காதல் நெருப்பில் எரிந்து கொண்டிருக்கும் அரவிந்தை அணைத்தால், கொதிக்கத் தொடங்கியிருக்கும் அபர்ணாவும் அடங்குவாள். அவர்கள் காதலும் சாம்பலாகிவிடும். மனதுக்குள் நினைத்தவர் அழைத்தது அரவிந்தை.
விசுவாசக் கணக்குப் பிள்ளையிடம் சொல்லி தங்கள் பெருந்துறை ரைஸ் மில்லுக்கு வரவழைத்தார். அதுவும் எப்படி வருவதும் போவதும் ரகசியமாக இருந்தால் அவனுக்கு நல்லது என்று, அவனின் இருபத்து மூன்று வயது இளமை மனதுக்குள் எதிர்க்கத்தான் தூண்டியது, ஆனாலும் அழைப்பது அபர்ணாவின் செல்லத் தாத்தாவாயிற்றே! மறுப்பேதும் சொல்லாமல் சென்றான்.
“வாப்பா…”
மௌனமாக ஏறிட்டான் அரவிந்த்.
“எனக்கு சுத்தி வளைச்சுப் பேசறதும் பிடிக்காது, பேசியதும் இதுவரைக்கும் இல்ல, நீ என்னவோ என் பேத்தியோட பழகறதா கேள்விப்பட்டேன்.”
“பழகலைங்க… நேசிக்கிறேன் கல்யாணம் பண்ணிக்கணும்னு ஆசப்படறேன்.” வெடுக்கென்று வந்த அரவிந்தன் குரல் அவரை மனதுக்குள் கோபப்பட வைத்தாலும் முகத்தில் புன்னகையும் குரலில் மென்மையும் மாறாமல் சொன்னார்.
“இந்த வயதில் வர்றதற்குப் பேரு காதல் இல்லப்பா. ஆனால் அதையெல்லாம் இப்பத்த புள்ளைங்க ஒத்துக்க மாட்டீங்க, அது இதெல்லாம் எதுக்கு? நீ சொல்ற காதலோ, கத்திரிக்காயோ, கலியாணமோ நடக்கறதுக்கு வாய்ப்பே இல்ல…”
“ஏங்க… ஏன் நடக்காது..?” என்ற அரவிந்தனின் குரலில் உலகக் காதலர்கள் அத்தனை பேரின் தவிப்பும் துடிப்பும் ததும்பியது.
“காரணமா..? மொதல்ல உங்கொப்பன் இதுக்கு ஒத்துக்குவானான்னு கேளு. அந்தஸ்துலயோ மத்ததிலியோ நம்ம ரெண்டு குடும்பமும் ஒண்ணுக்கொன்னு சளச்சதில்ல. ஆனா நம்ம சாதிப் பேரு வேணா ஒண்ணா இருக்கலாம். ஆனா உள்ளார இருக்கற பிரிவு வேற வேற. உங்க சனத்துல நாங்களோ எங்க சனத்துல நீங்களோ சம்பந்தம் வச்சுக்கறதில்ல.”
“இந்தக் காலத்துல இதெல்லாம் யாருங்க பாக்கறா?”
“பாப்பேன்.. நா மட்டும் இல்ல, உங்கப்பனும் நிச்சயமாப் பாப்பான். ஏன்னா நான் எங்க பிரிவுக்கும் உங்கப்பன் உங்க பிரிவுக்கும் தலைமை தாங்கறோம். கோவிலுக்கும் ஊர்த் திருவிழாவுக்கும் அவங்கவுங்க பிரிவுல யார் அதிகப் பணம் தர்றோம்னு போட்டியே வச்சுக்குறோம். இப்ப நாங்க சம்பந்தம் பண்ணினா அதுவும் சாதி விட்டு சாதி பண்ற மாதிரிதான்” சொன்னவர், “அதுவும் இதுவும் எதுக்குப்பா? இது நடக்காது. இனி எம் பேத்தி உம் பக்கம் திரும்பமாட்டா.. நீயும் எல்லாத்தையும் மறந்துட்டுப் படிக்கற வழியைப் பாரு..” என்றவர் ‘போலாம்’ என்பது போல கையசைத்தார்.
அவரிடம் மீண்டும் பேசி சமாதானப்படுத்தலாம் என்று நினைத்த அரவிந்தன், அவர் முகத்தின் கல் போன்ற பாவத்தில் ‘இவரிடம் பேசி இனி பிரயோசனமில்லை’ என்று நினைத்தவனுக்குள் ஒரே ஆறுதலாக மனதிற்குள் வந்தவள் அபர்ணாதான்.
அவள் ‘இவன்தான்’ என்று உறுதியாக நின்றுவிட்டால் பிறகு இந்தத் தாத்தா என்ன, உலகமே எதிர்த்தாலும் அவனுக்குக் கவலையில்லை. அவர்கள் திருமணம் நடந்தேவிடும்.
‘செய்வாளா..?’ என்று தோன்றும்போதே அவனுக்குள் அவர்கள் நேசத்தை வெளிப்படுத்திய அந்தச் சில விநாடிகள் தவிர ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டதோ, பகிர்ந்துகொண்டதோ இதுவரைக்கும் கிடையாது. அப்படியிருக்கும்போது அபர்ணாவிடம் எதிர்பார்ப்பது ஒரு நிமிடம் முட்டாள்தனமாகக் கூடத் தோன்றியது.
ஆனாலும் அதனாலென்ன ஒரு நொடி பார்த்து வயப்பட்ட ராமனும் சீதையும் இதுவரை பேசப்படுகின்ற காவியக் காதலர்களாகவில்லையா? அதுபோலவே இந்த அபர்ணா – அரவிந்த் காதலும் வாழும் வரை பேசப்படும். சிந்தித்தபடியே வீடு வந்து சேர்ந்தவனுக்கு அப்போதே அபர்ணாவைப் பார்த்து ‘யார் தடுத்தா லும் நீ என்னுடையவளாக உறுதியாக நிற்பாயா..?’ என்று கேட்கத் தவித்தான். அவன் வயது எல்லாவற்றையும் சமாளிக்கலாம் என்ற மகா துணிவை அவனுக்குள் விதைத்திருந்தது.
ஆனால் அடுத்த நாளிலிருந்து முழுப் பரிட்சை விடுமுறை விடுவதால் அவனால் அபர்ணாவைச் சந்திக்கவே முடியவில்லை. என்ன செய்வது என்று தவித்துக் கொண்டிருந்தான். ஆனால் அவனிடம் பேசியதோடு நின்றுவிடவில்லை அபர்ணாவின் தாத்தா. கொதித்த சூட்டைத் தணிக்கும் வேளையில் இறங்கியவர் அபர்ணாவை அழைத்தார்.
“நான் கேள்விப்பட்டதெல்லாம் உண்மையா அபர்ணாம்மா..?”
“என்ன தாத்தா கேள்விப்பட்டீங்க..?” என்றாள் அபர்ணா இலகுக் குரலில். அவளைப் பொறுத்தவரை மனதில் இருந்த காதல், மலைக் கோயிலுக்குச் சென்ற நாளில் இருந்துதான் வெளியே வந்து கனவு காண வைத்திருந்தது. குறுகிய காலமே ஆகி இருந்ததால் அரவிந்தன் போல் கல்யாணம் வரை எல்லாம் போகவில்லை. அதன் எதிர்காலம் பற்றிச் சிந்திக்கும் அளவிற்கும் வரவில்லை. அதனால் நிஜமாகவே தாத்தா கேட்ட கேள்வி அவளுக்குப் புரியவில்லை.
“அதாம்மா.. உனக்கும் அந்த மளிகைக் கடைக்காரர் மவன் அரவிந்தனுக்கும்..?”
தாத்தாவின் கேள்வியில் விதிர்த்துப் போனவளுக்குப் பேச்சே வரவில்லை. தலைகுனிந்து நிமிர்ந்தபோது, கண்ணில் நீர் ததும்பி நின்றது. வார்த்தைகள் கோர்வையாக வராமல் திக்கித்திக்கி வந்தன. “தாத்..தாத்.. நா..நா.. நான்.. அப்படியெல்லாம்.. அப்புடி..”
தன் பேத்தி திக்குவதை கவனித்தவர், விஷயம் அவ்வளவு கை மீறிப் போய் விடவில்லை என்று கண்டுகொண்டார். என்ன இருந்தாலும் செல்லப் பேத்தியல்லவா..? பனிப்பாறை மெல்ல மெல்ல உருகத் தொடங்கியதைக் காண்பிக்காமல், கடுமையான குரலில், “அப்படி எதுவும் இல்லை.. சும்மா போன இடத்தில் பார்த்ததுதான்னா விட்டுரு.. மறந்துரு.. இல்ல அதிகப்படியா எதாவது காதல் கீதல்னு சொல்லிட்டுத் திரிஞ்சின்னா, அப்புறம் உனக்குன்னு நீ மட்டுந்தான் இருப்ப.. இனி உன் இஷ்டம்..” சொல்லிவிட்டு விறுவிறுவென்று நடந்த தாத்தாவையே பார்த்த அபர்ணாவின் நெஞ்சில் பூகம்பம் வெடித்தது. ‘தலை முழுவதும் ‘உனக்குன்னு நீ மட்டுந்தான் இருப்ப’ என்ற வார்த்தைகள் சுற்றிச் சுற்றி வர, பொழுது விடிவதற்குள் ஒரு திடமான முடிவுக்கு வந்தவள், முதன் முறையாக அரவிந்தை தனியாகச் சந்திக்கத் தயாரானாள்.
பாக்யாவிடம் கடையில் இருந்த அரவிந்தனை மலைக்கோயில் அடிவாரத்தில் தனித்து இருந்த நாகாத்தம்மன் கோவிலுக்கு வரச்சொல்லி சேதி அனுப்பினாள். பவுர்ணமி, அமாவாசை தவிர மற்ற நாட்களில் யாரும் வராத, ஏன் பூசாரி கூட காலையில் வந்தால் தொடர்ந்து எரியக்கூடிய பெரிய நெய் விளக்கை ஏற்றிவிட்டு அடுத்த நாள்தான் வரும் நிலையுள்ள கோயில் அது.
அழைத்தவள் சொல்லப்போவது என்ன என்று தெரியாவிட்டாலும், அவளைச் சந்திக்கப்போவதே உற்சாக ராக்கெட்டில் பறக்கச் செய்ய, குறிப்பிட்ட நாளில் அபர்ணா சொன்னதற்கு அரைமணி முன்னதாகவே வந்து காத்திருக்க ஆரம்பித்தான் அரவிந்த்.
சந்திப்பின் ரகசியம் சந்தோஷமா? துக்கமா?
(அலைகள் சுழலும்)
எழுத்து : விஜி முருகநாதன்