நினைவலைகள் தொடர்ந்து வந்தால்…(14) || எழுத்து : விஜி முருகநாதன்

1 0
Spread the love
Read Time:10 Minute, 8 Second

ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்த அபர்ணாவின் காதில் சைலண்ட் மோடில் போட்டிருந்த மொபைலின் ‘கிர்’ ஒலி கேட்டது. முதலில் அலட்சியம் செய்த மனது கொஞ்ச நேரத்தில் விழித்து மொபைலைக் கைபற்றியது.

தாத்தாதான் பேசினார்.

“கண்ணு நல்லாருக்கியா..?”

“இருக்கேன் தாத்தா… நீங்க எப்ப இருக்கீங்க? மாத்திரை எல்லாம் சரியா நேரத்துக்குச் சாப்பிடுறீங்களா..?”

“எனக்கென்ன… கணக்குப்புள்ள வூட்லேர்ந்து வேளாவேளக்குச் சாப்பாடு வந்துருது. அவருதான் நேராநேரத்துக்கு மருந்தெல்லாம் குடுத்துருவாரு. மாப்பிள்ள எங்கம்மா..?”

“வெளியூர் போயிருக்காரு தாத்தா. வர பத்து நாளாகும்..”

“அப்படியா? சரி.. நீதான் அவர வுட்டுட்டு வர முடியாதுன்னு தீபாவளிக்கு வர மாட்டேனுட்ட. இன்னும் ரண்டு நாள்ல சூரந்திருவிழா வருது. சூரன் ஆடறதப் பாக்க உனக்கு அவ்ளோ புடிக்குமே. அவரும் ஊர்ல இல்ல… வந்துட்டுத்தான் போயேன். உன்னைப் பார்க்கணும்னு மனசு கெடந்து அடிச்சுக்குது.”

“சரி தாத்தா… அவர்கிட்ட கேட்டுட்டு நாளைக்கு இல்லன்னா மறுநா வாரேன். ராவுக்குத்தான ஆடும்.”

“சரிம்மா…” என்றபடி போனை ஆஃப் செய்தார்.

முகுந்தனை விட்டுட்டு போறதெல்லாம் அதுவும் சொந்த ஊருக்குப் போறனதுன்னா அவளுக்கென்ன கசக்கவா செய்யும்? ஆனால் முகுந்தன் விட மாட்டான்‌. எதாவது சாக்கு சொல்லுவான். முதலில் அவளைப் பிரிய‌ முடியாமல்தான் அனுப்ப மறுக்கிறான் என்று நினைத்தாள். பின்னர்தான் தெரிந்தது. அவனுக்கு உடல்தீ மூளும்போதெல்லாம் அணைக்க அவள் வேண்டுமே!

நினைத்தவளின் நெஞ்சில் ஆசை ஆசையாய் அலையடித்தன சூரன் திருவிழா நினைவுகள்…

தீபாவளி வரும்போதே வானத்தை அண்ணாந்து பார்க்க ஆரம்பித்து விடுவார்கள். பட்டாசு வெடிக்கத் தடை வருமோ என்று மட்டும் இல்லை… தீபாவளிக்கு மறுநாளில் இருந்து ஐந்தாம் நாள் அல்லது ஆறாம் நாள்  கந்தசஷ்டி அன்று கொண்டாடப்படும் ‘சூரன் திருவிழா’வை எதிர்பார்த்து.

பின்னே மழை ஒரு சொட்டு விழுந்தாலும் சூரன் ஆடமாட்டானே!

தாத்தா ஊரான சென்னிமலை முருகன் கோயிலில்தான் பாலன் தேவராயன் சுவாமிகள் கந்தசஷ்டி கவசத்தை அரங்கேற்றினார். கந்த சஷ்டி கவசத்தில் வரும் ‘சிரகிரி வேலவன் சீக்கிரம் வருக..’ என்பது அவங்க ஊர் முருகனைக் குறிப்பதாகும். (சிர+கிரி=சென்னி+மலை)

ஆக, தீபாவளிக்கு ஒரு மாதம் இருக்கும்போதே சூரன் பொம்மைகளை வெளியே எடுத்து ரிப்பேர் பார்த்து பெயிண்ட் அடிக்க ஆரம்பித்து விடுவார்கள். ஒவ்வொரு வருடமும் ரிப்பேர் செய்வார்கள். ஏனென்றால் ஊர் மைனர் குஞ்சு குளுவான்கள் அரக்கனை அடிக்கிறேன் என்று டமால் டுமீல் என்று போட்டு உடைத்து விடுவார்கள். கைவேறு கால் வேறாகக் கிடைக்கும் பொம்மைகளை ஒட்ட வைத்து ரூபத்திற்குக் கொண்டு வருவார்கள்.

தீபாவளிக்கு மறுநாள் முருகனுடன் சேர்த்து ஊரே காப்புக் கட்டிக் கொள்ளும். முக்கியமாக குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் கடும் விரதம் எடுப்பாங்க. பால் மட்டுமே ஆகாரம். வயதானவர்கள் சிலர் தேன் கலந்த தண்ணீர், மிளகை அடக்கிக்கொண்டுகூட விரதம் இருப்பாங்க.

ஊரின் மற்றொரு பெருமை கீழ் கோவிலிருந்து உற்சவரான முருகர் மேலே மலைக்குச் சென்று விரதம் இருந்து ஆறு நாட்கள் கழித்து அன்னையின் கையால் வேல் வாங்கிக் கீழே இறங்கி வருவார்.

சூரன் திருவிழாவன்று ஏழு மணிக்கே இரவு உணவு முடித்து மலையடிவாரம் போய்விடுவார்கள் அபர்ணாவும், கோழிப் பெண்களும். இப்போது போல் மெர்குரி விளக்குகள் ஜொலிக்காத காலத்தில் தீப்பந்த ஒளியில் தாரை தப்பட்டை ஒலியில்  பெரிய மீசையுடன் உருட்டுக் கண்களுடன் சூரனைப் பார்க்கவே பயமாக இருக்கும்.

ஒவ்வொரு ரத வீதிக்கும் முருகன் ஒரு சூரன் தலையை வெட்டுவார். “ஓ…”வென்ற பெருஞ்சத்ததுடன் கஜமுகசூரனைக் தூக்கிக்கொண்டு அங்கும் இங்கும் ஓடுவாங்க.. எப்போதுமே ஆடுவது அடங்கும் என்பது போல் சுப்பிரமணிய சுவாமி சப்பரத்தில் அலங்காரமாக அமைதியாக அமர்ந்திருப்பார். கடைசியாக ஆக்ரோஷமாக அவர் சார்பாக குருக்கள் நீண்ட வேலை சூரன் தலையில் மாட்டி இழுப்பார். சூரன் தலை கையோடு வந்தவுடன் சாமி சப்பரத்தில் ஒரு சுற்று சுற்றி அடுத்த வீதிக்குப் போவார். ஒரே சூரனின் உடம்பிலேயே ஒவ்வொரு தலையாகப் பொருத்தி சம்ஹாரம் செய்துவிட்டு கடைசியாக்க கோவில் வீதிக்கு வருவார். அங்கேதான்

ஆடுவார் ராஜா சூரன் அல்லது ஆள்சூரன். மற்ற சூரர்களை ஆள் சுமந்து கொண்டு ஓடுவார்கள். ஆனால் இந்த சூரனில் ஆள் புகுந்துகொண்டு ஆடுவார்கள். சூரனின் வயிற்றுப்பகுதியில் இரண்டு ஓட்டைகள் வைத்து உள்ளே தாங்கி வைத்துக்கொண்டு ஓடுவார்கள்.

ஒரு ஆள் சுமக்க முடியாது. பலபேர் மாற்றி ஆடுவார்கள். கடைசியாக எப்போதும் தாத்தாவின் ஆஸ்தான முடி திருத்தும் சேவகன் ஆடுவான். சூரன் ஆட ஓட காலின் கீழேயே சங்குச்சக்கரம் பட்டாசு வெடிப்பார்கள். போலீசார் லத்தியுடன் துரத்திக்கொண்டே இருப்பார்கள்.

ஐய்யாவு ஆடிக்கொண்டே நாங்களிருக்கும் இடத்திற்கு வந்து “சாமியோவ்…” என்றுவிட்டு ஓடுவான். குடிக்காமல் அவ்வளவு கனம் தாங்க முடியாது என்பதால் குடித்துவிட்டுத்தான் ஆடுவார்கள்.

அடுத்த முறை வரும் ஐய்யாவுவிடம் “தப்பில்லை” என்றால் “அரக்கன்தானே சாமி..”ன்னு காரைப்பல் காட்டிச் சிரிப்பான்.

கோவில் இருக்கும் வீதியில்தான் அவுங்க தாத்தா வீடும். அங்கதான் வெகுநேரம் ஆடும். கடைசியாக தேர்ப் படிக்கட்டுகள் மீது ஏறி கொக்காணி செய்து பழித்துக் காண்பிக்கும். அதைப் பார்க்க கீழே ஊரே குமுளிக் கிடக்கும். உடனே சாமி கோபம் கொண்டு மிக வேகமாகத் துரத்திப் போய் சம்ஹாரம் செய்வார். உடனே தாரை தப்பட்டைகள் நிறுத்தப் பெற்று நாதஸ்வர மேளம் முழங்க தீபாராதனை காண்பிப்பார்கள்.

எல்லாம் முடிந்து படுக்கப் போகும்போது மணி நடுஜாமம் தாண்டி விடும். படுத்தாலும் அந்த மெல்லிய குளிர்காற்றும் “ஓ”வென்ற சத்தமும் தீப்பந்த வெளிச்சத்தில் தெரியும் பிரமாண்ட சூரனும் உருட்டுக் கண்களும் மனதில் மிதந்து கொண்டேதான் இருக்கும்.

இப்போது  எல்லாமே நினைவின் எச்சங்கள்தான்.. என்றோ சாப்பிட்ட இனிப்பு நாவடியில் நிற்கும் தித்திப்புச் சுவைதான். அந்தத் தித்திப்பை மீண்டும் ருசித்தாலென்ன..? எண்ணியவளின் நினைவில் அடிக்கசப்பாய் வந்து நின்றான் அரவிந்தன்.

அவன்தான் வேறு ஊரில்  இருக்கிறானே… இதற்கெல்லாம் லீவு போட்டுக் கொண்டு வரமாட்டான். போகலாம் என்று முடிவு செய்தவள் முகுந்தனை அழைத்து தாத்தா கூப்பிட்டதைச் சொன்னாள். போன இடத்தில் காரிய வெற்றி என்பதாலோ என்னவோ பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை

முகுந்தனும். “போறதுன்னா போய்ட்டு வா…” என்று விடவே குஷியாகப் புறப்பட்டு விட்டாள்.

ஆனால்..

(அலைகள் ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌சுழலும்)

எழுத்து : விஜி முருகநாதன்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
100 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!