அபர்ணா வரச் சொன்ன அன்றைய தினம் அவள் என்ன சொல்லப் போகிறாள் என்ற ஆர்வமும், அவளைப் பார்க்கப்போகிற ஆர்வமுமாக நாகத்தம்மன் கோவிலுக்கு அரைமணி நேரம் முன்னதாகவே போய் காத்துக்கொண்டு இருந்தான் அரவிந்தன். செவ்வாய், வெள்ளி, நாக பஞ்சமி தவிர வேறு நாட்களில் அங்கு ஜனங்கள் எட்டிக்கூடப் பார்க்க மாட்டார்கள். வருஷா வருஷம் பொங்கல் தினத்தன்று மட்டுமே ஜே..ஜே… என்று கூட்டம் இருக்கும். அதனால் இடைநாளில் வந்திருந்த அவன் வரவு பூசாரிக்கு ஆச்சரியத்தைக் கொடுக்கவே அவர் அவனைப் பார்த்துக் கேட்டார்.
“என்ன தம்பி… பொறந்தநாளா? முன்னாடியே சொல்லி இருந்தா சக்கரைப் பொங்கல் நிவேத்தியம் செஞ்சு எடுத்தாந்திருப்பேனே?”
பூசாரியின் விசாரிப்புக்கு ஆமாம் என்றோ, இல்லை என்றோ சொல்லாமல் மத்தியமாக தலையசைத்தவன் மனதிற்குள் ‘அபர்ணா வரும்முன் இவர் கிளம்பி விடவேண்டுமே’ என்று தவிப்பாக இருந்தது.
அவன் அவசரம் புரியாதவர் போல, மெதுவாக பூஜை செய்து பழமும், நாட்டுச் சர்க்கரை யும் கலந்து பிரசாதத்தை அவனுக்குக் கொடுத்தவர். பெரிய நெய்விளக்கைத் தூண்டு விட்டு, “கிளம்பறேம்மா” என்று புற்றின் முன் சொல்லிவிட்டுக் கிளம்பினார். பைக்கை கிளப்புவது போன்ற பாவனையில் நின்றிருந்த அவனிடம், “மலைக்குப் போயிட்டு போறீங் களா..?” என்று விட்டு பதிலை எதிர்பார்க்காமல் நடந்தவர், கொஞ்ச தூரம் சென்றதும் திரும்பிவந்து, “சீக்கிரம் கிளம்பிருங்க தம்பி. ஒவ்வொரு சமயம் அவ புத்துக்குள்ள புழுங்குச்சுன்னா வெளியே காத்தாட வருவா.. ஒண்ணும் செய்ய மாட்டா.. இருந்தாலும் ஏழடிக்கு உசந்து மூச்சு விட்டான்னா பயத்துல பத்துநா படுத்துருவீங்க.. நா..வாறேன்..”
சென்றவரையே பார்த்துக்கொண்டு இருந்தவனின் காதில் கேட்டது அந்த “உஸ்..உஷ்” சத்தம். பூசாரி சொன்ன நாகாத்தம்மன்தான் ஏழடிக்கு உயர்ந்து நிற்கிறாளோ? என்று சிறிது பயத்துடன் திரும்பிப் பார்த்தான்.
பக்கத்தில் இருந்த பெரிய வாதனா மரத்தின் பின்புறமிருந்து மீண்டும் அந்த உஷ் சத்தம் வந்தது. இப்போது அங்கே இருந்து பாக்யாவின் தலையும்,.. “இங்க வா..” என்ற மௌனமான சைகையும் வரவே, சுற்றும்முற்றும் பார்த்தபடி நடந்தான்.
மரத்தின் பின்னால் நின்று கொண்டிருந்தாள் அவன் தேவதை. தேவதையேதான்.
தலைக்குக் குளித்து தளரப் பின்னிய தண்ணிச்சடையில் கார்மேகத்தில் வரும் வெள்ளி மின்னலாய் நீள மல்லிகைச்சரம் மணக்க, நெற்றியில் சின்னதாக வைத்த சாந்துப் பொட்டு டன் மேலே திருநீற்றுக் கீற்றுக்குக் கீழே துளி குங்குமத்துடன் மஞ்சள் நிற பிளைன் தாவணியும் நல்ல சிவப்பில் மஞ்சள் பூக்கள் கொட்டிக் கிடந்த ரவிக்கையும், அதே டிசைனில் பாவாடையும் அணிந்து, அழகே உருவாய் நின்றவளை அள்ளி அணைக்க வேண்டும் என்று கையும், மனதும் பரபரத்தாலும், அவள் முகத்தில் இருந்த விரக்தியான ‘வெறிச்’ பாவம் யோசிக்க வைக்கவே, எதுவும் பேசாமல் தொண்டையைக் கனைத்தான்.
கூட வந்த பாக்யா ‘எந்த நாகாத்தம்மன் வந்தாலும் பார்க்கிறேன் ஒரு கை’ என்பது போல, கோவில் பக்கம் போய் நின்றுகொண்டாள். இவன் முன்னே நின்ற அபர்ணா பார்வையை உயர்த்தி, இவன் முகத்தைப் பார்க்காமல், “என்னை மன்னிச்சுக்கங்க. எங்க தாத்தாவுக்கு நாம பழகறது பிடிக்கல. அதுனால இனிமேல் நாம் பேசவோ, பார்க்கவோ வேணாங்க. மீறி இதுவரைக்கும் நான் எதாவது உங்கள ஊக்குவித்திருந்தால் மன்னிச்சுக்கங்க..”
தன் முகத்தைப் பார்க்காமல், சட்டை பட்டனில் முகம் பதித்துப் பேசியவளைப் பார்த்தவ னுக்குச் சிரிப்பு வந்தது. அடக்கிக்கொண்டு அவள் முகத்தைப் பார்த்தவன், “சாரி.. நீ எதுவும் இதுவரை என்னிடம் ‘ஊக்குவித்த மாதிரி’ ஞாபகமே இல்லயே..?”
முதலில் அவன் சொல்வது புரியாது விழித்தவள், பிறகு அவன் கேலி புரிந்தாலும் அதை ரசிக்காமல் கடுகடுவென்றே முகத்தை வைத்துக் கொண்டிருந்தாள். அவள் முகத்தின் கடுமையைத் கவனித்தவன், “அபர்ணா… கவனி. உங்கள் தாத்தாவை சமாதானப்படுத்திவிட லாம் என்றே எனக்குத் தோன்றுகிறது. நான் வேண்டுவதெல்லாம் உன் சம்மதந்தான். ப்ளீஸ்.. ப்ளீஸ்.. உன்னை வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன். தயவு செய்து உன் தாத்தா வுக்காக நம் எதிர்காலத்தைக் கெடுத்து விடாதே..” குரல் உயர்த்திப் பேசியவன் முடிக்கும் போது மென்மையாக முடித்தான்.
அவன் பேசி முடிக்கும் வரை அமைதியாக இருந்தவள் நிமிர்ந்தபோது கண்ணில் கரை கட்டியிருந்தது. “இல்லைங்க.. நீங்கள் சொல்வது போல நடக்க சான்ஸே இல்லை. முதலும் முடிவுமாகவும் சொல்றேன். நான் உங்களப் பாக்கறது இதுவே கடைசி தரம். ஒருவேளை கடவுள் நினைப்பும், உங்க நினைப்பும் ஒன்றாக இருந்து தாத்தா மனம் மாறினால் அப்போது உரிமையோடு சந்திக்கிறேன். வர்றேங்க..”
“அபர்.. அபர்ணா.. நீ.. நீ..” என்று திக்கியவனைக் கண்ணெடுத்தும் பாராமல் உறுதியான நடையில் பாக்யாவுடன் செல்பவளை அதிர்ச்சியுடன் பார்த்துக்கொண்டே நின்றான் அரவிந்தன்.
அவன் கண்முன்னே அவன் கட்டிய காதல் மாளிகை கைகழுவி, சுக்கல் சுக்கலாக உடைந்து கொண்டிருந்தது.
அலைகள் சுழலும்
எழுத்து : விஜி முருகநாதன்