்கள். அப்படி ஒரு ரகசியப் பேச்சும், சிரிப்புமாக போவார்கள்.
அப்போது பார்த்தால் பிரம்மா போல் மூன்று தலை ஒரு உடம்பாக நடந்து போவது போலத் தோன்றும். அப்படிப் பேசுவது பத்தாது என்று முதலில் வரும் அபர்ணா வீட்டின் முன்பு வேறு சிறிது நேரம் பேசிக் கொண்டிருப்பார்கள்.
“சிறுசுக… பேசிட்டுப் போகுதுங்க” என்று தாத்தாவும் கண்டுகொள்ள மாட்டார். அப்படி குனிந்த தலையுடன் வந்தாலும் ஒரு நாள் அரவிந்த் அபர்ணாவைப் பார்ப் பதையும் அவர்கள் அவன் கடை தாண்டியதும் பைக்கை எடுத்துக்கொண்டு கிளம்பு வதையும் கண்டுபிடித்துச் சொல்லிவிட்டாள் அறிவுக்குப் பஞ்சமே இல்லாத பாக்யா.
அபர்ணாவிற்கு அந்தக் கடையின் பெயர் அரவிந்த் என்று தெரியுமே தவிர, ஒரு இளைஞன் அங்கே இருப்பதோ, அவன் பெயர் அரவிந்த் என்பதோ தெரியாது. ஒரு நாளும் எந்தக் கடைக்கும் அவளை தாத்தா அனுப்பியதே இல்லை. வீட்டில் சேவகம் செய்யும் கணக்குப்பிள்ளையிடம் சொல்லிவிட்டால் சில மணித்துளி களோ, நொடிகளோ கிடைத்துவிடும். அந்த நிலையில்தான்…
“கொரங்கு…கொங்கு…மூஞ்சியப் பார்… கண்ணை நோண்டி விடுவேன்.. நோண்டி..” என்று ஓவர் ரியாக் ஷன் கொடுத்தவளை ஆச்சரியத்துடன் பார்த்தார்கள் மற்ற இருவரும். “என்னடி ..பாக்கி…என்ன கருவற..?”
“அதாண்டி ..அந்த அரவிந்த் கொரங்கு .. அபர்ணாவையே வெச்ச கண்ணு வாங்காம பாக்கறதும் வழியறதும்..தூ…”
“ஏய்..யார்டி..?” என்ற அபர்ணாவிடம், “அதாண்டி.. அந்த மளிகைக் கடக்காரன் மவன்..” என்றாள் பரம வெறுப்புடன்.
“விடுடி…பசங்கன்னா அப்புடித்தான்.. இதெல்லாம் கண்டுக்கப்படாது..” என்றாள் வடிவு.
அப்போதைக்கு அடங்கினாலும் தினமும் கடையைத் தாண்டும்போது திட்டுவதும், கடை இருக்கும் பக்கமாக அபர்ணா வந்து கொண்டிருந்தால் அவளை இந்தப் பக்கமாக வர வைத்து இவள் மாற்றிப் போவதுமாக இருக்கவே, கொஞ்சம் கொஞ்சமாக அபர்ணாவிற்கே ஆர்வம் தூண்டப்பட்டுவிட, மெதுவாக ஒருநாள் அந்தப் பக்கம் கண்களைச் சுழற்றியவளுக்கு மூச்சடைத்தது.
அத்தனை அழகாக இருந்தான் அவன். வெள்ளை வெளேர் நிறமும் ஷாம்புக் குளியலாக அலைந்த தலையும், காலர் இல்லாத டீசர்ட்டும், ஜீன்ஸும் அவனை தேவலோகத்து இந்திரனாக அவள் டீன்ஏஜ் கண்களுக்குக் காட்டியது.
‘இவனையா.. குரங்கு என்றாள் பாக்யா.. நல்ல ரசனை..’ என்று மனதிற்குள் நினைத்துக்கொண்டே அவனைப் பார்த்தாள்.
அவளையே தினம் பார்த்துக் கொண்டிருந்தவனின் கண்களோடு கண்கள் சரியாக மோதியதில் பளீர் என்று உள்ளுக்குள்ளே ஒன்று வெடித்தது. அது மாய உருக் கொண்டு மனதிலும் பரவசமாகப் புகுந்தது.
எல்லாவற்றையும் தோழிகளிடம் பகிர்பவள் என்பதால், “ஏய்..நல்லா தாண்டி இருக்கான். கொரங்காட்டமா எல்லாம் இல்லை” என்றவளைத் திகைப்புடன் பார்த்தவர்களுக்கு, அவள் முகத்தின் மையல் கணத்தில் விளங்கிவிட்டது. எத்தனை வருட நட்பு. அவள் மௌனத்திற்கே அர்த்தம் புரிந்தவர்களுக்கு, வாய் விட்டுச் சொன்னது புரியாதா?
அன்றிலிருந்து செம கிண்டல் பண்ண ஆரம்பித்தார்கள். அவனையும் அவளையும் இணைத்து. இத்தனைக்கும் ஒரு வாய் வார்த்தை பேசவில்லை. வெறும் பார்வைப் பரிமாற்றம்தான். அப்படி இருந்தும் அவர்கள் அப்படி கிண்டல் செய்ததற்கு ஒரு காரணம் இருந்தது. அவன் அபர்ணாவின் சாதியைச் சேர்ந்தவன். அந்தஸ்திலும் ஒன்றும் இளைத்தவனில்லை. அதனால் அவர்கள் இருவரும் இணையத் தடை யேதும் இல்லை என்று மகிழ்ந்து சிரித்தன அந்தப் பச்சைக்கிளிகள்.
ஆனால் அவர்கள் அறியாத ஒன்றும் அதில் இருந்தது என்பதை அவர்கள் அறி வார்களா என்ன? மக்கள் மனதும் மகேசன் மனதும் எப்போதும் ஒன்றாக நினைப்பதில்லையே!
தினமும் பார்ப்பதே போதுமென்பது போல் அவனும் அவளும் நினைத்து விட்டார் களோ என்னவோ? ஊரிலும் சிலர் கவனித்தாலும் ‘எல்லாம் வயசுக் கோளாறு‘ என்று பெரிதுபடுத்தாமல் அலட்சியமாகக் கடந்து விட்டார்கள்.
புத்தகத்தின் இடையே பாபர், அக்பர் முகங்களுடன் அரவிந்தின் முகத்தையும் சேர்த்தே பார்த்துப் படித்துக் கொண்டிருந்தாள் அபர்ணா. “ஏ.ஆர்.” என்றே அவளை அழைக்கத் தொடங்கி இருந்தனர் அவளின் செல்லத் தோழிகள். அபர்ணா @அரவிந்தின் செல்லச் சுருக்கம் அது. வாழ்க்கையின் வலிகளுக்குப் பழகப்படாத கன்றுகள் துள்ளின.
எப்படியோ கிண்டலும் கேலியுமாக இருந்தாலும் படிப்பையும் நிறைவாகவே படித்து இறுதிப் பரிட்சையையும் நன்றாகவே எழுதி முடித்துவிட்டனர் அவர்கள். அடுத்த நாள் இறைவனிடம் பொதுப் பரிட்சையிலும், வாழ்க்கைப் பரிட்சையிலும் வெற்றி பெற மனுக் கொடுக்க மலைக்குப் போக முடிவு செய்தனர். அதிகமாக வெளியே எங்கேயும் அபர்ணாவை அனுப்பாவிட்டாலும், சென்னியாண்டவன் மலைக்கு அனுப்ப மறுப்புச் சொல்லவில்லை தாத்தா.
அடுத்த நாள் ஒரே குதூகலமும் சிரிப்புமாக அந்த வட்டாரத்தையே அதகளப் படுத்திக்கொண்டு முதல் படியில் காலை வைத்தார்கள் அவர்கள். அவர்கள் சிரிப் பையும் சந்தோஷத்தையும் பார்த்து சந்நிதி வினாயகனும் தன் தும்பிக்கை உயர்த்தி ஆசிர்வதித்தான்.
எப்போதும் யூனிபார்மில் இருப்பவர்கள் வண்ண உடைகளிலும் காதிலும் கழுத்திலும் மேட்சிங்கான நகைகள் அலங்கரிக்க, முழங்கை வரையிலான வளையல்கள் சிணுங்கிச் சத்தமிட, உச்சபட்ச மகிழ்ச்சியோடு மலையேறிய அபர்ணாதான் அறிவாளா? இல்லை அவள் தோழிகள்தான் நினைத்தார்களா? அன்று அப்படி ஒரு நிகழ்வு நடக்குமென்று?
என்ன நடந்தது?
(அலைகள் சுழலும்)
எழுத்து: விஜி முருகநாதன்