அரவிந்தின் குரல் உள்நடையில் கேட்டது.
“ஏங்க… இங்க செருப்ப விட்டுட்டுப் போலாங்களா? சாமி கும்பிட்டு வந்து எடுத்துக்கறேன்.”
கேட்கும் குரல் உள்ளே வருவதற்குள் உள்ளே போய்விடவேண்டும் என்று வேகமாக நடந்தாள். அல்ல அல்ல… ஏறக்குறைய ஓடினாள். ஆனால் அப்போதும் அவள் முதுகு அவன் கண்ணில் பட்டுவிட்டது.
பரபரப்புடன், “அபர்ணா வந்துருக்காங்களா?” என்று யாரையோ விசாரிக்கும் குரல் கேட்டது. அனேகமாக கணக்குப்பிள்ளையின் மகளாக இருக்கலாம்.
“வந்திருக்காங்க” என்று பதில் சொல்லும் குரல் கேட்டது.
அபர்ணாவிற்குச் சட்டென்று ஒரு கோபம் மனதில் சுழன்றடித்தது.
‘எதற்காக இந்தக் கண்ணாம்பூச்சி விளையாட்டு?’ நினைத்தவள் அரவிந்தனுக்கு மெசஞ்சரில் சாட் பண்ண ஆரம்பித்தாள்.
“அரவிந்தன்… நான்தான் அபர்ணாவும் செம்மொழியும். இவ்வளவு நாள் உங்ககிட்ட உண்மையை மறைத்து உரையாடிக் கொண்டிருக்கிறேன். ஆனால் நான் இங்கு வந்ததிலிருந்து உங்களைக் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறேன். இந்தப் பரபரப்பு எதற்காக? இப்போது எனக்குக் கல்யாணமாகி விட்டது. அதனால் தேவை இல்லாத கனவுகளை நிறுத்திவிட்டு, வீட்டில் சொல்லும் பெண்ணைக் கல்யாணம் செய்து கொள்ளுங்கள். நான் உங்களுடைய இறந்த காலம்…” கூறி முடித்தாள்
அந்தப் பக்கம் மௌனமாக இருந்தது. அனுப்பிவிட்டு படுத்துவிட்டாள்.
ஒரு மணிநேரத்திற்குப் பின் மெசஞ்சர் வந்த சத்தம் கேட்டது.
“வாட் எ சர்ப்ரைஸ்? அபர்ணாவா செம்மொழியாள். ரொம்ப சந்தோஷமா இருக்கு. ஆனால் நீ எப்படி என் இறந்த காலம் ஆவாய்? இப்போதும் நீ மனதில் இருப்பதால்தான் திருமணத்தை மருத்துக் கொண்டே இருக்கிறேன். இப்போது மட்டுமல்ல… எப்போதும் உன்னையேதான் காதலித்துக்கொண்டே இருப்பேன்..” என்றான் உறுதியாக.
படித்தவளுக்கு “ஓ.கே.. இது குறித்து ஊருக்கு வந்து பேசுகிறேன்..” முடிவெடுத்தாள்.
அடுத்த நாள் அடம்பிடித்து ஊருக்குத் திரும்பினாள். திரும்பியவளுக்குக் காத்திருந்தது ஒரு அதிர்ச்சி.
அது ஏற்படுத்திய திருப்பங்கள்..
எப்போதும் உற்சாகமாக இருக்கும் பெண் அவள். ஆனால் அன்று மனசு ஒரு நிலையில் இல்லை.
தாத்தா “ஏம்மா.. மாப்பிள்ளதான் ஊரில இல்லயே.. மெதுவா ஞாயித்துக்கிழம கறி காச்சி தின்னுட்டு போலாமில்ல?”
“இல்ல தாத்தா.. திடீர்னு வந்தாலும் வந்துருவாரு. மறுக்கா அவரையும் கூட்டிட்டு வாரேன்..” என்று அவரிடம் விடைபெற்று வந்துவிட்டாளே தவிர ஏனோ மனம் நடக்கக்கூடாதது எதுவோ நடக்கப் போவது போல அடித்துக்கொண்டே இருந்தது.
அந்தக் குழப்பத்தோடே வீட்டிற்குள் காலடி வைத்தவளுக்கு அங்கே நின்றிருந்த கார் குழப்பத்தை ஏற்படுத்தியது.
அந்தக் கார்…?
(அலைகள் சுழலும்)
விஜி முருகநாதன்