அரையாண்டு விடுமுறைக்குப் பிறகு சுற்றுலா செல்ல சிறந்த இடம் காந்தளூர். பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியானதிலிருந்து காந்தளூர் என்கிற பெயர் சாதாரணமாகப் பேசப்பட்டு வருகிறது. திருவனந்தபுரத்தில் உள்ள காந்தளூர்ச் சாலை வேறு. கேரள – தமிழக எல்லையில் இடுக்கி மாவட்டத்தில் உள்ள காந்தளூர் வேறு. பொ.செ.வில் வரும் காந்தளூர்ச் சாலை கொலைக்களப் பள்ளியாகப் பயன்பட்டது. மூணாறு அருகில் உள்ள காந்தளூர் காடுகள், மலைவளம் மிக்க சுற்றுலா தலம்.
இந்தக் காந்தளூர் காடு, மலைகள், அருவிகள் சூழ்ந்து உடுமலைப்பேட்டையிலிருந்து 40 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது.
இந்த அமைதியான மலை வாசஸ்தலமானது கேரளாவில் மூணாறிலிருந்து 57 கி.மீ. தொலைவில் உள்ளது. காந்தளூரில் ஒரு மகிழ்ச்சியான விடுமுறையை கொண்டாடுவதற்கு தேவையான அனைத்து விசேஷங்களும் வசீகரமான மலைகள், மயக்கும் நீர்வீழ்ச்சிகள், அழகிய தேயிலைத் தோட்டங்கள் போன்றவை உள்ளன.
கேரள மாநிலத்தில் இடுக்கி மாவட்டத்தில் தேவிகுளம் வட்டத்தில் காந்தலூர் ஊராட்சியில் அமைந்துள்ள ஊர் காந்தளூர். மேற்குத் தொடர்ச்சி மலையின் கிழக்குச் சரிவில் கீழந்தூர், மறையூர், கொட்டாகொம்பூர், வட்டவடை மற்றும் கண்ணன் தேவன் மலைக்குன்றுகளை எல்லையாக உள்ள இந்த ஊர் 4842 ஹெக்டர் பரப்பளவைக் கொண்டுள்ளது. இங்கு 90 சதவிகித மக்களின் தாய்மொழி தமிழ். மீதமுள்ளவர்கள் மலையாளம் மற்றும் தெலுங்கு மொழிகளைத் தாய் மொழியாகக் கொண்டவர்.
உடுமலைப்பேட்டை ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படுகிறது. அணை, மலைகள், ஆறு, இயற்கை, கோயில், கிராமம், பஞ்சலிங்க கோயில் மற்றும் பலவற்றைக் கொண்டிருக்கும் நகரம். தமிழகம் மற்றும் கேரள எல்லை இங்கு வருகிறது.
கேரளா மற்றும் தமிழகத்தின் எல்லையில் மேற்குத் தொடர்ச்சி மலையின் கிழக்குப் பகுதியில், மூணாறு மற்றும் உடமல்பேட்டை இடையே காந்தளூர் அமைந்துள்ளது. இது கடல் மட்டத்திலிருந்து சுமார் 5000 அடி உயரத்தில் உள்ளது.
உயரமானதாக இருப்பதால், காந்தளூர் குளிர்ந்த தட்பவெப்ப நிலைகளால் ஆசீர்வதிக்கப்பட்டுள்ளது. ஆப்பிள், ப்ளாக்பெர்ரி, ஆரஞ்சு, பிளம்ஸ், ஸ்ட்ராபெர்ரி, பேஷன் ஃப்ரூட் போன்ற பல பழங்களின் இயற்கை விவசாயத்திற்கு இது சாதகமானது. காலிஃபிளவர், கேரட், உருளைக்கிழங்கு, பூண்டு, முட்டைக்கோஸ் மற்றும் பீன்ஸ் ஆகியவை ஏராளமான காய்கறிகள். எனவே, கேரளாவின் பிற பகுதிகளில் பரவலாகக் காண முடியாத பயிர்களுக்கு காந்தளூர் நன்கு அறியப்பட்டதாகும்.
காந்தளூரில் தங்குவதற்கு தரமான காட்டேஜ்களும் கூடாரங்களும் பலவிதமான அமைப்புகளுடன் நிறைய இடங்கள் வாடகைக்கு கிடைக்கும். முக்கியமாக இரவில் ஜீப்பில் சவாரி செய்யலாம், பயர் கேம்ப் போட்டு குளிர் காயலாம், டான்ஸ் ஆடத் தெரிந்தவர்கள் ஆடலாம், ஆடத் தெரியாவர்கள் ஆடுவோரைப் பார்த்து ரசிக்கலாம். பிரபலமான பாடல்களைப் பாடி, அந்தாக் ஷரி நடத்தி, ஜாலியாகப் பொழுதைக் கழிக்கலாம்.
காட்டுவழிப் பயணத்தில் அங்கங்கே காட்டுக்குள் யானைகள், குரங்குகள் மயில்கள், பறவைகளைப் பார்க்கலாம். யானையிடம் செல்பி எடுக்காதீர்கள். நாங்கள் போகும்போது ஒருவரை யாரை மிதித்தது பாவம்.
நடுத்தர உயர் நடுத்தர குடும்பங்களுக்கு ஏற்ற, செலவு குறைவான விடுமுறை கொண்டாடத்துக்கான இடம் காந்தளூர். இங்கு ஆங்காங்கே அருவிகள் கொட்டிக் கொண்டிருக்கின்றன.
காந்தளூர் நீர்வீழ்ச்சி உடுமலைப்பேட்டையில் இருந்து 60 கி.மீ. தொலைவில் உள்ளது, ஆனால் பரந்து விரிந்த தேயிலைத் தோட்டங்கள், மலைகள் ஆகியவை இந்த இடத்தை அழகாக்குகிறது. இது உடுமலைப்பேட்டை மற்றும் மூணாறு இடையே கேரளா மற்றும் தமிழக எல்லையில் அமைந்துள்ளது. இது கடல் மட்டத்தில் இருந்து 5000 அடி உயரத்தில் அமைந்திருப்பதால் இயற்கையான பழங்கள் விவசாயத்திற்கு குளிர்ச்சியான காலநிலையை வழங்குகிறது.
புகைப்படம் பிரியர்களுக்கு காந்தளூர் சொர்க்கமாக உள்ளது. அதிலும் மழைக்குப் பிறகு அதன் சுற்றுப்புறங்கள் இயற்கை அழகு கொஞ்சும். ஆப்பிள்கள், ஆரஞ்சுகள், ஸ்ட்ராபெர்ரிகள், ப்ளாக்பெர்ரிகள், பிளம்ஸ், பீச் மற்றும் பல பூர்வீகமற்ற பழங்கள் மற்றும் பூக்களைக் காணக்கூடிய ஒரே இடம் காந்தளூர்.
உடுமலைப்பேட்டை சுற்றுலா தலங்களில் முக்கியமான இடம் காந்தளூர் அருவி. சின்னாரை அடுத்துள்ள மறையூரில் இருந்து ஒரு 10 கிலோ மீட்டர் உள்ள சென்றால் மிகவும் அமைதியான மற்றும் மலைகளுக்கு நடுவே அழகிய தோற்றமளிக்கும் காந்தளூர் அருவி கேரள எல்லைக்கு உட்பட்டது. இந்த அருவி அதிகம் யாருக்கும் தெரியாத காரணத்தால் கூட்டம் மிகவும் குறைவாகவே இருக்கும். காந்தளூர் கிராமத்தில் வண்டிகளை நிறுத்தி விட்டு ஒரு கிலோ மீட்டர் தூரம் கீழே இறங்கி செல்ல வேண்டும் இந்த அருவிக்கு. அந்த ஒரு கிலோ மீட்டர் பாதை மிகவும் அற்புதமானதாக காடுகளுக்குள்ளேயே அமைந்திருக்கும்.
உடுமலைப்பேட்டை சுற்றுலா தளங்களில் முதலில் பார்க்க வேண்டிய இடம் திருமூர்த்தி மலை. உடுமலையில் இருந்து சுமார் 20 கிலோ மீட்டரில் அமைந்துள்ளது திருமூர்த்தி மலை. இங்கு பஞ்சலிங்க அருவி, அமணலிங்கேஸ்வரர் திருக்கோவில், திருமூர்த்தி அணை, சிறுவர்கள் நீச்சல் குளம், சிறிய பூங்கா உள்ளது.
பஞ்சலிங்க அருவிக்கு பொதுவாக காலை 9 மணியில் இருந்து மாலை 5 வரை அனுமதி உண்டு. அமணலிங்கேஸ்வரர் கோவில் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்படும். சிறுவர் பூங்கா காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்படும்.
உடுமலையில் இருந்து சுமார் 22 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது அமராவதி அணை. 90 அடி உயரம் கொண்ட அமராவதி அணை சுமார் 100 படிக்கட்டுகளை கொண்டுள்ளது. அருகிலேயே முதலைப் பண்ணை, பெரிய பூங்கா, மீன் கடைகள் எல்லாம் உங்கள் பொழுதை மேலும் அழகாக்கும். இந்த இடத்திற்கு வர பேருந்தை விட சொந்த வாகனம் சரியாக இருக்கும்.
மறையூரில் இருந்து இடது புறம் சுமார் 5 – 6 கிலோ மீட்டர் தொலைவு செல்ல வேண்டும் சின்னாரைப் பார்க்க.
சின்னார் என்பது கோயிலும் நதியும் உள்ள இடம். இது தமிழ்நாடு – கேரளா எல்லை. இது மானுப்பட்டி கிராமத்தின் கீழ் வரும். (Mountain Dwellers) மலைவாழ் மக்கள் உள்ள சின்னார் பகுதி. அவற்றைப் பார்க்க 2 கிலோமீட்டர் தூரம் நடந்து செல்ல வேண்டும்.
உடுமலையில் இருந்து சின்னார் செல்ல சுமார் 2 மணி நேரம் ஆகும். மொத்தம் 38 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள இந்தச் சின்னார் தமிழ்நாடு கேரளா எல்லையில் அமைந்துள்ளது. சின்னாரில் இருந்து உள்ளே ஒரு 2 கிலோ மீட்டர் சென்றால் ஒரு சக்தி வாய்ந்த அம்மன் கோவில் உள்ளது.
இதற்கு உங்கள் வாகனங்களில் செல்ல முடியாது. உங்கள் வாகனத்தை சின்னாரில் நிறுத்தி விட்டு, அங்கு செல்லும் அனுமதி பெற்ற வேன்களில் நீங்கள் மேலே செல்லலாம். மேலே சென்றவுடன் கோவில் மற்றும் சின்னார் ஆறு உள்ளது. முதலில் சின்னார் ஆற்றில் குளித்து விட்டு வந்து கோவிலில் தரிசனம் செய்து கொண்டு உங்கள் நாளை இனிமையாக்கலாம்.
தூவானம் அருவி சின்னாரில் இருந்து சுமார் 10 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. அங்கு சென்று தங்கவும் முடியும். காட்டுக்குள் தங்குவது மற்றும் அருவியில் குளிப்பதற்கு என அனைத்திற்கும் கேரள வன அதிகாரிகளிடம் அனுமதி வாங்க வேண்டும்.
அமராவதியில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் முதலைப் பண்ணை அமைந்துள்ளது. இங்கு சுமார் 100 முதலைகள் வளர்க்கப்படுகின்றன. இங்கே சொந்த வாகனங்களில் செல்வதுதான் சிறப்பானது. ஏனெனில் பேருந்து வசதி அமராவதியில் இருந்து மிகவும் குறைவாகவே உள்ளது. உடுமலையில் இருந்து கல்லாபுரம் செல்லும் பேருந்துகள் அனைத்தும் அமராவதி முதலைப் பண்ணைக்குச் செல்லும். ஆனால் ஒரு நாளைக்கே 4 பேருந்துகள் தான் அமராவதி வழியே கல்லாபுரம் செல்லும்.