கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டத்தில் உள்ள அனந்தபுரம் ஸ்ரீஅனந்தபத்மநாப சுவாமி திருக்கோவில் குளத்தில் நெடுங்காலம் ஒரு முதலை வாழ்ந்து வந்தது.
கேரளத்தின் ஸ்ரீ அனந்தபத்மநாபசுவாமி திருக்கோவில் மிகவும் புகழ்பெற்ற கோயில். இந்த ஆலயத்தில்தான் பொற்குவியல் கணக்கிடுவது மற்றும் ரகசிய அறைகளைத் திறப்பது பற்றி நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. இந்த ஆலயக் குளத்தில் வசித்து வந்த முதலையை பக்தர்கள் முதலையாழ்வார் ‘பபியா’ என அழைத்து வந்தனர்.
இந்த முதலை பூஜை நேரங்களில் குளத்திலிருந்து கோவிலுக்கு வந்து ஸ்வாமியைத் தரிசித்துவிட்டு பிரசாதம் பெற்றுவிட்டு பக்தர்களுக்கு எந்தவித இடையூறும் ஏற்படுத்தாது, அமைதியாகக் குளத்திற்குத் திரும்பிவிடும். மாமிச விலங்கான முதலை குளத்தில் வசித்தாலும் குளத்திலுள்ள மீன்களை உட்கொள்ளாது, கோவில் பிரசாதத்தை மட்டுமே உண்டு வாழ்ந்து வந்ததால் இதற்கு ‘சைவ முதலை’ என்ற மற்றொரு பெயருண்டு.
இந்தக் கோவிலில் 150 ஆண்டுகளுக்கு மேலாக முதலைகள் வாழ்ந்து வருவதாகக் கூறப்படுகிறது. ஆனால், கடந்த 75 ஆண்டுகளாக இந்தக் கோவிலின் ‘பபியா’ என்ற முதலை கோயில் ஏரியில் வாழ்ந்து வந்தது. கோவிலின் பாதுகாவலனாய் சுற்றிச் சுற்றி வந்துகொண்டிருந்தது. ஸ்ரீ அனந்தபத்மநாப சுவாமி கோவிலின் தந்திரி வழங்கும் பிரசாதத்தைச் சாப்பிட்டு வாழ்ந்து வந்த சைவ முதலையான பபியா உயிரிழப்பு கேரள மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
நேற்று இந்த முதலையாழ்வார் உடல்நலக் குறைவால் வைகுந்த ப்ராப்தம் அடைந்தது. திருக்கோவில் சார்பில் மாலை அணிவிக்கப்பட்டு பூஜைகள் நடந்த பிறகு அடக்கம் செய்யப்பட்டது.
பக்தியுள்ள விலங்குகளுக்குக்கூட தனி மரியாதை உண்டு. தமிழகத்தில் பக்தி யில்லாமல் வாழ்ந்துகொண்டிருக்கும் சில மனிதர்களுக்கு இந்தச் செய்தியைத் தெரிவிக்க ஆசைப்படுகிறேன்.