“க்குகூ… க்குகூ…” எப்போதும் போலவே அன்றும் குயில் கூவும் சத்தம் கேட்டு கண் விழித்தாள் அபர்ணா. கடிகாரத்தைப் பார்க்காமலேயே சரியாக மணி நான்கு என்று சொல்லிவிட முடியும். அவ்வளவு சரியாக, ஒரு நாள் தவறாது அந்த நேரத்திற்குக் கூவும். ஆச்சரியமாக இருக்கும் அபர்ணாவிற்கு, ‘எப்படிச் சொல்லி வைத்தாற்போல் தினமும் இந்த நேரத்திற்குக் கூவுகிறது’ என்று.
அவள் வீட்டின் பின்புறம் இருக்கும் பெரிய மாமரத்திலிருந்துதான் கூவும் அது. அதைத் தொடர்ந்தாற்போல் வரிசையாக “க்கூ…க்கூ..” என்று பல குயில்கள் கூவத் தொடங்கும்.
“ஏய்… எழுந்திரு. விடியப்போகுது… சீக்கிரம்…” என்று முதல் குயில் எழுப்ப… “இதோ எந்திருச்சிட்டோம்..” என்று மற்ற குயில்கள் கூவுவது போல் தோன்றும் அவளுக்கு.
அன்றும் அந்தக் குயில்களின் கூவலை ரசித்துக்கொண்டே படுத்திருந்தவள், மனதிற்குள்ளயே “ஒன்று.. இரண்டு..” என்று இருபத்தி ஐந்து முறை எண்ணத் தொடங்கியபடி தன் மூச்சையே கவனிக்கத் தொடங்கினாள். எண்ணிக்கை முடிந்ததும் மெதுவாகக் கண் விழித்து, ஒட்டியிருந்த குளியலறைக்குள் சென்றவள், கால் மணி நேரத்தில் மேலே தூக்கிச் சொருகிய கொண்டையும், லேசான பருத்திக் குர்த்தாவும் பேண்டும் அணிந்து வெளியே வந்தாள்.
படுக்கையறைக் கதவை மெதுவாகச் சாத்திவிட்டு ஹாலுக்கு நுழைந்தாள். அங்கிருந்த யோகா மேட்டை விரித்து யோகா செய்ய ஆரம்பித்தாள். சரியாக முக்கால் மணி நேரம் உடலைத் தளர்த்திக்கொள்ளும் பயிற்சி. முடித்து கடிகாரத்தைப் பார்த்தாள். மணி ஐந்து என்றது. மீண்டும் கண் மூடி அமர்ந்தவள் ‘ஓம்’ என்ற ஓங்காரத்துடன் புருவ மத்தியில் உள்ளம் குவித்து தியானம் செய்து மனமும் உடலும் தெளிவாக ஐந்தரைக்கு எழுந்தாள்.
சமையலறைக்குள் நுழைந்து காபி மேக்கரில் தூளைப் போட்டு தண்ணீர் விட்டு ஆன் செய்துவிட்டு டைனிங் டேபிள் மேசையில் இருந்த மொபைல் போனை எடுத்து நெட்டை ஆன் செய்தாள். வரிசையாக வந்து விழ ஆரம்பித்தன குறுஞ்செய்திகள் மெசஞ்சரில்.
சிலது ‘வணக்கம்’ என்றது. சிலது ‘குட்மார்னிங்’ என்றது. லேசாகச் சிரிப்பு வந்தது. தூங்கவே மாட்டார்கள் போல.
பதிலுக்கு வணக்கம் எதுவும் போடாமல் கடந்தாள். ‘வணக்கம்’ என்றோ, ‘குட்மார்னிங்’ என்றோ பதில் அனுப்பினால் தொடர்ந்து ‘காபி குடித்தீர்களா?’ என்று தொடருவார்கள்.
‘குடித்தேன்’ என்றால் மீண்டும் ‘சாப்பிட்டீர்களா?’ என்பார்கள்.
‘டேய், மணி ஐந்தரை… தொல்லைக்குப் பிறந்தவர்களே..’ என்று கடுப்பாவாள். அதனாலேயே பதில் சொல்லாமல் விட்டுவிடுவாள்.
அவளுக்கு நன்றாகக் கவிதை எழுதவரும். ஒரு வருடத்திற்கு முன்பு வாங்கிய புது ஆண்ட்ராய்டு போனில் முகநூலில் தன் பெயரை விடுத்து ‘செம்மொழியாள்’ என்று முகம் மறைத்து தமிழன்னை முகப்புப் படம் வைத்து, ஒரு கணக்கைத் தொடங்கி தனது கவிதைகளைப் பதிவு செய்யத் தொடங்கினாள்.
ஆறே மாதங்களில் அவள் கவிதைகளை ரசிக்கத் தொடங்கிய நண்பர்களின் எண்ணிக்கை நாலாயிரத்தைத் தொட்டுவிட்டது. ஒருநாள் அவள் தன் கவிதைகளை பதியாவிட்டால் ‘ஏன்’ என்ற கேள்விக்குப் பதில் சொல்லி மாளாது. அந்த அளவிற்குச் ‘செம்மொழியாள் கவிதைகள்’ முகநூலில் சக்கை போடு போட்டது.
முதல் நாள் இரவு அவள் பதிவு செய்திருந்த கவிதைக்கு, எழுநூறு லைக்குகள், ஐந்நூறு கமெண்டுகள், நூறு ஷேர்களைக் காட்டியது. எப்போதும் போலவே அதிக அளவில் ப்ரண்ட். ரிக்வெஸ்ட்டுகளும் வந்திருந்தன. இதெல்லாம் மறுபடி பார்த்துக் கொள்ளலாம் என்று நினைத்தபடி மொபலை ஆஃப் செய்யப் போனவள் கண்ணில் பட்டது, ‘அரவிந்த்’ என்ற பெயரில் இருந்த ரிக்வெஸ்ட். எங்கிருந்தோ வந்து குளுகுளு தென்றல் இதமாகத் தழுவத் தொடங்கியது போல் உணர்ந்தவளின் மனதிற்குள் என்றோ சாப்பிட்ட இனிப்பின் மிச்சமாய் இறங்கியது ஒரு தித்திப்பு.
அந்தத் தித்திப்புடனேயே அந்தப் பெயரைத் தொட்டாள். விரிந்த முகப்புப் படத்தில் அழகாகச் சிரித்தான் அவன். என்னவென்று சொல்லத் தெரியாத உணர்வுடன் மிச்ச விவரங்களைப் பார்க்கத் தொடங்கியவளின் காதில் விழுந்தது “அபர்ணா… அபர்ணா…” என்ற அவள் கணவன் முகுந்தனின் குரல்.
(அலைகள் சுழலும்)
விஜி முருகநாதன்