தேவலோகத்து மயன் வந்து அலங்கரித்து விட்டானோ என்று பார்ப்பவர்கள் ஒரு கணம் திகைத்துப் போகும்படி வானிலிருந்து இறங்கிவந்த நட்சத்திரங் களினால் அமைத்ததுபோல் வெண்ணிற விளக்குகள் அந்த ஹாலின் நாற்புறமும் சரமாய்த் தொங்க, முன்புறம் அமைக்கப்பட்டிருந்த செயற்கைக் குளத்திலிருந்து வர்ண நீரூற்று தனக்குள்ளிருந்து எழுந்து இதமான ஒலிக்குத் தகுந்தபடி தாளம் தப்பாது நடனமாடிக் கொண்டிருந்தது.
முகப்பில் அமைக்கப்பட்டிருந்த தென்னங்கீற்று தட்டியின் நாற்புறமும் அலங்கார மாக ரோஜாக்கள் செருகப்பட்டு இடையில் “சாதனைப் பெண்கள் -2022” என்ற ஜிகினா எழுத்துக்கள் மின்னின. பக்கத்தில் வைக்கப்பட்டிருந்த பிளக்ஸ் போர்டில் விருது பெறுபவர்களின் பெயர்களும், தலைமை தாங்குபவரின் பெயரும், சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்பவர்களின் பெயர்களும் வண்ண எழுத்துக்களில் பொறிக்கப்பட்டிருந்தன.
அதற்குக் கீழே பெரிய மேஜையில் பன்னீர் சந்தனம் குங்குமம் கல்கண்டு ஒரு தட்டிலும், இன்னொரு தட்டில் ரோஜாப் பூக்கள் ஒரு தட்டிலுமாக வைக்கப் பட்டிருந்தன. ஒரே மாதிரியான சிகையலங்காரத்தில், நகையலங்காரங்கத்தில் அழகான புடவை, எம்பிராய்டரி ரவிக்கையில் அதிக முக ஒப்பனையில், கண்ணில் உடல் மொழியில் தூக்கலான கர்வத்துடன் நான்கு இளம்பெண்கள் வந்தவர்களை வரவேற்றுக் கொண்டிருந்தனர்.
வரிசையாக வந்து நின்ற கார்களிலிருந்து இறங்கிய பிரபலமான பெரிய மனிதர் களை அல்லது அவ்வளவு நீளமான கார்களிலிருந்து இறங்கியதால் அப்படி ஒரு அந்தஸ்துடன் நினைக்க வைக்கப்பட்டவர்களை முகப்புப் பெண்கள் வாய் நிறைந்த புன்னகையில் தலையசைப்பில் கை கூப்பலுடன் பன்னீர் தெளித்து வரவேற்றுக் கொண்டிருந்தனர்.
விழா ஆரம்பிக்க சில நிமிடங்களே இருந்தன. உள்ளே வந்திருந்த விருந்தினர் களை மேடைக்கு அழைக்க வரவேற்புரை வழங்கும் பெண்மைக்குக்கு முன்புறம் வந்து நின்றார்.
வெளியே வேகமாக ஸ்கூட்டியை நிறுத்திவிட்டு அவசரமாக வந்தாள் அவள். நல்ல மஞ்சளில் உடம்பு முழுவதும் கருப்பில் வேல் கம்பு பிடித்திருந்த வீரர்கள் போல் டிசைன் செய்யப்பட்டிருந்த காட்டன் சேலை அவள் கட்டியிருந்ததால் ‘அழகான’ என்ற சொல்லைத் தன்னோடு சேர்த்துக் கொண்டது. முன்புறம் வந்து நின்றவளை ஏறிட்ட முகப்பில் நின்ற பெண்கள் குதிகால் செருப்பால் உயர்த்தப் பட்டிருந்த தங்கள் ஐந்தரை அடி உயரத்தை நினைத்து உள்ளுக்குள் எழுந்த பெரு மூச்சுடன் கை கூப்பினார்கள்.
வரவேற்றவர்களை மென்புன்னகையுடன் ஏறிட்டவள். “ஐயெம் அபர்ணா. விழா தொடங்கி விட்டார்களா?”
“நோ மேம். வித் இன் ஃபைவ் மினிட்ஸ்…”
“ஓ.கே.தேங்க்யூ…” என்றவள் அங்கிருந்த கல்கண்டை எடுத்து வாய்க்குள் போட்ட படி அரங்கத்துள் நுழைந்தாள். உறுத்தாத வெளிச்சம் அரங்கம் முழுவதும் படர்ந் திருக்க, ஏறத்தாழ எல்லா இருக்கைகளிலும் ஆட்கள் நிரம்பி இருந்தனர். கண் களைச் சுழற்றியபடி நின்றவளின் அருகில் டை கட்டி உயர்தர பேண்ட்சூட்டில் கிரீம் பூசி அமர்த்திய தலையுடன் தூக்கலான நறுமணத்துடன் வந்து நின்றான் அவன்.
“எஸ்.மேம்.. அவார்ட் வாங்குகிறீர்கள் என்றால் பர்ஸ்ட் ரோவில் சீட் ஒதுக்கி இருக்காங்க..” என்றபடி கேள்வியாக நோக்கியவனை நோக்கி… “எஸ்” என்றாள். “வாங்க” என்றபடி முன் நடந்தவனைத் தொடரவும், மேடையில் “தமிழ்த் தாய் வாழ்த்து” என்று அறிவிப்பு வரவும், நடந்து கொண்டிருந்தவர்கள் அப்படியே நின்றார்கள்.
தமிழ்த் தாயை வாழ்த்தி முடித்ததும் முன்புறம் வரிசையாகப் பெயர் ஒட்டப் பட்டிருந்த இருக்கையின் அருகே அவளை அழைத்துச் சென்றவன் கேள்வியாக நோக்கவும் “அபர்ணா.. எக்ஸலென்ஸ் அவார்ட்” என்றாள்.
அவள் பெயர் எழுதி இருந்த இருக்கையைக் காண்பித்தவன் அவள் அமர்ந்தவுடன் நகர்ந்தான். நல்ல வேளையாக எக்ஸ்கியூஸ்மீக்களை செலவு செய்யாத முதல் வரிசை. அமர்ந்தவள் பக்கவாட்டில் இருக்கையுடன் நீட்டியிருந்த பலகையில் தண்ணீர் பாட்டிலும் தட்டில் ஜரிகைப் பேப்பரில் சுற்றப்பட்டிருந்த ஸ்நாக்ஸ் ஐட்டமும் வைக்கப்பட்டிருந்தன. மேடையில் வரவேற்புரை தொடங்கியது.
அவளை அறிந்திருந்த ஒரு பெண்மணி வாழ்த்துக்களைக் கொடுத்தது நன்றியைப் பெற்றுக்கொண்டு அவசரமாக விலகினாள். மேடையைக் கவனிக்க ஆரம்பித்தாள். விருதுகள் வழங்க வந்திருந்த பணி ஓய்வு பெற்ற மதிப்பிற்குரிய நீதிபதி அம்மா பேச ஆரம்பித்திருந்தார்கள்.
“இங்கே விருது பெற வந்திருக்கும் அத்தனை பெண்களின் சாதனைக்குப் பின்னாலும் எவ்வளவு வலி, வேதனை, போராட்டங்கள் நிறைந்திருக்கும் என்பதை நான் உணர்கிறேன். இருந்தாலும் இவர்கள் அதை வென்று தங்களின் திறமையால் தங்களுக்கென்று முகவரி தேடிக் கொண்டவர்கள்.
இன்னும் பேசிக்கொண்டே போனவரின் குரல் காதில் கேட்டுக் கொண்டிருந்தாலும் ,மனம் பின்னோக்கிச் சுழல ஆரம்பித்தது.
இந்த அபர்ணா யார்? இவளின் வலி வேதனைகள் என்ன? அதையெல்லாம் கடந்து இன்று சாதனைப் பெண்ணாக நிற்க அவள் நடத்திய போராட்டங்கள்… எத்தனை ஏமாற்றங்களை விழுங்கிக்கொண்டு வெற்றிப் படிக்கட்டுகளில் ஏறினாள் என்பதை இனி வரும் அத்தியாயங்களில் பார்ப்போம்.
(அலைகள் சுழலும்)
நினைவலைகள்
தொடர்கதையாக
தொடரட்டும் உங்கள் பயணம்.
ஆரம்பமே எதிர்பார்ப்பைத் தூண்டுகிறது. சுவாரசியமான அத்தியாயங்களுக்குக் காத்திருப்புடன்.
மிக்க நன்றி
மிக சிறப்பு தமிழ் to தமிழ்
மிக்க நன்றி, தங்களின் ஆதரவு தொடரட்டும்.