“நம்பர் குடுத்து எனக்கு பண்ணச் சொல்லு புள்ள…” என்ற அபர்ணாவின் குரலில் தன் காதுகளையே நம்ப முடியாமல் நின்றாள் பாக்யா.
“என்ன புள்ள சொல்ற…” என்ற பாக்யாவின் அதிர்ந்த குரலுக்கு, “நீ குடு புள்ள… நா பேசிக்கிறேன்.” பதிலாக வந்த அபர்ணாவின் குரலுக்குக் கட்டுப்பட்டுக் கொடுத்தாள்.
தன் காதுகளையும் கண்களையும் நம்ப முடியாமல் நின்றாலும் மனதின் சந்தோஷம் உடலெங்கும் பொங்க, உடனே அந்த நம்பருக்கு கால் செய்தான் அரவிந்த். எப்படித் தெரிந்ததோ அல்லது எதிர்பார்த்தே இருந்தாலோ உடனே எடுத்தாள்.
“அப.. அபர்ணா.. எப்படி இருக்க..?” என்றவனுக்குத் தொண்டை அடைக்கவே, தொடர்ந்து பேச முடியாமல் திணறினான். ஆனால் எதிர்முனை அத்தனையும் ஏற்றுக்கொண்ட கம்பீரத்தோடு, “ஊம்” என்ற ஒற்றைச் சொல்லோடு நின்றது.
“நீ எங்க இருக்க அபர்ணா..?”
அரவிந்தின் கேள்விக்கு எதுவும் சொல்லாமல் அமைதி காத்தாள் அபர்ணா. அந்தச் சிறிது நேரத்து அமைதியைக் கூடத் தாங்க முடியாத அரவிந்த், லைன் கட்டாகிவிட்டதோ என்ற பதற்றத்தில் “ஹலோ… ஹலோ… அபர்ணா..” என்று கத்தினான்.
“ம்… இருக்கேன்…” என்ற அபர்ணாவின் குரலில் அமைதியானவன், அடுத்து வந்த வார்த்தைகளால் என்ன செய்வது என்றே புரியாத நிலைக்கே போய்விட்டான்.
“அரவிந்த்… எம் மேல நீங்க வெச்சுருக்கற நேசம் உண்மைன்னா இனிமே என்கிட்டப் பேசவோ, என்னைத் தொடர்பு கொள்ளவோ முயற்சி செய்யாதீங்க. அது என்னைய ரொம்பக் கஷ்டப்படுத்தும். நிச்சயமா, மிக நிச்சயமா நா எங்க தாத்தா பேச்ச மீறவே மாட்டேன். எனக்கு மல மேல இருக்கற முருகன விட என்னக் கஷ்டப்பட்டு வளர்த்த தாத்தாதான் பெரிசு. அதுனால எப்பாவது இதெல்லாம் கடந்து போயி, ஒரு வேளை எங்க தாத்தா சம்மதிச்சா, நாம கல்யாணம் பண்ணிப்போம். மறுபடியும் இந்த நம்பர முயற்சி செய்யாதீங்க. நா இந்த நிமிஷம் இந்த சிம்ம எடுத்துருவேன். பை. காலம் அனுமதிச்சா சந்திப்போம்…” என்றபடி தொடர்பைத் துண்டித்தாள்.
“ஹலோ… ஹலோ… அரவிந்தின் குரலுக்குப் பதிலாக ‘ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டுள்ளது’ என்ற பதிவு செய்யப்பட்ட குரலே பதிலாக வந்தது.
“டிங்…டிங்…” என்ற காலிங்பெல் ஓசையில் தன்னுணர்வுக்கு வந்தாள் அபர்ணா. அப்போதுதான் என்றோ கடந்த நினைவுகளை அசை போட்டுக்கொண்டே உட்கார்ந்துவிட்டது தெரிந்து பரபரப்பாக, “வர்றேன் அம்மு…” என்ற குரலுடன் மொபைலைக் கீழே வைத்தவள், அப்போதுதான் கவனித்தாள், தனக்கே தெரியாமல் தன் கை அரவிந்தனுக்கு அக்சப்ட் கொடுத்திருப்பதையும், உடனே அவன், “நன்றி மேம்” என்று மெசஞ்சரில் சொல்லி இருப்பதையும் பார்த்தவள், “நான்தான் அபர்ணா…” என்று டைப்படிக்கத் தொடங்கியவள், ஒரு கணம் யோசித்தாள்.
“ஏன்.. செந்தமிழ் என்ற பேரிலேயே தொடரக் கூடாது. இன்னும் கொஞ்ச நாள் கழிச்சு உண்மையச் சொல்லிட்டாப் போறது. நினைத்தவள் அதையே உறுதியாக்கி, முதலில் அடித்ததை அழித்து “வெல்கம்” என்று அடித்தாள்.
வந்த பூங்கொத்து சிம்பலுவுக்கு தம்ஸ்அப் காட்டிவிட்டு, கதவைத் திறக்கப் போன அபர்ணாவின் வாழ்வில் அந்த நிமிடத்தில் வேறொரு கதவும் திறந்தது. அது இதமா.. பதமா..? நல்லதா… கெட்டதா..?
(அலைகள் சுழலும்)
விஜி முருகநாதன்
‘தமிழ் டூ தமிழ்’ வாசகர்களுக்கு எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துகள். நலமே சூழ்க.