
காதல் வசப்பட்டவர்கள் தங்களைத் தவிர வேறு யாருமே புறத்தில் இல்லை என்று நினைத்து மாயலோகத்தில் திளைத்திருக்க, பலரும் அவர்களைக் கண்காணிக்கவும் பேசவும் விளைகிறார்கள் என்பதை அறியாதவர்களாகவே வலம் வருகிறார்கள்.
அரவிந்தனும் அபர்ணாவும் அப்போதுதான் புத்தம் புதிதாக முகிழ்ந்திருந்த காதலின் நுழைவாயிலில் கால் வைத்து மனம் நெகிழ நின்றிருக்க, அவர்களின் மோனநிலையை இரு கண்கள் பார்த்ததோடு மட்டும் அல்லாமல் எடை போட்டும் விட்டன.
அது தலைமை குருக்கள் பாலசுப்பிரமணியத்தின் கண்கள். எப்போதும் சென்னியாண்டவர் கோவில், காலை திறந்தால் இரவு கடைசி பூஜை முடிந்து தான் நடைசாற்றுவார்கள். ஆனால் விசேஷ காலங்களில் தவிர மற்ற நாட் களில் நிரந்தரமான அர்ச்சகர்கள் தவிர அதிகமான அர்ச்சகர்கள் வர மாட்டார் கள். வரும் அர்ச்சகர்களும் திருமணம், கிரகப் பிரவேசம், கும்பாபிஷேகம் போன்ற வேறு விசேஷங்களுக்குப் போய் விட்டால், இருவர் மட்டுமே இருப் பார்கள். பாதுகாப்புக் கருதி பன்னிரண்டு மணி பூஜை முடிந்தவுடன் எல்லா சந்நிதிக் கதவுகளின் முன்னால் போடப்பட்டிருக்கும் இரும்புக் கதவை பூட்டி விடுவார்கள்.

அன்று அப்படிப் பூட்டிவிட்டு சாவியை இறுக்கி மடியில் முடிந்துகொண்டு வந்த குருக்களின் கண்ணில் பட்டது அந்தக் காட்சி. அந்த ஒரு நிமிடம் முருகன் – வள்ளியின் தினைப்புனக் காட்சிக்குச் சற்றும் குறையாது அவர் கண்ணில் விரிந்தது அபர்ணாவை – அரவிந்தன் அணைத்த காட்சி. ஆனால் அவர் பார்த்ததோ, கனைத்ததோ எதுவுமே அறியாமல் தங்களுக்குள்ளே மூழ்கிக் கிடந்தவர்களைப் பார்த்தபடியே மடமடவென்று கீழே இறங்கியவர் துணை குருக்களிடம் பொறுப்பை ஒப்படைத்துவிட்டு மொபட்டை எடுத்துக் கொண்டு நேராக வந்து நின்றது அபர்ணாவின் தாத்தாவிடம்.
காரணம் அபர்ணாவின் தாத்தா அவர்கள் குடும்பத்திற்குச் செய்திருக்கும் உதவிகள் கொஞ்ச நஞ்சமல்ல. அவரின் பெண் திருமணம் முடிந்ததே அவரின் உதவியால்தான். அந்த நன்றிக்கடன் தொண்டையை அடைக்க, அடைத்த தொண்டையில் இருந்ததை அப்படியே கொட்டிவிட்டார்.
குருக்கள் சொன்னதைக் கேட்டு அதிர்ச்சியின் உச்சத்திற்கே போனாலும், ஒரே ஒரு நிமிடத்தில் அத்தனையையும் விழுங்கிக்கொண்டு, “சரி.. சாமி.. கவனிக் கிறேன்… ரொம்ப நன்றி… சாப்பிட்டுப் போகலாமே..”
“இல்லைங்கய்யா.. பரவாயில்ல.. கண்ணால கண்டத சொல்லாம இருக்க மனசு கேக்கல. அதான் ஓடியாந்தேன். வரேங்க..” என்றபடி மொபட்டை திருப்பிக்கொண்டு போய் விட்டார்.

இது எதையும் அறியாத அபர்ணாவும் தோழிகளும் மீண்டும் கலகலத்தபடி இறங்கினாலும் அபர்ணா மட்டும் ஏதோ மயக்கத்தில் கிடந்தபடியே நடந்தாள். காரணம் அறிந்தவர்களாதலால் அதைப் பற்றிப் பெரிதுபடுத்தவும் இல்லை. கண்டும் காணதவர்கள் போல் மெதுவாகவே இறங்கினார்கள்.
அவர்கள் இறங்கிவரும் வரை பொறுமையாகக் காத்துக் கொண்டிருந்த அரவிந்த் கண்ணாலேயே காதல் சொல்லி விடைபெற்றுக் கொண்டு போய் விட்டான்.

“தாத்தா.. இந்தாங்க துன்னூரூ..” என்றபடியே கர்ச்சீப்பின் ஓரத்தில் முடிந்து வைத்திருந்த திருநீற்றை நீட்டியவளிடம்.. “ஏம்மா.. கோயில்ல கூட்டமா..? நல்லா வேண்டிகிட்டயா..?”
“கூட்டமெல்லாம் இல்ல தாத்தா. நல்லா கும்பிட்டோம்..” என்ற பேத்தியை ஆராய்ந்தன கண்கள். லேசான மிக லேசான ஒரு பரபரப்பும், கால் மாற்றி நின்ற தன்மையையும் நொடிப்பொழுதில் கண்டுவிட்டன அவர் கண்கள். அவர் வயதிற்கு எத்தனை எத்தனை பார்த்திருப்பார் இந்த மாதிரி.. கண்டுவிட்டதை எப்படிச் சரி செய்யலாம் என்பதையும், மனதிற்குள் தீர்மானம் செய்து கொண் டார்.
எப்போதும் எரிவதைப் பிடுங்கினால் கொதிப்பது அடங்கும் என்பதை அறியாதவரா அவர்?
எரிவதை எப்படி பிடுங்கலாம்..? அதே சமயம் சின்னஞ்சிறுசுகள் ஏதோ தெரியாத்தனம். சொன்னால் புரியாத வயதொன்றுமில்லை. இனிய உள வாகவே இன்னாத கூறல் செய்வோம் என்று தீர்மானித்தவர். அதன்படியே செய்தார்.

என்ன செய்தார்..?
(அலைகள் சுழலும்)

விஜி முருகநாதன்