“கல்யாணமாகிவிட்டதா?” என்று அவள் கேட்ட கேள்விக்கு என்ன பதில் வரப்போகிறது என்று துடிதுடித்த மனதுடன் சாட் செய்து கொண்டிருந்த மொபைலையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள் அபர்ணா.
“இன்னும் இல்லைங்க. இப்பத்தான் பார்த்துட்டு இருக்காங்க.”
“ஏன் கேக்கறேன்னு தப்பா நினைக்காதீங்க. உங்க புரபைல்ல இருக்கற வயசு உண்மையா இருந்தா கல்யாண வயசு தாண்டிகிட்டே இருக்கே.”
“நிஜம்தாங்க. நாந்தான் இத்தன நாளாக தடுத்துகிட்டு இருந்தேன். இப்பத்தான் அப்பாக்கு ரொம்ப உடம்பு சரியில்லைன்னு சம்மதித்தேன்.”
“ஏங்க…? என்ன காரணம்?”
“அது… அது… போனத பத்தி இப்ப என்னங்க. உங்களப் பத்தி சொல்லுங்க. உங்க நிஜப்பேரு செம்மொழி தானா?”
“ஆமாங்க. கல்யாணமாகி இரண்டு வருஷமாகுது. கணவர் கம்பெனி வைத்திருக்கிறார். இன்னும் குழந்தைகள் இல்லை.”
“சொந்த ஊர் இதேதானுங்களா?”
“ஆமாம். சரிங்க. பிறகு பேசறேன். பை…” என்றாள்.
“ஓ.கே.ங்க… பேசலாம்…” என்றுவிட்டு ஷாட்டை ஆஃப் செய்தான்.
ஷாட்டிலிருந்து விலகியவளுக்குத் துக்கம் தொண்டையை அடைத்தது.
‘போனதைப்பற்றியா? அவளா..?’ வேறு எப்படிச் சொல்லுவான்? சொல்லமுடியும்? நிச்சயமாக அவளுக்குக் கல்யாணம் ஆன விஷயம் தெரிந்திருக்கும். இப்போதுதான் மனதைக் தேற்றிக்கொண்டு கல்யாணத்துக்குச் சம்மதித்திருக்கிறான். ‘அவனாவது நல்ல வாழ்க்கை வாழட்டும்.’ மெல்லிய பெருமூச்சுடன் நினைத்தபடி எழுந்தாள்.
செல்போன் ரிங்கிட்டது. முகுந்தன்தான் பேசினான். “மதியம் கல்கத்தா போறேன். திரும்பி வர ஒரு வாரம் ஆகும். என் டிரஸ்ஸெல்லாம் ரெடி பண்ணி வை. லஞ்ச் வீட்ல வந்து சாப்பிட்டுக்கறேன்.”
“ஓ.கே.ங்க” என்றவளுக்கு மனதிற்குள் சந்தோஷம் அலையடித்தது. உதட்டிலிருந்து ராகம் எழும்பியது. அதையும் மீறி ‘இந்த ஒரு வாரத்தில் இன்னும் கொஞ்சம் அரவிந்தனுடன் பேசலாமே’ என்று தோன்றியதை ‘ச்சே ச்சே…’ என்ன இது? ஏன் இப்படி? தன்னைத்தானே அதட்டிக் கொண்டாள். ஆனால் அதையும் மீறி அவனுடன் பேசும் ஆவல் மலை போல் வளர்ந்தது.
விபரீதமா… நல்லதா… என்றெல்லாம் சொல்லத் தெரியாமல் தன்னைக் கொட்டத் தவித்தாள். தன்னைப் பற்றிய எல்லாவற்றையும் அவனிடம் சொல்லி ஆறுதல் பெறத் தவித்த மனதை அடக்கும் வழி தெரியாமல் தவித்தாள்.
“என்ன யோசனைல நிக்கற..? சாம்பார் போடு…”ன்னு எத்தடின தரம் கேக்கறது?” முகுந்தனின் குரல் கேட்டு நினைவுக்கு வந்தாள். அப்போதுதான் லகுவான மனதிற்குள் அரவிந்த் ஆட்சி செய்ய, எப்படி சமைத்தாள், எப்போது முகுந்தன் வந்தான், அவனுக்குச் சாப்பாடு போடுவதைத்கூட மோன நிலையிலேயே செய்து கொண்டிருக்கிறாள் என்பது புரிந்தது.
அவன் கேட்ட சாம்பாரை, “சாரிங்க…” என்றபடியே ஊற்றினாள்.
“ஆமா… இந்த ஒரு வார்த்த கெடச்சுக்குது” என்றபடியே சாதத்தை பிசைய ஆரம்பித்த போதுதான், அபர்ணாவின் மொபைலில் மெசஞ்சர் கால் ஒலிக்க
ஆரம்பித்தது.
நெட்வொர்க்கை ஆஃப் செய்யாத தன் முட்டாள்தனத்தை நொந்தபடியே முகுந்தனின் கடுமையான பார்வையை முதுகில் வாங்கியபடி, ‘யார்?’ என்று பார்த்தவள் அதிர்ந்தாள்.
அங்கே மொபைலின் புல் ஸ்க்ரீனை அடைத்தபடி இருந்தது அரவிந்தனின் அழகான புரபைல் பிக்சர்.
(அலைகள் சுழலும்…)
எழுத்து விஜி முருகநாதன்