ஊர்கூடித் தேர் இழுத்தல் கேள்விப்பட்டிருப்போம், ஊர்கூடிக் கல்லெறிந்து ஒருவரை ஒருவர் தாக்கும் திருவிழாவைக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இரண்டு கிராம மக்கள் ஒரு இடத்தில் ஒன்றுகூடி கற்களை ஒருவர் மீது ஒருவர் எறிந்துகொண்டு படுகாயம் அடைந்ததோடு உயிரையும் விட்ட சம்பவங்கள் நடக்கும் மாநிலம் மத்தியபிரதேசம். கடந்த சனிக்கிழமை (27-8-2022) இந்த விழா நடைபெற்றது.
இந்தி மாதமான பத்ரபதாவின் இருண்ட பதினைந்து நாட்களில் (சனிச்சாரி அமாவாசை) பதினைந்தாவது நாளில் வருடாந்திர ‘கோட்மார்’ (கல் எறிதல்) விழா நடைபெறுகிறது. சிந்த்வாரா மாவட்டத்தில் ‘ஜாம்’ ஆற்றின் இருபுறமும் அமைந்துள்ள இரண்டு கிராமங்களில் வசிப்பவர்கள் இந்த ஆபத்தான சடங்கில் ஆர்வத்துடன் பங்கேற்கின்றனர்.
இந்தக் கல் எறியும் பாரம்பரியத் திருவிழா ஏறக்குறைய 300 ஆண்டுகளாகக் கொண்டாடப் பட்டு வருகிறது. இந்த விழாவின்போது, ஜாம் ஆற்றின் இருபுறமும் சாவர்கான் மற்றும் பந்தூர்னா கிராமங்களைச் சேர்ந்த மக்கள் திரண்டு, மறுபுறம் கற்களை வீசுவர். அதில், ஆற்றின் நடுவில் உள்ள ஒரு மரத்தில் ஏற்றப்பட்டிருக்கும் கொடியைப் பறிக்கப் போட்டி நடைபெறும்.
கடந்த ஆண்டுகளாக நடந்த இந்த விழாவில் பலர் உயிரிழந்துள்ளனர். இருந்தாலும் உயிரைப் பற்றிக் கவலைப்படாமல் மக்கள் காட்டுமிராண்டித்தனமாகக் கல்லெறி கலாசாரத்தை வளர்த்துவருகிறார்கள். இதற்கு மாநில அரசும் பாதுகாப்பு கொடுப்பதோடு ஆம்புலன்ஸ்களை யும் ஏற்பாடு செய்துதருகிறது.
இதற்காக, மாவட்ட நிர்வாகம் பொது விடுமுறை அறிவித்து மதுக்கடைகள் கூட மூடப்பட்டுள்ளது. சம்பிரதாயம் என்று சொல்லப்படும் சடங்குகளில் தலையிடக் கூடாது என்று வெறுமனே கண்காணித்துக் கொண்டிருக்கும் போலீஸ் அதிகாரிகள் முன்னிலையில் கல் வீச்சு நடத்தப்படுவது ஆச்சரியம்தான்.
கல் எறியவும், கல்லெறி வாங்கவும் ஸ்வரகான், பதூர்னா உள்ளி்ட்ட அண்டை கிராமங்களில் இருந்து மக்கள் பங்கேற்கிறார்கள். ஜாம் ஆற்றின் அருகே இருபுறமும் கல் வீசியதில் நடுவில் சிக்கிய இரண்டு காதல் பறவைகளான சன்வர்கானைச் சேர்ந்த பெண் மற்றும் பந்தூர்னா கிராமத்தைச் சேர்ந்த பையன் இறந்ததாகப் புராணக்கதை கூறுகிறது. இதன் நினைவாக இரு கிராமத்தினரும் கல்லெறிந்து கொண்டாடப்படுவதாகக் கூறப்படுகிறது.
மாவட்ட அதிகாரிகள் கூறியதாவது, “ஆபத்தான சடங்கைக் கைவிட கிராமங்களைத் தடுக்க பல ஆண்டுகளாகப் பல முயற்சிகள் செய்தும் தோல்வியடைந்தன. இரண்டு கோவிட் ஆண்டுகளில் கூட, சில குடியிருப்பாளர்கள் அனைத்து தடுப்பு நடவடிக்கைகளையும் மீறி பாரம்பரிய கில்லெறித் திருவிழாவில் ஈடுபட்டனர்” என்றார்.
உத்ரகாண்ட்டிலும் கல்லெறி திருவிழா
இதேபோன்ற கல்லெறித் திருவிழா உத்ரகாண்ட் மாநிலத்திலும் கொண்டாடப்படுகிறது. அங் குள்ள சம்பவாத் மாவட்டத்தில் உள்ள குமான் கிராமத்தில் வாக்வல் என்ற பெயரில் நடக் கிறது. அங்குள்ள மக்கள் வாரஹி தேவிக்கு நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக ஒருவர் மீது ஒருவர் கற்களை வீசி எறிந்து கொள்வார்கள். இந்தத் திருவிழாவில் ஆயிரக்கணக்கான மக்கள் ஆண்டுதோறும் பங்கேற்கிறார்கள். கடந்த இரு ஆண்டுகளாக கொரோனா காரணமாக திருவிழா நடக்கவி்ல்லை. கொரோனாவுக்கு முந்தைய ஆண்டு நடந்த திருவிழாவில் 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இந்த திருவிழாவுக்கு மக்கள் ஒருபுறம் தயாராகி வரும் நிலையில் காயம் அடையும் மக்களுக்கு சிகிச்சையளி்க்க மருத்துவர்கள் குழுவும் தயாராகி வருகிறது. கடந்த முறையை விட கூடுதலாக மருத்துவக் குழுக்கள் குவிக்கப்பட்டுள்ளது. இது தவிர திருவிழாவில் கல் எறிதல் எல்லை மீறிச் செல்லக்கூடாது என்பதற்காக போலீஸாரும் குவிக்கப்பட்டுள்ளனர். இது தவிர ட்ரோன்களும் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது ஆங்காங்கே கண் காணிப்பு கேமிராவும், சில இடங்களில் 144 தடை உத்தரவும் போலீஸார் பிறப்பித்துள்ளனர்.
எவ்வளவு காலம் மாறினாலும் இவர்கள் மாற மாட்டார்கள் போல. நல்ல வேளை கத்தி எறியும் திருவிழா நடக்கவில்லை.